உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
குயில் பாட்டு 1. குயில்
காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல் மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய 5 செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின் மேற்கே, சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை, நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும் வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை;- அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே, 10 வேடர் வாராத விருந்துத் திருநாளில், பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில் வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக, சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க் 15 காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க, இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல், மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய் வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள் இந்தவுரு வெய்தித்தன் ஏற்றம் விளக்குதல்போல், 20 இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைகளை முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப் பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே - கண்டேன் யான். கன்னிக் குயிலொன்று காவிடத்தே பாடியதோர் 25 இன்னிசைப் பாடடினிலே யானும் பரவசமாய், "மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ? இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல், காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ? நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ?" 30 என்றுபல வெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால், அன்றுநான் கேட்டது, அமரர்தாங் கேட்பாரோ? குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே; அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்; 35 விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்கேன்! 2. குயிலின் பாட்டு
ராகம் - சங்கராபரணம்
காதல், காதல், காதல்,தாளம் - ஏகதாளம் ஸ்வரம்- "ஸகா-ரிமா-காரீ பாபாபாபா-மாமாமாமா ரீகா-ரிகமா-மாமா" சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்க. காதல் போயிற் காதல் போயிற் சாதல், சாதல், சாதல். (காதல்) 1. அருளே யாநல் லொளியே; ஒளிபோ மாயின், ஒளிபோ மாயின், இருளே, இருளே, இருளே. (காதல்) 2. இன்பம், இன்பம், இன்பம்; இன்பத் திற்கோ ரெல்லை காணில், துன்பம், துன்பம், துன்பம். (காதல்) 3. நாதம், நாதம், நாதம்; நாதத் தேயோர் நலிவுண் டாயின், சேதம், சேதம், சேதம். (காதல்) 4. தாளம், தாளம், தாளம்; தாளத் திற்கோர் தடையுண் டாயின், கூளம், கூளம், கூளம். (காதல்) 5. பண்ணே, பண்ணே, பண்ணே; பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின், மண்ணே, மண்ணே, மண்ணே. (காதல்) 6. புகழே, புகழே, புகழே; புகழுக் கேயோர் புரையுண் டாயின், இகழே, இகழே, இகழே. (காதல்) 7. உறுதி, உறுதி, உறுதி; உறுதிக் கேயோர் உடைவுண் டாயின், இறுதி, இறுதி, இறுதி. (காதல்) 8. கூடல், கூடல், கூடல்; கூடிப் பின்னே குமரன் போயின், வாடல், வாடல், வாடல். (காதல்) 9. குழலே, குழலே, குழலே; குழலிற் கீறல் கூடுங்காலை, விழலே, விழலே, விழலே. (காதல்) 3. குயிலின் காதற் கதை
மோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும் ஏக மவுன மியன்றதுகாண்; மற்றதிலோர் இன்ப வெறியுந் துயரும் இணைந்தனவால் பின்புநான் பார்க்கப் பெடைக்குயிலஃ தொன்றல்லால் மற்றைப் பறவை மறைந்தெங்கோ போகவுமிவ் 5 ஒற்றைக் குயில் சோக முற்றுத தலைகுனிந்து வாடுவது கண்டேன் மரத்தருகே போய் நின்று, "பேடே! திரவியமே! பேரின்பப் பாட்டுடையாய்! ஏழுலகம் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையாய்! பீழையுனக் கெய்தியதென்? பேசாய்!" எனக்கேட்டேன். 10 மாயக் குயிலதுதான் மானுடவர் பேச்சினிலோர் மாயச்சொல் கூற மனந் தீயுற நின்றேன். "காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லை யெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன்" என்றதுவால். "வானத்துப் புள்ளெல்லாம் மையலுறப் பாடுகிறாய், 15 ஞானத்திற் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய். காதலர்நீ யெய்துகிலாக் காரணந்தான் யா" தென்றேன். வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே கானக் குயிலிக் கதைசொல்ல லாயிற்று:- "மானக் குலையும் வருத்தமுநான் பார்க்காமல், 20 உண்மை முழுதும் உரைத்திடுவேன் மேற்குலத்தீர்! பெண்மைக் கிரங்கிப் பிழைபொறுத்தல் கேட்கின்றேன். அறிவும் வடிவுங் குறுகி அவனியிலே சிறியதொரு புள்ளாய்ச் சிறியேன் பிறந்திடினும், தேவர் கருணையிலோ தெய்வச் சினத்தாலோ 25 யாவர் மொழியும் எளிதுணரும் பேறு பெற்றேன். மானுடவர்நெஞ்ச வழக்கெல்லாந் தேர்ந்திட்டேன்; கானப் பறவை கலகலெனும் ஓசையிலும், காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும், ஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும், 30 நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும் ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும், மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால் ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும், ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங் 35 கொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும், 40 வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர் வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன். நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளைப் 45 பாவிமனந் தானிறுகப் பற்றிநிற்ப தென்னேயோ? நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர். மஞ்சரே, என்றன் மனநிகழ்ச்சி காணீரோ? காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில், சாதலை வேண்டித் தவிக்கின்றேன்" என்றதுவே. 50 சின்னக் குயிலிதனைச் செப்பியவப் போழ்தினிலே, என்னைப் புதியதோர் இன்பச் சுரங்கவர, உள்ளத் திடையும் உயிரிடையும் ஆங்கந்தப் பிள்ளைக் குயிலினதோர் பேச்சன்றி வேறற்றேன்; "காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேல் 55 சாதலோ சாதல்" எனச் சாற்றுமொரு பல்லவியென் உள்ளமாம் வீணைதனில், உள்ளவீ டத்தனையும் விள்ள ஒலிப்பதலால் வேறொர் ஒலியில்லை, சித்தம் மயங்கித் திகைப்பொடுதான் நின்றிடவும், அத்தருணத் தேபறவை யத்தனையுந் தாந்திரும்பிச் 60 சோலைக் கிளையிலெலாந் தோன்றி யொலித்தனவால், நீலக் குயிலும் நெடிதுயிர்த்தாங் கிஃதுரைக்கும்; "காதல் வழிதான் கரடுமர டாமென்பர்; சோதித் திருவிழியீர்! துன்பக் கடலினிலிலே நல்லுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்திட்டீர்; 65 அல்லலற நும்மோ டளவளாய் நான்பெறுமிவ் வின்பத் தினுக்கும் இடையூறு மூண்டதுவே; அன்பொடு நீரிங்கே அடுத்தநான் காநாளில் வந்தருளல் வேண்டும், மறவாதீர், மேற்குலத்தீர்! சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல். 70 ஆவி தரியேன் அறிந்திடுவீர், நான் காநாள், பாவியிந்த நான்குநாள் பத்துயுகமாக் கழிப்பேன். சென்று வருவீர், என் சிந்தை கொடுபோகின்றீர், சென்று வருவீர்" எனத் தேறாப் பெருந்துயரங் கொண்டு சிறுகுயிலுங் கூறி மறைந்ததுகாண். 75 4. காதலோ காதல்
கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன், எண்ணுதலுஞ் செய்யேன், இருபது பேய் கொண்டவன்போல் கண்ணும் முகமும் களியேறிக் காமனார் அம்பு துளிகள் அகத்தே அமிழ்ந்திருக்க, கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய் 5 ஒன்றே யதுவாய் உலகமெலாந்தோற்றமுற சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி, நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும் தாளம் படுமோ? தறிபடுமோ? யார் படுவார்? நாளொன்று போயினது; நானு மெனதுயிரும், 10 நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும், மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும், சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா மிஞ்சி நின்றோம். ஆங்கு மறுநாள் விடிந்தவுடன், (வஞ்சனை நான் கூறவில்லை) மன்மதனார் விந்தையால், 15 புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல், வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையென காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே நீலிதனைக் காண வந்தேன், நீண்ட வழியினிலே நின்றபொருள் கண்ட நினைவில்லை. சோலையிடைச் 20 சென்றுநான் பார்க்கையிலே செஞ்ஞாயிற் றொண்கதிரால் பச்சைமர மெல்லாம் பளபளென என்னுளத்தின் இச்சை யுணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெலாம் வேறெங்கோ போயிருப்ப வெம்மைக் கொடுங்காதல் மீறவெனைத் தான்புரிந்த விந்தைச் சிறுகுயிலைக் 25 காணநான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன் கோணமெலாஞ் சுற்றிமரக் கொம்பையெலாம் நோக்கி வந்தேன். 5. குயிலும் குரங்கும்
மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை, சுற்றுமுற்றும் பார்த்துத் துடித்து வருகையிலே- வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே! நெஞ்சகமே! தொல்விதியின் நீதியே! பாழுலகே! கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்! 5 பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெல்லாம் கேண்மினோ! காதலினைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ! மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ! மாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே பாயும் விழிநீர் பதைக்குஞ் சிறியவுடல் 10 விம்மிப் பரிந்து சொலும் வெந்துயர்ச்சொல் கொண்டதுவாய் அம்மாவோ! மற்றாங்கோர் ஆண்குரங்கு தன்னுடனே ஏதேதோ கூறி இரங்கும் நிலைகண்டேன். தீதேது? நன்றேது? செய்கைத் தெளிவேது? அந்தக் கணமே அதையுங் குரங்கினையும் 15 சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்ந்தேன். கொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை நின்று சற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும், ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறருகே ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே, 20 பேடைக் குயிலிதனைப் பேசியது:-"வானரரே! ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான் எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத் தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ? மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே, 25 எண்ணிநின்றார்தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல், கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம். மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும் கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே, 30 வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ? ஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும், பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும், மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம் 35 ஆசை முகத்தினைப்போ லாக்க முயன்றிடினும் ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும், வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே 40 வானரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே? ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ? பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு, கந்தைபோல்; வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ? 45 சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும்- வானரர்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ? வானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன், பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும், நிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால் 50 தேவரீர் காதல்பெறுஞ் சீர்த்திகொண்டேன்; தம்மிடத்தே ஆவலினாற் பாடுகின்றேன்; ஆரியரே கேட்டருள்வீர்!" (வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதை யானறிந்து கொண்டுவிட்டேன், யாதோ ஒரு திறத்தால்) காதல், காதல், காதல்; காதல் போயிற் காதல் போயிற் சாதல், சாதல், சாதல். முதலியன (குயலின் பாட்டு) நீசக்குயிலும் நெருப்புச் சுவைக்குரலில் 55 ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே:- காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும், பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார். வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே முற்றும் வெறிபோல் முழுவெறிகொண்டாங்ஙனே 60 தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும் "ஆவி யுருகுதடி, ஹா ஹா!" என்பதுவும், கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும் மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரி யிறைப்பதுவும், "ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே! 65 பேச முடியாப் பெருங்காதல் கொண்டு விட்டேன்; காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்; காதலினாற் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்; எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன்; இப்பொழுதுதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்" 70 என்றுபல பேசுவதும் என்னுயிரைப் புண்செயவே, கொன்றுவிட எண்ணிக் குரங்கின்மேல் வீசினேன் கைவாளை யாங்கே! கனவோ? நனவுகொலோ? தெய்வ வலியோ? சிறு குரங்கென் வாளுக்குத் தப்பி முகஞ்சுளித்துத் தாவி யொளித்திடவும், 75 ஒப்பிலா மாயத் தொருகுயிலுந் தான்மறைய, சோலைப் பறவை தொகைதொகையாத் தாமொலிக்க, மேலைச் செயலறியா வெள்ளறிவிற் பேதையேன் தட்டுத் தடுமாறிச் சார்பனைத்துந் தேடியுமே, குட்டிப் பிசாசக் குயிலையெங்கும் காணவில்லை. 80 6. இருளும் ஒளியும்
வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான் மோனவெளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான். மெய்யெல்லாஞ் சோர்வு விழியில் மயக்கமுற, உய்யும் வழியுணரா துள்ளம் பதைபதைக்க, நாணுந் துயரும் நலிவுறுத்த நான்மீண்டு, 5 பேணும்மனை வந்தேன்; பிரக்கினைபோய் வீழ்ந்துவிட்டேன், மாலையிலே மூர்ச்சைநிலை மாறித் தெளிவடைந்தேன்; நாலுபுறமுமெனை நண்பர் வந்து சூழ்ந்துநின்றார். "ஏனடா மூர்ச்சையுற்றாய்? எங்கு சென்றாய்? ஏது செய்தாய்? வானம் வெளிறுமுன்னே வைகறையி லேதனித்துச் 10 சென்றனை என்கின்றாரச் செய்தி என்னே? ஊணின்றி நின்றதென்னே?" என்று நெரித்துவிட்டார் கேள்விகளை, இன்னார்க் கிதுசொல்வ தென்று தெரியாமல் "என்னாற் பலவுரைத்தல் இப்பொழுது கூடாதாம். நாளை வருவீரேல் நடந்ததெலாஞ் சொல்வேன் இவ் 15 வேளை எனைத்தனியே விட்டகல்வீர்" என்றுரைத்தேன், நண்பரெல்லாஞ் சென்றுவிட்டார்; நைந்துநின்ற தாயார்தாம் உண்பதற்குப் பண்டம் உதவிநல்ல பால்கொணர்ந்தார், சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன்; முற்றும் மறந்து முழுத்துயிலில் ஆழ்ந்து விட்டேன். 20 பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும், மண்டு துயரெனது மார்பை யெலாங் கவ்வுவதே! ஓடித் தவறி உடையனவாம் சொற்களெலாம் கூடி மதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம் நாசக் கதையை நடுவே நிறுத்திவிட்டுப் 25 பேசு மிடைப் பொருளின்பின்னே மதிபோக்கிக் கற்பனையும் வர்ணனையுங் காட்டிக் கதைவளர்க்கும் விற்பனர்தஞ் செய்கை விதமுந் தெரிகிலன்யான், மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம் காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன். 30 தங்க முருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச் சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ? கண்ணையினி தென்றுரைப்பர்; கண்ணுக்குக் கண்ணாகி 35 விண்ணை அளக்கும்மொளி மேம்படுமோர் இன்பமன்றோ? மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும் மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல் நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப்புளதோ? புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி 40 மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக் காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன். நாலு புறத்துமுயிர் நாதங்க ளோங்கிடவும், இன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன். 45 துன்பக் கதையின் தொடருரைப்பேன், கேளீரோ! 7. குயிலும் மாடும்
காலைத் துயிலெழுந்து, காலிரண்டு முன்போலே சோலைக் கிழுத்திட, நான் சொந்தவுணர் வில்லாமே சோலையினில் வந்துநின்று, சுற்றுமுற்றுந் தேடினேன், கோலப் பறவைகளின் கூட்டமெல்லாங் காணவில்லை. மூலையிலோர் மாமரத்தின் மோட்டுக் கிளையினிலே 5 நீலக் குயிலிருந்து நீண்ட கதை சொல்லுவதும், கீழே யிருந்தோர் கீழக்காளை மாடதனை ஆழ மதியுடனே ஆவலுறக் கேட்பதுவும், கண்டேன், வெகுண்டேன், கலக்கமுற்றேன்; நெஞ்சிலனல் கொண்டேன், குமைந்தேன், குமுறினேன், மெய்வெயர்த்தேன்; 10 கொல்லவாள் வீசல் குறித்தேன், இப் பொய்ப்பறவை சொல்லுமொழி கேட்டதன்பின் 'கொல்லுதலே சூழ்ச்சி' யென முன்போல் மறைந்துநின்றேன்; மோகப் பழங்கதையைப் பொன்போற் குரலும் புதுமின்போல் வார்த்தைகளும் கொண்டு, குயிலாங்கே கூறுவதாம்: 'நந்தியே! 15 பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே! காமனே! மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே! பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதியுண்டோ? மானிடருந் தம்முள் வலிமிகுந்த மைந்தர்தமை மேனியுறுங் காளையென்று மேம்பா டுறப்புகழ்வார். 20 காளையர்தம் முள்ளே கனமிகுந்தீர், ஆரியரே! நீள முகமும், நிமிர்ந்திருக்குங் கொம்புகளும், பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும், மிஞ்சுப் புறச்சுமையும், வீரத் திருவாலும், வானத் திடிபோல 'மா'வென் றுறுமுவதும், 25 ஈனப் பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால் வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும், பல் காலம்நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன். பார வடிவும் பயிலு முடல்வலியும் தீரநடையும் சிறப்புமே இல்லாத 30 சல்லித் துளிப்பறவைச் சாதியிலே நான் பிறந்தேன். அல்லும் பகலுநிதம் அற்ப வயிற்றினுக்கே காடெல்லாஞ் சுற்றிவந்து காற்றிலே எற்றுண்டு, மூட மனிதர் முடைவயிற்றுக் கோருணவாம், சின்னக் குயிலின் சிறுகுலத்தி லேதோன்றி 35 என்னபயன் பெற்றேன்? எனைப்போலோர் பாவியுண்டோ? சேற்றிலே தாமரையும் சீழுடைய மீன்வயிற்றில் போற்றுமொளி, முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ? நீசப் பிறப்பொருவர் நெஞ்சிலே தோன்றிவரும் ஆசை தடுக்கவல்ல தாகுமோ? காமனுக்கே 40 சாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ? வாதித்துப் பேச்சை வளர்த்தோர் பயனுமில்லை. மூட மதியாலோ, முன்னைத் தவத்தாலோ, ஆடவர்தம் முள்ளே அடியாளுமைத் தெரிந்தேன். மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும் 45 கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும் தெய்வமென நீருதவி செய்தபின்னர், மேனிவிடாய் எய்தி யிருக்கு மிடையினிலே, பாவியேன் வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன் வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன். 50 வாலிலடி பட்டு மனமகிழ்வேன் 'மா' வென்றே ஒலிடுநும் பேரொலியோ டொன்றுபடக் கத்துவேன் மேனியுளே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன். கானிடையே சுற்றிக் கழனியெலாம் மேய்ந்து, நீர் மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில் 55 பக்கத் திருந்து பலகதைகள் சொல்லிடுவேன், காளை யெருதரே! காட்டிலுயர் வீரரே! தாளைச் சரணடைந்தேன். தையலெனைக் காத்தருள்வீர். காதலுற்று வாடுகின்றேன். காதலுற்ற செய்தியினை மாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன். 60 ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல் கொண்டால், தானா வுரைத்தலின்றிச் சாரும் வழியுளதோ? ஒத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கமெலாம், இத்தரையில் மேலோர்முன் ஏழையர்க்கு நாண முண்டோ? தேவர் முன்னே அன்புரைக்கச் சிந்தை வெட்கங் கொள்வதுண்டோ? 65 காவலர்க்குத் தங்குறைகள் காட்டாரோ கீழடியார்? ஆசைதான் வெட்கம் அறியுமோ?" என்றுபல நேசவுரை கூறி நெடிதுயிர்த்துப் பொய்க்குயிலி பண்டுபோ லேதனது பாழடைந்த பொய்ப்பாட்டை எண்டிசையும் இன்பக் களியேறப் பாடியதே; 70 காதல், காதல், காதல்; காதல் போயிற் காதல் போயிற்! சாதல், சாதல், சாதல் முதலியன (குயிலின் பாட்டு) பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன்; கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்! தன்னை யறியேன்; தனைப்போல் எருதறியேன்; பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே கண்டேன், படைப்புக் கடவுளே! நான்முகனே! 75 பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார். நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டிவைத்தாய் நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய், காற்றைமுன்னே ஊதினாய் காணரிய வானவெளி தோற்றுவித்தாய், நின்றன் தொழில் வலிமையாரறிவார்? 80 உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி வட்ட வுருளைகள்போல் வானத்தில் அண்டங்கள் எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்; எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப் 85 பொல்லா பிரமா, புகுத்திவிட்டாய், அம்மாவோ! காலம் படைத்தாய் கடப்பதிலாத் திக்கமைத்தாய்; ஞாலம் பலவினிலும் நாடோ றுந் தாம்பிறந்து தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்; சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய், நான்முகனே! 90 சால மிகப்பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்! தாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்? ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா! காட்டு நெடுவானம், கடலெல்லாம் விந்தையெனில், 95 பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா! பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில் நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ? ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே, ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ! 100 செத்தைக் குயில்புரிந்த தெய்விகத்தீம் பாட்டெனுமோர் வித்தை முடிந்தவுடன், மீட்டுமறி வெய்திநான் கையில் வாளெடுத்துக் காளையின்மேல் வீசினேன். மெய்யிற் படுமுன் விரைந்ததுதான் ஓடிவிட, வன்னக் குயில்மறைய மற்றைப் பறவையெலாம் 105 முன்னைப்போற் கொம்பு முனைகளிலே வந்தொலிக்க நாணமில்லாக் காதல்கொண்ட நானுஞ் சிறுகுயிலை வீணிலே தேடியபின், வீடுவந்து சேர்ந்துவிட்டேன். எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை. கண்ணிலே நீர்த்தும்பக் கானக் குயிலெனக்கே 110 காதற் கதையுரைத்து நெஞ்சங் கரைத்ததையும், பேதை நானங்கு பெரியமயல் கொண்டதையும், இன்பக் கதையின் இடையே தடையாகப் புன்பறவை யெல்லாம் புகுந்த வியப்பினையும் ஒற்றைப் பொருள்செய்யா உள்ளத்தைக் காமவனல் 115 தின்றெனது சித்தம் திகைப்புறவே செய்ததையும் சொற்றைக் குரங்கும் தொழுமாடும் வந்தெனக்கு முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும் இத்தனைகோ லத்தினுக்கும் யான்வேட்கை தீராமல் பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும் 120 எண்ணியெண்ணிப் பார்த்தேன், எதுவும் விளங்கவில்லை; கண்ணிரண்டும் மூடக் கடுந்துயிலில் ஆழ்ந்துவிட்டேன். 8. நான்காம் நாள்
நான்காம்நாள் என்னை நயவஞ்சனைபுரிந்து வான்காதல் காட்டி மயக்கிச் சதிசெய்த பொய்ம்மைக் குயிலென்னைப் போந்திடவே கூறியநாள் மெய்ம்மை யறிவிழந்தென் வீட்டிலே, மாடமிசை சித்தத் திகைப்புற்றோர் செய்கை யறியாமல், 5 எத்துக் குயிலென்னை எய்துவித்த தாழ்ச்சியெலாம் மீட்டும் நினைத்தங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே, காட்டுத் திசையினிலென் கண்ணிரண்டும் நாடியவால், வானத்தே ஆங்கோர் கரும்பறவை வந்திடவும் யானதனைக் கண்டே; 'இது நமது பொய்க் குயிலோ?' 10 என்று திகைத்தேன்; 'இருந்தொலைக்கே நின்றதனால் நன்று வடிவம் துலங்கவில்லை; நாடுமனம் ஆங்கதனை விட்டுப் பிரிதற்கு மாகவில்லை. ஓங்குந் திகைப்பில் உயர்மாடம் விட்டுநான் வீதியிலே வந்து நின்றேன் மேற்றிசையில் அவ்வுருவம் 15 சோதிக் கடலிலே தோன்றுகரும் புள்ளியெனக் காணுதலும், சற்றே கடுகி யருகேபோய், 'நாணமிலாப் பொய்க்குயிலோ,' என்பதனை நன்கறிவோம் என்ற கருத்துடனே யான்விரைந்து சென்றிடுங்கால், நின்ற பறவையுந்தான் நேராகப் போயினதால், 20 யான்நின்றால் தான்நிற்கும் யான்சென்றால் தான்செல்லும்; மேனிநன்கு தோன்ற அருகினிலே மேவாது வானி லதுதான் வழிகாட்டிச் சென்றிடவும் யான்நிலத்தே சென்றேன் இறுதியிலே முன்புநாம் கூறியுள்ள மாஞ்சோலை தன்னைக் குறுகியந்த 25 ஊரிலாப் புள்ளுமத னுள்ளே மறைந்ததுவால், மாஞ்சோலைக் குள்ளே மதியிலிநான் சென்றாங்கே ஆஞ்சோதி வெள்ளம் அலையுமொரு கொம்பரின்மேல் சின்னக் கருங்குயிலி செவ்வனே வீற்றிருந்து, பொன்னங்குழலின் புதிய ஒலிதனிலே 30 பண்டைப் பொய்க்காதற் பழம்பாட்டைத் தாம்பாடிக் கொண்டிருத்தல் கண்டேன, குமைந்தேன்; எதிரேபோய், "நீசக் குயிலே, நிலையறியாப் பொய்ம்மையே, ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும் எண்ணிநீ பாடும் இழிந்த புலைப்பாட்டை 35 நண்ணியிங்கு கேட்க நடத்திவந்தாய் போலுமெனை" என்று சினம்பெருகி ஏதேதோ சொல்லுரைத்தேன். கொன்றுவிட நெஞ்சிற் குறித்தேன்; மறுபடியும் நெஞ்ச மிளகி நிறுத்திவிட்டேன். ஈங்கிதற்குள், வஞ்சக் குயிலி மனத்தை இரும்பாக்கிக் 40 கண்ணிலே பொய்நீர் கடகடெனத் தானூற்றப், பண்ணிசைபோ லின்குரலாற் பரவியது கூறிடுமால்; 'ஐயனே, என்னுயிரின் ஆசையே! ஏழையெனை வையமிசை வைக்கத் திருவுளமோ? மற்றெனையே கொன்றுவிடச் சித்தமோ? கூறீர், ஒருமொழியில்! 45 அன்றிற் சிறுபறவை ஆண்பிரிய வாழாது, ஞாயிறுதான் வெம்மைசெயில், நாண்மலர்க்கு வாழ்வுளதோ? தாயிருந்து கொன்றால், சரண்மதலைக் கொன்றுளதோ? தேவர் சினத்துவிட்டால், சிற்றுயிர்கள் என்னாகும்? ஆவற் பொருளே! அரசே! என் ஆரியரே! 50 சிந்தையில்நீர் என்மேற் சினங்கொண்டால் மாய்ந்திடுவேன் வெந்தழலில் வீழ்வேன், விலங்குகளின் வாய்ப்படுவேன். குற்றம்நீர் என்மேற் கொணர்ந்ததனை யானறிவேன்; குற்றநுமைக் கூறுகிலேன்; குற்றமிலேன் யானம்ம! புன்மைக் குரங்கைப் பொதிமாட்டை நான்கண்டு 55 மென்மையுறக் காதல் விளையாடி னேன்என்றீர்; என்சொல்கேன்! எங்ஙனுய்வேன்! ஏதுசெய்வேன், ஐயனே! நின்சொல் மறுக்க நெறியில்லை; ஆயிடினும் என்மேல் பிழையில்லை; யாரிதனை நம்பிடுவார்? நின்மேல் சுமைமுழுதும் நேராகப் போட்டுவிட்டேன். 60 வெவ்விதியே! நீ என்னை மேம்பாடுறச் செய்து செவ்விதினிங் கென்னைஎன்றன் வேந்தனொடு சேர்த்திடினும் அல்லாதென் வார்த்தை அவர்சிறிதும் நம்பாமே புல்லாக எண்ணிப் புறக்கணித்துப் போய்விட, நான் அக்கணத்தே தீயில் அழிந்துவிழ நேரிடினும், 65 எக்கதிக்கும் ஆளாவேன்; என்செய்கேன்? வெவ்விதியே! 9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்
"தேவனே! என்னருமைச் செல்வமே! என்னுயிரே! போவதன் முன்னொன்று புகல்வதனைக் கேட்டருள்வீர்! முன்னம் ஒருநாள் முடிநீள் பொதியமலை தன்னருகே நானும் தனியேயோர் சோலைதனில் மாங்கிளையிலேதோ மனதிலெண்ணி வீற்றிருந்தேன். 5 ஆங்குவந்தார் ஓர்முனிவர் ஆரோ பெரியரென்று பாதத்தில் வீழ்ந்து பரவினேன்; ஐயரெனை ஆதரித்து வாழ்த்தி யருளினார், மற்றதன்பின், 'வேத முனிவரே, மேதினியில் கீழ்ப்பறவைச் சாதியிலே நான் பிறந்தேன், சாதிக் குயில்களைப்போல் 10 இல்லாமல், என்றன் இயற்கை பிரிவாகி, எல்லார் மொழியும் எனக்கு விளங்குவதேன்? மானுடர்போற் சித்தநிலை வாய்த்திருக்குஞ் செய்தியேன்? யானுணரச் சொல்வீர்' என வணங்கிக் கேட்கையிலே, கூறுகின்றார் ஐயர்: 'குயிலே! கேள், முற்பிறப்பில் 15 வீறுடைய வெந்தொழிலார்வேடர் குலத்தலைவன் வீர முருகனெனும் வேடன் மகளாகச் சேர வளநாட்டில் தென்புறத்தே ஓர்மலையில் வந்து பிறந்து வளர்ந்தாய் நீ, நல்லிளமை முந்து மழகினிலே மூன்றுதமிழ் நாட்டில் 20 யாரும் நினக்கோர் இணையில்லை என்றிடவே சீருயர நின்றாய்; செழுங்கான வேடரிலுன் மாமன் மகனொருவன் மாடனெனும் பேர்கொண்டான் காமன் கணைக்கிரையாய், நின்னழகைக் கண்டுருகி, நின்னை மணக்க நெடுநாள் விரும்பி, அவன் 25 பொன்னை மலரைப் புதுத்தேனைக் கொண்டுனக்கு நித்தம் கொடுத்து நினைவெல்லாம் நீயாகச் சித்தம் வருந்துகையில், தேமொழியே, நீயவனை மாலையிட வாக்களித்தாய்; மையலினா லில்லை; அவன் சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய். 30 ஆயிழையே, நின்றன், அழகின் பெருங்கீர்த்தி தேயமெங்குந் தான்பரவத் தேன்மலையின் சார்பினிலோர் வேடர்கோன், செல்வமும், நல்வீரமுமே தானுடையான், நாடனைத்தும் அஞ்சி நடுங்குஞ் செயலுடயான், மொட்டைப் புலியனுந்தன மூத்த மகனான 35 நெட்டைக் குரங்கனுக்கு நேரான பெண்வேண்டி, நின்னை மணம்புரிய நிச்சயித்து, நின்னப்பன் தன்னை யணுகி, "நின்னோர் தையலையென் பிள்ளைக்குக் கண்ணாலஞ் செய்யும் கருத்துடையேன்" என்றிடலும், எண்ணாப் பெருமகிழ்ச்சி எய்தியே, நின்தந்தை 40 ஆங்கே உடம்பட்டான்; ஆறிரண்டு நாட்களிலே பாங்கா மணம்புரியத் தாமுறுதி பண்ணிவிட்டார். பன்னிரண்டு நாட்களிலே பாவையுனைத் தேன்மலையில் அன்னியன்கொண் டேகிடுவான் என்னும் அதுகேட்டு, மாடன் மனம்புகைந்து மற்றைநாள் உன்னை வந்து 45 நாடிச் சினத்துடனே நானா மொழிகூற நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால், "காயுஞ் சினந்தவிர்ப்பாய் மாடா, கடுமையினால் நெட்டைக் குரங்கனுக்குப் பெண்டாக நேர்ந்தாலும், கட்டுப் படிஅவர்தங் காவலிற்போய் வாழ்ந்தாலும் 50 மாதமொரு மூன்றில் மருமம் சிலசெய்து, பேதம் விளைவித்துப் பின்னிங்கே வந்திடுவேன்; தாலிதனை மீட்டுமவர் தங்களிடமே கொடுத்து நாலிரண்டு மாதத்தே நாயகனா நின்றனையே பெற்றிடுவேன்; நின்னிடத்தே பேச்சுத் தவறுவனோ? 55 மற்றிதனை நம்பிடுவாய் மாடப்பா" என்றுரைத்தாய், காதலினா லில்லை, கருணையினால் இஃதுரைத்தாய். (மாதரசாய், வேடன் மகளான முற்பிறப்பில், சின்னக் குயிலியென்று செப்பிடுவார் நின்நாமம்.) பின்னர்ச் சிலதினங்கள் சென்றதன்பின் பெண்குயிலி, 60 நின்னொத்த தோழியரும் நீயுமொரு மாலையிலே மின்னற் கொடிகள் விளையாடு தல்போலே, காட்டி னிடையே களித்தாடி நிற்கையிலே, வேட்டைக் கெனவந்தான் வெல்வேந்தன் சேரமான் தன்னருமை மைந்தன்; தனியே, துணைபிரிந்து, 65 மன்னவன்றன் மைந்தனொரு மானைத் தொடர்ந்துவரத் தோழியரும் நீயும் தொகுத்துநின்றே ஆடுவதை வாழியவன் கண்டுவிட்டான். மையல் கரைகடந்து நின்னைத் தனக்காக நிச்சயித்தான்; மாதுநீ மன்னவனைக் கண்டவுடன் மாமோகங் கொண்டுவிட்டாய் 70 நின்னையவன் நோக்கினான்; நீயவனை நோக்கி நின்றாய்; அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்; தோழியரும் வேந்தன் சுடர்க்கோலந் தான்கண்டே ஆழியரசன் அரும்புதல்வன் போலு மென்றே அஞ்சி மறைந்து விட்டார். ஆங்கவனும் நின்னிடத்தே. 75 "வஞ்சித் தலைவன் மகன்யான்" எனவுரைத்து "வேடர் தவமகளே! விந்தை யழகுடையாய்! ஆடவனாத் தோன்றி யதன்பயனை இன்றுபெற்றேன்; கண்டதுமே நின்மிசைநான் காதல்கொண்டேன்" என்றிசைக்க, மண்டு பெருங்காதல் மனத்தடக்கி நீ மொழிவாய்; 80 "ஐயனே! உங்கள் அரண்மனையில் ஐந்நூறு தையலருண்டாம்; அழகில் தன்னிகரில் லாதவராம்; கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்; அன்னவரைச் சேர்ந்தேநீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர்; மன்னவரை வேண்டேன், மலைக்குறவர் தம்மகள் யான்; 85 கொல்லு மடற்சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ? வெல்லுதிறல் மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்? பத்தினியா வாழ்வதல்லால் பார்வேந்தர் தாமெனினும் நந்தி விலைமகளா நாங்கள்குடி போவதில்லை, பொன்னடியைப் போற்றுகிறேன், போய்வருவீர், தோழியரும் 90 என்னைவிட்டுப் போயினரே, என்செய்கேன்?" என்றுநீ நெஞ்சங் கலக்கமெய்தி நிற்கையிலே, வேந்தன் மகன் மிஞ்சு நின்றன் காதல் விழிக்குறிப்பி னாலறிந்தே, பக்கத்தில் வந்து பளிச்சென் றுனதுகன்னஞ் செக்கச் சிவக்க முத்தமிட்டான், சினங்காட்டி 95 நீ விலகிச் சென்றாய் -நெறியேது காமியர்க்கே? தாவி நின்னைவந்து தழுவினான் மார்பிறுக. "நின்னையன்றி ஓர் பெண் நிலத்திலுண்டோ என்றனுக்கே? பொன்னே, ஒளிர்மணியே, புத்தமுதே, இன்பமே, நீயே மனையாட்டி, நீயே அரசாணி, 100 நீயே துணை எனக்கு. நீயே குலதெய்வம் நின்னையன்றிப் பெண்ணை, நினைப்பேனோ?வீணிலே எனனை நீ ஐயுறுதல் ஏதுக்காம்? இப்பொழுதே நின்மனைக்குச் சென்றிடுவோம்; நின் வீட்டிலுள்ளோர்பால் என்மனதைச் சொல்வேன், எனதுநிலை யுரைப்பேன். 105 வேத நெறியில் விவாகமுனைச் செய்துகொள்வேன். மாதரசே!" என்றுவலக் கைதட்டி வாக்களித்தான். பூரிப்புக் கொண்டாய் புளகம்நீ எய்திவிட்டாய். வாரிப் பெருந்திரைபோல் வந்த மகிழ்ச்சியிலே நாணந் தவிர்த்தாய்; நனவே தவிர்ந்தவளாய் 110 காணத் தெவிட்டாதோர் இன்பக் கனவினிலே சேர்ந்துவிட்டாய், மன்னன்றன் திண்டோ ளை நீயுவகை ஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருகச் சிந்தைகொண்டாய், வேந்தன்மகன் தேனில்வீழும்வண்டினைப்போல் விந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப்போல், 115 ஆவலுடன் நின்னை யறத்தழுவி, ஆங்குனது கோவை யிதழ்பருகிக் கொண்டிருக்கும் வேளையிலே- சற்றுமுன்னே ஊரினின்று தான்வந் திறங்கியவன், மற்றுநீ வீட்டைவிட்டு மாதருடன் காட்டினிலே கூத்தினுக்குச் சென்றதனைக் கேட்டுக் குதூகலமாய் 120 ஆத்திரந்தான் மிஞ்சிநின்னை ஆங்கெய்திக் காணவந்தோன் நெட்டைக் குரங்கன் நெருங்கிவந்து பார்த்துவிட்டான். "பட்டப் பகலிலே! பாவிமகள் செய்தியைப் பார்! கண்ணாலங் கூடஇன்னுங் கட்டி முடியவில்லை மண்ணாக்கி விட்டாள்! என் மானந் தொலைத்துவிட்டாள்! 125 'நிச்சய தாம்பூலம்' நிலையா நடந்திருக்கப் பிச்சைச் சிறுக்கி செய்த பேதகத்தைப் பார்த்தாயோ?" என்று மனதில் எழுகின்ற தீயுடனே நின்று கலங்கினான் நெட்டைக் குரங்கனங்கே. மாப்பிள்ளைதான் ஊருக்கு வந்ததையும், பெண்குயிலி, 130 தோப்பிலே தானுந்தன் தோழிகளு மாச்சென்று பாடி விளையாடும் பண்புகேட் டேகுரங்கன் ஓடி யிருப்பதோர் உண்மையையும் மாடனிடம் யாரோ உரைத்துவிட்டார்; ஈரிரண்டு பாய்ச்சலிலே நீரோடும் மேனி நெருப்போடுங் கண்ணுடனே 135 மாடனங்கு வந்து நின்றான். மற்றிதனைத் தேன்மலையின் வேடர்கோன் மைந்தன் விழிகொண்டு பார்க்கவில்லை. நெட்டைக் குரங்கனங்கு நீண்ட மரம்போலே எட்டிநிற்குஞ் செய்தி இவன்பார்க்க நேரமில்லை. அன்னியனைப் பெண்குயிலி ஆர்ந்திருக்குஞ் செய்தியொன்று 140 தன்னையே இவ்விருவர் தாங்கண்டார், வேறறியார், மாடனதைத் தான்கண்டான், மற்றவனும் அங்ஙனமே. மாடன் வெறிகொண்டான், மற்றவனும் அவ்வாறே. காவலன்றன் மைந்தனுமக் கன்னிகையும் தானுமங்கு தேவசுகங் கொண்டு விழியே திறக்கவில்லை. 145 ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே மேவியங்கு மூடி யிருந்த விழிநான்கு. ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிநான்கு. மாடனுந்தன் வாளுருவி மன்னவனைக் கொன்றிடவே 150 ஓடிவந்தான்; நெட்டைக் குரங்கனும் வாளோங்கி வந்தான்; வெட்டிரண்டு வீழ்ந்தனகாண் வேந்தன் முதுகினிலே, சட்டெனவே மன்னவனும் தான்திரும்பி வாளுருவி வீச்சிரண்டில் ஆங்கவரை வீழ்த்தினான்; வீழ்ந்தவர்தாம் பேச்சிழந்தே ஆங்கு, பிணமாகக் கிடந்துவிட்டார். 155 மன்னவனும் சோர்வெய்தி மண்மேல் விழுந்துவிட்டான். பின்னவனை நீயும் பெருந்துயர்கொண் டேமடியில் வாரி யெடுத்துவைத்து வாய்புலம்பக் கண்ணிரண்டும் மாரி பொழிய மனமிழந்து நிற்கையிலே கண்ணை விழித்துனது காவலனும் கூறுகின்றான். 160 "பெண்ணே, இனிநான் பிழைத்திடேன்; சிலகணத்தே ஆவி துறப்பேன், அழுதோர் பயனில்லை, சாவிலே துன்பமில்லை; தையலே, இன்னமும் நாம் பூமியிலே தோன்றிடுவோம். பொன்னே, நினைக்கண்டு காமுறுவேன்; நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்; 165 இன்னும் பிறவியுண்டு; மாதரசே இன்பமுண்டு, நின்னுடன் வாழ்வனினி நேரும் பிறப்பினிலே!" என்று சொல்லிக் கண்மூடி, இன்பமுறு புன்னகைதான் நின்று முகத்தே நிலவுதர, மாண்டனன்காண். மாடனிங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது. 170 பீடையுறு புள்வடிவம் பேதையுனக் கெய்தியது. வாழிநின்றன் மன்னவனும் தொண்டை வளநாட்டில் ஆழிக் கரையின் அருகேயோர் பட்டினத்தில் மானிடனாத் தோன்றி வளருகின்றான். நின்னையொரு கானிடத்தே காண்பான். கனிந்துநீ பாடும்நல்ல 175 பாட்டினைத்தான் கேட்பான். பழவினையின் கட்டினால் மீட்டு நின்மேற் காதல்கொள்வான், மென்குயிலே!" என்றந்தத் தென் பொதியை மாமுனிவர் செப்பினார். "சாமீ, குயிலுருவங் கொண்டேன்யான். கோமானோ மேன்மை பயிலு மனிதவுருப் பற்றநின்றான், எம்முள்ளே 180 காதலிசைந் தாலும் கடிமணந்தான் கூடாதாம் சாதற் பொழுதிலே தார்வேந்தன் கூறியசொல் பொய்யாய் முடியாதோ?" என்றிசைத்தேன், புன்னகையில் ஐயர் உரைப்பார்; "அடி பேதாய், இப்பிறவி தன்னிலும் நீ விந்தகிரிச் சார்பினிலோர் வேடனுக்குக் 185 கன்னியெனத் தான்பிறந்தாய் கர்ம வசத்தினால், மாடன் குரங்கன் இருவருமே வன்பேயாக் காடுமலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார் நின்னையங்கே, இப்பிறப்பில் நீயும் பழைமைபோல் மன்னனையே சேர்வையென்று தாஞ்சூழ்ந்து மற்றவரும் 190 நின்னைக் குயிலாக்கி நீசெல்லுந் திக்கிலெலாம் நின்னுடனே சுற்றுகின்றார் நீயிதனைத் தேர்கிலையோ?" என்றார். "விதியே, இறந்தவர்தாம் வாழ்வாரை நின்று துயருறுத்தல் நீதியோ? பேய்களெனைப் பேதைப் படுத்திப் பிறப்பை மறப்புறுத்தி, 195 வாதைப் படுத்தி வருமாயின், யானெனது காதலனைக் காணுங்கால், காய்சினத்தால் ஏதேனும் தீதிழைத்தால் என்செய்வேன்? தேவரே, மற்றிதற்கோர் மாற்றிலையோ?" என்று மறுகி நான் கேட்கையிலே, தேற்றமுறு மாமுனிவர் செப்புகின்றார்:- 'பெண்குயிலே! 200 தொண்டைவள நாட்டிலோர் சோலையிலே வேந்தன்மகன் கண்டுனது பாட்டில் கருத்திளகிக் காதல்கொண்டு நேசம் மிகுதியுற்று நிற்கையிலே, பேயிரண்டும் மோசம் மிகுந்த முழுமாயச் செய்கைபல செய்துபல பொய்த்தோற்றங் காட்டித் திறல்வேந்தன் 205 ஐயமுறச் செய்துவிடும், ஆங்கவனும் நின்றனையே வஞ்சகியென் றெண்ணி மதிமருண்டு நின்மீது வெஞ்சினந்தான் எய்திநினை விட்டுவிட நிச்சயிப்பான் பிந்தி விளைவதெல்லாம் பின்னேநீ கண்டு கொள்வாய் சந்தி ஐபம் செய்யுஞ் சமயமாய்விட்ட' தென்றே 210 காற்றில் மறைந்து சென்றார் மாமுனிவர், காதலரே! மாற்றி உரைக்கவில்லை, மாமுனிவர் சொன்னதெல்லாம் அப்படியே சொல்லிவிட்டேன். ஐயா! திருவுளத்தில் எப்படிநீர் கொள்வீரோ, யானறியேன், ஆரியரே! காத லருள்புரிவீர், காதலில்லை யென்றிடிலோ, 215 சாத லருளி நுமது கையால் கொன்றிடுவீர்!" என்று குயிலும் எனது கையில் வீழ்ந்ததுகாண். கொன்றுவிட மனந்தான் கொள்ளுமோ? பெண்ணென்றால் பேயு மிரங்காதோ? பேய்கள் இரக்கமின்றி மாயமிழைத் தாலதனை மானிடனுங் கொள்ளுவதோ? 220 காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பதுண்டோ? மாதரன்பு கூறில் மனமிளகார் இங்குளரோ? அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு முன்புவைத்து நோக்கியபின் மூண்டுவரும் இன்பவெறி கொண்டதனை முத்தமிட்டேன். கோகிலத்தைக் காணவில்லை. 225 விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா! ஆசைக் கடலின் அமுதடா! அற்புதத்தின் தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா! பெண்ணொருத்தி அங்குநின்றாள்; பேருவகை கொண்டுதான் கண்ணெடுக்கா தென்னைக்கணப் பொழுது நோக்கினாள்; 230 சற்றே தலைகுனிந்தாள், சாமீ! இவளழகை எற்றே தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும் ஆளை வீழுங்கும் அதிசயத்தைக் கூறுவனோ? மீன விழியில் மிதந்த கவிதையெலாம் சொல்லில் அகப்படுமோ? தூயசுடர் முத்தையொப்பாம் 235 பல்லில் கனியிதழில் பாய்ந்த நிலவினை யான் என்றும் மறத்தல் இயலுமோ? பாரின் மிசை நின்றதொரு மின்கொடிபோல் நேர்ந்தமணிப் பெண்ணரசின் மேனி நலத்தினையும், வெட்டினையுங் கட்டினையும், தேனி லினியாள் திருத்த நிலையினையும், 240 மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? ஓர் வார்த்தை கற்றவர்க்குச் சொல்வேன். கவிதைக் கனிபிழிந்த சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம் ஏற்றி, அதனோடே, இன்னமுதைத் தான்கலந்து, காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் 245 மாதவளின் மேனி வகுத்தான் பிரமெனென்பேன். பெண்ணவளைக் கண்டு பெருங்களிகொண்டாங்ஙனே நண்ணித் தழுவி நறுங்கள் ளிதழினையே முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில் சித்தம் மயங்கிச் சிலபோழ் திருந்த பின்னே, 250 பக்கத் திருந்தமணிப் பாவையுடன் சோலையெலாம் ஒக்க மறைந்திடலும், ஓஹோ! எனக்கதறி வீழ்ந்தேன். பிறகு விழிதிறந்து பார்க்கையிலே சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல், பத்திரிகைக் கூட்டம், பழம்பாய்-வரிசை யெல்லாம் 255 ஒத்திருக்க 'நாம் வீட்டில் உள்ளோம்' எனவுணர்ந்தேன். சோலை, குயில், காதல், சொன்னகதை யத்தனையும், மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டுகொண்டேன். ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே யானாலும், 260 வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ? |