சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய

அகநானூறு

... தொடர்ச்சி - 12 ...

111. தோழி கூற்று

     உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர்
     எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி
     வருவர் வாழி, தோழி! அரச
     யானை கொண்ட துகிற் கொடி போல,
5   அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி
     ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர,
     மழை என மருண்ட மம்மர் பல உடன்
     ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை
     தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
10  அத்தக் கேழல் அட்ட நற் கோள்
     செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப,
     குருதி ஆரும் எருவைச் செஞ் செவி,
     மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட
     புண் தேர் விளக்கின், தோன்றும்
15  விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே.

தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகளை ஆற்றுவித்தது
பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ

112. தோழி கூற்று

     கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி
     சிதலை செய்த செந் நிலைப் புற்றின்
     மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி,
     இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல்
5   ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி
     ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும்
     பனி இருஞ் சோலை, 'எமியம்' என்னாய்,
     தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே;
     நாள் இடைப்படின், என் தோழி வாழாள்;
10  தோளிடை முயக்கம் நீயும் வெய்யை;
     கழியக் காதலர்ஆயினும், சான்றோர்
     பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்;
     வரையின் எவனோ? வான் தோய் வெற்ப!
     கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
15  மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார்,
     தொன்று இயல் மரபின் மன்றல் அயர,
     பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி,
     நொதுமல் விருந்தினம் போல, இவள்
     புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே.

இரவுக்குறி வந்த தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவு கடாயது
குறிஞ்சி
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார்

113. தலைவி கூற்று

     நன்று அல் காலையும் நட்பின் கோடார்,
     சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்,
     புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன்
     மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி,
5   காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர்
     இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
     வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து,
     அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற,
     நல்காது துறந்த காதலர், 'என்றும்
10  கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி
     அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர்
     இகந்தனர்ஆயினும், இடம் பார்த்துப் பகைவர்
     ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
     குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
15  கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல்
     விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி
     எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர்,
     நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
     எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர்
20  அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி,
     சேயர்' என்றலின், சிறுமை உற்ற என்
     கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
     அழாஅம் உறைதலும் உரியம் பராரை
     அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப்
25  புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு,
     மெய் இவண் ஒழியப் போகி, அவர்
     செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே!

தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது
பாலை
கல்லாடனார்

114. தலைவன் கூற்று

     'கேளாய், எல்ல! தோழி! வேலன்
     வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய
     விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்,
     உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு,
5   அரவு நுங்கு மதியின், ஐயென மறையும்
     சிறு புன் மாலையும் உள்ளார் அவர்' என,
     நப் புலந்து உறையும் எவ்வம் நீங்க,
     நூல் அறி வலவ! கடவுமதி, உவக்காண்
     நெடுங் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை,
10  யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர்
     வானக மீனின் விளங்கித் தோன்றும்,
     அருங் கடிக் காப்பின், அஞ்சு வரு, மூதூர்த்
     திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின்,
     அரி மதர் மழைக் கண், அமை புரை பணைத் தோள்,
15  அணங்கு சால், அரிவையைக் காண்குவம்
     பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே.

வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது
முல்லை
பாடியவர் பெயர் தெரியவில்லை

115. தலைவி கூற்று

     அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
     பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்
     அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்
     சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
5   நுண் பூண் எருமை குட நாட்டன்ன என்
     ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
     நோய் இலராக, நம் காதலர் வாய் வாள்
     எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
     கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய
10  வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச்
     சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
     அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை,
     பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை,
     சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி
15  இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை,
     நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு,
     நம் நீத்து உறையும் பொருட்பிணிக்
     கூடாமையின், நீடியோரே.

பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது
பாலை
மாமூலனார்

116. தோழி கூற்று

     எரி அகைந்தன்ன தாமரை இடை இடை
     அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர்
     கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்,
     ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!
5   பெரிய நாண் இலைமன்ற; 'பொரி எனப்
     புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல்,
     நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல்,
     மாழை நோக்கின், காழ் இயல் வன முலை,
     எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை
10  வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே,
     பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும், கையிகந்து
     அலர் ஆகின்றால் தானே; மலர்தார்,
     மை அணி யானை, மறப் போர்ச் செழியன்
     பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
15  உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்
     கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி,
     இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர்
     ஓடுபுறம் கண்ட ஞான்றை,
     ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே.

தோழி தலைமகனை வாயில் மறுத்தது
மருதம்
பரணர்

117. செவிலித்தாய் கூற்று

     மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும்,
     அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள்,
     ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை
     வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி,
5   வெருவரு கவலை ஆங்கண், அருள்வர,
     கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப்
     பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்,
     பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச்
     சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே
10  சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து;
     யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள்,
     தன் ஓரன்ன தகை வெங் காதலன்
     வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட,
     சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்
15  நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம்
     கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
     பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
     வாணன் சிறுகுடி வடாஅது
     தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே?

மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது
பாலை
பாடியவர் பெயர் தெரியவில்லை

118. தோழி கூற்று

     கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்,
     தேம் கமழ் இணர வேங்கை சூடி,
     தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ,
     மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
5   இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட,
     பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள,
     இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப்
     பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய
     அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள்
10  தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்;
     என் ஆகுவள்கொல்தானே? பல் நாள்
     புணர் குறி செய்த புலர்குரல் ஏனல்
     கிளி கடி பாடலும் ஒழிந்தனள்;
     அளியள்தான், நின் அளி அலது இலளே!

செறிப்பு அறிவுறீஇ, 'இரவும் பகலும் வாரல்' என்று வரைவு கடாஅயது
குறிஞ்சி
கபிலர்

119. தலைவி கூற்று (அ) தோழி கூற்று

     'நுதலும் தோளும், திதலை அல்குலும்,
     வண்ணமும், வனப்பும், வரியும், வாட
     வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி,
     'வரைவு நன்று' என்னாது அகலினும், அவர் வறிது,
5   ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை,
     ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப,
     நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள,
     உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
     நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
10  சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து,
     நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை,
     தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை,
     மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு
     தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப,
15  துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள
     மறப் புலி உழந்த வசி படு சென்னி
     உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி,
     படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
     கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை,
20  மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே?

செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது; தோழி தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம்
பாலை
குடவாயிற் கீரத்தனார்

120. தோழி கூற்று

     நெடு வேள் மார்பின் ஆரம் போல,
     செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும்
     பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப,
     எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின்
5   கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு
     மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே
     பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
     மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது,
     அழல் தொடங்கினளே பெரும! அதனால்
10  கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி
     நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ,
     வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது,
     சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
     பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை
15  அன்றில் அகவும் ஆங்கண்,
     சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே?

தோழி, பகற்குறிக்கண் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது
நெய்தல்
நக்கீரனார்