உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு ... தொடர்ச்சி - 15 ... 141. தலைவி கூற்று அம்ம வாழி, தோழி! கைம்மிகக் கனவும் கங்குல்தோறு இனிய; நனவும் புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின; நெஞ்சு நனிபுகன்று உறையும்; எஞ்சாது 5 உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, மழை கால் நீங்கிய மாக விசும்பில் குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து, அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்; மறுகு விளக்கு உறுத்து, மாலை தூக்கி, 10 பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு உடன் அயர, வருகதில் அம்ம! துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி, தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின் புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் 15 பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ, கூழைக் கூந்தல் குறுந் தொடி மகளிர் பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து, பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக் கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு 20 தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது; நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப் 25 புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை நரந்த நறும் பூ நாள் மலர் உதிர, கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை, தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே. 'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
பாலை
நக்கீரர் 142. தலைவன் கூற்று இலமலர் அன்ன அம் செந் நாவின் புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த, பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல் நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம் 5 பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற குறையோர் கொள்கலம் போல, நன்றும் உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற கறை அடி யானை நன்னன் பாழி, 10 ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க் ஊட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின், 15 பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பைய, நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச் சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல், இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர, 20 கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து, உருவு கிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து, பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப, 25 தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்; வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே. இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
குறிஞ்சி
பரணர் 143. தோழி கூற்று செய்வினை பிரிதல் எண்ணி, கைம்மிகக் காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின், நீடு சினை வறிய ஆக, ஒல்லென வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும் 5 தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு, முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரிச் சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை முழங்கும் 'வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய! சேறும்' என்ற சிறு சொற்கு இவட்கே, 10 வசை இல் வெம் போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும், பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன் மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன் அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த 15 தண் கமழ் நீலம் போல, கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே. பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை கண்டு, செலவு அழுங்குவித்தது
பாலை
ஆலம்பேரி சாத்தனார் 144. தலைமகன் கூற்று "வருதும்" என்ற நாளும் பொய்த்தன; அரி ஏர் உண்கண் நீரும் நில்லா; தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை 5 பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், அருள் கண்மாறலோ மாறுக அந்தில் அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர் எனச் சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும், பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு, 10 துனி தீர் முயக்கம் பெற்றோள் போல உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின் ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் கடாஅ யானை கொட்கும் பாசறை, போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை 15 கூர் வாள் குவிமுகம் சிதைய நூறி, மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி வான மீனின் வயின் வயின் இமைப்ப, அமர் ஓர்த்து, அட்ட செல்வம் தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே. வினை முற்றிய தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைப்பானாய், பாகற்குச் சொல்லியது
முல்லை
மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் 145. செவிலித்தாய் கூற்று வேர் முழுது உலறி நின்ற புழல்கால், தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும், வற்றல் மரத்த பொன் தலை ஓதி வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள, 5 நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு வாள்வரி பொருத புண் கூர் யானை புகர் சிதை முகத்த குருதி வார, உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும் 10 'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர் அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய நன்னர் மெல் இணர்ப் புன்னை போல, கடு நவைப் படீஇயர் மாதோ - களி மயில் 15 குஞ்சரக் குரல குருகோடு ஆலும், துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை, கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பால் சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது, 20 எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், 'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என் அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே! மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது
பாலை
கயமனார் 146. தலைமகள் கூற்று வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி, மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ, படப்பை நண்ணி, பழனத்து அல்கும் 5 கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர், ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள் இயங்கல் ஆனாது ஆயின்; வயங்கிழை யார்கொல் அளியன் தானே - எம் போல் மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி, 10 வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின் கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து, ஆயமும் அயலும் மருள, தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டா தோளே? வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது
மருதம்
உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் 147. தலைமகள் கூற்று ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த, 5 துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென, பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் நெறி படு கவலை நிரம்பா நீளிடை, வெள்ளி வீதியைப் போல நன்றும் 10 செலவு அயர்ந் திசினால் யானே; பல புலந்து, உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், தோளும் தொல் கவின் தொலைய, நாளும் பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி, மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே! செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது
பாலை
ஔவையார் 148. தோழி கூற்று பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை, கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின், வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி; 5 உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து; சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட! கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென, காணிய செல்லாக் கூகை நாணி, 10 கடும் பகல் வழங்கா தாஅங்கு, இடும்பை பெரிதால் அம்ம இவட்கே; அதனால் மாலை, வருதல் வேண்டும் - சோலை முளை மேய் பெருங் களிறு வழங்கும் மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே. பகல் வருவானை 'இரவு வருக' என்றது
குறிஞ்சி
பரணர் 149. தலைமகன் கூற்று சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின், புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப் பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும் 5 அத்த நீள் இடைப் போகி, நன்றும் அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும் வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர் சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க, யவனர் தந்த வினை மாண் நன் கலம் 10 பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ, அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய நெடு நல் யானை அடுபோர்ச் செழியன் கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது, 15 பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய, ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே. தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது
பாலை
எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் 150. தோழி கூற்று பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக் கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி; 'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி, 5 பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல் வாள் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை, கனைத்த நெய்தற் கண் போல் மா மலர் நனைத்த செருந்திப் போது வாய் அவிழ, 10 மாலை மணி இதழ் கூம்ப, காலைக் கள் நாறு காவியொடு தண்ணென மலரும் கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து; 'வாரார் கொல்?' எனப் பருவரும் தார் ஆர் மார்ப! நீ தணந்த ஞான்றே! பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது
நெய்தல்
குறுவழுதியார் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|