சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய

அகநானூறு

... தொடர்ச்சி - 21 ...

201. தோழி கூற்று

அம்ம, வாழி தோழி! பொன்னின்
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை
வினை நவில் யானை விறற் போர்ப் பாண்டியன்
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை,
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து, 5
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ,
பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை,
உரு கெழு பெருங் கடல் உவவுக் கிளர்ந்தாங்கு,
அலரும் மன்று பட்டன்றே; அன்னையும் 10
பொருந்தாக் கண்ணள், வெய்ய உயிர்க்கும் என்று
எவன் கையற்றனை, இகுளை? சோழர்
வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும்,
ஆண்டு அமைந்து உறைநர்அல்லர் முனாஅது
வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன், 15
பெருங் கை எண்கின் பேழ்வாய் ஏற்றை
இருள் துணிந்தன்ன குவவுடூ மயிர்க் குருளைத்
தோல் முலைப் பிணவொடு திளைக்கும்
வேனில் நீடிய சுரன் இறந்தோரே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
பாலை
மாமூலனார்

202. தோழி கூற்று

வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன்,
கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப,
புலிப் பகை வென்ற புண் கூர் யானை
கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்,
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் 5
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி,
சிறு பல் மின்மினி போல, பல உடன்
மணி நிற இரும் புதல் தாவும் நாட!
யாமே அன்றியும் உளர்கொல் பானாள்,
உத்தி அரவின் பைத் தலை துமிய, 10
உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை,
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக,
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி
தேராது வரூஉம் நின்வயின்
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே? 15

இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது.
குறிஞ்சி
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்

203. நற்றாய் கூற்று

உவக்குநள்ஆயினும், உடலுநள்ஆயினும்,
யாய் அறிந்து உணர்க என்னார், தீ வாய்
அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்,
இன்னள் இனையள், நின் மகள் என, பல் நாள்
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன், 5
நாணுவள் இவள் என, நனி கரந்து உறையும்
யான் இவ் வறு மனை ஒழிய, தானே,
அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல் என, கழற் கால்
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற, 10
பல் மலை அருஞ் சுரம் போகிய தனக்கு, யான்
அன்னேன் அன்மை நன் வாயாக,
மான் அதர் மயங்கிய மலைமுதல் சிறு நெறி
வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப்
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர், 15
செல் விருந்து ஆற்றி, துச்சில் இருத்த,
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுகமன்னே!

மகட் போக்கிய தாய் சொல்லியது.
பாலை
கபிலர்

204. தலைமகன் கூற்று

உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை,
கடல் போல் தானை, கலிமா, வழுதி
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச்
சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில், 5
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப,
உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து,
செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர்
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை 10
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும்
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித்
தண்டலை கமழும் கூந்தல்,
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே.

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
முல்லை
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்

205. தலைவி கூற்று

உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின்
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல,
தையல்! நின் வயின் பிரியலம் யாம் எனப்
பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி,
துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே 5
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர,
நாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி,
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி, 10
பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற
விழு நிதி எளிதினின் எய்துகதில்ல
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி, 15
நீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில்,
கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி,
புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து,
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர, 20
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக்
கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.
பாலை
நக்கீரர்

206. தலைமகள் கூற்று

என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப்
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப,
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை
மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம்,
சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத் 5
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்,
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
அம் மா மேனி, ஆய்இழை, மகளிர்
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து
ஆராக் காதலொடு தார் இடை குழைய, 10
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து,
அடுபோர் வேளிர் வீரை முன்துறை,
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை,
பெரு பெயற்கு உருகியாஅங்கு, 15
துஇதிருந்ழை நெகிழ்ந்தன, தட மென் தோளே?

வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது.
மருதம்
மதுரை மருதன் இளநாகனார்

207. நற்றாய் கூற்று

அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம்
குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப்
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர்
நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக் 5
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்,
வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை,
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள,
வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல்
பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல் 10
தெண் கண் உவரிக் குறைக் குட முகவை,
அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து,
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள்கொல்லோ
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக்
கூழை உளர்ந்து மோழைமை கூறவும், 15
மறுத்த சொல்லள் ஆகி,
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே?

மகட் போக்கிய தாய் சொல்லியது.
பாலை
மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார்

208. தலைமகன் கூற்று

யாம இரவின் நெடுங் கடை நின்று,
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், 5
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து,
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, புள் ஒருங்கு
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று 10
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி,
நிழல் செய்து உழறல் காணேன், யான் எனப்
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து,
உரு வினை நன்னன், அருளான், கரப்ப,
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர் 15
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல்,
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல்
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல,
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி, 20
நல்கினள், வாழியர், வந்தே ஓரி
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக்
கார் மலர் கடுப்ப நாறும்,
ஏர் நுண், ஓதி மாஅயோளே!

புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
குறிஞ்சி
பரணர்

209. தோழி கூற்று

தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும்
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே,
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான்,
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்,
நேரா எழுவர் அடிப்படக் கடந்த 5
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என,
ஆழல் வாழி, தோழி! அவரே,
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து 10
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல்
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி, 15
நிலை பெறு கடவுள் ஆக்கிய,
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.
பாலை
கல்லாடனார்

210. தோழி கூற்று

குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர்
எறிஉளி பொருத ஏமுறு பெரு மீன்
புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட,
விசும்பு அணி வில்லின் போகி, பசும் பிசிர்த்
திரை பயில் அழுவம் உழக்கி, உரன் அழிந்து, 5
நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன்,
பானாள் இரவில், நம் பணைத் தோள் உள்ளி,
தான் இவண் வந்த காலை, நம் ஊர்க்
கானல்அம் பெருந் துறை, கவின் பாராட்டி,
ஆனாது புகழ்ந்திசினோனே; இனி, தன் 10
சாயல் மார்பின் பாயல் மாற்றி,
கைதை அம் படு சினைக் கடுந் தேர் விலங்கச்
செலவு அரிது என்னும் என்பது
பல கேட்டனமால் தோழி! நாமே.

தோழி தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
நெய்தல்
உலோச்சனார்