உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு ... தொடர்ச்சி - 37 ... 361. தலைமகன் கூற்று ''தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண், மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன, திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண், அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும், 5 கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்'' என அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய், பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே! கரியாப் பூவின் பெரியோர் ஆர, 10 அழல் எழு தித்தியம் அடுத்த யாமை நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு, உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று, சில் மொழி, அரிவை தோளே பல் மலை வெவ் அறை மருங்கின் வியன் சுரம், 15 எவ்வம் கூர, இறந்தனம், யாமே. பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை
எயினந்தை மகனார் இளங்கீரனார் 362. தோழி கூற்று பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறைத் தேம் கலந்து ஒழுக, யாறு நிறைந்தனவே; வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து, பைங் கண் வல்லியம் கல் அளைச் செறிய, முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு 5 கடி கொள, வழங்கார் ஆறே; ஆயிடை எல்லிற்று என்னான், வென் வேல் ஏந்தி, நசை தர வந்த நன்னராளன் நெஞ்சு பழுதாக, வறுவியன் பெயரின், இன்று இப்பொழுதும் யான் வாழலெனே; 10 எவன்கொல்? வாழி, தோழி! நம் இடை முலைச் சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும், சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிப்பின் இலங்கு வெள் அருவி போலவும், நிலம் கொண்டனவால், திங்கள் அம் கதிரே! 15 இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.
குறிஞ்சி
வெள்ளிவீதியார் 363. தோழி கூற்று நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ, அகல் இரு விசும்பில் பகல் செலச் சென்று, மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய, பொழுது கழி மலரின், புனையிழை! சாஅய், அணை அணைந்து இனையை ஆகல் கணை அரைப் 5 புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங் காய் கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப, பொலம் செய் காசின் பொற்பத் தாஅம் அத்தம் நண்ணி, அதர் பார்த்து இருந்த கொலை வெங் கொள்கைக் கொடுந் தொழில் மறவர் 10 ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய, வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல் கிளை தரு தெள் விளி கெழு முடைப் பயிரும் இன்னா வெஞ் சுரம் இறந்தோர், முன்னிய 15 செய் வினை வலத்தர் ஆகி, இவண் நயந்து, எய்த வந்தனரே தோழி! மை எழில் துணை ஏர் எதிர் மலர் உண்கண் பிணை ஏர் நோக்கம் பெருங் கவின் கொளவே. பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
பாலை
மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார் 364. தலைமகள் கூற்று மாதிரம் புதையப் பாஅய், கால் வீழ்த்து, ஏறுடைப் பெரு மழை பொழிந்தென, அவல்தோறு ஆடு களப் பறையின் வரி நுணல் கறங்க, ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன நீடு இணர்க் கொன்றை கவின் பெற, காடு உடன் 5 சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ, முல்லை இல்லமொடு மலர, கல்ல பகு வாய்ப் பைஞ் சுனை மா உண மலிர, கார் தொடங்கின்றே காலை; காதலர் வெஞ் சின வேந்தன் வியன் பெரும் பாசறை, 10 வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்; யாது செய்வாம்கொல்? தோழி! நோதகக் கொலை குறித்தன்ன மாலை துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே! பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
முல்லை
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் 365. தலைமகன் கூற்று அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப, பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு சினவல் போகிய புன்கண் மாலை, அத்த நடுகல் ஆள் என உதைத்த கான யானைக் கதுவாய் வள் உகிர், 5 இரும் பனை இதக்கையின், ஒடியும் ஆங்கண், கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை, வருநர் இன்மையின் களையுநர்க் காணா என்றூழ் வெஞ் சுரம் தந்த நீயே துயர் செய்து ஆற்றாயாகி, பெயர்பு, ஆங்கு 10 உள்ளினை வாழிய, நெஞ்சே! வென் வேல் மா வண் கழுவுள் காமூர் ஆங்கண், பூதம் தந்த பொரி அரை வேங்கைத் தண் கமழ் புது மலர் நாறும் அம் சில் ஓதி ஆய் மடத் தகையே. 15 தலைமகன் இடைச் சுரத்து நின்று சொல்லியது.
பாலை
மதுரை மருதன் இளநாகனார் 366. தோழி கூற்று தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய நீர் சூழ் வியன் களம் பொலிய, போர்பு அழித்து, கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி, கடுங் காற்று எறிய, போகிய துரும்பு உடன் காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின், 5 இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர் தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின், சினைஇ, கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி, இருஞ் சேற்று அள்ளல் எறி செருக் கண்டு, நரை மூதாளர் கை பிணி விடுத்து, 10 நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன, நலம் பெறு பணைத் தோள், நல் நுதல் அரிவையொடு, மணம் கமழ் தண் பொழில் அல்கி, நெருநை நீ தற் பிழைத்தமை அறிந்து, 15 கலுழ்ந்த கண்ணள், எம் அணங்கு அன்னாளே. பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிய இடத்து, தோழி சொல்லியது.
மருதம்
குடவாயிற் கீரத்தனார் 367. தலைமகள் கூற்று இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து, பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து, அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப, மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய, முனை உழை இருந்த அம் குடிச் சீறூர், 5 கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின் மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை, குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர், தளிர் புரை கொடிற்றின், செறி மயிர் எருத்தின், 10 கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும் புல்லென் மாலையும், இனிது மன்றம்ம நல் அக வன முலை அடையப் புல்லுதொறும் உயிர் குழைப்பன்ன சாயல், 15 செயிர் தீர், இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே. பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.
பாலை
பரணர் 368. தோழி கூற்று தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம், கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து, தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும் ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய 5 குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை, மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன் உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக் குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில், கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீம் நீர் 10 பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி, பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள் கழியாமையே வழிவழிப் பெருகி, அம் பணை விளைந்த தேக் கட் தேறல் வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர், 15 எவன்கொல் வாழி, தோழி! கொங்கர் மணி அரை யாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவின் அன்ன, அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே? பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.
குறிஞ்சி
மதுரை மருதன் இளநாகனார் 369. செவிலித்தாய் கூற்று கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை: ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு, மங்கையர் பல பாராட்ட, செந் தார்க் கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல் சேயிழை மகளிர் ஆயமும் அயரா; 5 தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக் காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப் பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர, இவை கண்டு, இனைவதன்தலையும், நினைவிலேன், கொடியோள் முன்னியது உணரேன், ''தொடியோய்! 10 இன்று நின் ஒலி குரல் மண்ணல்'' என்றதற்கு, எற் புலந்து அழிந்தனளாகி, தற் தகக் கடல்அம் தானை கை வண் சோழர், கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன, நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து, 15 தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல் ஓமை நீடிய உலவை நீள் இடை, மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல், துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின் அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த 20 சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி, ''சிறப்பும் சீரும் இன்றி, சீறூர் நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ, 25 மேயினள்கொல்?'' என நோவல் யானே. மகட் போக்கிய செவிலி சொல்லியது.
பாலை
நக்கீரர் 370. தோழி கூற்று ''வளை வாய்க் கோதையர் வண்டல் தைஇ, இளையோர், செல்ப; எல்லும் எல்லின்று; அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல், பகலே எம்மொடு ஆடி, இரவே, காயல் வேய்ந்த தேயா நல் இல் 5 நோயொடு வைகுதிஆயின், நுந்தை அருங் கடிப் படுவலும்'' என்றி; மற்று, ''நீ செல்லல்'' என்றலும் ஆற்றாய்; ''செலினே, வாழலென்'' என்றி, ஆயின்; ஞாழல் வண்டு படத் ததைந்த கண்ணி, நெய்தல் 10 தண் அரும் பைந் தார் துயல்வர, அந்தி, கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு, நீயே கானல் ஒழிய, யானே வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து, ஆடு மகள் போலப் பெயர்தல் 15 ஆற்றேன்தெய்ய; அலர்க, இவ் ஊரே! பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.
நெய்தல்
அம்மூவனார் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|