உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை ... தொடர்ச்சி - 16 ... 301. குறிஞ்சி
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக் கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக் கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல் வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல், மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர் வாராதுஆயினும், வருவது போலச் செவிமுதல் இசைக்கும் அரவமொடு துயில் துறந்தனவால்-தோழி!-என் கண்ணே. வரைவிடை வைப்பு, ஆற்றகிற்றியோ? என்ற தோழிக்குக் கிழத்தி
சொல்லியது
குன்றியன்
302. குறிஞ்சி
உரைத்திசின்-தோழி!-அது புரைத்தோ அன்றே? அருந்துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன்தலைப் பெரும்பிறிதாகல் அதனினும் அஞ்சுதும்; அன்னோ! இன்னும், நல் மலை நாடன், "பிரியா நண்பினர் இருவரும்" என்னும் அலர்-அதற்கு அஞ்சினன்கொல்லோ? பலர் உடன் துஞ்சு ஊர் யாமத்தானும், என் நெஞ்சத்து அல்லது வரவு அறியானே. வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது
மாங்குடி கிழார்
303. நெய்தல்
கழிதேர்ந்து அசைஇய கருங்கால் வெண் குருகு அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங்கடல் உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ! தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப் பசந்தனள் மன் என் தோழி-என்னொடும் இன் இணர்ப் புன்னை அம் புகர் நிழல் பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே. செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது
அம்மூவன்
304. நெய்தல்
கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ் தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக் கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய, நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து வெண் தோடு இரியும் வீ ததை கானல், கைதைஅம் தண் புனற் சேர்ப்பனொடு செய்தனெம்மன்ற, ஓர் பகைதரு நட்பே. வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கணக்காயன் தத்தன்
305. மருதம்
கண் தர வந்த காம ஒள் எரி என்பு உற நலியினும், அவரொடு பேணிச் சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே; உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் குப்பைக் கோழித் தனிப் போர் போல, விளிவாங்கு விளியின் அல்லது, களைவோர் இலை-யான் உற்ற நோயே. காப்பு மிகுதிக்கண், தோழி அறத்தொடு நிற்பாளாக, தனது ஆற்றாமை
தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது
குப்பைக் கோழியார்.
306. நெய்தல்
"மெல்லிய, இனிய, மேவரு தகுந, இவை மொழியாம்" எனச் சொல்லினும், அவை நீ, மறத்தியோ வாழி-என் நெஞ்சே!-பல உடன் காமர் மாஅத்துத் தாது அமர் பூவின் வண்டு வீழ்பு அயரும் கானல்- தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே? காப்பு மிகுதியான், நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து கிழத்தி
உரைத்தது
அம்மூவன்
307. பாலை
வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ, செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி, இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ, மறந்தனர் கொல்லோ தாமே-களிறு தன் உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது, நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி, வெண் நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து, அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே? பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கடம்பனூர்ச் சாண்டிலியன்
308. குறிஞ்சி
சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து, மயங்குதுயர் உற்ற மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் மா மலைநாடன் கேண்மை காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே. வரைவிடைக் கிழத்தியை வன்சொல் சொல்லி வற்புறுத்தியது
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
309. மருதம்
கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார், சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட, நீடிய வரம்பின் வாடிய விடினும், "கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்? என்னாது" பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் நின் ஊர் நெய்தல் அனையேம்-பெரும!- நீ எமக்கு இன்னாதன பல செய்யினும், நின் இன்று அமைதல் வல்லாமாறே. பரத்தையிற் பிரிந்து வந்து கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது
உறையூர்ச் சல்லியன் குமாரன்
310. நெய்தல்
புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின; கானலும் புலம்பு நனி உடைத்தே; வானமும், நம்மே போலும் மம்மர்த்து ஆகி, எல்லை கழியப் புல்லென்றன்றே; இன்னும் உளெனே-தோழி!-இந் நிலை தண்ணிய கமழும் ஞாழல் தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறினே. வரைவிடை முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது
பெருங்கண்ணன்
311. நெய்தல்
அலர் யாங்கு ஒழிவ-தோழி!-பெருங் கடல் புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும், நில்லாது கழிந்த கல்லென் கடுந் தேர் யான் கண்டன்றோஇலனே; பானாள் ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னைத் தாது சேர் நிகர்மலர் கொய்யும் ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே? அலரஞ்சிய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச்
சொல்லுவாளாய்ச் சொல்லியது
சேந்தன்கீரன்
312. குறிஞ்சி
இரண்டு அறி கள்வி நம் காதலோளே முரண் கொள் துப்பின் செவ்வேல் மலையன் முள்ளூர்க் கானம் நாற வந்து, நள்ளென் கங்குல் நம் ஓரன்னது; கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து, சாந்து உளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி, அமரா முகத்தள் ஆகித் தமர் ஓரன்னள், வைகறையானே. இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன் நெஞ்சிற்கு
வரைவிடை வேட்பக் கூறியது
கபிலர்
313. நெய்தல்
பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு, பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவனோடு யாத்தேம்; யாத்தன்று நட்பே; அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே. இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவு உணர்ந்து
'பண்பிலர்' என்று இயற்பழித்த தோழிக்கு, அவரொடு பிறந்த நட்பு அழியாத
நட்பன்றோ! என்று சிறைப்புறமாகத் தலைமகள் இயற்பட மொழிந்தது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
314. முல்லை
சேயுயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல் தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப, பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும், வாரார் வாழி!-தோழி!-வரூஉம் இன் உறல் இள முலை ஞெமுங்க- இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே. பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, வற்புறுத்துந் தோழிக்குப்
பருவங் காட்டி, அழிந்து கூறியது
பேரிசாத்தன்
315. குறிஞ்சி
எழுதரு மதியம் கடல் கண்டாஅங்கு ஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன் ஞாயிறு அனையன்-தோழி!- நெருஞ்சி அனைய என் பெரும் பணைத்தோளே. வரைவிடை, 'வேறுபடுகின்றாய்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
மதுரை வேளாதத்தன்
316. நெய்தல்
ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும், நோய் மலி வருத்தம் அன்னை அறியின், உளெனோ வாழி-தோழி!-விளியாது, உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட, ஆய்ந்த அலவன் துன்புறு துணைபரி ஓங்குவரல் விரிதிரை களையும் துறைவன் சொல்லோ பிற ஆயினவே? வரைவிடை வேறு படுகின்றாய் என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
தும்பிசேர் கீரன்
317. குறிஞ்சி
புரி மட மரையான் கருநரை நல் ஏறு தீம் புளி நெல்லி மாந்தி, அயலது தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து, ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன் நம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக வட புல வாடைக்கு அழி மழை தென் புலம் படரும் தண் பனி நாளே? பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது
மதுரைக் கண்டராதித்தன்
318. நெய்தல்
எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின், நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய், வெறி அயல் களத்தினின் தோன்றும் துறைவன் குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று அறியாற்கு உரைப்பலோ, யானே? எய்த்த இப் பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள் பிழையா வஞ்சினம் செய்த களவனும், கடவனும், புணைவனும், தானே. கிழவன் கேட்கும் அண்மையன் ஆகத்தோழிக்குக் கிழத்தி உரைத்தது
அம்மூவன்
319. முல்லை
மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து, கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும், கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி, மை அணி மருங்கின் மலையகம் சேரவும், மாலை வந்தன்று, மாரி மா மழை; பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர் இன்னும் வாரார் ஆயின், என் ஆம், தோழி நம் இன் உயிர்நிலையே. பருவ வரவின்கண் வேறுபட்ட கிழத்தி வன்புறை எதிர் அழிந்து
சொற்றது
தாயங் கண்ணன்
320. நெய்தல்
பெருங் கடற் பரதவர் கோள் மீன் உணங்கலின் இருங் கழிக் கொண்ட இறவின் வாடலொடு, நிலவு நிற வெண் மணல் புலவ, பலஉடன், எக்கர் தொறும் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள், நக்கதோர் பழியும் இலமே போது அவிழ் பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப் புன்னைஅம் சேரி இவ் ஊர் கொன் அலர் தூற்றம், தன் கொடுமையானே. அலர் அஞ்சி ஆற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக்
கூறியது
தும்பிசேர் கீரன்
|