சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய

குறுந்தொகை

... தொடர்ச்சி - 19 ...

361. குறிஞ்சி

அம்ம வாழி, தோழி!-அன்னைக்கு
உயர்நிலை உலகமும் சிறிதால்-அவர் மலை
மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு
காலை வந்த முழுமுதற் காந்தள்
மெல் இழை குழைய முயங்கலும்,
இல் உய்த்து நடுதலும், கடியாதோளே.
வரைவு மலிந்தவழித் தோழி, 'நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி சொல்லியது
கபிலர்

362. குறிஞ்சி

முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல!
சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்;
பல்வேறு உருவின் சில் அவிழ் மடையொடு,
சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி,
வணங்கினை கொடுத்திஆயின், அணங்கிய
விண் தோய் மா மலைச் சிலம்பன்
ஒண் தார் அகலமும் உண்ணுமோ, பலியே?
வெறி விலக்கித் தோழி அறத்தொடு நின்றது
வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன்

363. பாலை

கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு,
செங் காற் பதவின் வார் குரல் கறிக்கும்
மடக் கண் மரையா நோக்கி, வெய்துற்று,
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும்
இன்னா அருஞ் சுரம் இறத்தல்
இனிதோ-பெரும!-இன் துணைப் பிரிந்தே?
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது
செல்லூர்க் கொற்றன்

364. மருதம்

அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன்
பொன் கோல் அவிர் தொடித் தற் கெழு தகுவி
எற் புறங்கூறும் என்ப; தெற்றென்
வணங்கு இறைப் பணைத் தோள் எல் வளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன அவ் வரைக்
கண் பொர, மற்று அதன்கண் அவர்
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே.
வேறு ஒரு பரத்தை தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது
ஒளவையார்

365. குறிஞ்சி

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே-
துன் அரு நெடு வரைத் ததும்ப அருவி
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும்
மருங்கில் கொண்ட பலவின்
பெருங் கல் நாட! நீ நயந்தோள் கண்ணே.
'யான் வரையுந் துணையும் ஆற்றவல்லனோ?' என வினாவிய கிழவற்குத் தோழி சொல்லியது
மதுரை நல்வெள்ளி

366. குறிஞ்சி

பால் வரைந்து அமைத்தல் அல்லது, அவர்வயின்
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ?-
வேறு யான் கூறவும் அமையாள், அதன் தலைப்
பைங் கண் மாச் சுனைப் பல் பிணி அவிழ்ந்த
வள் இதழ் நீலம் நோக்கி, உள் அகைபு,
ஒழுகி கண்ணள் ஆகி,
பழுது அன்று அம்ம, இவ் ஆயிழை துணிவே.
காவல் மிகுதிக்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு, 'இவ் வேறுபாடு எற்றினான் ஆயது?' என்று செவிலி வினாவ தோழி கூறியது
பேரிசாத்தன்

367. மருதம்

கொடியோர் நல்கார்ஆயினும், யாழ நின்
தொடி விளங்கு இறைய தோள்கவின் பெறீஇயர்,
உவக்காண்-தோழி!-அவ் வந்திசினே-
தொய்யல் மா மழை தொடங்கலின், அவர் நாட்டுப்
பூசல் ஆயம் புகன்று இழி அருவி
மண்ணுறு மணியின் தோன்றும்
தண் நறுந் துறுகல் ஓங்கிய மலையே.
வரைவு உணர்த்திய தோழி தலைமகட்குக் கழியுவகை மீதூராவகை உணர்த்தியது, வரைவு நீட்டித்த இடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றும் வகையான் ஆற்றுவித்ததூவும் ஆம்
மதுரை மருதன் இளநாகன்

368. மருதம்

மெல்லியலோயே! மெல்லியலோயே!
நல் நாண் நீத்த பழி தீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது, செப்பின்,
சொல்ல கிற்றா மெல்லியலோயே!
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே,
நாள் இடைப் படாஅ நளி நீர் நீத்தத்து
இடிகரைப் பெரு மரம் போல,
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே.
வரைவு மலிந்த தோழிக்குக் கிழத்தி கூறியது
நக்கீரர்

369. பாலை

அத்த வாகை அமலை வால் நெற்று,
அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக்
கோடை தூக்கும் கானம்
செல்வாம்-தோழி!-நல்கினர் நமரே.
தோழி கிழத்திக்கு உடன் போக்கு உணர்த்தியது
குடவாயில் கீர்த்தனார்

370. முல்லை

பொய்கை ஆம்பல் அணி நிற்க கொழு முகை
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின், இரு மருங்கினமே; கிடப்பின்,
வில்லக விரலின் பொருந்தி; அவன்
நல் அகம் சேரின், ஒரு மருங்கினமே.
கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் என்பதைக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது
வில்லக விரலினார்

371. குறிஞ்சி

கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும்,
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு,
மருவேன்-தோழி-அது காமமோ பெரிதே.
வரைவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகன் சொல்லியது
உறையூர் முதுகூத்தன்

372. குறிஞ்சி

பனைத் தலைக்-கருக்கு உடை நெடு மடல்
குருத்தொடு மாய,
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பைக்
கணம் கொள் சிமைய உணங்கும் கானல்,
ஆழி தலைவீசிய அயிர்ச் சேற்று அருவிக்
கூழை பெய் எக்கர்க் குழீஇய பதுக்கை
புலர் பதம் கொள்ளா அளவை,
அலர் எழுந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்ப தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது
விற்றூற்று மூதெயின்னார்

373. குறிஞ்சி

நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும்,
இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும்,
வெவ் வாய்ப் பெண்டிர் கெளவை அஞ்சிக்
கேடு எவன் உடைத்தோ-தோழி!-நீடு மயிர்க்
கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை
புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி
காந்தள்அம் சிறுகுடிக் கமழும்
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?
அலர் மிக்க வழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது
மதுரைக் கொல்லன் புல்லன்

374. குறிஞ்சி

எந்தையும் யாயும் உணரக் காட்டி
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்,
மலைகெழு வெற்பன் தலைவந்து இரப்ப,
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே-
முடங்கல் இறைய தூங்கணம்குரீஇ,
நீடு இரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மையல் ஊரே.
அறத்தொடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது
உறையூர்ப் பல்காயனார்

375. குறிஞ்சி

அம்ம வாழி, தோழி!-இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே-சாரல்
சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து
இரவு அறிவாரின், தொண்டகச் சிறு பறை
பானாள் யாமத்தும் கறங்கும்
யாமம் காவலர் அவியாமாறே.
இரவுக்குறிக்கண், சிறைப்புறமாகத் தோழி தலைமகற்குச் சொல்லுவாளாய் இரு பொழுதும் மறுத்து வரைவு கடாயது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

376. நெய்தல்

மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,
வேனிலாளே தண்ணியள்; பனியே,
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,
அலங்கு வெயில் பொதிந்த தாமரை
உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே.
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது
படுமரத்து மோசிக் கொற்றன்

377. குறிஞ்சி

மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய,
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்,
மாற்று ஆகின்றே-தோழி!-ஆற்றலையே-
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே.
வரைவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து கூறியது
மோசி கொற்றன்

378. பாலை

ஞாயிறு காணாத மாண் நிழற் படீஇய,
மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய்,
தண் மழை தலையவாகுக-நம் நீத்துச்
சுடர் வாய் நெடு வேற் காளையொடு
மட வா அரிவை போகிய சுரனே!
மகட் போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது.
கயமனார்

379. குறிஞ்சி

இன்று யாண்டையனோ-தோழி!-குன்றத்துப்
பழங் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு,
கண் அகன் தூமணி, பெறூஉம் நாடன்,
'அறிவு காழ்க்கொள்ளும் அளவை, செறிதொடி!
எம்மில் வருகுவை நீ' எனப்
பொம்மல் ஓதி நீவியோனே?
நொதுமலர் வரைவழித் தோழி அறத்தொடு நின்றது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

380. பாலை

விசும்பு கண் புதையப் பாஅய், வேந்தர்
வென்று எறி முரசின் நன் பல முழுங்கி,
பெயல் ஆனாதே, வானம்; காதலர்
நனி சேய் நாட்டர்; நம் உன்னலரே;
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-ஈங்கைய
வண்ணத் துய்மலர் உதிர
முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே!
பனிப் பருவம் குறித்துப் பிரிந்தான் தலைமகன்; பிரிய பருவ வரவின்கண் வேறுபடுவானாயினும், கதுமென ஆற்றுவிப்பது அரிது என்னும் கருத்தினனாய் கூதிர்ப் பருவத்து, தலைமகள் கேட்பத்தனது ஆற்றாமை விளங்கத் தோழி சொல்லியது
கருவூர்க் கதப்பிள்ளை