உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை ... தொடர்ச்சி - 4 ... 61. மருதம்
தச்சன் செய்த சிறு மா வையம், ஊர்ந்து இன்புறாஅர்ஆயினும், கையின் ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல, உற்று இன்புறேஎம் ஆயினும், நற்றேர்ப் பொய்கை ஊரன் கேண்மை செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே. தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது
நும்பிசேர்கீரன்
62. குறிஞ்சி
கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை, நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ, ஐது தொடை மாண்ட கோதை போல, நறிய நல்லோள் மேனி முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே. தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச்
சொல்லியது
சிறைக்குடி ஆந்தையார்
63. பாலை
"ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்" எனச் செய் வினை கைம்மிக எண்ணுதி; அவ் வினைக்கு அம் மா அரிவையும் வருமோ? எம்மை உய்த்தியோ? உரைத்திசின்-நெஞ்சே! பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது
உகாய்க்குடி கிழார்
64. முல்லை
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென, புன் தலை மன்றம் நோக்கி, மாலை மடக் கண் குழவி அலம்வந்தன்ன நோயேம் ஆகுதல் அறிந்தும், சேயர்-தோழி!-சேய் நாட்டோ ரே. பிரிவிடை ஆற்றாமை கண்டு, "வருவர் எனச் சொல்லிய தோழிக்கு
கிழத்தி உரைத்தது
கருவூர்க் கதப்பிள்ளை
65. முல்லை
வன்பரல் தெள் அறல் பருகிய இரலை தன் இன்புறு துணையொடு மறுவந்து உகள, தான் வந்தன்றே, தளி தரு தண் கார்- வாராது உறையுநர் வரல் நசைஇ வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே. பருவங் கண்டு அழிந்த தலைமகன் தோழிக்கு உரைத்தது
கோவூர் கிழார்
66. முல்லை
மடவமன்ற, தடவு நிலைக் கொன்றை- கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாராஅளவை, நெரிதரக் கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த, வம்ப மாரியைக் கார் என மதித்தே. பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று' என்று
வற்புறீஇயது
கோவர்த்தனார்
67. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி! -கிள்ளை வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம் புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப் பொலங் கல ஒரு காசு ஏய்க்கும் நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே? பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது
அள்ளுர்நன்முல்லை
68. குறிஞ்சி
பூழ்க் கால் அன்ன செங் கால் உழுந்தின் ஊழ்ப்படு முது காய் உழையினம் கவரும் அரும் பனி அற்சிரம் தீர்க்கும் மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே. பிரிவிடைக் கிழத்தி மெலித்து கூறியது
அள்ளூர் நன்முல்லை
69. குறிஞ்சி
கருங்கண் தாக் கலை பெரும் பிறிது உற்றென, கைம்மை உய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி, ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும் சாரல் நாட! நடு நாள் வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே! தோழி இரவுக்குறி மறுத்தது
கடுந்தோட் கரவீரன்
70. குறிஞ்சி
ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள் நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே; இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்; சில மெல்லியவே கிளவி; அணை மெல்லியல் யான் முயங்குங்காலே. புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
ஓரம்போகியார்
71. பாலை
மருந்து எனின் மருந்தே; வைப்பு எனின் வைப்பே- அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை, பெருந் தோள், நுணுகிய நுசுப்பின், கல் கெழு கானவர் நல்குறு மகளே. பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது
கருவூர் ஓதஞானி
72. குறிஞ்சி
பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து எல்லாரும் அறிய நோய் செய்தனவே- தே மொழித் திரண்ட மென்தோள், மா மலைப் பரீஇ வித்திய ஏனல் குரீஇ ஒப்புவாள், பெரு மழைக் கண்ணே! தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது
மள்ளனார்
73. குறிஞ்சி
மகிழ் நன் மார்பே வெய்யையால் நீ; அழியல் வாழி-தோழி!-நன்னன் நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய ஒன்று மொழிக் கோசர் போல, வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே. பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத்
தலைமகட்குத் தோழி சொல்லியது
பரணர்
74. குறிஞ்சி
விட்ட குதிரை விசைப்பின் அன்ன, விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன் யாம் தற் படர்ந்தமை அறியான், தானும் வேனில் ஆனேறு போலச் சாயினன் என்ப-நம் மாண் நலம் நயந்தே. தோழி தலைமகன் குறை மறாதவாற்றால் கூறியது
விட்ட குதிரையார்
75. மருதம்
நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?- ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ! வெண் கோட்டு யானை சோணை படியும்! பொன் மலி பாடலி பெறீஇயர்!- யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே? தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலைமகள் கூறியது
படுமரத்து மோசிகீரனார்
76. குறிஞ்சி
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச் செல்ப என்பவோ, கல் வரை மார்பர்- சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ, தண்வரல் வாடை தூக்கும் கடும்பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே. பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த
தலைமகள் சொல்லியது
கிள்ளிமங்கலங்கிழார்
77. பாலை
அம்ம வாழி, தோழி!-யாவதும், தவறு எனின், தவறோ இலவே-வெஞ் சுரத்து உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை நெடுநல் யானைக்கு இடு நிழல் ஆகும் அரிய கானம் சென்றோர்க்கு எளிய ஆகிய தடமென் தோளே. பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
மதுரை மருதன் இளநாகனார்
78. குறிஞ்சி
பெருவரை மிசையது நெடு வெள் அருவி முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி, சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப!- நோதக்கன்றே-காமம் யாவதும் நன்று என உணரார்மாட்டும் சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே. பாங்கன் தலைமகற்குச் சொல்லியது
நக்கீரனார்
79. பாலை
கான யானை தோல் நயந்து உண்ட பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப் புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும் அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச் சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு ஒல்லேம் என்ற தப்பற்குச் செல்லாது ஏகல் வல்லுவோரே. பொருள்வயிற் பிரிந்த தலைமகணை நினைந்த தலைமகள் தோழிக்குச்
சொல்லியது
குடவாயிற் கீரனக்கன்
80. மருதம்
கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி, பெரும்புனல் வந்த இருந் துறை விரும்பி, யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது அஞ்சுவது உடையள் ஆயின், வெம் போர் நுகம் படக் கடக்கும் பல் வேல் எழினி முனை ஆன் பெரு நிரை போல, கிளையொடுங் காக்க, தன் கொழுநன் மார்பே. தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது
ஒளவையார்
|