சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய

பரிபாடல்

... தொடர்ச்சி - 10 ...

19. செவ்வேள்

     நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து,
     புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து,
     "அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்
     இரு நிலத்தோரும் இயைக!" என, ஈத்த நின்
5   தண் பரங்குன்றத்து, இயல் அணி, நின் மருங்கு
     சாறு கொள் துறக்கத்தவளொடு
     மாறு கொள்வது போலும், மயிற்கொடி வதுவை
     புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்,
     கலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை,
10 அறம் பெரிது ஆற்றி, அதன் பயன் கொண்மார்,
     சிறந்தோர் உலகம் படருநர் போல,
     உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி,
     புரி மாண் புரவியர், போக்கு அமை தேரர்,
     தெரி மலர்த் தாரர், தெரு இருள் சீப்ப, நின்
15 குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு
     நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய
     தார் போலும், மாலைத் தலை நிறையால் தண் மணல்
     ஆர் வேலை யாத்திரை செல் யாறு;
     சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்
20 புடை வரு சூழல் புலம் மாண் வழுதி
     மட மயில் ஓரும் மனையவரோடும்,
     கடன் அறி காரியக் கண்ணவரோடும் நின்
     சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்
     பாடு வலம் திரி பண்பின் பழ மதிச்
25 சூடி அசையும் சுவல்மிசைத் தானையின்,
     பாடிய நாவின், பரந்த உவகையின்,
     நாடும் நகரும் அடைய அடைந்தனைத்தே,
     படு மணி யானை நெடியாய்! நீ மேய
     கடி நகர் சூழ் நுவலுங்கால்;
30 தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி,
     வம்பு அணி பூங் கயிற்று வாங்கி, மரன் அசைப்பார்
     வண் தார்ப் புரவி வழி நீங்க வாங்குவார்;
     திண் தேர் வழியின் செல நிறுப்பார் கண்டக்
     கரும்பு கவழம் மடுப்பார்; நிரந்து
35 பரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே,
     குருகு எறி வேலோய்! நின் குன்றக் கீழ் நின்ற
     இடை நிலம்: யாம் ஏத்தும் ஆறு!
     குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்,
     கரும்பு கருமுகக் கணக்கு அளிப்போரும்,
40 தெய்வப் பிரமம் செய்குவோரும்,
     கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும்,
     யாழின் இளி குரல் சமம் கொள்வோரும்,
     வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும்;
     கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப,
45 ஊழ் உற முரசின் ஒலி செய்வோரும்;
     என்று஡ழ் உற வரும் இரு சுடர் நேமி
     ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்,
     "இரதி காமன், இவள் இவன்" எனாஅ,
     விரகியர் வினவ, வினா இறுப்போரும்
50 "இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன்
     சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
     ஒன்றிய படி இது" என்று உரைசெய்வோரும்;
     இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,
     துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,
55 நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச்
     சோபன நிலையது துணி பரங்குன்றத்து
     மாஅல் மருகன் மாட மருங்கு;
     பிறந்த தமரின் பெயர்ந்து, ஒரு பேதை,
     பிறங்கல் இடைஇடைப் புக்குப் பிறழ்ந்து, "யான்
60 வந்த நெறியும் மறந்தேன்; சிறந்தவர்
     ஏஎ, ஓஒ!" என விளி ஏற்பிக்க,
     "ஏஎ, ஓஒ!" என்று ஏலா அவ் விளி
     அவ் இசை முழை ஏற்று அழைப்ப, அழைத்துழிச்
     செல்குவள் ஆங்குத் தமர்க் காணாமை
65 மீட்சியும், கூஉக் கூஉ மேவும் மடமைத்தே
     வாழ்த்து உவப்பான் குன்றின் வகை;
     நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச்
     சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப,
     உதிர்த்த சுனையின் எடுத்த தலைய
70 அலர் முகிற் உற, அவை கிடப்ப,
     "தெரி மலர், நனை, உறுவ,
     ஐந் தலை அவிர் பொறி அரவம்; மூத்த
     மைந்தன்; அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு" என
     ஆங்கு இள மகளிர் மருள பாங்கர்
75 பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல்,
     கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,
     எருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை,
     உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,
     பருவம் இல் கோங்கயம், பகை மலர் இலவம்;
80 நிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க
     மணந்தவை, போல, வரை மலை எல்லாம்
     நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்;
     விடியல் வியல் வானம் போலப் பொலியும்
     நெடியாய்! நின் குன்றின்மிசை;
85 நின யானைச் சென்னி நிறம் குங்குமத்தால்
     புனையா, பூ நீர் ஊட்டி, புனை கவரி சார்த்தா,
     பொற் பவழப் பூங் காம்பின் பொற்குடை ஏற்றி,
     மலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்,
     பல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்,
90 கன்னிமை கனிந்த காலத்தார், நின்
     கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்
     மறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார்
     முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம்
     குறுகிச் சிறப்பு உணாக்கால்;
95 குறப் பிணாக் கொடியைக் கூடியோய்! வாழ்த்துச்
     சிறப்பு உணாக் கேட்டி செவி;
     உடையும் ஒலியலும் செய்யை; மற்று ஆங்கே
     படையும் பவழக் கொடி நிறம் கொள்ளும்;
     உருவும் உருவத் தீ ஒத்தி; முகனும்
100 விரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி;
     எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து,
     தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி,
     அவ் வரை உடைத்தோய்! நீ இவ் வரை மருங்கில்
     கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்;
105 உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம், தொழுதே!

கடவுள் வாழ்த்து
நப்பண்ணனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்

20. வையை

     கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,
     உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை
     முற்றுபு முற்றுபு, பெய்து சூல் முதிர் முகில்
     பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக்
5   குருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று
     காலைக் கடல் படிந்து, காய் கதிரோன் போய வழி
     மாலை மலை மணந்து, மண் துயின்ற கங்குலான்
     வான் ஆற்றும் மழை தலைஇ; மரன் ஆற்றும் மலர் நாற்றம்
     தேன் ஆற்றும் மலர் நாற்றம், செறு வெயில் உறு கால
10 கான் ஆற்றும் கார் நாற்றம், கொம்பு உதிர்த்த கனி நாற்றம்;
     தான், நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து, தரூஉம், வையை
     தன் நாற்றம் மீது, தடம் பொழில் தான், யாற்று
     வெந் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப,
     ஊர்ஊர் பறை ஒலி கொண்டன்று; உயர் மதிலில்
15 நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ,
     திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும்,
     வங்கப் பாண்டியில் திண் தேர் ஊரவும்,
     வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும்,
     கயமாப் பேணிக் கலவாது ஊரவும்,
20 மகளிர் கோதை மைந்தர் புனையவும்,
     மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்,
     முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர்,
     ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல்
     கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி,
25 மாட மறுகின் மருவி மறுகுற,
     கூடல் விழையும் தகைத்து தகை வையை
     புகை வகை தைஇயினார் பூங் கோதை நல்லார்,
     தகை வகை தைஇயினார் தார்;
     வகைவகை தைஇயினார் மாலை, மிகமிகச்
30 சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும்
     இயல் அணி, அணி நிற்ப ஏறி; அமர் பரப்பின்
     அயல் அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர்
     இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக,
     கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு,
35 நொந்து, "அவள் மாற்றாள் இவள்" என நோக்க,
     தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின்;
     செருச் செய்த வாளி சீற்றத்தவை அன்ன
     நேர் இதழ் உண்கணார் நிரை காடாக,
     ஓடி ஒளித்து, ஒய்யப் போவாள் நிலை காண்மின்
40 என ஆங்கு,
     ஒய்யப் போவாளை, "உறழ்ந்தோள் இவ் வாணுதல்"
     வையை மடுத்தால் கடல் எனத் தெய்ய
     நெறி மணல் நேடினர் செல்ல, சொல் ஏற்று,
     "செறி நிரைப் பெண்" வல் உறழ்பு "யாது தொடர்பு?" என்ன
45 மறலினாள், மாற்றாள் மகள்;
     வாய் வாளா நின்றாள்,
     செறிநகை சித்தம் திகைத்து;
     ஆயத்து ஒருத்தி, அவளை, "அமர் காமம்
     மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை!
50 பெண்மைப் பொதுமைப் பிணையிலி! ஐம் புலத்தைத்
     துற்றுவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி!
     முற்றா நறு நறா மொய் புனல் அட்டி
     காரிகை நீர் ஏர் வயல், காமக் களி நாஞ்சில்,
     மூரி தவிர முடுக்கு முது சாடி!
55 மட மதர் உண்கண் கயிறாக வைத்துத்
     தட மென் தோள் தொட்டு, தகைத்து மட விரலால்
     இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில், எம் இழையைத்
     தொட்டு, ஆர்த்தும் இன்பத் துறைப் பொதுவி! கெட்டதைப்
     பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து, இவ்
60 வையைத் தொழுவத்துத் தந்து, வடித்து, இடித்து
     மத்திகை மாலையா மோதி, அவையத்துத்
     தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஓட
     விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து, யாம்,
     தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும்,
65 நின் மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல்?" என்னாமுன்
     தேடினாள் ஏச, சில மகளிர் மற்று அதற்கு
     ஊடினார், வையையகத்து.
     "சிந்திக்கத் தீரும் பிணியாட் செறேற்க;
     மைந்து உற்றாய், வெஞ்சொல்; மட மயிற் சாயலை
70 வந்திக்க வார்" என "மனத் தக்க நோய் இது;
     வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு;
     போற்றாய் காண், அன்னை! புரையோய்! புரை இன்று,
     மாற்றாளை மாற்றாள் வரவு"
     "அ... சொல் நல்லவை நாணாமல்
75 தந்து முழவின் வருவாய்! நீ வாய்வாளா;
     எந்தை எனக்கு ஈத்த இடு வளை, ஆரப் பூண்
     வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல்,
     தந்தானைத் தந்தே, தருக்கு"
     மாலை அணிய விலை தந்தான்; மாதர் நின்
80 கால சிலம்பும் கழற்றுவான்; சால,
     அதிரல் அம் கண்ணி! நீ அன்பன் எற்கு அன்பன்;
     கதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்.?
     என ஆங்கு
     வச்சிய மானே! மறலினை மாற்று; உமக்கு
85 நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே
     சேக்கை இனியார்பால் செல்வான் மனையாளால்
     காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ? கூடா;
     தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
     இகழினும், கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்;
90 நிகழ்வது அறியாது நில்லு நீ, நல்லாய்!
     "மகளிரை மைந்துற்று அமர்பு உற்ற மைந்தர்
     அகலம் கடிகுவேம்; என்பவை யார்க்கானும்
     முடி பொருள் அன்று முனியல் முனியல்!
     கட வரை நிற்குமோ காமம்? கொடி இயலாய்!"
95 என ஆங்கு
     இன்ன துனியும் புலவியும் ஏற்பிக்கும்,
     தென்னவன் வையைச் சிறப்பு;
     கொடி இயலார் கைபோல் குவிந்த முகை,
     அரவு உடன்றவைபோல் விரிந்த குலை,
100 குடை விரிந்தவை போலக் கோலும் மலர்,
     சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர்,
     சினை விரிந்து உதிர்ந்த வீ, புதல் விரி போதொடும்,
     அருவி சொரிந்த திரையின் துரந்து;
     நெடு மால் சுருங்கை நடு வழிப் போந்து
105 கடு மா களிறு அணத்துக் கை விடு நீர் போலும்
     நெடு நீர் மலி புனல், நீள் மாடக் கூடல்
     கடி மதில் பெய்யும் பொழுது;
     நாம் அமர் ஊடலும் நட்பும், தணப்பும்,
     காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட,
110 தாம் அமர் காதலரொடு ஆடப் புணர்வித்தல்
     பூ மலி வையைக்கு இயல்பு.

ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்