சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய

பரிபாடல்

... தொடர்ச்சி - 4 ...

7. வையை

     திரை இரும் பனிப் பெளவம் செவ்விதா அற முகந்து,
     உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது,
     கரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு,
     வரைவரை தொடுத்த வயங்கு வெள் அருவி
5   இரவு இருள் பகலாக, இடம் அரிது செலவு என்னாது,
     வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய
     நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன
     பெயலாற் பொலிந்து, பெரும் புனல் பல நந்த,
     நலன் நந்த, நாடு அணி நந்த, புலன் நந்த,
10 வந்தன்று, வையைப் புனல்.
     நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய்,
     ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு,
     துளியின் உழந்த தோய்வு அருஞ் சிமைதொறும்
     வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு,
15 உயர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி;
     உழவர்களி தூங்க, முழவு பணை முரல,
     ஆடல் அறியா அரிவை போலவும்,
     ஊடல் அறியா உவகையள் போலவும்,
     வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது;
20 விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப்
     பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம்
     செய்கின்றே, செம் பூம் புனல்;
     "கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர்
     அவிழ்ந்த மலர் மீதுற்றென", ஒருசார்;
25 "மாதர் மடநல்லார், மணலின் எழுதிய
     பாவை சிதைத்தது" என அழ, ஒருசார்;
     "அகவயல் இள நெல் அரிகால் சூடு
     தொகு புனல் பரந்தெ"னத் துடி பட, ஒருசார்;
     "ஓதம் சுற்றியது ஊர்" என, ஒருசார்;
30 "கார் தூம்பு அற்றது வான்" என, ஒருசார்;
     "பாடுவார் பாக்கம் கொண்டென,
     ஆடுவார் சேரி அடைந்தென,
     கழனி வந்து கால் கோத்தென,
     பழன வாளை பாளை உண்டென,
35 வித்து இடு புலம் மேடு ஆயிற்றென",
     உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப்
     புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து,
     சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ,
     பழன உழவர், பாய் புனல் பரத்தந்து;
40 இறு வரை புரையுமாறு இரு கரை ஏமத்து,
     வரை புரை உருவின் நுரை பல சுமந்து,
     பூ வேய்ந்து, பொழில் பரந்து;
     துனைந்து ஆடுவார் ஆய் கோதையர்,
     அலர் தண் தாரவர், காதில்
45 தளிர் செரீஇ, கண்ணி பறித்து;
     கை வளை, ஆழி, தொய்யகம், புனை துகில்,
     மேகலை, காஞ்சி, வாகுவலயம்,
     எல்லாம் கவரும் இயல்பிற்றாய்த் தென்னவன்
     ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட
50 தானையான் வையை வனப்பு;
     புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்
     துரந்து புனல் தூவ, தூ மலர்க் கண்கள்
     அமைந்தன; ஆங்கண், அவருள் ஒருத்தி,
     கை புதைஇய வளை
55 ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள்
     போக்கிச் சிறைப்பிடித்தாள்; ஓர் பொன் அம் கொம்பு
     பரிந்து அவளைக் கைப் பிணை நீக்குவான் பாய்வாள்
     இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால்
     செம்மைப் புதுப் புனல் சென்று இருளாயிற்றே;
60 வையைப் பெருக்கு வடிவு;
     விரும்பிய வீரணி மெய் ஈரம் தீர,
     சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்;
     பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே,
     கூர் நறா வளர்ந்தவள் கண்.
65 கண் இயல் கண்டு ஏத்தி, காரிகை நீர் நோக்கினைப்
     பாண் ஆதரித்துப் பல பாட; அப் பாட்டுப்
     பேணாது ஒருத்தி பேதுற; ஆயிடை,
     "என்னை வருவது எனக்கு?" என்று, இனையா,
     நன் ஞெமர் மார்பன் நடுக்குற, நண்ணி;
70 சிகை கிடந்த ஊடலின் செங் கண் சேப்பு ஊர,
     வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர்தம்முள்
     பகை தொடர்ந்து, கோதை பரியூஉ, நனி வெகுண்டு,
     யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன்
     சேறு ஆடு மேனி திருநிலத்து உய்ப்ப, சிரம் மிதித்து,
75 தீர்விலதாகச் செருவுற்றாள் செம் புனல்
     ஊருடன் ஆடுங்கடை;
     புரி நரம்பு இன் கொளைப் புகல் பாலை ஏழும்
     எழூஉப் புணர் யாழும், இசையும், கூட;
     குழல் அளந்து நிற்ப; முழவு எழுந்து ஆர்ப்ப;
80 மன் மகளிர், சென்னியர், ஆடல் தொடங்க;
     பொருது இழி வார் புனல் பொற்பு அஃது
     உரும் இடி சேர்ந்த முழக்கும் புரையும்
     திருமருதமுன்துறை சேர் புனற்கண் துய்ப்பார்
     தாமம் தலை புனை பேஎம் நீர் வையை!
85 நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க
     நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே.

மையோடக் கோவனார் பாட்டு
பித்தாமத்தர் இசை
பண்ணுப் பாலையாழ்


8. செவ்வேள்

     மண்மிசை அவிழ்துழாய் மலர்நரு செல்வத்துப்
     புண்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
     மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
     உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்
5   மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும்,
     ஆதிரை முதல்வனின் கிளந்த
     நாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும்,
     யாவரும், பிறரும், அமரரும், அவுணரும்,
     மேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்
10 பற்றாகின்று, நின் காரணமாக
     பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்,
     இமயக் குன்றினில் சிறந்து
     நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை
     மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
15 ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின்
     அருவி தாழ் மாலைச் சுனை;
     முதல்வ! நின் யானை முழக்கம் கேட்ட
     கதியிற்றே காரின் குரல்;
     குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,
20 மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப,
     எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு, மலை முழை
     ஏழ் புழை ஐம்புழை யாழ் இசை கேழ்த்து அன்ன, இனம்
     வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப, சுனை மலர,
     கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப, கொடி மலர்
25 மன்றல மலர, மலர் காந்தள் வாய் நாற,
     நன்று அவிழ் பல் மலர் நாற, நறை பனிப்ப,
     தென்றல் அசைவரூஉம் செம்மற்றே அம்ம! நின்
     குன்றத்தான் கூடல் வரவு.
     குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! கூடல்
30 மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ,
     காலொடு மயங்கிய கலிழ் கடலென,
     மால் கடல் குடிக்கும் மழை குரலென,
     ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென,
     மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின்
35 குன்றம் குமுறிய உரை;
     "தூது ஏய் வண்டின் தொழுதி முரல்வு அவர்
     காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று;
     வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி,
     நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர்
40 ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல்,
     வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி;
     முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,
     அடியோர் மைந்தர் அகலத்து அகலா
     அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,
45 புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும்
     சிறப்பிற்றே தண் பரங்குன்று."
     "இனி, மன்னும் ஏதிலர் நாறுதி; ஆண்டுப்
     பனி மலர்க் கண்ணாரோடு ஆட நகை மலர்
     மாலைக்கு மாலை வரூஉம்; வரை சூள் நில்
50 காலை போய் மாலை வரவு."
     "இனி மணல் வையை இரும் பொழிலும், குன்றப்
     பனி பொழி சாரலும் பார்ப்பாரும்;
     துனியல், மலருண்கண்! சொல் வேறு; நாற்றம்
     கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது;
55 துனியல் நனி" "நீ நின் சூள்."
     "என் பாணி நில் நில் எலாஅ! பாணி நீ, நின் சூள்;
     சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன்!
     ஈன்றாட்கு ஒரு பெண், இவள்,
     "இருள் மை ஈர் உண் கண் இலங்கு இழை ஈன்றாட்கு
60 அரியளோ? ஆவது அறிந்திலேன்; ஈதா;
     வரு புனல் வையை மணல் தொட்டேன்; தரு மண வேள்
     தண் பரங்குன்றத்து அடி தொட்டேன்" என்பாய்;
     கேளிர் மணலின் கெழுவும் இதுவோ?
     ஏழ் உலகும் ஆளி திரு வரைமேல் அன்பு அளிதோ?
65 என்னை அருளி அருள் முருகு சூள் சூளின்,
     நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும்;
     விறல் வெய்யோன் ஊர் மயில், வேல் நிழல், நோக்கி;
     அறவர் அடி தொடினும், ஆங்கு அவை சூளேல்;
     குறவன் மகள் ஆணை கூறு ஏலா! கூறேல்;
70 ஐய! சூளின், அடி தொடு குன்றொடு
     வையைக்குத் தக்க மணல் சீர் சூள் கூறல்!"
     யார் பிரய, யார் வர, யார் வினவ, யார் செப்பு?
     "நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி," நேரிழாய்!
     கய வாய நெய்தல் அலர், கமழ்முகை மண நகை
75 நயவரு நறவு இதழ், மதர் உண்கண்; வாள் நுதல்;
     முகை முல்லை வென்று, எழில் முத்து ஏய்க்கும் வெண்
     பல் நகை சான்ற கனவு அன்று; நனவு அன்று நவின்றதை
     இடு துனி கை ஆறா வெற்றுயர் கூரச்
     சுடும், இறை; ஆற்றிசின், அடி சேர்ந்து! சாற்றுமின்
80 மிக ஏற்றுதும் மலர், ஊட்டுதும் அவி,
     கேட்டுதும் பாணி; எழுதும் கிணை முருகன்
     தாள் தொழு தண் பரங்குன்று!
     "தெரி இழாய் செல்க!" என்றாய்; எல்லா! யாம் பெற்றேம்,
     ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வெளவல்;
85 பருவத்துப் பல் மாண் நீ சேறலின் காண்டை
     எருமை இருந் தோட்டி எள்ளீயும் காளை
     செருவம் செயற்கு என்னை முன்னை, தன் சென்னி,
     அருள்வயினான், தூங்கு மணி கையால் தாக்கி,
     நிரைவளை ஆற்று. இருஞ் சூள்.
90 வளி பொரு சேண் சிமை வரையகத்தால்
     தளி பெருகும் தண் சினைய
     பொழில் கொளக் குறையா மலர,
     குளிர் பொய்கை அளறு நிறைய,
     மருதம் நளி மணல் ஞெமர்ந்த
95 நனி மலர்ப் பெரு வழி,
     சீறடியவர் சாறு கொள எழுந்து;
     வேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும்,
     ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்,
     நாறு கமழ் வீயும், கூறும் இசை முழவமும்,
100 மணியும், கயிறும், மயிலும், குடாரியும்,
     பிணிமுகம், உளப்படப் பிறவும், ஏந்தி;
     அரு வரைச் சேராத் தொழுநர்,
     "கனவின் தொட்டது கை பிழையாகாது
     நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
105 வரு புனல் அணிக" என் வரம் கொள்வோரும்,
     "கரு வயிறு உறுக" எனக் கடம்படுவோரும்,
     "செய் பொருள் வாய்க்க" எனச் செவி சார்த்துவோரும்,
     "ஐ அமர் அடுக" என அருச்சிப்போரும்,
     பாடுவார் பாணிச் சீரும், ஆடுவார் அரங்கத் தாளமும்,
110 மஞ்சு ஆடு மலை முழக்கும்,
     துஞ்சாக் கம்பலை
     பைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர்
     ஆய் இதழ் உண்கண் அலர் முகத் தாமரை,
     தாட் தாமரை, தோட் தமனியக் கய மலர்,
115 எம் கைப் பதுமம், கொங்கைக் கய முகை,
     செவ் வாய் ஆம்பல் செல் நீர்த் தாமரை,
     புனற் தாமரையொடு, புலம் வேறுபாடுறாக்
     கூர் எயிற்றார் குவிமுலைப் பூணொடு,
     மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி;
120 அரிவையர் அமிர்த பானம்
     உரிமை மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப;
     மைந்தர் மார்வம் வழி வந்த,
     செந் தளிர் மேனியார், செல்லல் தீர்ப்ப;
     என ஆங்கு,
125 உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி,
     கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண
     மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
     நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்,
     மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா,
130 தண் பரங்குன்றம்! நினக்கு.

கடவுள் வாழ்த்து
ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்