சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய

பரிபாடல்

... தொடர்ச்சி - 6 ...

11. வையை

     "விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
     எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
     தெரு இடைப்படுத்து மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
     உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
5   வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
     புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
     அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
     இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
     வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
10 மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
     பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
     மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
     எதிர் வரவு மாரி இயைக" என இவ் ஆற்றால்
     புரை கெழு சையம் பொழி மழை தாழ,
15 நெரிதரூஉம் வையைப் புனல்;
     "வரையன புன்னாகமும்,
     கரையன சுரபுன்னையும்,
     வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்
     மனைமாமரம் வாள்வீரம்,
20 சினைவளர் வேங்கை, கணவிரி காந்தள்,
     தாய தோன்றி தீயென மலரா,
     ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம்,
     வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப்
     பாய் திரை உந்தித் தருதலான் ஆய் கோல்
25 வயவர் அரி மலர்த் துறை என்கோ?
     அரி மலர் மீப் போர்வை, ஆரம் தாழ் மார்பின்,
     திரை நுரை மென் பொகுட்டுத் தேம் மணச் சாந்தின்
     அரிவையது தானை என்கோ? கள் உண்ணூஉப்
     பருகு படி மிடறு என்கோ? பெரிய
30 திருமருத நீர்ப் பூந்துறை."
     "ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல்,
     நாளின், நாளின், நளி வரைச் சிலம்பு தொட்டு,
     நிலவுப் பரந்தாங்கு, நீர் நிலம் பரப்பி,
     உலகு பயம் பகர; ஓம்பு பெரும் பக்கம்
35 வழியது பக்கத்து அமரர் உண்டி
     மதி நிறைவு அழிவதின், வரவு சுருங்க
     எண் மதி நிறை, உவா இருள் மதி போல
     நாள் குறைபடுதல் காணுநர் யாரே?
     சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை!
40 வயத் தணிந்து ஏகு, நின் யாணர் இரு நாள் பெற!
     மா மயில் அன்னார், மறையில் புணர் மைந்தர்,
     காமம் கள விட்டு, கைகொள் கற்பு உற்றென,
     மல்லல் புனல் வையை! மா மலை விட்டு, இருத்தல்
     இல்லத்து நீ தனிச் சேறல் இளிவரல்;"
45 என ஆங்கு
     கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளைக் காளை
     படையொடும் கொண்டு பெயர்வானைச் சுற்றும்
     இடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப, அடல் மதுரை
     ஆடற்கு நீர் அமைந்தது, யாறு;
50 ஆற்று அணி, வெள் வாள் விதிர்ப்போர், மிளிர்குந்தம் ஏந்துவோர்,
     கொள்வார் கோல் கொள்ளக் கொடித் திண் தேர் ஏறுவோர்,
     புள் ஏர் புரவி பொலம் படைக் கைம்மாவை
     வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு ஊர்பு உழக்குநரும்,
     கண் ஆரும் சாயற் கழித் துரப்போரை
55 வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும்,
     மணம் வரு மாலையின் வட்டிப்போரைத்
     துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும்,
     தெரி கோதை நல்லார் தம் கேளிர்த் திளைக்கும்
     உருகெழு தோற்றம் உரைக்குங்கால், நாளும்
60 பொரு களம் போலும் தகைத்தே பரி கவரும்
     பாய் தேரான் வையை அகம்;
     நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண்
     தார் வரை அகலத்து, அவ் ஏர் அணி நேர் இழை
     ஒளி திகழ் தகை வகை செறி பொறி
65 புனை வினைப் பொலங் கோதையவரொடு,
     பாகர் இறை வழை மது நுகர்பு, களி பரந்து,
     நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார்,
     காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்புற,
     சீர் அமை பாடற் பயத்தால் கிளர் செவி தெவி,
70 உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும்
     அம்பி கரவா வழக்கிற்றே, ஆங்கு அதை
     கார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்,
     நீர் ஒவ்வா வையை! நினக்கு;
     கனைக்கும் அதிர்குரல் கார் வானம் நீங்க,
75 பனிப் படு பைதல் விதலைப் பருவத்து
     ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
     மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
     விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
     புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
80 "வெம்பாதாக, வியல் நில வரைப்பு!" என
     அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
     முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
     பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
     ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
85 நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,
     தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
     வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
     மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
     பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
90 தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,
     தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்
     நீ உரைத்தி, வையை நதி!
     ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள்,
     வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி
95 சாய் குழை பிண்டித் தளிர் காதில், தையினாள்;
     பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;
     "குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்
     இவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள்" என்று
     நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,
100 கொற்றவை கோலம் கொண்டு, ஓர் பெண்;
     பவள வளை செறத்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக்
     குவளைப் பசுந் தண்டு கொண்டு;
     கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை,
     "நில்லிகா!" என்பாள்போல், நெய்தல் தொடுத்தாளே
105 மல்லிகா மாலை வளாய்;
     தண்டு தழுவா, தாவு நீர் வையையுள்,
     கண்ட பொழுதில், கடும் புனல் கை வாங்க,
     நெஞ்சம் அவள் வாங்க, நீடு புணை வாங்க,
     நேரிழை நின்றுழிக் கண் நிற்ப, நீர் அவன்
110 தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப;
     ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன்பின் தொடரூஉ,
     தாய் அத் திறம் அறியாள், தாங்கி, "தனிச் சேறல்;
     ஆயத்தில் கூடு" என்று அரற்றெடுப்பத் தாக்கிற்றே
     சேய் உற்ற கார் நீர் வரவு;
115 "நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்" என்மாரும்,
     "கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,
     விழுத் தகை பெறுக! என வேண்டுதும்" என்மாரும்,
     "பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,
     யாம் வீழ்வார், ஏமம் எய்துக!" என்மாரும்,
120 "கிழவர் கிழவியர் என்னாது, ஏழ்காறும்,
     மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!" என்மாரும்
     "கண்டார்க்குத் தாக்கு அணங்கு, இக் காரிகை; காண்மின்;
     பண்டாரம், காமன் படை, உவள் கண்; காண்மின்;
     நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது,
125 பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின்;
     கொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல், குரல் கொண்ட
     கிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்மின்;
     பண் கண்டு திறன் எய்தாப் பண் தாளம் பெறப் பாடி,
     கொண்ட இன் இசைத் தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும்
130 தண் தும்பியினம் காண்மின்; தான் வீழ் பூ நெரித்தாளை
     முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து பின்னும்,
     கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின்
     என ஆங்கு
     இன்ன பண்பின் நின் தைந் நீராடல்
135 மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட
     கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம
     இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்
     முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;
     மறு முறை அமையத்தும் இயைக!
140 நறு நீர் வையை நயத் தகு நிறையே!

ஆசிரயன் நல்லந்துவனார் பாட்டு
நாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்

12. வையை

     வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி,
     விளிவு இன்று, கிளையொடு மேல் மலை முற்றி,
     தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்;
     ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம்,
5   அகரு, வழை, ஞெமை, ஆரம், இனைய;
     தகரமும், ஞாழலும், தாரமும், தாங்கி,
     நளி கடல் முன்னியது போலும், தீம் நீர்
     வளி வரல் வையை வரவு;
     "வந்து மதுரை மதில் பொரூஉம், வான் மலர் தாஅய்,
10 அம் தண் புனல் வையை யாறு" எனக் கேட்டு,
     மின் அவிர் ஒளி இழை வேயுமோரும்,
     பொன் அடர்ப் பூம் புனை திருத்துவோரும்,
     அகில்கெழு சாந்தம் மாற்றி ஆற்றப்
     புகைகெழு சாந்தம் பூசுவோரும்,
15 கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும்,
     வேர் பிணி பல் மலர் வேயுமோரும்,
     புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்,
     கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்;
     வாச நறு நெய் ஆடி, வான் துகள்
20 மாசு அறக் கண்ணடி வயக்கி, வண்ணமும்
     தேசும் ஒளியும் திகழ நோக்கி,
     வாச மணத் துவர் வாய்க் கொள்வோரும்
     இடு புணர் வளையொடு தொடு தோள்வளையர்,
     கட்டு வடக் கழலினர், மட்டு மாலையர்,
25 ஓசனை கமழும் வாச மேனியர்,
     மட மா மிசையோர்,
     பிடிமேல் அன்னப் பெரும் படை அனையோர்
     கடு மா கடவுவோரும், களிறுமேல் கொள்வோரும்,
     வடி மணி நெடுந் தேர் மா முள் பாய்க்குநரும்,
30 விரைபு விரைபு மிகை மிகை ஈண்டி,
     ஆடல் தலைத்தலை சிறப்ப, கூடல்,
     உரைதர வந்தன்று, வையை நீர்; வையைக்
     கரை தர வந்தன்று, காண்பவர் ஈட்டம்;
     நிவந்தது, நீத்தம் கரைமேலா; நீத்தம்
35 கவர்ந்தது போலும், காண்பவர் காதல்
     முன் துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி
     ஒன்று அல, பலபல உடன் எழுந்தன்று; அவை
     எல்லாம் தெரியக் கேட்குநர் யார்" அவை
     கில்லா; கேள்வி கேட்டன சிலசில:
40 ஒத்த குழலின் ஒலி எழ; முழவு இமிழ்,
     மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி,
     ஒத்து அளந்து; சீர் தூக்கி; ஒருவர் பிற்படார்;
     நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்
     அத் தக அரிவையர் அளத்தல் காண்மின்
45 "நாணாள்கொல் தோழி! 'நயன் இல் பரத்தையின்
     தோள் நலம் உண்டு, துறந்தான்' என, ஒருத்தி
     யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி
     சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள்,
     நாணுக் குறைவு இலள்; நங்கை மற்று?" என்மரும்,
50 "கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன்
     ஓட்டை மனவன்; உரம் இலி" என்மரும்,
     "சொரிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள்; நிறம் திரிந்தாள்;
     நெஞ்சத்தை நீத்தாள், நெறி செல்வான் பின் நிறை
     அஞ்சிக் கழியாமோ, அன்பு உற்றால்?" என்மரும்,
55 "பூண் ஆரம் நோக்கிப் புணர் முலை பார்த்தான், உவன்
     நாணாள் அவனை, இந் நாரிகை" என்மரும்
     அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப,
     கமழ் கோதை கோலாப் புடைத்து, தன் மார்பில்
     இழையினைக் கை யாத்து, இறுகிறுக்கி வாங்கி,
60 "பிழையினை" என்ன, பிழை ஒன்றும் காணான்,
     தொழுது பிழை கேட்கும் தூயவனைக் காண்மின்
     "பார்த்தாள், ஒருத்தி நினை" என, "பார்த்தவளைப்
     பொய்ச் சூளாள் என்பது அறியேன், யான்" என்று இரந்து,
     மெய்ச் சூள் உறுவானை, மெல்இயல், "பொய்ச் சூள்" என்று,
65 ஒல்லுவ சொல்லாது, உரை வழுவச் சொல்ல;
     உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைப்
     புல்லாது ஊடிப் புலந்து நின்றவள்
     பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய,
     வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண்
70 பாய் குருதி சோர, பகை இன்று உளம் சோர,
     நில்லாது நீங்கி நிலம் சோர; அல்லாந்து
     மல் ஆர் அகலம் வடு அஞ்சி, மம்மர் கூர்ந்து,
     எல்லாத் துனியும் இறப்ப, தன் காதலன்
     நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும்
75 வல்லதால், வையைப் புனல்,
     என ஆங்கு
     மல்லிகை, மெளவல், மணம் கமழ் சண்பகம்,
     அல்லி, கழுநீர், அரவிந்தம், ஆம்பல்,
     குல்லை, வகுளம், குருக்கத்தி, பாதிரி,
80 நல் இணர் நாகம், நறவம், சுரபுன்னை,
     எல்லாம் கமழும் இரு சார் கரை கலிழ;
     தேறித் தெளிந்து, செறி இருள் மால் மாழை;
     பாறைப் பரப்பில் பரந்த சிறை நின்று;
     துறக்கத்து எழிலைத் தன் நீர் நிழல் காட்டும்;
85 கார் அடு காலை, கலிழ் செங் குருதித்தே
     போர் அடு தானையான் யாறு;
     சுடு நீர் வினைக் குழையின் ஞாலச் சிவந்த
     கடி மலர்ப் பிண்டி தன் காதில் செரீஇ,
     விடு மலர்ப் பூங் கொடி போல நுடங்கி,
90 அடிமேல் அடிமேல் ஒதுங்கி, தொடி முன்கைக்
     காரிகை ஆகத் தன் கண்ணி திருத்தினாள்,
     நேர் இறை முன்கை நல்லவள்; கேள் காண்மின்.
     துகில் சேர் மலர் போல், மணி நீர் நிறைந்தன்று;
     "புனல்" என, மூதூர் மலிந்தன்று, அவர் உரை;
95 உரையின் உயர்ந்தன்று, கவின்;
     போர் ஏற்றன்று, நவின்று; தகரம்
     மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று;
     துகில் பொசி புனலின், கரை கார் ஏற்றன்று;
     விசும்பு கடி விட்டன்று, விழவுப் புனல் ஆங்க.
100 இன்பமும், கவினும், அழுங்கல் மூதூர்,
     நன்பல நன்பல நன்பல வையை!
     நின் புகழ் கொள்ளாது, இம் மலர் தலை உலகே.

நல்வழுதியார் பாட்டு
நந்நாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்