சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய

பதிற்றுப் பத்து

... தொடர்ச்சி - 11 ...

ஏழாம் பத்து

பாடினோர் : கபிலர்
பாடப்பட்டோ ர் : செல்வக் கடுங்கோ வாழியாதன்

61. வென்றிச் சிறப்பொடு படுத்து, அவன் கொடைச் சிறப்புக் கூறுதல்

'பலாஅம் பழுத்த பசும் புண் அரியல்
வாடை தூக்கும் நாடு கெழு பெருவிறல்,
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்,
பாவை அன்ன நல்லோள் கணவன்,
பொன்னின் அன்ன பூவின், சிறியிலை, 5
புன் கால், உன்னத்துப் பகைவன், எம் கோ,
புலர்ந்த சாந்தின், புலரா ஈகை,
மலர்ந்த மார்பின், மா வண் பாரி
முழவு மண் புலர, இரவலர் இனைய,
வாராச் சேண் புலம் படர்ந்தோன்; அளிக்க' என, 10
இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்;
'ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்;
ஈத்தொறும் மா வள்ளியன்' என நுவலும் நின்
நல் இசை தர வந்திசினே-ஒளி வாள்
உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை, 15
நிலவின் அன்ன வெளி வேல் பாடினி
முழவில் போக்கிய வெளி கை
விழவின் அன்ன, நின் கலி மகிழானே.

துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : புலாஅம் பாசறை

62. வென்றிச் சிறப்பு

இழை அணிந்து எழுதரும் பல் களிற்றுத் தொழுதியொடு,
மழை என மருளும் மா இரும் பல் தோல்,
எஃகு படை அறுத்த கொய் சுவற் புரவியொடு
மைந்துடை ஆர் எயில் புடை பட வளைஇ,
வந்து, புறத்து இறுக்கும்-பசும் பிசிர் ஒள் அழல் 5
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு,
ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந் திறல்,
துப்புத் துறை போகிய கொற்ற வேந்தே!
புனல் பொரு கிடங்கின், வரைபோல் இஞ்சி, 10
அணங்குடைத் தடக் கையர் தோட்டி செப்பி,
பணிந்து திறை தருப, நின் பகைவர், ஆயின்,
புல்லுடை வியன் புலம் பல் ஆ பரப்பி,
வளனுடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த
களன் அறு குப்பை காஞ்சிச் சேர்த்தி, 15
அரியல் ஆர்கை வன் கை வினைநர்,
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்,
ஆடு சிறை வரி வண்டு ஓப்பும்
பாடல் சான்ற, அவர் அகன் தலை நாடே.

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வரைபோல் இஞ்சி

63. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல்

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே;
பணியா உள்ளமொடு அணி வரக் கெழீஇ,
நட்டோ ர்க்கு அல்லது கண் அஞ்சலையே,
வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம்
மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே; 5
நிலம் திறம் பெயரும் காலைஆயினும்,
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே;
சிறியிலை உழிஞைத் தெரியல் சூடி,
கொண்டி மிகைபடத் தண் தமிழ் செறித்து,
குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி, 10
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒளி வாட்
செரு மிகு தானை வெல் போரோயே;
ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி,
'நீ கண்டனையேம்' என்றனர்: நீயும்
நும் நுகம் கொண்டு இனும் வென்றோய்: அதனால், 15
செல்வக் கோவே! சேரலர் மருக!
கால் திரை எடுத்த முழங்கு குரல் வேலி
நனந் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின்,
அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல்
ஆயிர வெள்ள ஊழி 20
வாழி, ஆத! வாழிய, பலவே!

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : அருவி ஆம்பல்

64. மன்னவன் கொடைச் சிறப்பினை வென்றிச் சிறப்பொடு படுத்துக் கூறுதல்

வலம் படு முரசின் வாய் வாட் கொற்றத்துப்
பொலம் பூண் வேந்தர் பலர்தில்; அம்ம!
அறம் கரைந்து வயங்கிய நாவின், பிறங்கிய
உரைசால் வேள்வி முடித்த கேள்வி,
அந்தணர் அருங் கலம் ஏற்ப, நீர் பட்டு, 5
இருஞ் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து,
களிறு நிலை முணைஇய தார் அருந் தகைப்பின்,
புறஞ் சிறை வயிரியர்க் காணின், 'வல்லே
எஃகு படை அறுத்த கொய் சுவற் புரவி,
அலங்கும் பாண்டில், இழை அணிந்து ஈம்' என, 10
ஆனாக் கொள்கையை ஆதலின், அவ் வயின்
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட
ஞாயிறு தோன்றியாங்கு, மாற்றார்
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி,
காண்கு வந்திசின்-கழல் தொடி அண்ணல்! 15
மை படு மலர்க் கழி மலர்ந்த நெய்தல்
இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு, உயர்ந்த
மழையினும் பெரும் பயம் பொழிதி; அதனால்
பசியுடை ஒக்கலை ஒரீஇய
இசை மேம் தோன்றல்! நின் பாசறையானே. 20

துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : உரைசால் வேள்வி

65. ஓலக்க வினோதத்தொடு படுத்து, மன்னவனது செல்வச் சிறப்புக் கூறுதல்

எறி பிணம் இடறிய செம் மறுக் குளம்பின்
பரியுடை நல் மா விரி உளை சூட்டி,
மலைத்த தெவ்வர் மறம் தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வில்லோர் மெய்ம்மறை! சேர்ந்தோர் செல்வ! 5
பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை,
மாண் வரி அல்குல், மலர்ந்த நோக்கின்,
வேய் புரைபு எழிலிய விளங்கு இறைப் பணைத் தோள்,
காமர் கடவுளும் ஆளும் கற்பின்,
சேண் நாறு நறு நுதல், சேயிழை கணவ! 10
பாணர் புரவல! பரிசிலர் வெறுக்கை!
பூண் அணிந்து விளங்கிய புகழ் சால் மார்ப! நின்
நாள் மகிழ் இருக்கை இனிது கண்டிகுமே-
தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்கு, 15
சேறு செய் மாரியின், அளிக்கும் நின்
சாறு படு திருவின் நனை மகிழானே.

துறை : பரிசில்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நாள் மகிழ் இருக்கை