உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய பதிற்றுப் பத்து ... தொடர்ச்சி - 14 ... 76. வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும்
களிறுடைப் பெருஞ் சமம் ததைய, எஃகு உயர்த்து, ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று, முரசு கடிப்பு அடைய அருந் துறை போகி, பெருங் கடல் நீந்திய மரம் வலியுறுக்கும் பண்ணிய விலைஞர் போல, புண் ஒரீஇ, 5 பெருங் கைத் தொழுதியின் வன் துயர் கழிப்பி, இரந்தோர் வாழ நல்கி, இரப்போர்க்கு ஈதல் தண்டா மா சிதறு இருக்கை கண்டனென் செல்கு வந்தனென்-கால்கொண்டு, கருவி வானம் தண் தளி சொரிந்தென, 10 பல் விதை உழவின் சில் ஏராளர் பனித் துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல், கழுவுறு கலிங்கம் கடுப்ப, சூடி, இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம் அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே! 15 துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : மா சிதறு இருக்கை 77. படைப் பெருமைச் சிறப்பு
'எனைப் பெரும் படையனோ, சினப் போர்ப் பொறையன்?' என்றனிர்ஆயின்-ஆறு செல் வம்பலிர்!- மன்பதை பெயர, அரசு களத்து ஒழிய, கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின், 5 பண் அமை தேரும், மாவும், மாக்களும், எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே; கந்து கோளீயாது, காழ் பல முருக்கி, உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி, சேண் பரல் முரம்பின் ஈர்ம் படைக் கொங்கர் 10 ஆ பரந்தன்ன செலவின், பல் யானை காண்பல், அவன் தானையானே. துறை : உழிஞை அரவம்
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : வென்று ஆடு துணங்கை 78. வென்றிச் சிறப்பு
வலம் படு முரசின் இலங்குவன விழூஉம் அவ் வெளி அருவி உவ் வரையதுவே- சில் வளை விறலி! செல்குவை ஆயின், வள் இதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து, மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலி, 5 கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல, பல் பயன் நிலைஇய கடறுடை வைப்பின், வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் வில் பயில் இறும்பின், தகடூர் நூறி, பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் 10 ஓடுறு கடு முரண் துமியச் சென்று, வெம் முனை தபுத்த காலை, தம் நாட்டு யாடு பரந்தன்ன மாவின், ஆ பரந்தன்ன யானையோன் குன்றே. துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : பிறழ நோக்கு இயவர் 79. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு புகழ்ந்து, வாழ்த்துதல்
உயிர் போற்றலையே, செருவத்தானே; கொடை போற்றலையே, இரவலர் நடுவண்; பெரியோர்ப் பேணி, சிறியோரை அளித்தி; நின்வயிற் பிரிந்த நல் இசை கனவினும் பிறர் நசை அறியா-வயங்கு செந் நாவின், 5 படியோர்த் தேய்த்த ஆண்மை, தொடியோர் தோளிடைக் குழைந்த கோதை மார்ப!- அனைய அளப்பு அருங்குரையை: அதனால், நின்னொடு வாரார் தம் நிலத்து ஒழிந்து, கொல் களிற்று யானை எருத்தம் புல்லென, 10 வில் குலை அறுத்து, கோலின் வாரா வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து, அவர் அரசு உவா அழைப்பக் கோடு அறுத்து இயற்றிய அணங்கு உடை மரபின் கட்டில்மேல் இருந்து, தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து, 15 நிறம் படு குருதி புறம்படின் அல்லது, மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின் கடவுள் அயிரையின் நிலைஇ, கேடு இலவாக, பெரும! நின் புகழே! துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நிறம் படு குருதி 80. மன்னவன் கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச் சிறப்புக்
கூறுதல்
வால் மருப்பின் களிற்று யானை மா மலையின் கணம் கொண்டு, அவர் எடுத்து எறிந்த விறல் முரசம் கார் மழையின் கடிது முழங்க; சாந்து புலர்ந்த வியல் மார்பின், 5 தொடி சுடர் வரும் வலி முன் கை, புண்ணுடை எறுழ்த் தோள், புடையல்அம் கழல் கால், பிறக்கு அடி ஒதுங்காப் பூட்கை, ஒளி வாள், ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று, உரைஇ, 'இடுக திறையே, புரவு எதிர்ந்தோற்கு' என, 10 அம்புடை வலத்தர் உயர்ந்தோர் பரவ, அனையை ஆகன்மாறே, பகைவர் கால் கிளர்ந்தன்ன கதழ் பரிப் புரவிக் கடும் பரி நெடுந் தேர் மீமிசை நுடங்கு கொடி, புல வரைத் தோன்றல் யாவது-சினப் போர், 15 நிலவரை நிறீஇய நல் இசை, தொலையாக் கற்ப!-நின் தெம்முனையானே? துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : புண்ணுடை எறுழ்த் தோள் பதிகம்
பொய் இல் செல்வக் கடுங்கோவுக்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன், கொல்லிக் கூற்றத்து நீர் கூர் மீமிசை, பல் வேல் தானை அதிகமானோடு இரு பெரு வேந்தரையும் உடன்நிலை வென்று, 5 முரசும் குடையும் கலனும் கொண்டு, உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டு, துகள் தீர் மகளிர் இரங்க, துப்பு அறுத்து, தகடூர் எறிந்து, நொச்சி தந்து எய்திய அருந் திறல் ஒள் இசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை 10 மறு இல் வாய்மொழி அரிசில் கிழார் பாடினார் பத்துப் பாட்டு. அவைதாம்: குறுந் தாள் ஞாயில், உருத்து எழு வெள்ளம், நிறம்
திகழ் பாசிழை, நலம் பெறு திருமணி, தீம் சேற்று யாணர், மா சிதறு இருக்கை,
வென்று ஆடு துணங்கை, பிறழ நோக்கு இயவர், நிறம் படு குருதி, புண்ணுடை
எறுழ்த் தோள், இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: தானும் கோயிலாளும் புறம் போந்து நின்று, 'கோயில் உள்ள எல்லாம் கொண்மின்' என்று, காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டிற் கொடுப்ப, அவர், 'யான் இரப்ப, இதனை ஆள்க!' என்று அமைச்சுப் பூண்டார். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழ் யாண்டு வீற்றிருந்தான். எட்டாம் பத்து முற்றும்.
|