உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய பதிற்றுப் பத்து ... தொடர்ச்சி - 15 ... ஒன்பதாம் பத்து
பாடினோர் : பெருங்குன்றூர் கிழார்
பாடப்பட்டோ ர் : குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை 81. காம வேட்கையில் செல்லாத மன்னவன் வென்றி வேட்கைச்
சிறப்புக் கூறுதல்
உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின், வண்ணக் கருவிய, வளம் கெழு, கமஞ் சூல் அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்து, கடுஞ் சிலை கழறி, விசும்பு அடையூ நிவந்து, காலை இசைக்கும் பொழுதொடு புலம்பு கொள, 5 களிறு பாய்ந்து இயல, கடு மா தாங்க, ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப, அரசு புறத்து இறுப்பினும் அதிர்விலர் திரிந்து, வாயில் கொள்ளா மைந்தினர் வயவர், மா இருங் கங்குலும், விழுத் தொடி சுடர் வரத் 10 தோள் பிணி மீகையர், புகல் சிறந்து, நாளும் முடிதல் வேட்கையர், நெடிய மொழியூஉ, கெடாஅ நல் இசைத் தம் குடி நிறுமார், இடாஅ ஏணி வியல் அறைக் கொட்ப, நாடு அடிப்படுத்தலின், கொள்ளை மாற்றி; 15 அழல் வினை அமைந்த நிழல் விடு கட்டி, கட்டளை வலிப்ப, நின் தானை உதவி, வேறு புலத்து இறுத்த வெல்போர் அண்ணல்!- முழவின் அமைந்த பெரும் பழம் மிசைந்து, சாறு அயர்ந்தன்ன, கார் அணி யாணர்த் 20 தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி, காந்தள்அம் கண்ணிச் செழுங் குடிச் செல்வர், கலி மகிழ் மேவலர், இரவலர்க்கு ஈயும், சுரும்பு ஆர் சோலைப் பெரும் பெயல் கொல்லிப் பெரு வாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து, 25 மின் உமிழ்ந்தன்ன சுடர்இழை ஆயத்து, தன் நிறம் கரந்த வண்டு படு கதுப்பின் ஒடுங்கு ஈர் ஓதி ஒண்ணுதல் அணி கொள, கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கின், நயவரப் பெருந் தகைக்கு அமர்ந்த மென் சொல் திருமுகத்து 30 மாண் இழை அரிவை காணிய, ஒரு நாள், பூண்க மாள, நின் புரவி நெடுந் தேர்! முனை கைவிட்டு முன்னிலைச் செல்லாது, தூ எதிர்ந்து பெறாஅத் தா இல் மள்ளரொடு தொல் மருங்கு அறுத்தல் அஞ்சி, அரண் கொண்டு, 35 துஞ்சா வேந்தரும் துஞ்சுக! விருந்தும் ஆக, நின் பெருந் தோட்கே! துறை : முல்லை
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நிழல் விடு கட்டி 82. வென்றிச் சிறப்பு
பகை பெருமையின், தெய்வம் செப்ப, ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர், பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர் செல் சமம் தொலைத்த வினை நவில் யானை கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி, 5 வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயல; மறவர் மறல; மாப் படை உறுப்ப; தேர் கொடி நுடங்க; தோல் புடை ஆர்ப்ப; காடுகை காய்த்திய நீடு நாள் இருக்கை இன்ன வைகல் பல் நாள் ஆக- 10 பாடிக் காண்கு வந்திசின், பெரும!- பாடுநர், கொளக் கொளக் குறையாச் செல்வத்து, செற்றோர் கொலக் கொலக் குறையாத் தானை, சான்றோர் வண்மையும், செம்மையும், சால்பும், மறனும், புகன்று புகழ்ந்து, அசையா நல் இசை, 15 நிலம் தரு திருவின், நெடியோய்! நின்னே. துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்கு பெயர் : வினை நவில் யானை 83. படைச் சிறப்பு
கார் மழை முன்பின் கை பரிந்து எழுதரும் வான் பறைக் குருகின் நெடு வரி பொற்ப, கொல் களிறு மிடைந்த பல் தோல் தொழுதியொடு நெடுந் தேர் நுடங்கு கொடி அவிர்வரப் பொலிந்து, செலவு பெரிது இனிது, நிற் காணுமோர்க்கே: 5 இன்னாது அம்ம அது தானே-பல் மா நாடு கெட எருக்கி, நன் கலம் தரூஉம் நின் போர் அருங் கடுஞ் சினம் எதிர்ந்து, மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கே. துறை : தும்பை அரவம்
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : பல் தோல் தொழுதி 84. வென்றிச் சிறப்பு
எடுத்தேறு ஏய கடிப்புடை அதிரும் போர்ப்பு உறு முரசம் கண் அதிர்ந்தாங்கு, கார் மழை முழக்கினும், வெளில் பிணி நீவி, நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை, பார்வல் பாசறைத் தரூஉம் பல் வேல், 5 பூழியர் கோவே! பொலந் தேர்ப் பொறைய, மன்பதை சவட்டும் கூற்ற முன்ப! கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா; பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது, வலியை ஆதல் நற்கு அறிந்தனர்ஆயினும், 10 வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ, தன் கால் முளை மூங்கில் கவர் கிளை போல, உய்தல் யாவது-நின் உடற்றியோரே, வணங்கல் அறியார், உடன்று எழுந்து உரைஇ? போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல, 15 நோய்த் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து, முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு, உரும் எறி வரையின் களிறு நிலம் சேர, காஞ்சி சான்ற செருப் பல செய்து, நின் குவவுக் குரை இருக்கை இனிது கண்டிகுமே- 20 காலை, மாரி பெய்து, தொழில் ஆற்றி, விண்டு முன்னிய புயல் நெடுங் காலை, கல் சேர்பு மா மழை தலைஇ, பல் குரல் புள்ளின் ஒலி எழுந்தாங்கே! துறை : வாகை
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : தொழில் நவில் யானை 85. முன்னோருடைய கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச்
சிறப்புக் கூறுதல்
நல் மரம் துவன்றிய நாடு பல தரீஇ, 'பொன் அவிர் புனைசெயல் இலங்கும் பெரும் பூண், ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்'- இட்ட வெளி வேல்'-முத்தைத் தம்' என, முன் திணை முதல்வர் போல நின்று, 5 தீம் சுனை நிலைஇய திரு மா மருங்கின் கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரை, சூடா நறவின் நாள் மகிழ் இருக்கை, அரசவை பணிய, அறம் புரிந்து வயங்கிய மறம் புரி கொள்கை, வயங்கு செந் நாவின், 10 உவலை கூராக் கவலை இல் நெஞ்சின், நனவில் பாடிய நல் இசைக் கபிலன் பெற்ற ஊரினும் பலவே. துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நாடு காண் நெடு வரை |