சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய

பதிற்றுப் பத்து

... தொடர்ச்சி - 17 ...

பதிற்றுப் பத்துத் திரட்டு

1

இருங் கண் யானையொடு அருங் கலம் தெறுத்து,
பணிந்து, வழிமொழிதல் அல்லது, பகைவர்
வணங்கார் ஆதல் யாவதோ மற்றே-
உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்தாங்குக்
கண் அதிர்பு முழங்கும் கடுங் குரல் முரசமொடு, 5
கால் கிளர்ந்தன்ன ஊர்தி, கால் முளை
எரி நிகழ்ந்தன்ன நிறை அருஞ் சீற்றத்து,
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி
நீர்துனைந்தன்ன செலவின்,
நிலம் திரைப்பன்ன தானையோய்! நினக்கே? 10
[புறத் திரட்டு, பகைவயிற் சேறல், 8. தொல். புறத்திணை. சூ. 6, இளம்பூரணர் மேற்கோள்; சூ. 8, நச்சினார்க்கினியர் மேற்கோள்]

2

இலங்கு தொடி மருப்பின், கடாஅம் வார்ந்து
நிலம் புடையூ எழுதரும், வலம் படு குஞ்சரம்;
எரி அவிழ்ந்தன்ன விரி உளை சூட்டி,
கால் கிளர்ந்தன்ன கடுஞ் செலல் இவுளி;
கோல் முனைக் கொடி இனம் விரவா வல்லோடு 5
ஊன் வினை கடுக்கும் தோன்றல, பெரிது எழுந்து,
அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடுந் தேர்-
கண் வேட்டனவே முரசம் கண்ணுற்றுக்
கதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்ப,
கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப, 10
நெடு மதில், நிரை ஞாயில்,
கடி மிளை, குண்டு கிடங்கின்,
மீப் புடை ஆர்அரண் காப்புடைத் தேஎம்
நெஞ்சு புகல் அழிந்து, நிலை தளர்பு ஒரீஇ,
ஒல்லா மன்னர் நடுங்க, 15
நல்ல மன்ற-இவண் வீங்கிய செலவே!
[தொல். புறத்திணை. சூ. 12,25 நச்சினார்க்கினியர் மேற்கோள்]

3

வந்தனென், பெரும! கண்டனென் செலற்கே-
களிறு கலிமான் தேரொடு சுரந்து,
நன்கலன் ஈயும் நகைசால் இருக்கை,
மாரி என்னாய் பனி என மடியாய்
பகை வெம்மையின் அசையா ஊக்கலை; 5
வேறு புலத்து இறுத்த விறல் வெந் தானையொடு
மாறா மைந்தர் மாறு நிலை தேய,
மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து,
கடாஅ யானை முழங்கும்,
இடாஅ ஏணி நின் பாசறையானே. 10
[புறத்திரட்டு, பாசறை. 8]

4

பேணு தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும்
என்னொடு புரையுநளல்லள்,
தன்னொடு புரையுநர்த் தான் அறிகுநளே.
[தொல். கற்பு. சூ. 39, நச்சினார்க்கினியர் மேற்கோள்.]

5

'விசையம் தப்பிய .... ....
என்னும் பதிற்றுப் பத்து ஈகை கூறிற்று.'
[தொல். புறத்திணை சூ. 20, நச்சினார்க்கினியர் மேற்கோள்.]