சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய

பதிற்றுப் பத்து

... தொடர்ச்சி - 8 ...

46. கொடைச் சிறப்பு

இழையர், குழையர், நறுந் தண் மாலையர்,
சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை,
திறல் விடு திருமணி இலங்கு மார்பின்
வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர்
தொடை படு பேரியாழ் பாலை பண்ணி, 5
பணியா மரபின் உழிஞை பாட,
இனிது புறந்தந்து, அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின்-
சுரம் பல கடவும் கரை வாய்ப் பருதி
ஊர் பாட்டு எண் இல் பைந் தலை துமிய,
பல் செருக் கடந்த கொல் களிற்று யானை, 10
கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு
உடை திரைப் பரப்பின் படு கடல் ஓட்டிய
வெல் புகழ்க் குட்டுவன் கண்டோ ர்-
செல்குவம் என்னார், பாடுபு பெயர்ந்தே.

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கரை வாய்ப் பருதி

47. கொடையினையும் அக் கொடைக்கு வருவாயாகிய பகைவரைக் கோறலையும் உடன் கூறுதல்

அட்டு ஆனானே குட்டுவன்; அடுதொறும்,
பெற்று ஆனாரே, பரிசிலர் களிறே;
வரை மிசை இழிதரும் அருவியின், மாடத்து
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்,
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின், 5
பாண்டில் விளக்குப் பரூஉச் சுடர் அழல,
நல் நுதல் விறலியர் ஆடும்
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே.

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நல் நுதல் விறலியர்

48. மன்னனை 'நீடு வாழ்க' என வாழ்த்துதல்

பைம் பொற் தாமரை பாணர்ச் சூட்டி,
ஒளி நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி,
கெடல் அரும் பல் புகழ் நிலைஇ, நீர் புக்கு,
கடலொடு உழந்த பனித் துறைப் பரதவ!
'ஆண்டு நீர்ப் பெற்ற தாரம், ஈண்டு, இவர் 5
கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன், எனத் தத்தம்
கை வல் இளையர் நேர் கை நிரைப்ப,
வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை,
முனை சுடு கனை எரி எரித்தலின், பெரிதும் 10
இதழ் கவின் அழிந்த மாலையொடு, சாந்து புலர்
பல் பொறி மார்ப! நின் பெயர் வாழியரோ-
நின் மலைப் பிறந்து, நின் கடல் மண்டும்
மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின்,
பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை, 15
மேவரு சுற்றமோடு உண்டு, இனிது நுகரும்,
தீம் புனல், ஆயம் ஆடும்,
காஞ்சிஅம் பெருந் துறை மணலினும் பலவே!

துறை : இயல்மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : பேர் எழில் வாழ்க்கை

49. மன்னவனது வரையா ஈகை

யாமும் சேறுகம்; நீயிரும் வம்மின்,
துயலும் கோதைத் துளங்கு இயல் விறலியர்!
கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇயர்!-
களிறு பரந்து இயல, கடு மா தாங்க,
ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப; 5
எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடுந் தார்,
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து,
மொய் வளம் செருக்கி, மொசிந்து வரு மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி,
நெய்த்தோர் தொட்ட செங் கை மறவர் 10
நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடி,
மழை நாட் புனலின் அவல் பரந்து ஒழுக,
படு பிணம் பிறங்க, பாழ் பல செய்து,
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப,
வளன் அற, நிகழ்ந்து வாழுநர் பலர் பட, 15
கருஞ் சினை விறல் வேம்பு அறுத்த
பெருஞ் சினக் குட்டுவற் கண்டனம் வரற்கே.

துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : செங் கை மறவர்

50. மன்னவனது காம வேட்கையினும் அவன் போர் வேட்கையை மிகுத்துக் கூறுதல்

மா மலை, முழக்கின் மான் கணம் பனிப்ப,
கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி,
கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய;
வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ,
செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறைக் 5
காவிரி யன்றியும், பூ விரி புனல் ஒரு
மூன்று உடன் கூடிய கூடல் அனையை!
கொல்களிற்று உரவுத் திரை பிறழ, அவ் வில் பிசிர,
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர,
விரவுப் பணை முழங்கு ஒலி, வெரீஇய வேந்தர்க்கு 10
அரணம் ஆகிய, வெருவரு புனல் தார்
கல் மிசையவ்வும், கடலவும், பிறவும்,
அருப்பம் அமைஇய அமர் கடந்து, உருத்த
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து,
நல் இசை நனந் தலை இரிய, ஒன்னார் 15
உருப்பு அற நிரப்பினை: ஆதலின், சாந்து புலர்பு,
வண்ணம் நீவி, வகை வனப்புற்ற,
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர்
விரி மென் கூந்தல் மெல் அணை வதிந்து,
கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து, 20
பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழ,
எவன் பல கழியுமோ-பெரும!-பல் நாள்,
பகை வெம்மையின், பாசறை மரீஇ,
பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாது,
கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும் 25
பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே?

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெருவரு புனல் தார்

பதிகம்

வடவர் உட்கும் வான் தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்
கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டி,
கான் நவில் கானம் கணையின் போகி, 5
ஆரிய அண்ணலை வீட்டி, பேர் இசை
இன் பல் அருவிக் கங்கை மண்ணி;
இனம் தெரி பல் ஆன் கன்றொடு கொண்டு;
மாறா வல்வில் இடும்பிற் புறத்து இறுத்து;
உறு புலி அன்ன வயவர் வீழ, 10
சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி;
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து;
பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின்
முழாரை முழு முதல் துமியப் பண்ணி,
வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர் 15
பல் இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி; வெந் திறல்
ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர்
ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து;
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து, 20
கெடல் அருந் தானையொடு
கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை,
கரணம் அமைந்த காசு அறு செய்யுட்
பரணம் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்: சுடர் வீ வேங்கை, தசும்பு துளங்கு இருக்கை, ஏறா ஏணி, நோய் தபு நோன் தொடை, ஊன் துவை அடிசில், கரை வாய்ப் பருதி, நல் நுதல் விறலியர், பேர் எழில் வாழ்க்கை, செங்கை மறவர், வெருவரு புனல் தார்: இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்: உம்பற் காட்டு வாரியையும், தன்மகன் குட்டுவன் சேரலையும், கொடுத்தான் அக் கோ.

கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்.

ஐந்தாம் பத்து முற்றும்.