சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய

பதிற்றுப் பத்து

... தொடர்ச்சி - 9 ...

ஆறாம் பத்து

பாடினோர் : காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்
பாடப்பட்டோ ர் : ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்

51. மன்னவன் வினோதத்து மென்மையும் செருவகத்துக் கடுமையும் உடன் கூறுதல்

துளங்கு நீர் வியலகம் கலங்கக் கால் பொர,
விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும்
கடல் சேர் கானற் குட புலம் முன்னி,
கூவல் துழந்த தடந் தாள் நாரை
குவி இணர் ஞாழல் மாச் சினைச் சேக்கும், 5
வண்டு இறைகொண்ட, தண் கடல் பரப்பின்
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும்,
தூ இரும் போந்தைப் பொழில், அணிப் பொலிதந்து,
இயலினள், ஒல்கினள், ஆடும் மட மகள் 10
வெறி உறு நுடக்கம் போலத் தோன்றி,
பெரு மலை, வயின் வயின் விலங்கும் அருமணி
அர வழங்கும், பெருந் தெய்வத்து,
வளை ஞரலும் பனிப் பௌவத்து,
குண குட கடலோடு ஆயிடை மணந்த 15
பந்தர் அந்தரம் வேய்ந்து,
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல்
நனை உறு நறவின் நாடுடன் கமழ,
சுடர் நுதல், மட நோக்கின்,
வாள் நகை, இலங்கு எயிற்று, 20
அமிழ்து பொதி துவர் வாய், அசை நடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்,
'வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்!' என,
உள்ளுவர் கொல்லோ, நின் உணராதோரே?
மழை தவழும் பெருங் குன்றத்து, 25
செயிருடைய அரவு எறிந்து,
கடுஞ் சினத்த மிடல் தபுக்கும்
பெருஞ் சினப் புயல் ஏறு அனையை;
தாங்குநர் தடக் கை யானைத் தொடிக் கோடு துமிக்கும்
எஃகுடை வலத்தர், நின் படைவழி வாழ்நர்; 30
மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து,
நிறம் பெயர் கண்ணிப் பருந்து ஊறு அளப்ப,
தூக் கணை கிழித்த மாக் கண் தண்ணுமை
கை வல் இளையர் கை அலை அழுங்க,
மாற்று அருஞ் சீற்றத்து மா இருங் கூற்றம் 35
வலை விரித்தன்ன நோக்கலை;
கடியையால், நெடுந்தகை செருவத்தானே.

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : வடு அடு நுண் அயிர்

52. மன்னவன் கைவண்மையோடும் வென்றியோடும் படுத்து அவன் காம இன்பச் சிறப்புக் கூறுதல்

கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து,
வடி மணி நெடுந் தேர் வேறு புலம் பரப்பி,
அருங் கலம் தரீஇயர், நீர் மிசை நிவக்கும்
பெருங் கலி வங்கம் திசை திரிந்தாங்கு,
மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல் 5
மெய் புதை அரணம் எண்ணாது, எஃகு சுமந்து,
முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்
தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க,
உயர்நிலை உலகம் எய்தினர், பலர் பட,
நல் அமர்க் கடந்த நின் செல் உறழ் தடக் கை 10
இரப்போர்க்குக் கவிதல் அல்லதை, இரைஇய
மலர்பு அறியா எனக் கேட்டிகும்: இனியே,
சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து,
முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப் புணை ஆக,
சிலைப்பு வல் ஏற்றின் தலைக் கை தந்து, நீ 15
நளிந்தனை வருதல், உடன்றனள் ஆகி;
உயலும் கோதை, ஊரல்அம் தித்தி,
ஈர் இதழ் மழைக்கண், பேர் இயல் அரிவை
ஒளி இதழ் அவிழகம் கடுக்கும் சீறடி,
பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப, 20
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று, நின்
எறியர் ஓக்கிய சிறு செங் குவளை,
'ஈ' என இரப்பவும், ஒல்லாள்; 'நீ எமக்கு
யாரையோ?' எனப் பெயர்வோள் கையதை:
கதுமென உருத்த நோக்கமொடு, அது நீ 25
பாஅல் வல்லாய் ஆயினை. பாஅல்
யாங்கு வல்லுநையோ-வாழ்க, நின் கண்ணி!-
அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர்;
தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று
உருபு கிளர் வண்ணம் கொண்ட 30
வான் தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே?

துறை : குரவை நிலை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சிறு செங் குவளை

53. அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து, மன்னவன் வென்றிச் சிறப்புக் கூறுதல்

வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து, அவர்
வாடா யாணர் நாடு திறை கொடுப்ப,
'நல்கினை ஆகுமதி, எம்' என்று; அருளி,
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின்
தொல் புகழ் மூதூர்ச் செல்குவை ஆயின், 5
செம்பொறிச் சிலம்பொடு அணித் தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்,
கோள் வல் முதலைய குண்டு கண் அகழி,
வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை,
ஒன்னாத் தெவ்வர் முனை கெட விலங்கி, 10
நின்னின் தந்த மன் எயில் அல்லது,
முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய
எயில் முகப்படுத்தல் யாவது? வளையினும்,
பிறிது ஆறு சென்மதி, சினம் கெழு குருசில்!-
எழூஉப் புறந்தரீஇ, பொன் பிணிப் பலகைக் 15
குழூஉ நிலைப் புதவின் கதவு மெய் காணின்,
தேம் பாய் கடாத்தொடு காழ் கை நீவி,
வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல்
ஏந்து கை சுருட்டி, தோட்டி நீவி,
மேம்படு வெல் கொடி நுடங்க, 20
தாங்கல் ஆகா, ஆங்கு நின் களிறே.

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : குண்டு கண் அகழி

54. மன்னவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்

வள்ளியை என்றலின், காண்கு வந்திசினே,
உள்ளியது முடித்தி; வாழ்க, நின் கண்ணி!
வீங்கு இறைத் தடைஇய அமை மருள் பணைத் தோள்,
ஏந்து எழில் மழைக்கண், வனைந்து வரல் இள முலை,
பூந் துகில் அல்குல், தேம் பாய் கூந்தல், 5
மின் இழை, விறலியர் நின் மறம் பாட;
இரவலர் புன்கண் தீர, நாள் தொறும்,
உரை சால் நன் கலம் வரைவு இல வீசி,
அனையை ஆகன்மாறே, எனையதூஉம்
உயர் நிலை உலகத்துச் செல்லாது, இவண் நின்று, 10
இரு நில மருங்கின் நெடிது மன்னியரோ!-
நிலம் தப இடூஉம் ஏணிப் புலம் படர்ந்து,
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப,
தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்,
ஏவல் வியங்கொண்டு, இளையரொடு எழுதரும் 15
ஒல்லார் யானை காணின்,
நில்லாத் தானை இறை கிழவோயே!

துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நில்லாத் தானை

55. மன்னவன் உலகு புரத்தலும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்

ஆன்றோள் கணவ! சான்றோர் புரவல! நின் நயந்து வந்தனன், அடு போர்க் கொற்றவ!
இன் இசைப் புணரி இரங்கும் பௌவத்து,
நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்.
கமழும் தாழைக் கானல்அம் பெருந் துறை, 5
தண் கடற் படப்பை நல் நாட்டுப் பொருந!
செவ் ஊன் தோன்றா, வெண் துவை முதிரை,
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை!
குடவர் கோவே! கொடித் தேர் அண்ணல்!
வாரார் ஆயினும் இரவலர், வேண்டி, 10
தேரின் தந்து, அவர்க்கு ஆர் பதன் நல்கும்
நசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல்!-
வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய,
பெய்து புறந்தந்து, பொங்கல் ஆடி,
விண்டுச் சேர்ந்த வெண் மழை போலச் 15
சென்றாலியரோ-பெரும! அல்கலும்,
நனந் தலை வேந்தர் தார் அழிந்து அலற,
நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு,
பொருது சினம் தணிந்த செருப் புகல் ஆண்மை,
தாங்குநர்த் தகைத்த ஒளி வாள், 20
ஓங்கல் உள்ளத்துக் குருசில்! நின் நாளே.

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : துஞ்சும் பந்தர்