'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

10

     அரசு ஊழியர்களிடம் குறைகள் மட்டும் தான் உள்ளதா நிறைகள் இல்லையா? அவற்றைப் பற்றி ஏன் சொல்வதேயில்லை? என்று கேட்க நினைப்பவர்கள் அடுத்து வரும் அத்தியாயங்களில் அவற்றை ஒவ்வொன்றாக நான் விளக்குவதை படித்து மகிழலாம். இந்த இதழில் அரசு ஊழியர்களின் எளிமை என்னும் உயர்ந்த குணத்தைப் பற்றி பார்க்கலாம்.

     பெரும்பாலான அரசு ஊழியர்கள் உண்மையில் எளிமையாகத் தான் இருக்கிறார்கள். இப்போதும் அவர்களில் பெரும்பாலோர் டைலரிடம் துணி எடுத்துக் கொடுத்துதான் சட்டை தைத்து போடுகிறார்கள். அதுவும் தீபாவளிக்கு தீபாவளிதான் (அல்லது கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று வைத்துக் கொள்ளுங்கள்) பிற சமயங்களில் அவர்கள் தேவையில்லாமல் புதுத்துணி எடுப்பதில்லை. அதுவும் பிராண்டட் சட்டைகளையோ, பேண்ட்களையோ, அல்லது பிராண்டட் வேஷ்டிகளையோ எடுப்பதே இல்லை.

     புதிதாக வேலைக்குச் சேரும் கணினி மென்பொறியாளன் வேலைக்குச் சேர்ந்த முதல் வருடத்தில் துணிக்கு செலவு செய்வதில் பாதியைக் கூட அரசு ஊழியர் பல வருடங்களுக்குச் சேர்த்து செய்திருக்க மாட்டார். அதற்காக அவர்களை கஞ்சர்கள் என்றும் சொல்லிவிட முடியாது. அவர்களுக்கு உண்மையில் அவற்றின் மீது பற்று குறைவு என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

     அதே போல் தான் காலணியும். பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஒரு செருப்பு, அல்லது ஒரு செருப்பு ஒரு ஷூ மட்டுமே வைத்திருப்பார்கள். அதுவும் செருப்பாக இருந்தால் அதிகம் போனால் முன்னூறு ரூபாயும், ஷூவாக இருந்தால் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவும் தான் இருக்கும். அதுவே அதிகப்படி என்று தான் பெரும்பாலானவர்கள் நினைப்பார்கள். மற்றபடி எவ்வளவு தான் அதிகம் சம்பாதித்தாலும், காலணிகளுக்கு அதிகம் செலவழிக்க அவர்கள் விரும்புவதில்லை.

     மேக்கப் என்று எடுத்துக் கொண்டால் அதிகபட்சம் வெள்ளை முடி வந்தால் டை அடிப்பார்கள். ஒருசிலர் வாசனை திரவியங்களை உபயோகிப்பார்கள். அதுவும் கூட அதிக விலையுயர்ந்ததாக இருக்காது.

     அவர்களின் அதிகப்பட்ச செலவான டீ, காபி, சிகரெட் செலவும் கூட பெரும்பாலும், அவர்களின் சம்பளப் பணத்தை கரைத்துவிடாமல் பார்த்துக் கொள்வார்கள்.

     உண்மையைச் சொல்லப்போனால் அரசு ஊழியர் உள்ள வீடுகளில், அரசு ஊழியர் செலவழிப்பதை விட அவரின் குடும்ப உறுப்பினர்கள் அதிகம் செலவழிப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனாலும் அதற்காக அரசு ஊழியர்கள் அதிகம் கவலைப்படுவதுமில்லை.

     அரசு ஊழியர்களைப் பொறுத்த மட்டில், ஒன்றாம் தேதியானால் சம்பளம் வந்து விடுகிறது. நம்முடைய உடை, அலங்காரம், ஆகியவற்றுக்கா சம்பளம் தருகிறார்கள், உழைப்புக்குத்தானே கொடுக்கிறார்கள் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது.

     ஆனால் சாராயக் கடைகள் அதிகம் திறந்து அரசாங்கமே குடிப்பழக்கத்தை ஊக்குவிக்க ஆரம்பித்த பிறகு, அரசு ஊழியர்களும் அதிக எண்ணிக்கையில் அப்பழக்கத்திற்கு அடிமையாக ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு அவர்களை மட்டுமே குறைசொல்லிப் பயனில்லை. அரசாங்கத்தின் தவறான வழிகாட்டுதலே இதற்குக் காரணம்.

     நான் மேலே சொன்னதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டுமென்றால், உங்கள் ஊரில் உள்ள எந்த துணிக்கடைக்கு வேண்டுமானாலும் சென்று ஆண்கள் பிரிவில் அதுவும் அதிகம் விலையுள்ள துணிகள் உள்ள பகுதிக்குச் சென்று பாருங்கள், அங்கு மிகக்குறைந்த கூட்டமே இருக்கும். அந்தக் குறைவான கூட்டத்திலும் பெரும்பாலோர், மென்பொருள்துறையில் வேலை பார்ப்பவர்களாகவே இருப்பார்கள், அல்லது தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களாக இருப்பார்கள். அதே போல் தான் காலணி கடையிலும் நீங்கள் பரிசோதனை செய்து பார்க்கலாம்.

     அதற்காக அவர்களுக்குப் புது நாகரிகம் என்பதே தெரியாது என்று நினைத்துவிடாதீர்கள். அவர்களின் மகனுக்கோ மகளுக்கோ, ஏன் மனைவிக்கோ கூட மிகவும் சிறந்த, புதுமையான பேஷன் துணிகள், காலணிகள், அணிகலன்கள் வாங்கிக் கொடுத்திருப்பார்கள்.

     என்ன செய்வது குடும்பத்தில் அனைவருமே செலவாளிகளாக இருக்க முடியுமா? சம்பாதிப்பவனுக்குத் தானே அதன் அருமை தெரியும். அதனால் தான் அரசு ஊழியர்கள் இயன்றவரை தன் வரையில் சிக்கனத்தை கடைபிடிக்கிறார்கள்.

     இந்த விஷயத்தில் ஆண்களைப் போல் இல்லாவிட்டாலும், பெண்கள் ஓரளவுக்கு செலவாளிகளாகத்தான் இருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். கட்டாயம் அவர்களுக்கு மாதத்திற்கு ஒரு புடவையாவது எடுக்காவிட்டால் தூக்கமே வராது. (அப்புறம் வேலைக்குப் போறது என்னத்துக்கு? என்று கேட்பார்கள்) ஆனாலும் இவர்களும் புடவைக்குக் கூட அதிகம் செலவழிக்க மாட்டார்கள். டிசைனர் புடவைகள் என்று எடுக்க மாட்டார்கள்.

     மற்ற பெண்களை ஒப்பிடும் போது, அதுவும் மென்பொருள் துறையில் உள்ள குறைந்த சம்பளமுள்ள பெண்களுடன் ஒப்பிட்டால் கூட இவர்கள் செய்யும் செலவு மிகவும் அற்பமாகவே இருக்கும்.

     மொத்தத்தில், அரசு ஊழியர்கள் ஆடம்பர விரும்பிகள் அல்ல என்றே கூறலாம்.



'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13