'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

11

     அரசு ஊழியர்களின் மிகச் சிறந்த குணம் என்று நான் எண்ணுவது அவர்களின் கடமை உணர்ச்சியைத் தான். முறைக்காதீர்கள். உண்மையைத் தான் சொல்கிறேன். கடமையா குடும்பமா என்ற சூழ்நிலை வரும்போது பெரும்பாலான அரசு ஊழியர் வீடுகளில், அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தை விட கடமைக்குத் தான் முக்கிய இடம் தருகிறார்கள் என்றே கூறுவேன். பொதுவாக அவர்கள் அலுவலகத்தில் எப்படி வேண்டுமானாலும் வேலை செய்யலாம் அல்லது வேலை செய்யாமலே இருக்கலாம். ஆனால் அலுவலக வேலை இருந்துவிட்டால், வீட்டில் தலை போகிற வேலை என்றாலும் அதை விட்டு விட்டு அலுவலகத்திற்கே செல்வார்கள். முக்கியமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆடிட்டிங் நாட்கள், மேலதிகாரியின் ஆய்வு நாட்கள், போன்ற தினங்களில் அவர்தம் குடும்பங்களில் எந்த ஒரு நிகழ்ச்சியும், வேலையும் இருக்கக் கூடாது.

     எனக்கு மிகவும் நெருங்கிய ஒரு அரசு ஊழியர் தன் மகனை பள்ளிக்குச் சேர்க்க வேண்டிய தினத்தில் அவரின் உயர் அதிகாரி ஆய்வுக்கு வந்துவிட்டார். அதனால் அவர் தன் மகனை முதன்முதலில் பள்ளியில் சேர்க்கக் கூட நண்பரைத் தான் அனுப்ப வேண்டி வந்தது. அதே போல் அந்த மகன் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்து வந்தான். ஆறாம் வகுப்புக்கு வந்த போது அவனை ஆங்கில வழிக் கல்வியில் படிக்கச் செய்ய நினைத்த அவர் அது பற்றி விசாரிக்கச் சொன்னார். பள்ளியில் தந்தையை அழைத்து வரச் சொன்னார்கள். ஆனால் அந்தச் சிறுவனின் கெட்ட நேரம் அந்த நேரம் பார்த்து அவனின் தந்தைக்கு அலுவலகத்தில் ஆடிட்டிங் வந்துவிட்டார்கள். அப்புறமென்ன அவன் தந்தை பள்ளித் தலைமை ஆசிரியருக்கு இது சம்பந்தமாக ஒரு கடிதம் எழுதி அதனை தலைமை ஆசிரியரிடம் கொண்டு போய்க் கொடுக்குமாறு கூறிவிட்டார். அந்தச் சிறுவன் படித்தது கிறித்துவ பாதிரியார்கள் நடத்தும் கண்டிப்பு மிக்க பள்ளி. தலைமை ஆசிரியரைக் கண்டாலே பயந்து நடங்குவார்கள். 10 வயது சிறுவனுக்கு தனியே தலைமை ஆசிரியர் அறைக்கு செல்ல எவ்வளவு பயமாக இருக்கும். அவனும் ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழையும் முதல் கதவினைத் திறந்து, பிறகு குறுக்கு வாட்டில் அவன் தலைக்கு மேல் பைல்கள் கட்ட இருபக்கமும் இருக்கும் பேப்பர் மடிப்பு போல் இருந்த சிறிய இரண்டாம் கதவு (இப்போதும் அரசு அலுவலகங்களில் காணலாம்) போன்ற ஒன்றை எம்பித் திறந்து உள்ளே நுழைந்தான். அது தான் அவனுக்கு நினைவில் இருக்கிறது. பிறகு அந்த அறையை விட்டு வெளியே வந்ததுதான் ஞாபகம் இருக்கிறது. தலைமை ஆசிரியர் கடிதத்தை படித்துவிட்டு கையொப்பமிட்டுவிட்டு பியூனை அழைத்து, அப்பையனை ஆங்கில வழி வகுப்பில் அமர வைக்கச் சொல்லி அனுப்பினார். என்ன நீயே பார்த்தது போல் வர்ணிக்கிறாயே என்கிறீர்களா... சிரிக்காதீர்கள் அது சாட்சாத் நானே தான். பெரும்பாலான இதுபோன்ற முக்கிய தருணங்களில் எல்லாம் என் தந்தையாருக்கு அலுவலகத்தில் வேலை வந்துவிடும். எனவே நானே விழுந்து எழுந்திருக்க வேண்டியதுதான். ஒரு கட்டத்துக்கு மேல் அவரின் மேல் பரிதாபமும் ஏற்பட்டது. யாருக்காக அவர் உழைக்கிறார், நமக்காகத் தானே என்ற எண்ணம் மேலோங்கியது.

     என் நிலை தான் பெரும்பாலான அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கும், (கணவர்களுக்கும்) குழந்தைகளுக்கும். யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் அவர்களுக்கென்று ஒரு தனித்தனி கதை இருக்கும். மனைவி வீட்டு சொந்தக்காரர்களின் திருமணத்தின் போதுதான் சொல்லி வைத்தார் போல் கணவன் அலுவலகத்தில் ஆய்வு நடக்கும், அல்லது ஆடிட்டிங் நடக்கும். லீவு சொல்ல முடியாது. வீட்டில் சண்டையோடுதான் கல்யாணத்திற்கு செல்வார்கள். மீறி கேட்டால், ஒரே பதில் தான் அரசு ஊழியரிடம் இருந்து வரும், “மாசா மாசம் ஒண்ணாந்தேதியானா டான்னு சம்பளம் மட்டும் வேணும்பீங்க, அப்புறம் வேலை செய்யாம வருமா சம்பளம். படியளக்கிறவன் சொல்றபடிதான் கேட்கணும்... உங்க பேச்சையா கேக்க முடியும்..”

     எத்தனையோ அரசு ஊழியர்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கு அல்லது பிற சுப மற்றும் அசுப நிகழ்ச்சிகளுக்கு வந்து விட்டு அவசர அவசரமாக பணிக்கு ஓடுவதை பார்த்திருப்பீர்கள். அடுத்த முறை அந்த மாதிரி ஒருவரை சந்தித்தால் அவரைப் பற்றி தவறாக நினைக்காதீர்கள். அவர் தன் குடும்பத்திற்காகத் தான் ஓடுகிறார் என்பதை எண்ணுங்கள்.

     ஆனால் என்ன ஒரு கெட்ட குணம் அவர்களிடம் என்றால், வேண்டாத நிகழ்ச்சிகளை தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே சில சமயங்களில் அலுவலகத்தில் வேலை இருப்பது போல் காட்டிக் கொள்வார்கள். இது பெரும்பாலும் மனைவி (கணவன்) வீட்டு வகையறா நிகழ்வுகளுக்கு கட்டாயம் நிகழும். இந்தச் சூழ்நிலைகளில் தான் பெரும்பாலான மனைவிமார்கள் “எந்த ஒரு விஷயத்துக்கும் அவரை எதிர்பார்க்கறதே இல்ல... அவரு வருவாருன்னு எதிர்பார்த்தா காதுகுத்துக்கு போகமுடியாது கருமாதிக்குத்தான் போகணும்... என்ன செய்யறது நான் வாங்கி வந்த வரம் அப்படி?”

     வீட்டு நிகழ்ச்சிகளுக்கு விடுமுறை எடுப்பதை பெரும்பாலான அரசு ஊழியர்கள் விரும்புவதில்லை. உதாரணமாக மகன் அல்லது மகளின் பிறந்தநாளுக்கு விடுமுறை எடுக்கும் அரசு ஊழியர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மனைவி அல்லது கணவனின் பிறந்த நாளுக்கோ, திருமண நாளுக்கோ விடுமுறை எடுப்பவர்கள் அதை விட சொற்பம். ஆனால் தனியார் துறையில் இருப்பவர்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. விடுமுறை எடுத்தால் சம்பளமே வராது என்றால் கூட தனியார் துறையில் இருப்பவர்கள் இதுபோன்ற சமயங்களில் விடுமுறை எடுத்து தங்கள் குடும்பத்துடன் மகிழ்வுடன் அந்த நாளைச் செலவழிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்குத் தெரிந்து எந்த அரசு ஊழியரும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு விடுமுறை எடுத்ததை நான் அறிந்ததில்லை. ஏனென்றால் இதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. மேலும் ஒரு வருடம் விடுமுறை எடுத்துவிட்டால் ஒவ்வொரு வருடமும் அதே போல் விடுமுறை எடுக்க எதிர்பார்ப்பார்கள். எல்லா வருடமும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. உயர் அதிகாரி லீவு கொடுக்காவிட்டால் வீட்டில் திட்டு விழும். எதற்கு வம்பு. இது போன்ற நிகழ்ச்சிகளை வாடிக்கையாக ஏற்படுத்தாவிட்டால் பிரச்சனை இல்லை தானே என்பதுதான் அவர்களில் பெரும்பாலானோரின் மனநிலை.

     அதுவும், அத்தியாவசியத் துறைகளான காவல், மின்சாரம், வருவாய், சிறைத்துறை போன்றவற்றில் பணிபுரிபவர்களை நம்பி எந்த குடும்ப நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்ய முடியாது. அன்றைக்கு எந்த வேலையும் இல்லை, கண்டிப்பாக வருகிறேன் என்பார்கள். ஆனால் கடைசி நேரத்தில் அவர்களுக்கு எங்கிருந்துதான் அழைப்பு வரும் என்று தெரியாது. ஆகவே இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு விழாக்களின் போது மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தான் இருப்பார்கள் என்பதை கட்டாயம் சொல்லித்தான் ஆகவேண்டும்.

     சரி விடுங்க பாஸ்... அவுங்க எப்பவும் அப்படித்தான்...

     அரசு ஊழியர்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்களாகிய நாம கொஞ்சம் பெருந்தன்மையா தண்ணி தெளித்து, அரசுக்கு நேர்ந்து விட்டு விடுவோம்... வேற எண்ண பண்றது அப்படிச் சொல்லி மனசத் தேத்திக்க வேண்டியதுதான்...



'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13