உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் 12 எல்லாத் தொழிலாளிகளும் தங்களுக்குள்ளே சங்கம் வைத்துக் கொண்டிருப்பது போல் அரசு ஊழியர்களின் சங்கங்களும் அவர்களின் உயர்வுக்காக செயல்பட்டு வருகின்றன. இந்த அத்தியாயத்தில் எந்த அளவுக்கு அரசு ஊழியர்களுக்கு சங்கத்தின் மீது ஈடுபாடு ஏற்படுகின்றது என்பது குறித்து பார்ப்போம். அரசு ஊழியர்கள் தாங்கள் வேலை பார்க்கும் காலத்தில் தாங்கள் விருப்பப்பட்ட சங்கத்தில் இணைந்து செயலாற்றுவது நல்ல செயல் தான். அது உண்மையில் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பும் கூட. ஆனால் இந்த ஈடுபாடு பல சமயங்களில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குக் கூட எரிச்சலை உண்டு பண்ணும் அளவிற்கு இருப்பதுதான் சோகம். அதுவும் சின்னச் சின்ன விஷயங்களில். பெரும்பாலான அரசு ஊழியர் சங்கங்களின் சார்பில் வருடா வருடம் மாத நாள்காட்டியோ அல்லது தின நாள் காட்டியோ வெளியிடுகிறார்கள். அதே போல் பல ஊழியர் சங்கங்கள் அதுவும் முக்கியமாக ஆசிரியர் சங்கங்கள் கட்டாயம் இந்த நாள்காட்டியோடு நாட்குறிப்பு ஏடுகளையும் (டைரி) வெளியிடுகிறார்கள். அந்த நாள்காட்டி மற்றும் நாட்குறிப்பு ஏடுகளில் அந்த சங்கங்கள் பற்றிய செய்திகளோடு, அரசு ஊழியர்களுக்குத் தேவையான தகவல்களும் அச்சிடப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பல சங்கங்கள் மாத இதழ்களையும் வெளியிடுகின்றன. அவற்றில் அரசு ஊழியர் சம்பந்தப்பட்ட செய்திகள், அவர்களின் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், அவர்களின் உரிமையை நிலைநாட்ட எடுக்கப்பட்ட, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், அவர்களின் போராட்ட திட்டங்கள், இப்படி பல்வேறு வகையான பயனுள்ள தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இது நல்ல விஷயம் தானே இதில் என்ன பிரச்சனை என்று என்னை முறைக்காதீர்கள்... இப்போது பிரச்சனைக்கு வருகிறேன். இந்த நாள்காட்டி, நாட்குறிப்பு ஏடு, மாத இதழ்கள் இவை எல்லாவற்றிற்கும் சந்தா செலுத்த வேண்டி இருக்கும். ஒரு சில சங்கங்களில் மாத இதழுக்கு சந்தா செலுத்தினால் நாள்காட்டி இலவசமாக தருவார்கள். அதிலும் ஆயுள் சந்தா செலுத்தியவர்களுக்கு அவர்களின் முகவரிக்கே நேரடியாக அனுப்பி விடுவார்கள். ஆயுள் சந்தா செலுத்தாமல் வருட சந்தா செலுத்துபவர்களுக்கு, அவர்கள் சந்தா செலுத்திய பிறகு தான் நாள்காட்டி அனுப்புவார்கள். நாட்குறிப்பு ஏடு பெரும்பாலும் பணம் செலுத்தி வாங்க வேண்டியிருக்கும். பெரும்பாலான பணியிலிருக்கும் அரசு ஊழியர்கள் தங்கள் ஊரில் உள்ள சங்கங்கள் மூலம் ஒட்டுமொத்தமாக வாங்கி தங்களுக்குள் பிரித்துக் கொள்வார்கள். அப்படி வாங்கும் போது விடுபட்டு போனவர்கள், அல்லது ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் மூலம் சங்கத் தலைமையகத்தில் சென்று வாங்கி அனுப்பச் சொல்வார்கள். எனது நண்பரின் தந்தையார் அது போலத் தான் வருடந்தவறாமல் ஜனவரி மாதத்தில் சந்தா செலுத்தி விட்டு அதற்கு இலவசமாக தரப்படும் நாள்காட்டியை வாங்கிக் கொண்டு, நாட்குறிப்பு ஏடு ஒன்றையும் நண்பரை வாங்கி வரச் சொல்லுவார். நண்பரும் வயதான தந்தைக்காக திருவல்லிக்கேணியிலிருக்கும் சங்கத்திற்கு பல முறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி, அவற்றை வாங்கச் சென்றாலும், ஒரு ஆண்டு கூட ஒரே தடவையில் அவைகள் இரண்டும் கிடைக்காது. இரண்டு அல்லது மூன்று முறை அலைந்து தான் வாங்க வேண்டியிருக்கும். முக்கியமாக நாட்குறிப்பு ஏடு வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். அவர்கள் விற்கும் விலைக்கு சந்தையில் மிகத் தரமான நாட்குறிப்பு ஏடு வாங்க முடியுமென்றாலும், நண்பரின் தந்தையாருக்கு சங்க ஈடுபாடு காரணமாக அந்த நாட்குறிப்பு ஏடு தான் வேண்டும் என்று சொல்லிவிடுவார். சரி இவ்வளவு கஷ்டப்பட்டு நாட்காட்டி ஏடு வாங்குகிறாரே அதில் அதிகம் எழுதுவாரோ என்றால் அதுவும் இல்லை. அதிகப்பட்சம் 10 பக்கங்கள் அதுவும் ஏடு வாங்கிய ஒரு மாதத்திற்குள் எழுதப்படும் வரவு செலவு கணக்கு தான்... ஆனால் அந்த நாட்காட்டியும், நாட்குறிப்பு ஏடும் வாங்குவதற்குள் அவர் படும் அவஸ்தை இருக்கிறதே... ஒரு பத்து தடவையாவது தன் மகனுக்கு போன் செய்துவிடுவார்...அது அவர் கையில் கிடைத்த பிறகு தான் அவருக்கு ஒரு நிம்மதி ஏற்படும்... ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்கதை தான்... நிற்க... அரசு ஊழியரின் சங்க ஈடுபாடு என்பது அவர்களின் இறப்பு வரையில் மட்டும் தான் என்று நினைக்காதீர்கள்... சமயத்தில் அவர்கள் ஆயுள் சந்தா செலுத்தியிருந்தால்... அவர்கள் ஆயுள் முடிந்திருந்தாலும் அவர்கள் சொந்த பந்தங்கள் அதனை சங்கத்திற்கு முறையாக தெரிவிக்காததினால்... அவர் விரும்பிய நாட்காட்டி, நாட்குறிப்பு ஏடு முதலியவை தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்... இதிலிருந்து அரசு ஊழியர்கள் தங்களின் சங்க ஈடுபாட்டில் சாகா வரம் பெற்றவர்கள் என்று தெரிகிறதல்லவா... |