'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

13

     நான்காவது அத்தியாயத்தில் அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் தங்களுக்கு வேண்டிய பொருட்களைக் கூட வாங்குவதற்கு எப்படி கணக்கு பார்க்கிறார்கள் என்று எழுதியிருந்தேன். அதன் நீட்சியாக ஒரு சம்பவம் இந்த மாத (2017 மார்ச்) துவக்கத்தில் எனக்கு ஏற்பட்டது.

     நான் எனது வாடகை வீட்டை மாற்றி ஒரு வருடம் ஆகியும் குடும்ப அட்டையை மாற்ற முடியாமல் இருந்தது. ஒரு வழியாக கடந்த 2016 நவம்பரில் ஆரம்பித்து மார்ச் மாதம் வரை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையினரோடு பலமுறை போராடி புதிய முகவரிக்கு அருகில் இருக்கும் கடைக்கு மாற்றினேன். அந்த நடைமுறையை... அந்த நெடுங்கதையை முதலில் கேளுங்கள்... உங்களுக்கும் அந்த அனுபவம் இருக்கலாம்...

     முதலில் நீங்கள் குடியிருக்கும் பகுதிக்கான வட்டார அலுவலகத்திற்கு சென்று முகவரி மாற்றம் குறித்து ஒரு விண்ணப்பம் எழுதி குடும்ப அட்டை மற்றும் புதிய முகவரி சான்று ஆகியவற்றின் பிரதியுடன் நீண்ட வரிசையில் நின்று அதற்கான அலுவலரிடம் கொடுத்தால் அவர் புதிய முகவரிக்கான சான்றை பார்த்துவிட்டு, அடுத்து ஒரு அதிகாரியை பார்க்க அனுப்புவார். அவர் அந்த விண்ணப்பத்தில் ஒரு முத்திரை குத்தி ஒரு படிவத்தில் பழைய கடையில் இருந்து நீக்கத்திற்கான உத்தரவை எழுதி நம்மிடம் கொடுப்பார். அந்த உத்தரவை எடுத்துக் கொண்டு நம்முடைய பழைய கடைக்குச் சென்று கொடுத்து, நம் பழைய கடையிலிருந்து குடும்ப அட்டை நீக்கப்பட்டது என அத்தாச்சி பெற்று மீண்டும் அதே வட்டார அலுவலகத்திற்கு கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அங்கு இப்போது குடும்ப அட்டையை வாங்கி வைத்து கொண்டு பத்து நாள் கழித்து வரச் சொல்லி ஒரு ரசீது கொடுப்பார்கள். பத்து நாள் கழித்து சென்றால் புதிய கடைக்கு மாற்றப்பட்டதிற்கான தகவல் நம் குடும்ப அட்டையில் எழுதப்பட்டிருக்கும். அதனை எடுத்துக் கொண்டு சென்று புதிய கடையில் சென்று கொடுத்தால் வேலை முடிந்த்து. இது ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ள கூடிய முறைமைதான். ஒரு பத்து நாளில் வேலை முடிந்துவிடும் என்பதால் பொறுத்துக் கொள்ளலாம்.

     எல்லாம் நல்லபடியாக நடந்தால் அப்புறம் இந்த கட்டுரை எதற்கு? இந்த முறை ஆதார் என்ற ஒரு உன்னத திட்டமும், ஸ்மார்ட் கார்டு என்ற ஏழாண்டு தவத்தின் பயனாக கிடைக்க உள்ள அதி உன்னத திட்டமும் சேர்ந்து கொண்டன. அதன் விளைவு என்னுடைய குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை நான் ஒரு பக்கம் என் கைப்பேசி செயலி மூலம் இணைக்க, அவர்கள் அதனை பழைய கடையிலிருந்து அழிக்க வேண்டும் என்று சொல்ல, அதற்கு இரண்டு முறை விண்ணப்பம் கொடுத்து, ஒவ்வொரு முறையும் பத்து நாட்கள் காத்திருந்து, கடைசியில் பழைய கடையிலிருந்து என் பெயர் மற்றும் ஆதார் பதிவுகள் நீக்குவதற்குள் மூன்று மாதம் ஓடிவிட்டது.

     அதற்குள் எந்த சாமி புண்ணியமோ அல்லது அதி விரைவான (ஏழாண்டு தட்டிக்கழித்த) அதி உன்னத திட்டத்தின் காத்திருக்கும் படலம் முடிவுக்கு வரும் நேரம் நெருங்கி விட்டது என்பதாலோ என்னவோ ஆதார் இணைப்பு மற்றும் நீக்கம் உள்ளிட்ட சேவைகளை நம் கண்ணெதிரேயே உடனுக்குடன் வட்டார அலுவலகத்திலேயே செய்வதாக அலுவலக நடைமுறையை மாற்றியிருந்தார்கள்.

     என்ன தான் செயல்படும் முறைமையை மாற்றியிருந்தாலும் வேலை செய்வது அதே ஊழியர்கள் தானே... நான் அந்தப் பொன்னாளில் அலுவலகத்திற்கு சென்று அதற்கான வரிசையில் சேர்ந்து கொண்ட போது எனக்கு முன்னால் 12 பேர் நின்றிருந்தார்கள். நான் 13வது நபர். காலை 10.30 மணிக்கு சென்று நின்றவன் என் முறை வரும்போது 12.45. இன்னும் பதினைந்து நிமிடம் ஆகிவிட்டால் சாப்பாட்டுக்கு எழுந்து போய்விடுவார்களே என்ற பயம் எனக்கு... ஒரு பக்கம் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ஒரு பக்கம் வெயிலின் கொடுமையால் நாக்கு வரண்டு போய்விட்டது... (பாவிகள் தண்ணீர் கூட வைக்கவில்லை அந்த அலுவலகத்தில்)

     ஒரு வழியாக நான் என்னுடைய குடும்ப அட்டையை கொடுத்து என் கைப்பேசி எண்ணையும் கொடுத்துப் பார்த்தால் தான் தெரிகிறது, என்னுடைய ஆதார் எண்ணை புது கடையைத் தவிர வேறு நான்கு இடங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது எங்கு பதிய வேண்டுமோ அங்கு விட்டு விட்டார்கள். ஒரு வழியாக அனைத்து இடங்களிலும் நீக்கி புதிய கடையில் சேர்ப்பதற்குள் 10 நிமிடம் ஆகிவிட்டது. எனக்கு பின் ஒருவருக்கு மட்டுமே அடுத்து அந்த அதி உன்னத சேவை கிடைக்கும் என எண்ணிக் கொண்டு வெளியே வந்தேன்...

     உன் வேளைதான் ஒரு வழியாக முடிந்து விட்டதே... அப்புறம் என்ன கதை வேண்டியிருக்கிறது என்கிறீர்களா?... காலை 10.30 மணி முதல் 12.45 வரை இரண்டே கால் மணி நேரம் அங்கிருந்த குறுகிய நடைபாதையில், வரிசையில் நின்று கொண்டிருந்த போது, அந்த அலுவலகத்தை அங்குலம் அங்குலமாக நோட்டம் விட முடிந்தது. அந்த அலுவலக சூழல் மற்றும் அங்கு அவர்கள் வேலை பார்க்கும் முறை வயிற்றெரிச்சலை தான் உண்டு பண்ணியது.

     முதலில் அலுவலக சுத்தம் பற்றி சொல்கிறேன்... அலுவலக உயர் அதிகாரியின் அறையைத் தவிர பிற இடங்களில் தொங்கிய ஒட்டடையைப் பார்த்தால் சுத்தம் செய்து வருடக்கணக்காக இருக்கும் போலிருந்தது... இத்தனைக்கும் அவர்கள் உபயோகிக்கும் கழிவறையை சுத்தம் செய்யக் கூட நாங்கள் நின்றிருக்கும் போதே ஒரு பெண்மணி வந்தார். அவரிடம் சொன்னால் கூட அவர் அந்த ஒட்டடையை சுத்தம் செய்திருப்பார். ஆனால் அந்த அலுவலகத்தில் உள்ள ஒருவருக்கும் அதை செய்யச் சொல்லி அந்த துப்புறவு பணியாளரிடம் சொல்லக் கூடத் தோன்றவில்லை என்று தான் நினைக்கிறேன்... ஒரு வேளை அவர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாகவே தோன்றவில்லையோ என்னவோ...

     அது மட்டுமா மூலைக்கு மூலை நம் போன்ற பொதுமக்கள் அளித்த விண்ணப்பங்களை மூட்டை கட்டி குவித்திருந்தார்கள். அந்த மூட்டையில் சேர்ந்திருந்த தூசியை சுவாசித்தாலே போதும்... உங்களுக்கு ஆஸ்துமா நிச்சயம்... ஆனால் அங்கே வரிசையில் நின்ற பாவப்பட்ட பொதுமக்களின் கண்களுக்கும் மூக்குக்கும் தான் அவைகள் தெரிந்தனவே ஒழிய அங்கு வேளையிலிருந்த அரசு ஊழியர்கள் ஒருவரும் அதை சட்டை செய்ததாகவே தெரியவில்லை... ஒரு வேளை அவர்கள் கண்களுக்கும் மூக்கிற்கும் அது பழகி விட்டது போலும்... இந்த லட்சணத்தில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு என தனியாக வரி வேறு வசூலிக்கப்படுகிறது... வெட்கக்கேடு...

     நிற்க... நான் இதுவரை சொன்ன அந்த அதி உன்னத தூய்மையான அலுவலகம் சென்னை அம்பத்தூரில் உள்ளது... கவலைப்படாதீர்கள் உங்கள் ஊரிலும் இது போன்ற அரசு அலுவலகம் கட்டாயம் இருக்கும்... போய்ப் பார்த்து வயிறு எரியுங்கள்... அதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்...



'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13