'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

3

     தொழிநுட்பத்திற்கும் அரசு ஊழியர்களுக்கும் என்ன சண்டையோ தெரியவில்லை. பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு புதிய தொழில்நுட்பம் எதுவுமே எட்டிக்காயாகத் தான் கசக்கிறது. அது கணினியாக இருந்தாலும், கைப்பேசியாக இருந்தாலும் அல்லது வேறு துறை சார்ந்த தொழில் நுட்பமாக இருந்தாலும் அதே நிலை தான்.

     நீங்கள் எந்த அரசு அலுவலகத்திற்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். அங்கு உள்ளவர்களிடம் எத்தனை பேரிடம் மின்னஞ்சல் முகவரி இருக்கிறது என்று கேளுங்கள். கட்டாயம் பாதிக்கும் மேலானவர்களிடம் சொந்தமாக மின்னஞ்சலே இருக்காது. பேஸ் புக், டிவிட்டர் எல்லாம் விட்டு விடுங்கள் அதைப் பற்றி அந்த அலுவலகத்தில் கட்டாயம் ஒரிருவரைத் தவிர மற்ற யாருக்கும் தெரிந்தே இருக்காது.

     என்ன அரசு ஊழியர்களைப் பற்றி இப்படிச் சொல்கிறீர்கள். அப்புறம் எப்படி பெரும்பாலான அலுவலங்கள் இப்போது கணினி மயமாக்கப்பட்டு இயங்குகின்றன என்று கேட்கிறீர்களா? மேலே சொன்னேன் பார்த்தீர்களா பேஸ் புக், டிவிட்டர் போன்ற தற்கால கணினி சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து வைத்துள்ள ஓரிருவர், அவர்கள் ஒவ்வொரு அலுவலகத்திலும் கட்டாயம் இருப்பார்கள். அவர்கள் மற்ற அனைவரின் கணினி சம்பந்தப்பட்ட வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குத் தான் கணினி செயல்பாடுகளும், அதன் பழுதுகள் குறித்த அறிவும் உள்ளது. அத்தகையோர் தன்னலம் பாராமல் வேலை செய்வதால் தான் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் கணினி மயமாக காட்சியளிக்கிறது.

     தொழில் நுட்ப அறிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அதன் மீது ஈடுபாடோ பற்றோ இருந்தால் அவர்கள் காலப்போக்கில் கட்டாயம் தொழில் நுட்ப அறிவை தேடிப் பெற்றுக் கொள்வார்கள். உதாரணமாக நம்மை விட நம் சிறு குழந்தைகள் கைப்பேசியில் நன்கு திறம்பட வேலை செய்வதை நீங்கள் காணலாம். ஏனென்றால் நம்மை விட அவர்களுக்கு கைப்பேசியில் ஈடுபாடு அதிகம். சிறு குழந்தைகள் என்றால் அதில் உள்ள விளையாட்டின் மீதும், பெரிய பிள்ளைகள் என்றால் அதன் சமூக தொடர்புகளான குறுஞ்செய்திகள் மீது மோகம் அதிகம். அந்த மோகம் அவர்களுக்கு அதனை விரைந்து இயக்கக் கூடிய ஆற்றலை அளிக்கிறது. விதவிதமான கைப்பேசிகள் குறித்து அறிந்து கொள்ள அவர்களைத் தூண்டுகிறது.

     ஆனால் பெரும்பாலான அரசு ஊழியர்களிடம் இந்த ஆர்வம் இருக்காது. அதனால் அவர்களிடம் இருக்கும் கைப்பேசி கூட கட்டாயம் மூன்று முதல் ஐந்து வருடத்திற்கு முந்தைய மாடலாகத்தான் இருக்கும். அத்தனை ஆண்டுகள் பயன்படுத்தியும் அதில் பெரும்பாலானோருக்கு குறுஞ்செய்தி அனுப்பத் தெரியாது. குறுஞ்செய்தி நிலையே இப்படி என்றால், கைப்பேசியில் இணையத்தில் உலாவது குறித்து எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறீர்கள்? உங்களுக்கு என் வார்த்தையில் நம்பிக்கை இல்லை என்றால் நீங்களே எந்த அரசு அலுவலகத்துக்கு வேண்டுமானாலும் போய் பரிசோதித்து பார்க்கலாம்.

     எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை கூறுகிறேன். சமீபத்தில் தொலைபேசி கட்டணம் செலுத்த அரசு தொலைபேசியின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். அன்றைய தினம் நான் கட்டணம் செலுத்த கடைசி தேதி வேறு. எனக்கு வேறு அவசர வேலையும் இருந்ததால், சீக்கிரம் பில் கட்டி விட்டு சென்றால் பரவாயில்லை என்று நினைத்தேன். அங்கு சென்று பில்லை நீட்டினால் அங்கிருந்த பெண்மணி "சார் கம்ப்யூட்டர் ரிப்பேர் சார். பில் போட முடியாது" என்று சொல்லிவிட்டு, அருகில் இருந்த இன்னொருவருக்கு அதே கம்யூட்டரை பயன்படுத்தி கீ போர்டில் ஏதோ டைப் செய்து கொண்டிருந்தார். கம்ப்யூட்டர் வேலை செய்கிறதே பின் ஏன் அப்படி சொன்னார், ஒரு வேளை இணையத் தொடர்பு இல்லையோ என நினைத்துக் கொண்டு "என்ன மேடம், நெட் கனெக்ஷன் இல்லையா?" என்று கேட்டேன். "அதெல்லாம் இருக்கு. உங்களுக்கு பில் போடனும்னா மௌஸ் யூஸ் பண்ணனும். அதுதான் வேலை செய்யலை. நீங்க வேற ஆபிஸுக்கு போய் கட்டுங்க" என்றார் சாவகாசமாக. என்னை அலைய வைக்கும் மௌஸை எரிச்சலுடன் பார்த்தேன். என்ன விதமான மௌஸ் என்பதை பார்க்க சட்டென பழக்க தோஷத்தில் அதனை கையில் எடுத்து பார்த்தேன். அது பழைய பால் உள்ள மௌஸ். அதற்குள் அவர் நான் செய்யக் கூடாததை செய்து விட்டது போல், "சார் அதெல்லாம் தொடாதீங்க. ஏற்கனவே அதுல ஏதோ சின்ன ரிப்பேர். நீங்க அத பெரிசாக்கிடாதீங்க" என்றார். நான் அவர் சொல்வதை காதில் வாங்காமலே மௌஸின் பாலை உருட்டிப் பார்த்தேன். அது உருளவில்லை. பிரச்சனை எனக்கு புரிந்து விட்டது. "மேடம் மவுஸ்ல உள்ள பால்ல அழுக்கு சேர்ந்ததால அது ரோல் ஆக மாட்டேங்குது. அத கிளீன் பண்ணா மௌஸ் வொர்க் ஆகும். நான் வேணும்னா கிளீன் பண்ணி தரட்டுமா?" எனக்கு அடுத்த அலுவலகத்திற்கு போகாமல் இங்கேயே பில் கட்டினால் போதும் என்று இருந்தது.

     "ஐயோ! அத தொட்டதே தப்பு, அத கிளின் பன்றேன் பேர்வழின்னு எதையாவது கெடுத்து வச்சிட்டு போயிடாதீங்க. அப்புறம் அத ரிப்பேர் செய்ய வேற செலவாகும். அதுவும் எங்க தலையில தான் வந்து விழும்" என்றார். எனக்கு எரிச்சலே வந்துவிட்டது. "மேடம் புது மவுஸே நூறு நூத்தம்பதுக்கு கிடைக்குது. கவலைப்படாதீங்க அப்படி நான் கிளின் பண்ண பின்னாலே ஒர்க் ஆவலைன்னா நான் புது மவுஸே வாங்கித் தரேன்" என்று கூட சொல்லிப் பார்த்தேன். அவர் எங்கே நான் மவுஸை மீண்டும் எடுத்து விடுவேனோ என்று அதனை தள்ளி வைத்து விட்டு. "நீங்க ஒண்ணும் எதையும் செய்ய வேண்டாம். அத ரிப்பேர் பண்றதுக்குன்னு, எங்க ஆபிஸுல ஆள் இருக்கு. அவர் இன்னைக்கி லீவு… நாளைக்கு வந்ததும் அவர் சரி பண்ணிக்குவாறு. இன்னிக்கே பில் கட்டணும்னா நீங்க வேற ஆபிஸுக்கு போங்க. இல்லைன்னா நாளைக்கு வந்து கட்டுங்க" என்று கூறி என்னைத் துரத்தி அடித்தார். நானும் தலையில் அடித்துக் கொண்டே அடுத்த அலுவலகத்திற்குச் சென்றேன்.

     இப்போது சொல்லுங்கள் அரசு ஊழியர்களின் தொழில்நுட்ப திற்மையால் அரசு இயந்திரம் இந்த அளவு செயல்படுவதே அதிசயம்தானே!

     (இந்த அத்தியாயம் 2014ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இருப்பினும் இந்த 2017ஆம் ஆண்டிலும் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை...)



'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13