'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

4

     அரசு ஊழியர்கள் சகிப்புத்தன்மை நிறைந்தவர்கள், சுற்றுப்புற சூழ்நிலைகளை அனுசரித்து செல்வதில் தலைசிறந்தவர்கள் என்று நான் சொன்னால், உங்களால் நம்ப முடியவில்லையா? உண்மையைத் தான் சொல்கிறேன். சற்று விளக்கமாகச் சொல்கிறேன் கேளுங்கள்.

     எனது மேஜைக் கணினியோ அல்லது மடிக்கணியோ சிறிது தகராறு செய்தாலோ, அல்லது சற்றே மெதுவாக வேலை செய்தாலோ, மின் விசிறி சென்னையின் மே மாத வெயிலில் மெதுவாகச் சுற்றினாலோ, அல்லது குறைந்த மின் அழுத்தத்தினால் குழல் விளக்கு அணைந்து அணைந்து எரிந்தாலோ எனக்கு எரிச்சல் வருகிறது. ஆனால் இவற்றில் எது நடந்தாலும் அதைப் பற்றி கவலையே படாதவர்கள் தான் அரசு ஊழியர்கள்.

     சென்னையில் என் நண்பன் பணி புரியும் அரசு அலுவலகத்திற்கு மே மாதத்தில் ஒரு முறை செல்ல வேண்டி ஏற்பட்டது. நான் சென்ற போது ஏற்கனவே பாழடைந்த கட்டடம் போல் இருக்கும் அந்த அலுவலகம், இருளோடிப் போய் இருந்தது. ஒரு வேளை மின்சாரம் இல்லையோ என்று பார்த்தால், மின்விசிறி ஓடிக் கொண்டிருந்தது. பின் ஏன் இப்படி இருட்டுக் கொட்டாயில் அடைந்து கிடக்கிறார்கள் என்று என் நண்பனிடம் கேட்டேன். அவன் சொன்னான், மின்சாரம் குறைவான அழுத்தத்தில் வருகிறதாம், அதனால் குழல் விளக்குகள் எரியவில்லையாம். மின் விசிறிகள் மட்டும் ஏனோ போனால் போகிறது என்று மிகவும் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தன. அதில் காற்று ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. பேசாமல் அதனை நிறுத்தியே விடலாம். மின்சாரமாவது மிச்சமாகும்.

     அந்த மின் விசிறியைப் பார்த்தாலே பயமாக இருந்தது. எங்கே அது கனம் தாங்காமல் உத்திரத்தில் இருந்து பெயர்ந்து விழுந்து விடுமோ என்று அதனடியில் உட்காரவே எனக்கு பயமாயிருந்தது. அந்த காலத்தில் மிகப் பெரிய உரலுக்கு இருக்கும் குழவி போன்ற தொரு உருளை அதன் மத்தியில் இருந்தது. அந்த கனத்தோடு அது சுழல்வதே திகிலூட்டுவதாக இருந்தது. என் நண்பனிடம், இந்த ஹைதர் அலி காலத்து மின்விசிறிக்கு பதில் புதிய மின்விசிறி போட்டால் என்ன என்று கேட்டேன்? அவன் நான் கேட்ட கேள்வியை சரியாகப் புரிந்து கொள்ளாமல் (அல்லது புரிந்து கொண்டுதானோ என்னவோ) “எத்தனை தடவை செக்ரட்ரியேட்டுக்கு எழுதுவது, அவர்கள் சேங்க்‌ஷன் செய்தால் தானே” என்றான். (மற்ற மாவட்ட அலுவலகங்களில் இருப்பவர்கள் நண்பனின் இந்த மாநில தலைமை அலுவலகத்தை குறைகூறுவார்கள்). ஆனால் நான் அவனிடம் கேட்க நினைத்ததோ, ஆயிரத்தைந்நூறு ரூபாய்க்கே நல்ல தரமான மின்விசிறி கிடைக்கும் இந்தக் காலத்தில் தங்களின் சொந்த காசிலாவது புதிதாக ஒன்று வாங்கி அவரவர் இருக்கைக்கு மேலே மாட்டிக்கொள்ளலாமே என்று தான். மாதம் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவனுக்கு (கிம்பளத்தை விடுங்கள்) ஒரேயொரு முறை ஒரு மின்விசிறி வாங்குவதா கஷ்டம். ஆனாலும் வாங்க மாட்டார்கள்.

     குழல் விளக்கு எரியவில்லை என்று இருட்டில் இருந்தாலும் இருப்பார்கள், ஒரு நூறு ரூபாய் செலவு செய்து சி.எப்.சி. பல்பை வாங்கி மாட்டி ஒளியைப் பெறுவதோடு, மின்சாரத்தையும் சிக்கனப்படுத்த மாட்டார்கள்.

     சரி இவை தான் ஒரு அலுவலகத்திலிருந்து இன்னொரு அலுவலகத்திற்கு மாற்றலாகிப் போகும் போது கழற்றிச் செல்வதில் சிக்கல் ஏற்படும் என்றே வைத்துக் கொள்வோம். மாற்றலாகிச் செல்லும் போது தம்முடன் கூடவே எடுத்துச் செல்லக் கூடிய பொருட்களைக் கூட அவர்கள் வாங்க மாட்டார்கள். அவைகளின் பட்டியலைச் சொல்கிறேன். அடுத்த முறை நீங்கள் எந்த அலுவலகத்திற்காவது சென்றால் அந்த பொருள்கள் அங்கு இருக்கின்றனவா என்று தேடிப் பாருங்கள்.

     மேஜை விரிப்புகள், ஸ்டேப்பிலர், ஸ்டாம்ப் பேட், ஜம்ப் கிளிப், வெள்ளை பேப்பர் (அது அலுவலகத்தில் இலவசமாக கிடைத்தால் கூட அவர்களிடம் கிடைக்காது. எல்லாம் வீட்டிற்கு சென்றிருக்கும்) கார்பன் பேப்பர், ஸ்கேல், கால்குலேட்டர், டேபிள் கடிகாரம், துடைப்பதற்கு பழைய துணி (வீட்டிலிருந்துகூட எடுத்து வரலாம்), மேஜை விளக்கு, எமர்ஜன்சி விளக்கு, பூ ஜாடி, குடிதண்ணீர் போன்றவை. அட குண்டூசியை மறந்து விட்டேனே...

     சரி இதெல்லாம் அவர்களால் வாங்க முடியாது என்றா நினைக்கிறீர்கள்? அலுவலகத்திற்கு வருபவனிடம் (லஞ்சமாக / அன்பளிப்பாக) வாங்கித் தரச் சொன்னால் கூட வாங்கித் தருவான். ஆனால் அதைக் கூட இவர்கள் உருப்படியாக வைத்திருக்க மாட்டார்கள். எந்த அரசு அலுவலகத்திலாவது ஒரு விண்ணப்பம் எழுத ஒரு வெள்ளைப் பேப்பர் கேட்டுப் பாருங்கள் அடுத்த நிமிஷமே இல்லை என்று தான் பதில் வரும். ஆனால் நம்மை வாங்கித் தரச் சொல்லும் போது மட்டும் குயர் குயராக வாங்கி வரச் சொல்லுவார்கள். (அந்த அனுபவம் இல்லாதவர்கள் காவல் நிலையத்திற்கு செல்லுங்கள்... அட பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்கு என்று சொன்னேன்...)

     மேலே சொன்ன பொருள்கள் அனைத்தும் இருந்தால், அவர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும் அல்லவா? இவைகளில் ஏதாவது ஒழுங்காக இல்லாமல் இருந்தால் தானே அதைக் காரணமாகக் காட்டி அரசு ஊழியர்கள், தங்கள் வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்த முடியும். பின்னர் நம்மைப் போன்ற பொதுமக்கள், அந்தக் காலதாமத்தை தாங்க முடியாமல் சீக்கிரம் முடித்துத் தர அவர்களுக்கு அன்பளிப்பு/ஊக்கத்தொகை அளிப்போம். அதனை லஞ்சம் என்று சொல்லக் கூடாது. ஏனென்றால், அவர்களாக கேட்பதில்லையே, நாமே தானே தாமதம் பொறுக்க முடியாமல் வேலை நடந்தால் சரி என்று கொடுக்கிறோம்.

     நாம் கொடுக்கும் சிறு சிறு (அவர்களுக்கு, நமக்கல்ல) அன்பளிப்பு / ஊக்கத்தொகையினை பெற்றுக் கொண்டு அந்த கஷ்டமான சுற்றுப்புறச் சூழ்நிலையிலும், சகிப்புத்தன்மையோடு அரசு ஊழியர்கள் நமக்காகத் தானே உழைக்கிறார்கள். அவர்களைப் போய் நானோ நீங்களோ குறை சொல்வதா?

     (நான் மேலே சொன்ன, கடற்கரைச் சாலையில் இருந்த அலுவலகம், சில ஆண்டுகளுக்கு முன் நல்ல வேளையாக தீக்கிரையாகிவிட்டது... இல்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் அந்த மண்டை பெருத்த ஃபேனின் கனம் தாங்காமல் உத்திரம் பெயர்ந்து இடிந்து விழுந்திருக்கும்...)



'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13