'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

5

     முன்பொரு சமயம் புயல் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்த வேளையில் என் இல்லம் அருகிலுள்ள ஒரு வங்கியில் புதிதாக வங்கிக் கணக்கு துவங்க நினைத்து அதற்கான ஏற்பாடுகளுடன் சென்றேன். புயல் காரணமாக வியாழக்கிழமை (29-12-2011) முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், வெள்ளிக்கிழமை (30-12-2011) அன்று அதிகமாக வங்கியில் கூட்டம் இருக்காது என்பதாலும், அன்று தான் என்னை வங்கிக்கு அறிமுகப்படுத்திய நபர் என் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டார் என்பதாலும், மழையைக் கூடப் பொருட்படுத்தாமல் நனைந்து கொண்டே சென்றேன்.

     வங்கியின் உள்ளே வாடிக்கையாளர்கள் ஒருவர் கூட இல்லை. வங்கி மூட இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. வங்கியில் ஏறக்குறைய அனைத்து ஊழியர்களும் இருந்தனர். ஆனால் புது கணக்கு சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி வாய் கூசாமல் "சார் இன்னைக்கு ஸ்டாப் எல்லாம் புயல்னால வரல. இருக்குற வேலைய செய்யவே ஆளில்லை. நீங்க போயிட்டு அடுத்த வாரம் வாங்க" என்று மிகவும் அன்பாக எரிந்து விழுந்தார். தன் எதிரே வேலை சம்பந்தப்பட்ட ஒரே ஒரு பேப்பர் கூட இல்லாததால் மன வருத்தத்துடன் உட்கார்ந்து காலாட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. வெளியில் மழை போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தாலும், உள்ளே ஏ.சி. போட்டு ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தார் அவர். மழையில் முழுதும் நனைந்து சென்றிருந்ததால் எனக்குத் தான் குளிரில் நாக்கு ஒட்டிக் கொண்டு பற்கள் தாளமிட எதிர்த்து பேச முடியாமல் திரும்பி வந்துவிட்டேன்.

     புது வருடம் துவங்கிய உடனே சென்றால் அதையே காரணம் காட்டி அலைய விடுவார்கள் என்பதால் இரண்டு நாள் கழித்து புதன்கிழமை சென்றேன். என்ன கொடுமை சரவணன், அன்றைக்கும் அதே தோரணை, அதே கர்வம், அதே அலட்சியம், அதே பதில். இந்த முறை நான் மழையில் நனைந்து செல்லவில்லை. ஆனால் அதற்கு மாறாக காலையிலிருந்து சாப்பிடாததால் (மணி சுமார் 12) அகோர பசியுடன் சென்றிருந்தேன். நல்ல நிலைமையில் இருந்தாலே அவர் பதில் சொன்ன தோரணைக்கு காட்டு காட்டு என காட்டுவேன். அன்றைக்கு பசி வேறா, சும்மா விடுவேனா... "என்ன இதே தொழிலா போயிடுச்சி... போன வாரமும் இதே பதிலைத் தான் சொன்னீங்க. இப்பயும் அதையே சொல்றீங்க?" என்று உண்மையாகவே எரிந்து விழுந்தேன்.

     அவரும் சளைக்காமல் "நாங்க என்ன செய்ய, கம்ப்யூட்டர் வேலை செய்யலை"

என்றார்.      அதை சொன்னதும் எனக்கு சரியான கடுப்பு. "அடுத்த வாரம் வந்தாலும் இதே பதில் தான் சொல்லுவீங்களா இல்ல..." நான் முடிக்கவில்லை. அவருக்கு கோபம் வந்துவிட்டது.

     "என்ன விளையாடுறீங்களா? கம்ப்யூட்டர் வேல செய்யாததுக்கு நான் என்ன செய்ய முடியும். உங்களோட இதே தொந்தரவா போயிட்டுது" என்று அங்காலாய்த்தார்.

     நான் லேசில் அவரை விட்டுவிட்டு செல்வதாக இல்லை. நான் போகாமல் அங்கேயே நிற்பதைக் கண்ட அவர் எரிச்சலுடன் "கொடுங்க" என்று என் விண்ணப்பத்தை வாங்கி சரி பார்ப்பது போல் பார்த்தவர், "போட்டோ கிட்டே கையெழுத்து போடலை... இதையெல்லாம் செய்யாம வந்திடுங்க அப்புறம் ஒரு வாரமாச்சு ரெண்டு வாரமாச்சுன்னு சொல்லுங்க... போய் ப்யூன் கிட்ட கொடுத்து எல்லாத்தையும் செக் பண்ணிக்கிட்டு வாங்க. அப்புறம் வந்து எங்க உசுர வாங்குங்க" என்று எரிந்து விழுந்தார். போட்டோவுக்கு அருகில் கையெழுத்தை வங்கி அதிகாரி முன்னிலையில் தான் போட வேண்டுமென்றிருந்தது. அதனால் தான் நான் கையெழுத்தைப் போடவில்லை. ஆனால் அது பற்றித் தெரிந்திருந்தும் அவர், ஏதாவது சாக்கு சொல்லி என்னை அலைய விட வேண்டுமென்று நினைத்து அதைச் சொன்னார்.

     ஒரு வழியாக ப்யூனிடம் விண்ணப்பத்தை செக் செய்து மீண்டும் அவரிடம் சென்று கொடுத்ததும், மீண்டும் ஒருமுறை பயங்கர சலிப்போடு அதனை கிழிக்காத குறையாக பக்கங்களை திருப்பித் திருப்பி வேறு ஏதாவது குற்றம் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்த்தார். எதுவும் தெரியாததால், வேண்டா வெறுப்பாக, என்னவோ அவர் சொத்தையே எழுதித்தருவது போல் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு, "பணத்தை கட்டிட்டு, ரெண்டு நாள் கழிச்சு வந்து பாஸ் புக் வாங்கீங்க. நாளைக்கே வந்து நிக்காதீங்க." என்று ஒருவழியாக என்னை அனுப்பி வைத்தார்.

     எதுக்கு இந்த கதை என்கிறார்களா? வங்கி நடைமுறை தெரிந்த, வங்கி ஊழியர்கள் மனநிலை தெரிந்த என்னை போன்றவர்களுக்கே இந்த நிலை என்றால் இவையெல்லாம் தெரியாத பாமர மக்களை இவர்கள் எந்த அளவுக்கு வதைப்பார்கள்?

     அதற்கு நேர் மாறாக, இந்த நிகழ்வு நடக்க இரண்டு நாளுக்கு முன்னர் வேறொரு வங்கியில் ஒரு பெரிய தொகையை என்னுடைய கணக்கிற்கு கட்டச் சென்றேன். ஏற்கனவே அந்தத் தொகைக்கு நண்பர் ஒருவருக்கு காசோலை கொடுத்திருந்தேன். ஆனால் வங்கி கவுண்டரில் இருந்தவர், நான் என்னவோ அந்தத் தொகையை என் கணக்கில் தொடர்ந்து வைத்திருப்பேன் என்று நினைத்துக் கொண்டு, நான் கேட்காமலேயே "சார் காலண்டர் வாங்கிட்டீங்களா சார்" என்று கேட்டு, நான் பதில் சொல்லுவதற்கு முன் அவராகவே ஒன்றல்ல இரண்டு காலண்டர்களை எடுத்து நீட்டினார். ஐந்து நிமிடத்திற்கு முன்பு தான் அதே மனிதர், ஒரு வயதான ஓய்வூதியதாரர் பணமெடுக்கும் போது காலண்டர் கேட்ட போது "காலண்டர் ஸ்டாக் தீர்ந்துடிச்சி சார்! நாளைக்கு வாங்க, ஸ்டாக் வந்தா தரேன்" என்று சொன்னார்.

     சரி இதுதான் எல்லா இடத்துலேயும் நடக்குதே! இதுல புதுசா என்ன செஞ்சாஞ்க அரசு ஊழியர்கள் என்று கேட்கிறீர்களா? உண்மைதான். ஆனால் அரசு ஊழியர்கள் பொதுமக்களிடம் பாரபட்சம் காட்டக்கூடாது என்பதை ஏன் இவர்கள் யாருமே இலட்சியம் செய்வதில்லை. அரசு இலவசமாக கொடுப்பதைக் கூட அனைவருக்கும் இருக்கும் வரை கொடுக்காமல் காசு உள்ளவனுக்கு ஒரு மாதிரியும் காசில்லாதவனுக்கு ஒரு மாதிரியும் பாராபட்சம் காட்ட இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இதில் கொடுமை என்றால், இப்படிச் செய்பவர்களில் பெரும்பாலோரும் நடுத்தர வர்க்கத்தினர் தான். அவர்களே அவர்களைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு எதிராக இருக்கிறார்கள்.

     நாய் சின்னம் கொண்ட ஒரு அரசு வங்கியில் எனக்குத் தெரிந்த நண்பரின் உறவினர் (மாற்றுத்திறனாளி) வேலை பார்க்கிறார். அவர் வேலை விசயமாக சென்னை வந்திருந்த போது இங்கிருக்கும் அதே வங்கியின் கிளைக்கு சென்று வங்கிச் சேவையினைப் பெற முயற்சி செய்தபோது, அவருக்கு ஊழியர் என்ற முறையில் சலுகையுடன் அந்த சேவையை வழங்க இங்கிருந்த வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பதற்காகவாவது அவரிடம் அன்போடு நடந்து கொள்வதை விட்டு, அவர் கேட்ட நியாயமான சேவையும் செய்ய மறுத்துவிட்டனர். அவரும் அரை மணி நேரத்துக்கு மேல் அவர்களிடம் சண்டை போட்டும் எந்த வித பிரயோஜனமும் இல்லை.

     இப்படி மக்கள் விரோத மனப்பான்மையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், பாதிக்கப்பட்ட அந்த மக்கள் இட்ட சாபத்தின் காரணத்தினாலோ என்னவோ, ஒரு காலத்தில் அதிகப்பட்ச சம்பளமும், அதிகப்பட்ச சமூக மரியாதையும் பெற்றுவந்த வங்கி ஊழியர்கள், இன்று பத்தோடு பதினைந்தாக, பிற துறை அரசு ஊழியர்கள் போல் ஆகிவிட்டார்கள். (என் சாபமும் சேர்த்துத்தான்...)

     (சமீபத்திய பண மதிப்பிழப்பு பிரச்சனையில் அவர்கள் தங்களின் கோர முகத்தை ஏழை எளிய மக்களிடம் காண்பித்தத்தையும், பணக்காரர்களுக்கு பல வகையிலும் சேவகம் செய்ததையும் விளக்கமாக பிறிதொரு அத்தியாயத்தில் எழுதுகிறேன்...)



'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13