உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் 6 முந்தைய இதழில் அரசு அலுவலகங்களில் உள்ள மின் விசிறி குறித்து நான் எழுதியிருந்த விஷயங்கள் எல்லாம் இப்போது தீக்கிரையாகி உள்ளதே அதே எழிழகத்தின் பின்பகுதியில் இருந்த பழங்கால கட்டடத்தில் இயங்கி வந்த அரசு அலுவலகத்தை மனத்தில் கொண்டு தான். உண்மையில் சில வருடங்களுக்கு முன்பு நான் அங்கு சென்றிருந்த போதே அந்தக் கட்டிடம் இருந்த நிலை கண்டு நான் பயந்து தான் போனேன். எங்கே அதிக நேரம் இருந்தால் அங்கு இருந்த மின்விசிறியின் கனம் தாங்காமல் உத்திரம் இடிந்து விழுந்து விடுமோ என்று அடிக்கடி மேலே பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். என்ன செய்வது நம் அரசுத்துறையினருக்கு எப்போதுமே கண்கெட்ட பிறகு தான் சுரியநமகஸ்காரம் நினைவுக்கு வருகிறது. பாவம் இதில் அப்பாவி தீயணைப்பு வீரர் உயிர் இழந்ததுதான் பரிதாபம். என்னதான் அரசு இழப்பீடு கொடுத்தாலும், மகளின் திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன் தந்தை இறந்த துயரத்தை யாரால் ஈடு செய்ய இயலும்? நகைச்சுவைத் தொடர் என்று சொல்லிவிட்டு எடுத்த உடனே மிகவும் இறுக்கமாக ஆரம்பித்துவிட்டேனே என்று பார்க்கிறார்களா? என்ன செய்வது எந்த ஒரு துர்பாக்கியமான செயலும் நடைபெறும் வரை நகைச்சுவை தான். ஆனால் நடந்துவிட்டாலோ, மற்றவருக்கு எப்படியோ, பாதிக்கப்பட்டவருக்கு கண்டிப்பாக துயரம் தானே? அப்புறம் இந்த இதழில் மேலாண்மை பாடத்தின் ஒரு முக்கிய பகுதியான வேலைப் பகிர்வை எப்படி நம்முடைய அரசு ஊழியர்கள் கண்ணும் கருத்துமாக கடைபிடிக்கிறார்கள் என்று சொல்கிறேன். வேலைப் பகிர்வு என்பது நிர்வாகத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். எந்த ஒரு வேலையையும் ஒருவரே செய்யாமல் அத்துறையில் உள்ள அனைவரும் பங்குபெறும் வகையில் சரியான விகிதத்தில் பகிர்ந்து உரிய முறையில் செயலாற்றினால் விரைவாகவும், சீரிய முறையிலும் அச்செயலை செய்து முடிக்க முடியும். இந்த பாடம் மட்டும் எப்படியோ நம்முடைய அரசு ஊழியர்களுக்கு தலைகீழ் பாடமாகிவிட்டது. அவர்கள் இதன் முதல் நடவடிக்கையான வேலைப் பகிர்வை உரிய முறையில் செய்துவிட்டார்கள். அதாவது தங்கள் அலுவலகத்தில் உள்ள வேலைகளில் எதை எதை யார் யார் செய்வது என்பதை பிரிப்பதை மிகவும் கவனமாகவும், சிறப்பாகவும் செய்துவிட்டார்கள். இது ஏறக்குறைய அனைத்து துறையிலும் சிறப்பாகச் செய்யப்பட்டுவிட்டது என்றே கூறவேண்டும். இதன் அடுத்த நிலையான, அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வேலையை அவரவர் செய்ய வேண்டும் என்பதைக் கூட பெரும்பாலான அலுவலகங்களில் சரிவரச் செய்கிறார்கள். பிறகு என்னய்யா பிரச்சனை என்கிறீர்களா? இருங்கள் வருகிறேன். இதில் இருவகையான பிரச்சனைகள் இருக்கின்றன. ஒன்று, ஒருவர் அலுவலகத்துக்கு வரவில்லையென்றால் அவரின் வேலையை அன்றைக்கு யார் செய்வது? இதில் தான் பெரும்பாலான அலுவலகங்களில் அடிதடியே நடக்கிறது. ஒருநாளோ அல்லது ஒரு வாரமோ என்றாலும் அவரின் வேலையை அடுத்தவர் செய்வது என்பது கிடையவே கிடையாது. ஒருவேளை மேலதிகாரி தலையிட்டு விடுப்பில் சென்றவரின் வேலையை இன்னார் தான் செய்யவேண்டும் என்று கண்டிப்பாக உத்தரவு போட்டாலொழிய தானே எடுத்துக் கொண்டு செய்வது பெரும்பாலும் கிடையவே கிடையாது என்று தான் சொல்லவேண்டும். சென்ற வாரம் ஒரு அரசுத்துறை வங்கிக்கு சென்றிருந்தேன். மொத்தமே இருவர் தான் அலுவலகத்தில் இருந்தனர் ஒருவர் கேஷியர், மற்றவர் அதிகாரி. பணம் கட்டுவதும், பணம் கொடுப்பதும் (அதுவும் குறைந்த தொகை மட்டுமே) ஆகிய இரு செயல்கள் மட்டுமே நடைபெற்றது. நான் செக்புக் வாங்கச் சென்றேன். அதைக் கூட எடுத்துத் தர முடியாது என்று கூறிவிட்டார். வங்கியில் வேலை செய்யும் மற்றொரு அலுவலரும் பியூனும் பொங்கல் பண்டிகைக்குச் சென்றவர்கள் வரவில்லையாம். (நான் சென்றது புதன் கிழமை 18-1-2012 அன்று) மேனேஜருக்கு கால் ஒடிந்ததால் அவர் வருவதற்கு ஒரு வாரமோ பத்து நாட்களோ ஆகும் என்றார்கள். செக் புக் கொடுப்பது லீவில் சென்றவர் வேலையாம். ஒருவர் தானே இருக்கிறார் அவர் எப்படி எல்லா வேலையையும் செய்வார், நாம் தான் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகவேண்டும் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. நானும் அப்படித்தான் செய்திருப்பேன் ஒருவேளை வங்கியில் கூட்டம் இருந்திருந்தால். ஆனால் வங்கியில் இருந்தது என்னவோ நான் மட்டுமே? இப்போது சொல்லுங்கள் வேலைப் பகிர்வு எப்படி வேலை செய்கிறதென்று? இரண்டாவது பிரச்சனை ஒன்று உள்ளது. அதன் தாக்கம் அதைவிடக் கொடுமையானது. இந்த மாதிரி வேலைப் பகிர்வின் காரணமாக ஊழியர்களுக்கு அவரவர்களின் வேலை மட்டுமே தெரிகிறதே ஒழிய மற்றவர் செய்யும் வேலைகள் சரிவரத் தெரிவதில்லை. அல்லது வேண்டுமென்றே சரிவரத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள், அல்லது தெரிந்தாலும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். இதனால் மேலதிகாரியின் உத்தரவின் பேரிலோ அல்லது உண்மையில் விடுப்பில் சென்றவரின் மேல் அக்கரை கொண்டோ, அல்லது சாமான்ய மக்களின் மீது பரிதாபப்பட்டோ, அவரின் வேலை செய்ய முன்வரும் ஊழியருக்கு அந்த வேலையில் பழக்கம் இன்மையால் தடுமாற்றம் ஏற்படுகிறது. அல்லது தப்பும் தவறுமாகச் செய்கிறார். இதனால் நாம், அவர் இந்த வேலையை இப்படி தாறுமாறாகச் செய்வதை விட செய்யாமல் விட்டுவிட்டாலே தேவலை என்ற நிலைக்கு வந்து விடுவோம். சென்னை புத்தக கண்காட்சிக்காக அரங்கு கேட்டு விண்ணப்பிக்க டிடி எடுக்க முதலில் சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகில் கதீட்ரல் சாலையில் உள்ள ஒரு அரசு வங்கிக்கு சென்றேன். அன்றைக்கு அவ்வங்கியில் டிடி செக்ஷனில் வேலை பார்ப்பவர் விடுமுறையாம் அதனால் வேறு வங்கிக்கு செல்லச் சொன்னார்கள். அடுத்து அதே ஸ்டெல்லா மேரி கல்லூரியில் இருந்த வங்கிக்கு சென்றேன். அன்று கல்லூரி மாணவிகள் கட்டணம் செலுத்த அதிக அளவில் வங்கியில் கூடியிருந்ததால் டிடி எடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். அடுத்து அங்கிருந்து கிளம்பி வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள வித்யோதயா பள்ளி வளாகத்தில் உள்ள வங்கிக்கு சென்றேன். அங்கும் ஊழியர் விடுப்பில் சென்றுவிட்டார் ஆகவே எதிரில் சாலைக்கு மறுபுறம் உள்ள வங்கிக்கு செல்லுங்கள் என்று எனக்கு வழிகாட்டினார்கள். நான்காவதாக அங்கும் சென்றேன். அங்கும் ஊழியர் சாப்பாட்டுக்குச் சென்றுவிட்டார், ஆகவே ஒரு மணி நேரம் ஆகும், நீங்கள் எதிரிலுள்ள வித்யோதயா பள்ளியில் உள்ள வங்கிக்கு செல்லுங்கள் என்றார்கள். நான் அங்கு நடந்த கதையைக் கூறி லேட் ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லி அமர்ந்தேன். சாப்பிட்டு முடித்து அங்கு வந்தமர்ந்த ஊழியர் அந்த பிரிண்டரை பாடாய் படுத்தி டி.டி எடுத்துக் கொடுப்பதற்குள் எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. பாவம் அந்த பிரிண்டர் வேலை செய்யத் தெரியாதவர் கையில் மாட்டிக் கொண்டு அல்லல்பட்டது. வேறு வங்கிக்கு செல்லாமல் நம்மை பழியெடுக்கிறானே என்று வயிறெறிந்து கொடுத்தார்களோ என்னவோ, இந்த ஆண்டும் சென்ற ஆண்டு போல், பபாஸியில் (தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்) உறுப்பினராக இல்லை என்று காரணம் கூறி அரங்கு கொடுக்க மறுத்து டி.டி.யை திருப்பி அனுப்பிவிட்டார்கள். அச்சங்கத்தில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டி விண்ணப்பம் கொடுத்து ஒரு வருடம் ஆகிறது. பேன் கார்டு எண் மட்டுமே விண்ணப்பத்தில் எழுதியுள்ளீர்கள், ஜெராக்ஸ் காப்பி இணைக்கவில்லை என்று கூறி உறுப்பினராகச் சேர்க்காமல் வைத்திருக்கிறார்கள். உண்மையில் ஜெராக்ஸ் இணைக்க வேண்டும் என்று சொல்லப்படவேயில்லை. ஒருவேளை புத்தக விற்பனையாளர்களை சேர்த்தாலாவது தங்களின் நூல்களை விற்க உதவுவார்கள், பதிப்பாளர்களைச் சேர்த்து தேவையில்லாமல் போட்டிக்கு வழிவகுப்பானேன் என்று நினைத்தார்களோ என்று நானாக நினைத்துக் கொண்டேன். ஆனால் உண்மையும் அதுதான் என்று இப்போது மற்றொரு நண்பர் மூலம் தெரியவந்தது. வாழ்க ஜனநாயகம்! என்ன சொந்தக் கதையைப் பேசப் போய், எடுத்துக் கொண்ட விஷயம் மறந்துவிட்டதே. மேற்படி இரு விஷயங்களாலும் எப்படி வேலைப் பகிர்வு எப்படி படு ஸ்டிரிக்டாக கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைப் பார்த்தோமல்லவா? இதனால் பொது மக்களாகிய நமக்கு சிரமம் ஏற்படுவது ஒரு புறமிருக்கட்டும். சில சமயங்களில் அது அவர்களுக்கே சிக்கலை உண்டு பண்ணிவிடுகிறது. என் நண்பர் ஒருவர், அரசுத் துறையில் இருப்பவர், அன்று அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டியிருந்ததால் என்னை சென்னை சென்ட்ரலுக்கு வந்து சந்திக்கச் சொன்னார். நானும் சென்று அவரை ரிசர்வேசன் பில்டிங்கின் முதல் தளத்தில் சந்தித்தேன். அப்போது அவர் ஈ.க்யூ. கோட்டாவில் டிக்கெட் இருப்பதால் அதனை பெற வேண்டி அவசர அவசரமாக விண்ணப்பம் பூர்த்தி செய்து கொண்டிருந்தார். இரண்டு மூன்று முறை பாரத்தை கிழித்து கிழித்து எழுதி அவர் தடுமாறுவதைப் பார்த்த நான் வாங்கி ஒரு நிமிடத்தில் அதனைப் பூர்த்தி செய்து கொடுத்தேன். அவருக்கு ஆச்சரியம். இருந்தாலும் அதனைக் காட்டிக் கொள்ளாமல், சிரித்துக் கொண்டே சொன்னார், “டிரெயின் ரிசர்வேஸன் செய்யறதெல்லாம் எங்க ஆபீஸ் பியூன் வேல. நான் காசு கொடுக்கறதோடு சரி.” வேலைப் பகிர்வின் சிறந்த உதாரணம். |