உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் 7 இந்த வாரம் அரசு ஊழியர்கள் சீக்கிரமே மனதளவில் மூப்பு அடைந்து விடுகிறார்களா இல்லையா என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம். பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஐம்பது வயதை அடைந்ததுமே ஓய்வைப் பற்றி எண்ண ஆரம்பித்து விடுகிறார்கள். அது அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து அவர்கள் உண்மையில் ஓய்வு பெற்றதும் பூரணத்துவம் அடைந்துவிடுகிறது. பெரும்பாலான ஊழியர்கள் ஓய்வுக்காலத்தில் வேறு எந்த வேலையையும் செய்யாமல் பூரண ஓய்வாகவே கழிக்கிறார்கள். ஆனால் வேறு எந்தத் துறையில் வேலை செய்பவர்களோ, அல்லது சொந்தத் தொழில் செய்பவர்களோ, தங்கள் உடல் ஒத்துழைக்கும் வரை தொடர்ந்து தங்களின் வேலையைச் செய்கிறார்கள். அல்லது தங்கள் உடல் தகுதிகேற்ப தாங்கள் செய்யும் வேலையை மாற்றிக் கொள்கிறார்கள். ஏன் அரசு ஊழியர்களால் தாங்கள் ஓய்வு பெற்றதும், தங்கள் உடல் நலத்திற்கேற்ற வேறு ஒரு வேலையைச் செய்ய இயலாமல் போகிறது? இதற்கு முக்கியக் காரணம், அவர்கள் மனம் தான். அவர்கள் ஐம்பது வயதிலிருந்தே தங்கள் மனதுக்கு போதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ‘நான் அதிகம் உழைத்துவிட்டேன். ஆகவே ஓய்வு அவசியம்’ என்று அவர்கள் மனம் நினைக்க நினைக்க, அதற்கேற்ப உடலும் ஓய்வை நாடத்துவங்கி விடுகிறது. “நீங்கள் ஓய்விற்குப் பிறகு என்ன செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள்” என்று ஐம்பது வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு அரசு ஊழியரிடம் சென்று கேட்டுப் பாருங்கள், அவர்களின் பதில் பெரும்பாலும், “என்ன செய்யறது, உழைச்ச வரையிலும் போதும்னு, ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதான்.” எதையாவது செய்துதான் பார்ப்போமே என்ற தேடலைக் கூட செய்ய அவர்கள் மனம் விரும்ப மறுக்கிறது. மனம் விரும்பாத எந்த செயலைச் செய்ய உடல் ஒத்துழைக்கும்? வயதான காலத்தில் மனதில் விருப்பம் இருந்தால் தான் எந்த ஒரு சிறிய செயலையும் செய்ய இயலும். ஏனெனில் அவர்களின் உடல் முதுமை காரணமாக ஒத்துழைக்க மறுக்கின்ற சூழ்நிலையில் மனத்தின் தூண்டுதலின் பேரிலேயே அவர்கள் எந்த வேலையையும் உற்சாகமாக செய்ய இயலும். அந்த மன தூண்டிதல் இல்லாத நிலையில் அவர்கள் வேறு என்ன செய்வார்கள். இத்தகு நிலையை அவர்கள் அடைவதற்கு முக்கிய காரணம் ஒரே வேலையைத் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் செய்து வருவதால் எற்பட்ட மனத்தளர்ச்சியேயாகும். பெரும்பாலான அரசு ஊழியர்கள் தங்களின் பதவிக் காலத்தில் இரண்டு அல்லது மூன்று பதவி உயர்வுகளை மட்டுமே அடைகிறார்கள். அதுவும் கூட இல்லாமல் ஒரே பதவியில் நீடிப்போரும் உண்டு. அப்படியே பதவி உயர்வுகளைப் பெற்றாலும், பல நேரங்களில் செய்யும் வேலைகளில் அதிக வித்தியாசம் இருக்காது. இதனால் பதவியின் பெயரும், சம்பளமும் மட்டுமே மாறுகிறதே ஒழிய செய்யும் வேலை என்னவோ ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இதனால் அவர்கள் மனத்தளர்ச்சி அடைவதை தடுக்க இயலாமல் போகிறது. அதே போல் ஓய்வு பெறும் வயதை அடைவோருக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகளோ, பயிற்சி வகுப்புகளோ, அரசு ஊழியர்களுக்கு இல்லை. அதுமாதிரி நிகழ்ச்சிகளை அரசோ, அல்லது அரசு ஆதரவில் தனியார் நிறுவனங்களோ அவர்களுக்கு நடத்தி, அவர்களின் மனதை மாற்றி, அவர்களை நெறிப்படுத்த வேண்டும். உண்மையில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களில் பலர் நல்ல உடல் நலத்துடன் தான் இருக்கிறார்கள். அவர்களின் அனுபவ அறிவை பல்வேறு வகையில் திறம்பட உபயோகப்படுத்தலாம். ஆனால் இதற்கெல்லாம் அரசுக்கு எங்கே நேரமிருக்கிறது. அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக வைக்கலாமா அல்லது 55 ஆக குறைக்கலாமா அல்லது 60 ஆக உயர்த்தலாமா? இதைத் தவிர ஊழியர் ஓய்வுக் காலம் குறித்து அரசு எதுவுமே சிந்திப்பதில்லை. ஓய்வு பெறும் வயது வந்ததும் அரசு ஊழியருக்கு சேர வேண்டிய பணத்தைக் கொடுத்து அவர்களை அனுப்புவதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக அரசு நினைக்கிறது. முன்பாவது அரசு ஊழியருக்கு பென்ஷன் கொடுத்துக் கொண்டிருந்தது, இப்போது சேரும் அரசு ஊழியர்களுக்கு அதுவும் கிடையாது. எனவே ஊழியரின் உழைப்பை வாங்கிக் கொண்டு, அவர்கள் ஓய்வு வயது வந்ததும் வீட்டுக்கு அனுப்புவதுடன் அரசு நிறுத்திக் கொள்கிறது. அவர்களின் ஓய்வுக் கால மறுவாழ்வு குறித்து சிந்தப்பதே இல்லை. எனவே அரசு ஊழியர்களை மட்டுமே குறை சொல்லி பயனில்லை. அரசு தான் அப்படி இருக்கிறதே, நாமாவது சிந்தித்து ஓய்வுக் காலத்தில் தங்களால் இயன்ற நல்லதொரு வேலையைச் செய்யலாமே என்று அரசு ஊழியர்களும் சிந்திப்பதில்லை. எல்லா ஊழியர்கள் அப்படித்தான் என்று சொல்லிவிடுவதற்கில்லை. ஒரு சில அரசு ஊழியர்கள் தங்கள் வேலை செய்த துறை சார்ந்த பணிகளை எடுத்து செய்கிறார்கள். சிலர் புதிய துறைகளைத் தேர்ந்தெடுத்து உற்சாகமாக உழைக்கிறார்கள். உண்மையில் அப்படி உழைப்பவர்கள் தான், ஓய்வு எடுப்பவர்களை விட அதிக காலம் நோய்நொடியின்றி வாழ்கிறார்கள். |