'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

8

     அரசு ஊழியர்களிடம் ஒரு வினோத குணம் உண்டு. அதாவது அவர்களின் குழந்தைகளும் அரசு ஊழியர்களாகத்தான் வரவேண்டும் என்று கட்டாயம் எதிர்பார்ப்பார்கள். இதில் என்ன விநோதம், ஒரு டாக்டர் தன் மகனை டாக்டராக ஆக்கவே விரும்புவார், ஒரு வக்கீல் தன் மகனை வக்கீல் ஆகவே ஆக்க விரும்புவார், ஒரு இஞ்சினியர் தன் மகனை இஞ்சினியர் ஆக்கவே விரும்புவார். அப்புறம் அரசு ஊழியர் தம் மகனையோ மகளையோ அரசு ஊழியர் ஆக்க விரும்புவதில் என்ன குறை கண்டாய் என்று நீங்கள் கேட்கலாம்.

     பிரச்சனை என்னவென்றால் எந்த ஒரு அரசு ஊழியரும் தம் மகனை தாம் வேலை செய்யும் அதே துறையில் வேலை பார்க்க அனுமதிக்கவே மாட்டார். உதாரணமாக வருவாய்த் துறையில் இருப்பவர் தன் குழந்தைகளை அந்தத் துறையைத் தவிர பிற துறைகளைத் தான் தேர்ந்தெடுக்கச் சொல்வார்கள். காவல்துறையில் இருப்பவர் தன் மகனை வேறு துறையைத் தான் தேர்ந்தெடுக்கச் சொல்வார். ஆசிரியராக இருப்பவர், தன் மகனையோ மகளையோ கட்டாயம் வேறு துறையைத் தான் தேர்ந்தெடுக்கச் சொல்வார். அதற்கு அவர்கள் பல காரணங்களைக் கூறலாம். ஆனால் இதற்கு உயர் பதவியிலிருக்கும் அரசு ஊழியர்கள் மட்டுமே விதிவிலக்கு.

     அந்த அரசு ஊழியரின் மகனோ மகளோ அவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர் வேலை பார்த்த துறையைத் தவிர பிற துறை ஏதாவதொன்றில் வேலை தேடிக்கொண்டால், அவரின் ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடும்.

     ஆனால் பிரச்சனை எப்போது ஆரம்பிக்கும் என்றால் அந்த அரசு ஊழியரின் மகனுக்கோ மகளுக்கோ (பெரும்பாலும் மகன்) அரசுத் துறையில் வேலை கிடைக்காவிட்டாலோ, அல்லது அவர் வேலை பார்த்த அதே துறையில் வேலை வாங்கி விட்டாலோ அவ்வளவு தான்.

     ஒரு வேளை அதே துறையில் வேலை வாங்கிவிட்டால், ஒவ்வொரு நாளும் அவரின் மகனுக்கோ அல்லது மகளுக்கோ நரக வேதனை தான். தான் வேலை பார்த்த காலத்தோடு ஒப்பிட்டு ஒவ்வொரு விஷயத்திலும் மூக்கை நுழைப்பதோடு, அவர்களின் குழந்தைகளை மட்டம் தட்டும் வேலையை மட்டும் கனகச்சிதமாகச் செய்வார்கள். ஏதோ இவர்கள் வேலை செய்த நாட்களில் இவர்கள் அதிமேதாவியாக நடந்து கொண்டது போலவும், அவர்களின் குழந்தைகள் தான் முட்டாள்தனமாக நடந்து கொள்வது போலவும் இருக்கும் இவர்களின் பேச்சு.

     அதுவே அரசு வேலை கிடைக்காவிட்டாலோ, முடிந்தது கதை. அந்தக் குழந்தைகள் எதற்குமே லாயக்கு இல்லாதது போல் இருக்கும் அவர்களின் பேச்சு. அதுவும் ஒரு குழந்தைக்கு கிடைத்து மற்றொரு குழந்தைக்கு அரசு வேலை கிடைக்காவிட்டாலோ, அல்லது அவரின் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் (அவரும் அரசு வேலை பார்த்தவர்) மகனுக்கோ மகளுக்கோ அரசு வேலை கிடைத்து விட்டாலோ, வேலை கிடைக்காத அந்த குழந்தையின் எதிர்காலமே இருண்டு விட்டது போல் புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.

     அரசு ஊழியர்களைப் பொறுத்த வரையில் தம் மகனோ மகளோ அரசு ஊழியர் ஆகாவிட்டால் அவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்றே தான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். இன்றைய கணினி யுகத்திலும் கூட இன்னமும் கணிப்பொறி வேலையை விட அரசு வேலைதான் சிறந்தது. குறைந்த சம்பளம் என்றாலும் அது தான் நிரந்தரம் என்று தான் பலரும் நினைக்கிறார்கள்.

     அப்படி அரசு வேலையில் இல்லையென்றால் அவன் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றிருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களை மதிப்பார்கள். இவ்விரண்டையும் விட்டு, ஒருவேளை அவரின் மகன் தனியாக தொழில் செய்தாலோ அல்லது வியாபாரம் செய்தாலோ அவர்களுக்கு அவன் இரண்டாந்தர குடிமகனாகவே தோன்றுகிறான். (அவன் அவர்களுக்கு ஒரே மகனாக இருந்தாலும் கூட). அரசு வேலை செய்யும் அவனையொத்த உறவினர் பையனையோ பெண்ணையோ உயர்த்தி பேசி அவனைத் தாழ்த்தி ஒவ்வொரு நாளும் குத்திக் காட்ட பெற்றோராகிய அவர்களே முனைப்போடு இருப்பார்கள். மற்றவர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?

     நடுத்தர வர்க்கத்தினரைப் பொறுத்தவரை, ஒரு காலத்தில் (எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும்) அரசு வேலை அதுவும் வங்கி வேலையோ கல்லூரி பேராசிரியர் வேலையோ என்றால் அவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நிலையே எங்கும் நிறைந்திருந்தது. ஆனால் கணினி நிறுவனங்களின் படையெடுப்பிற்குப் பிறகு இப்போது கணிப்பொறித் துறையில் வேலை பார்ப்பவர் தான் அதிக சம்பளம் வாங்குபவராக இருக்கிறார். ஆனால் இந்தக் காலத்திலும் எந்த அரசு ஊழியரையும் கேட்டுப் பாருங்கள், இப்போதும் அவர், கணினித் துறையைக் கூட அரசுத்துறைக்கு கீழே தான் வைத்துப் பேசுவார். அதிகமாக தோண்டித் துருவிக் கேட்டால், கணினித் துறையில் என்ன சம்பளம் வந்தால் தான் என்ன. அதை விட அதிகமாக அரசுத் துறையில் ‘இதர வழிகளில்’ சம்பாதிக்க முடியுமே? அது கணினித் துறையில் முடியுமா எனத் தனது பிரம்மாஸ்திரத்தை வீசுவார். இந்த ‘இதர வருமான பிரம்மாஸ்திரத்திர’த்திற்கு முன்னால் யார் தான் எதிர்த்து பேச முடியும்?

     அரசு ஊழியர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தான் உயர்ந்தவர்கள். ஆள்பவனுக்கு அடுத்து அவர்கள் தான். மற்றவர்களெல்லாம் அவர்களின் அடிமைகள் தான்...



'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13