'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

9

     அரசு ஊழியர்களின் பொருளாதார சிந்தனைகள் குறித்து இந்த வாரம் கவனிப்போம். பெரும்பாலும் அரசு ஊழியர்கள் முதலீடு என்று வரும்போது பலன் குறைவானதாக இருந்தாலும், பாதுகாப்பான முதலீடுகளையே விரும்புகிறார்கள். இதில் என்ன குறை? இது உண்மையில் நல்லதுதானே என கேட்கிறீர்களா? உண்மைதான். இந்த பாதுகாப்பு உணர்வுடன் கூடிய முதலீட்டுக் கொள்கை நல்லதுதான். ஆனால் அவர்கள் எந்த எந்த விகிதத்தில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள் என்பதில் தான் சிக்கல்கள் உள்ளன.

     அரசு ஊழியர்களின் முதல் சேமிப்பு அஞ்சலகங்களில் இருந்துதான் துவங்குகிறது. அஞ்சலகம் அளிக்கும் அனைத்து வைப்பு நிதித் திட்டங்கள் தான் அவர்கள் மிகவும் விரும்புவை. அடுத்து அவர்களின் முதலீடு வங்கி வைப்பு நிதித் திட்டங்கள். அடுத்து அவர்கள் முதலீடு செய்வது பொன்னிலும் மண்ணிலும். பெரும்பாலான அரசு ஊழியர்களின் முதலீடுகள் இத்துடன் நிறைவடைந்து விடுகின்றன.

     ஒருவரின் வாழ்க்கைக்கு இவைகள் போதாதா என்றால் போதும் என்பதுதான் என்னுடைய பதிலும். ஆனால் வாழ்க்கையை சாதாரணமாக வாழ்வதற்கும், அதையே சற்று சவால்களை எதிர்கொண்டு முன்னேற்றம் அடைந்து, வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதும், நமது குறிக்கோலாக இருக்கும் பட்சத்தில், மேலே சொன்னவை மட்டும் போதாது.

     அதற்காக உங்களை அதிக வட்டிக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் பைனான்ஸ் கம்பெனிகள் பக்கம் போகச் சொல்லவில்லை. அதற்கு பதிலாக பங்கு சந்தையிலும், பரஸ்பர நிதியங்களிலும் முதலீடு செய்யலாமே.

     இப்போது இங்கே ஒன்றை கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும். பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு, பங்கு சந்தையிலும் முதலீடு செய்வது என்பது சூதாட்டத்தில் ஈடுபடுவது போன்றது என்ற எண்ணம் இன்றளவும் இருக்கிறது. அதனால், அவர்களுடைய மகனோ மகளோ மிகவும் புத்திசாலித்தனமாகவும் பாதுகாப்பாகவும், சிறிய அளவில் தங்கள் பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் கூட அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

     அதற்கு ஒருவகையில் அந்தக் காலங்களில் வந்த திரைப்படங்களும் ஒரு காரணம் என்றே நான் கூறுவேன். அந்தப் படங்களில் ஒரு பணக்காரனை ஏழையாக மாற்ற வேண்டுமானால் உடனே அவன் பங்கு வாங்கி வைத்திருந்த கம்பெனி திவாலாகிவிட்டதாகவும், அதனால் அவன் ஒரே நாளில் பஞ்சப் பரதேசி ஆகிவிட்டதாகவும் காட்டிக் காட்டியே மூளைச் சளைவை செய்து விட்டார்கள். உண்மையிலும் அப்படி சிலர் ஆகி இருக்கலாம். ஆனால் அதற்காக எல்லோரும் அதே போல் ஆக வேண்டும் என்று இல்லையே. ஒரு வேளை பங்கு பத்திரங்கள் பேப்பர் வடிவில் இருந்த காலத்தில் வேண்டுமானால், பங்கு வாங்கியதையே மறந்து போயோ, அல்லது பங்கு பத்திரங்களை தொலைத்தோ, நஷ்டம் உண்டாகியிருக்கலாம்.

     இப்போது காலம் மாறிவிட்டது. டீமேட் வடிவில் இப்போது பங்குகள் வந்துவிட்ட பிறகு, அதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் பிற சந்தை காரணிகள் மாறவில்லை. அதற்காக முடிந்தவரை நாமும் பாதுகாப்பாக, நம்மால் முயன்ற சிறு அளவு தொகையை, நம்பிக்கையான நிறுவனங்களில் முதலீடு செய்வதில் தவறில்லையே.

     பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள், எந்த காலத்திலும் தங்களின் சம்பாத்தியம் அல்லது சேமிப்பு முழுவதையும் முதலீடு செய்யக் கூடாது. 25% முதல் 50% வரை மட்டுமே முதலீடு செய்யவேண்டும். அதுவும் ஒரே நிறுவனத்தில் அல்லது ஒரே துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் ஒரு துறை சார்ந்த பங்குகள் விலை குறைந்தாலும், மற்ற துறை சார்ந்த பங்குகள் நமக்கு தொடர்ந்து லாபம் கொடுக்கும்.

     அட என்ன திடீரென்று முதலீட்டு ஆலோசகராகிவிட்டீர்களா? என்று கேட்கிறீர்களா, அதெல்லாம் இல்லை. அரசு ஊழியர்கள், ஏன் தங்களின் முதலீட்டு வரம்பை விரிவாக்குவதில்லை என்பது குறித்து ஆராய்ந்த போது, கிடைத்த தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. அரசு ஊழியர்கள், முதலீடு செய்யும் போது, பெரும்பாலும் தன் சக ஊழியரின் ஆலோசனையையே அதிகம் நம்புகிறார்கள். ஒரு அலுவலகத்தை எடுத்துக் கொண்டால் அதில் பங்கு சந்தை போன்றவற்றில் புதிதாக முதலீடு செய்பவர் ஓரிருவர் மட்டுமே இருப்பார்கள். அதனால் அவர்கள் அதைப் பற்றிச் சொன்னாலும் மற்றவர் அதை மதிப்பதில்லை. இதனால் காலப்போக்கில் அவர்களும் பிறரிடம் அது குறித்து சொல்வதேயில்லை. ஆனால் இவர் இத்தகைய முதலீடுகள் மூலம் அதிகம் சம்பாதிப்பது தெரிந்து எப்போதாவது சிலர் வந்து அப்புதிய முதலீட்டு இரகசியங்கள் குறித்து கேட்கும் போது, இவர் முன்காலத்தில் வலிய சென்று இது பற்றி கூறிய போது அவர்கள் தம்மை அலட்சியம் செய்ததை எண்ணிக் கொண்டு, இப்போது அது குறித்து தெரிவிக்க மறுத்து விடுகிறார். அல்லது கேட்பவர் முதலீடு செய்யாத வகையில் கூறுகிறார்.

     சரி இப்போது எனக்குத் தெரிந்த ஒரு அரசு ஊழியர் தன் காலத்தில் வாங்கி வைத்திருந்த ஒரு பங்கு விவரம் குறித்து காண்போம். அவர் வேலை செய்த அரசு நிறுவனம் பங்குகளை வெளியிட்ட போது அவரும் அவற்றில் 1000 பங்குகளை ஒவ்வொன்றும் ரூ.10 என்ற விலையில் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்து வாங்கி வைத்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் முதன்முதலில் 20 ஆயிரத்தை தொட்ட போது அந்நிறுவன பங்கு ஒன்று ரூ.140 என்ற விலையில் விற்றது. அப்போது நான் அவைகளை விற்று விடும்படி அவரிடம் கூறினேன். ஆனால் அவர் அதை எப்படி நான் விற்பது, அது என் நிறுவனம். அதன் ஞாபகார்த்தமாக வைத்துள்ளேன். அதனால் அதனை விற்க மாட்டேன். அப்படியே விற்பதானால் அதன் விலை இன்னும் கூடி ரூ.200 என்ற நிலை வரும்போது வேண்டுமானல் விற்பேன் என்றார். அது ரூ.150 வரை ஏறி விட்டு, பின் அடுத்து வந்த அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியில் ரூ.70க்கு வந்து விட்டது. அப்போது என்னிடம் அவர் ‘நீ சொன்ன போதே விற்றிருக்கலாம்’ என மிகவும் வருத்தப்பட்டு, ‘கண்டிப்பாக அடுத்த முறை நீ சொன்ன விலை வந்தால் விற்று விடுகிறேன்’ என்றார். அடுத்த முறையும் அந்த விலை வந்தது. இப்போதும் அவர் விற்கவில்லை. இப்போதும் அவர் ரூ.200 வரை உயரும் என்று காத்திருந்தார். இப்போது மீண்டும் ரூ.90க்கு சென்று விட்டது.

     என்னத்தைச் சொல்ல... பங்கு சந்தையில் முதலீடு செய்யும் ஒரு சில அரசு ஊழியர்களும் இப்படி இருந்தால், எப்போது தான் அவர்கள் லாபம் சம்பாதிப்பார்கள்?



'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13