உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சிலையும் நீயே சிற்பியும் நீயே 16. “குறை கூறாதீர்கள்” “நான் பிறரைப் பற்றிப் பேசும் போது அவர்களின் நல்ல பண்புகளை மட்டும் எடுத்துச் சொல்வேன். அவர்கள் குறைகளைப் பற்றிப் பேச மாட்டேன்” என்கிறார் பெஞ்சமின் பிராங்க்ளின். உங்கள் வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்ட போது பிராங்க்ளின் கூறிய பதில் இது. சாதனையாளராக உங்களை உயர்த்திக் கொள்ள விரும்பும் நீங்கள் “இன்று முதல் யாரையும் குறை கூறுவதில்லை” என உங்களுக்குள் ஒரு உறுதி எடுத்துக் கொள்ளலாம். குறை கூறுதல் என்றால் என்ன? ஒருவரிடம் எத்தனையோ நற்பண்புகள் இருக்க அதை மட்டும் நாம் எடுத்துக் கொண்டு அவர் இருக்கும் நேரத்திலோ, இல்லாத நேரத்திலோ சுட்டிக் காட்டிப் பேசுவது, பொதுவாகவே ஒருவரிடம் குறைபாடு கண்டுபிடிப்பது நம் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகிவிட்டது. எதையும், ஒரு பொருளையோ, ஒரு நபரையோ அடையாளம் காட்ட அவர் குறையையே எடுத்துக் கொள்கிறோம். “அந்த வழுக்கைத் தலைக்காரர்”, “அந்த குட்டைக் கத்திரிக்காய் பொண்ணு”, “கரேல்னு வருவாரே, அவர் தான்”, “அந்த சிடுமூஞ்சி” - இப்படியே அடையாளம் காட்டுகிறோம். இது மட்டுமா? ஒருவரைப் பற்றிக் குறிப்பிடும் போதே அவரது மைனஸ் பாயிண்ட்டை சுட்டிக் காட்டிப் பேசுவதே சிலருக்கு வழக்கம். “அவனா?... பஞ்சுவாலிட்டீன்னா... கிலோ என்ன விலைன்னு கேட்பான்”. “அவளா... எச்சற் கையாலே காக்கா விரட்ட மாட்டாள்.” “அவன் கிட்டே சொல்லிட்டியா? அவ்வளவுதான் சரியான செய்தி ஒலிபரப்புத்துறை.” இப்படி அடுத்தவரது குறையை சுட்டிக்காட்டிப் பேசுவது சிலருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. “சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில் மற்ற மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா” எனும் கவிஞர் கண்ணதாசனின் வரிகளை நினைவு கூறுங்கள். நமக்குள் உள்ள குறைகளைத் தேடிக் கண்டுபிடித்து களைபிடுங்குவது போல நம்மைவிட்டு அந்தக் குறைகளை நீக்கிக் கொள்ள வேண்டும். களை போன்ற தீய பண்புகளைக் களையக் களைய சாதனைச் செடி செழித்து வளர ஆரம்பிக்கும். யார் யார் அடுத்தவரைக் குறை கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம். - எதிலும் நிறைவு காணாதவர்கள். திருப்திப் படாதவர்கள். எதிரே என்னதான் நிறைவாக ஒரு பொருளை நிறுத்தினாலும் அதில் குறையைத் தேடிக் கொண்டிருப்பார்கள். - குறை கூறுவதையே வருடக்கணக்காகப் பழக்கத்தில் கொண்டு விட்டவர்கள். ஒரு நாளைக்கு நூறு குறை கூறிக் கொண்டு இருக்கிறோம் என்பதையும் புரியாமல் இருப்பவர்கள் இவர்கள். - தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள், தனது தாழ்வு மனப்பான்மை மற்றவர்களுக்குத் தெரிந்து விடுமோ என்கிற பயத்தில் முந்திக் கொண்டு மற்றவர்களைக் குறை கூறுவார்கள். - மற்றவர்கள் முன் தன் அதிகார தோரணையைக் காட்ட வேண்டும் என்று நினைக்கும் வர்க்கமும் சத்தம் போட்டு அடுத்தவர் குறையை சுட்டிக் காட்டிப் பேசுவார்கள். - வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பெரிய இழப்பிற்கு ஆளாகி இருப்பவர்களும் தன் சோகத்தை மறைக்க, ஆற்றமையால் மற்றவர்களைக் குறை கூறிக் கொண்டிருப்பார்கள். - பொதுவாக படிப்பறிவோ, உலக அனுபவமோ, கடும் உழைப்போ இல்லாமல் வாழ்க்கையில் எவ்விதப் பிடிப்பும் இல்லாமல் உழன்று கொண்டிருக்கும் மனிதர்களும் தன் குறையை மறக்க மற்றவர்கள் குறை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். - தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று பேசும் அகம்பாவம் பிடித்தவர்களும் மற்றவர்களைக் குறை கூறிப் பேசுவதில் இன்பம் காண்பார்கள். - சுயநலம் மிக்க சிலர் தனக்கு நல்லது செய்யாத அனைவரையும் குறை கண்டுபிடித்து உறவினர், நண்பர்கள் மத்தியில் திட்டித் தீர்ப்பார்கள். - சில தீய பழக்க வழக்கங்கள் உள்ளவர்களும் தன் தவறை மறைக்க மற்றவர்கள் மேல் குற்றம் கண்டுபிடித்து குறை கூறிக் கொண்டு இருப்பார்கள். இப்படியாக குறை சொல்லும் குறை உங்களுக்கு இருக்கிறதா? உங்களது இந்தக் குறையை நீக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று பார்ப்போமா? - மற்றவர்களைப் பற்றிக் குறை கூறுவது உங்கள் சுபாவமானால் முதலில் நீங்கள் சொல்வதை ஏதோ ஒரு ஆர்வத்தில் கேட்கும் மற்றவர்கள் போகப் போக இந்த சுபாவம் உள்ள உங்களை வெறுக்க ஆரம்பிப்பார்கள். “நல்லதே இவன் கண்ணிலே படாது. எப்பப் பார்த்தாலும் குறை கூறிக்கிட்டு இருப்பான்” என்று உங்களை சற்று உதாசீனப்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். மற்றவர்கள் மத்தியில் மதிப்பு உங்களை விட்டு மதிப்பாக விலகிக் கொள்ளும். - குறை கூறுவதையே வழக்கப்படுத்திக் கொண்டிருந்தால் மற்றவர்களைப் பற்றிய நல்ல விஷயங்கள், நற்பண்புகள் உங்கள் கண்ணில் படாமல், காதில் விழாமல் போய்விடும். ஒரு மனிதனிடம் ஒரு குறை இருந்தால் நாலு நிறை பண்புகள் இருக்கலாம். ஏன் நற்பண்புகள் தெள்ளத் தெளிவாகத் தெரிய குறையை லென்ஸ் போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? - மற்றவர்களிடம் குறை காணும் மனது எப்போதும் தனக்குள்ளே ஒரு நிறைவைக் கண்டு விட முடியாது. நிறைவு காணாத நேரத்தில் உங்கள் மனம் அமைதி இழந்து தவிப்பது இயற்கையே. - ஒருவர் இல்லாத நேரத்தில் மற்றவர்களிடம் அவரைப் பற்றிக் குறை கூறுவது உங்கள் சுபாவமானால் மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் சுபாவத்தினால் நல்ல நண்பர்களது நட்பை இழப்பது இயற்கை. அவர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றியும் நீங்கள் அவதூறாகப் பேசக் கூடும் என்கிற பய உணர்வால் உங்களை விட்டு வில ஆரம்பித்து விடுவார்கள். - மற்றவர்களைக் குறை கூறிப் பேசும் போது உங்களை அறியாமல் மனதில் ஒரு எரிச்சலும், வெறுப்புணர்ச்சியும் ஏற்படுவது இயற்கை. நாளடைவில் உங்களது இந்தப் பழக்கத்தால் இரத்த அழுத்தம் (பி.பி.) சர்க்கரை நோய் (டயாபடீஸ்) குடற்புண் (அல்ஸர்) மூட்டுநோய் (ஆர்த்தரைடிஸ்) போன்ற நோய்கள் வர வழிவகுத்தவர்கள் ஆகிறீர்கள். - ‘காலம் பொன்னானது கடமை கண்ணானது’ அல்லவா? கிடைக்கும் நேரத்தை உங்கள் முன்னேற்றத்திற்கான உழைப்பில் செலவிடப் பாருங்கள். அதைவிட்டு மற்றவரைப் பற்றிக் குறை கூறி உங்கள் நண்பரிடம் பேச, அவரும் ரொம்ப சுவாரஸ்யமாய் அவர் பங்கிற்கு ஏதாவது பேச, வீணாவதென்னவோ பொன்னான நேரங்கள் தான். கடந்துவிட்ட நிமிடத்தை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. இழந்தது இழந்ததுதான். ஒவ்வொரு நிமிடத்தையும் ஆக்கப்பூர்வமான வேலைகளில் செலவிடுவதை விட்டுவிட்டு ஏன் இந்தக் குறை கூறல் புராணம்? - ஒருவரது குறையை மற்றவரிடம் பேசும் போது கேட்டுக் கொண்டிருக்கும் நபர் கோள் சொல்லும் பேர்வழியாக இருந்தால் உங்கள் பேச்சு அப்படியே அவர் காதுகளை எட்ட ரொம்ப நேரம் ஆகாது. பிறகென்ன உறவு, நட்பு இவற்றிற்குள் விரிசல்கள் தான் பிளவுகள்தான். - நீங்கள் என்றோ குறை சொல்லிப் பேசிய பேச்சு எதிராளியை எப்படியோ எட்டிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு நேரம் உதவி, உபகாரம் என்று அவரிடம் போகும் போது நீங்கள் அன்று அவரைப் பற்றி பேசிய வார்த்தைகள் அவர் மனத்தில் நிழலாட நீங்கள் கேட்கும் உதவி நிச்சயமாக மறுக்கப்படலாம். உங்களது இந்த நிலைக்கு வேறு யாரும் காரணமல்ல. உங்கள் குறை கூறும் சுபாவமே காரணம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். குறை கூறிப் பேசுவது சிலருக்குப் பழக்கமாக இருந்து சுபாவமாகவே மாறி என்னதான் கண் எதிரே அழகான் அபொருள் இருந்தாலும் அதில் குறையைத் தேடுவார்கள். இதை விளக்க ஒரு சுவாரஸ்யமான குட்டிக்கதை உண்டு. ஒரு சமயம் ஒரு அரண்மனையில் ராஜா ஒருவர் பொம்மைக் கலைஞர்களை ஆதரிப்பதற்காக அத்தனை பொம்மைக் கலைஞர்களையும் வரச் செய்து, பொம்மைகள் செய்யச் சொல்லி கண்காட்சி விற்பனைக்கு ஏற்பாடு செய்திருந்தார். நிறையக் கலைஞர்கள் விதவிதமாக வண்ண வண்ண பொம்மைகள் பல செய்திருந்தனர். பறவைகள், மிருகங்கள் எனப் பலரகப்பட்ட பொம்மைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சியைப் பார்க்க மக்கள் திரளாக வந்திருந்தனர். அதில் ஒரு விமர்சகனும் இருந்தான். அவன் எதிலும் குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மை உள்ளவன். ஒவ்வொரு பொம்மையைப் பார்த்த போதும் “இது நிறம் சரியில்லை” “இதன் முகம் சகிக்கவில்லை” “இந்த பொம்மையின் மூக்கு கோணலாக இருக்கிறது” “இதை யார் வாங்குவார்கள்?” என்றெல்லாம் விமர்சனம் செய்து கொண்டு இருந்தான். பொம்மைக் கலைஞர்கள் அனைவரும் தங்கள் பொம்மைகள் விலை போகாமல் அப்படியே இருந்து விடுமோ என்று கவலைப்பட்டனர். அந்த விமர்சகன் ஒரு இடத்திற்கு வந்து “இதோ இந்த மரக்கிளையில் இருக்கும் கிளி பொம்மையைப் பாருங்கள். இதன் மூக்கு கிளி மூக்கு போலவா இருக்கிறது? இதைக் ‘கிளி’ என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? கண்ணும் கிளியின் கண் போல இல்லை. பச்சை நிறமும் கிளிப்பச்சை நிறமாக இல்லை என்று குறைகளை எடுத்து விட்டுக் கொண்டிருந்தான். அப்போது அந்தக் கிளி இறக்கைகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு பறந்தது. இதுவரை அவன் குறை கூறிப் பேசியது “உயிருள்ள கிளியை” என்று தெரிந்ததும் கூடியிருந்த மக்கள் சிரித்தார்கள். விமர்சகனும் அவமானம் தாங்காமல் சென்று விட்டான். அதாவது குறை கூறும் மனது உள்ளவனுக்கு நிறைவானதே எதிரே இருந்தாலும், நிறைவு பெறாமல் குறையே தெரியும் என்பது புரிகிறதல்லவா? எனவே... இனிமேல் குறை கூறாதீர்கள். குற்றம் கண்டுபிடிக்காதீர்கள். இவ்வுலகில் குறை இல்லாதவர்கள் எவரும் இல்லை. குற்றம் செய்யாதவர்களும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ ஏதேனும் சிறு குற்றங்கள் செய்திருப்பார்கள். முதல் தமிழ் நாவலான “பிரதாப முதலியாரது சரித்திரம்” எனும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய நூலில் ஒரு அருமையான வாசகம் ஒன்று உள்ளது. அதாவது, “முட்டாள் செய்யும் குற்றம் அவனுக்கு மட்டும் தெரியாது உலகத்துக்கு எல்லாம் தெரியும். புத்திசாலி செய்யும் குற்றம் அவனுக்கு மட்டுமே தெரியும். உலகத்திற்குத் தெரியாது.” எனவே, யாரிடத்திலாவது குற்றம் குறைகள் இருந்தால், அவரை நீங்கள் திருத்தி நல்வழிபடுத்த விரும்பினால் அவரிடமே பக்குவமாக, பக்குவமான நேரத்தில் எடுத்துச் சொல்லுங்கள். அதைவிட்டு குறை கூறி, குறை கூறி, உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள். நிறையில் குறை காணும் இயல்பை விட்டு, குறையிலும் நிறையைத் தேடும் இயல்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் நிறைவைக் கண்டுபிடித்து, நிறைய நிறையப் பாராட்டுங்கள். உங்கள் நிறைகள் நிச்சயமாக உலகத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டு பாராட்டப்படுவீர்கள். சிலையும் நீயே சிற்பியும் நீயே : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
|