சிலையும் நீயே சிற்பியும் நீயே

20. “மாதா, பிதாவே குரு, தெய்வம்”

     “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியவில்லை, அதனால் தான் தாயை உருவாக்கினார்” என்பது பழமொழி. ஆம்... கடவுள் எவ்வாறு யாருடனும் ஒப்பிட முடியாத ஒப்புமை அற்றவரோ அதே போலத் தான் தாயும். தாய் அன்பும் அரவணைப்பும் யாருடனும், எதனுடனும் ஒப்பிட முடியாதது. இதை நாம் எல்லோருமே அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம், என்றாலும் நாமே தாயாக, தந்தையாக ஆகும் போது தான் தாயின் அருமையை முழுமையாக உணர்கிறோம்.

     “சிலையும் நீயே! சிற்பியும் நீயே!” தொடரை ஆர்வமாகப் படித்து, உங்களை நீங்களே திறம்பட செதுக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், உங்களை நீங்களே அறிந்து கொள்ள முடியாத மழலைப் பருவத்திலிருந்து, இன்று வரை உங்களை செதுக்கி ஆளாக்கிய உங்கள் மாதாவையும், பிதாவையும் நினைவு கூர்ந்து வணங்குவது அவசியம் அல்லவா?

     மாதா மட்டும் இன்னார்தான் பிதா என்று காட்ட முடியும். பிதா மட்டுமே இவர் தான் உனக்கு ஏற்ற குரு என்று சுட்டிக் காட்ட முடியும். குரு ஒருவரே நீ வணங்கத்தக்க தெய்வம் இது என்று உணர்த்த முடியும். இதைத்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிறோம். தவிர மாதா, பிதா இருவரும் நடைமுறை வாழ்க்கையில் நாம் பிறந்தது முதற் கொண்டே ஒவ்வொரு நாளும் நல்லது எது, தீயது எது, என்று குருவைப் போல் போதித்துக் கொண்டிருப்பதாலும் நாம் செல்ல வேண்டிய வாழ்க்கைப் பாதை இது என்று காட்டி, நாம் அந்தப் பாதையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளுக்கும் துணை அடியாக நம்முடனேயே நடந்து நம்மை வழிநடத்தி, நாம் வெற்றி பெற தெய்வத்தைப் போலவே நம்மை மனப்பூர்வமாக ஆசீர்வதிப்பதாலும் மாதா பிதாவே... குரு தெய்வம் என்று கொள்ளலாம் அல்லவா!

     “தாய்தான் கடவுள் என்று சிறு குழந்தைகளின் உதடுகளிலும் இதயங்களிலும் இருக்கின்றன” என்கிறார் அறிஞர் தாக்கரே.

     பிறந்து ஒரு சில நாட்களில் தாய்முகம் பார்த்து சிரித்து ஒரு சில மாதங்களில் தந்தை கரங்களுக்குத் தாவி, ஒரு சில வருடங்களில் தாயின் மடியிலும், தந்தையின் தோளிலுமாக மாறி மாறி வளர்ந்து, பள்ளிப் பருவத்தில் தாயின் அரவணைப்பிலும் தந்தையின் கண்டிப்பிலும் வளர்ந்து, கல்லூரி நாட்களில் தாயின் கண்காணிப்பிலும் தந்தையின் வழிநடத்துதலிலும் படித்து மணமாகி மற்றொரு ஆத்மார்த்த சொந்தம் உருவானதும் தாய் தந்தையரால் முழு மனதுடன் நெஞ்சம் நிறைய வாழ்த்தப்பட ஆசீர்வதிக்கப்பட்டு வாழ்க்கையைத் துவங்கும் நாம், நம்மில் ஒரு ஐம்பது சதவீதத்தினர் என்று கூட, சொல்லலாம். பின்னால் ஏனோ தாய் தந்தையரின் அருமையை நினைத்துப் பார்ப்பதில்லை. நினைத்துப் பார்த்தாலும் செயல்படுத்துவதில்லை. இன்று முதியோர் இல்லங்களும், ஆதரவற்றோர் இல்லங்களும் நிரம்பி வழிவதற்குக் காரணம் பொறுப்பற்ற பிள்ளைகளே, நன்றி கெட்ட வாரிசுகளே என்று ஆணித்தரமாகச் சொல்லலாம்.

     படிக்கும் காலத்தில் சொன்னபடிக் கேட்காமல் படிக்காமல் ஊர் சுற்றி, உருப்படாமல் போய், தனக்குத் தானே பாரமாக பிற்காலத்தில் தன்னைத்தானே சுமந்து கொண்டு வாழும் மகன், தன் தாயை, தந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறான்.

     படிக்கும் காலத்தில் நன்கு படித்து முதல் மாணவனாகத் தேறி, ஊர் உலகம் மெச்ச மேலைநாடுகளுக்குச் சென்று தானே மூழ்கித் தத்தளிக்கும் அளவிற்கு செல்வக் கடலில் மிதக்கும் மேல்நாட்டில் குடியேறிய மகனும், கூடவே வைத்துக் கொள்ள இயலாத நிலையில், விரும்பாத நிலையில் ஒரு தொகை செலவிட்டு ஒரு வசதியான முதியோர் இல்லத்தில் விட்டுவிடுகின்றான்.

     ஆக, வயதான காலத்தில் தாய் தந்தையரை அருகில் அமர்த்தி குழந்தைகளாக நினைத்துப் பேணிக் காப்பாற்றிய தலைமுறைகள் இப்போது இல்லை. இன்றைய தலைமுறையில் பிள்ளைகள் படிக்காமல் சீர் கேடான நிலையில் இருந்தால் வயதான பெற்றோர்களுக்கு அவர்களது இறுதிக் காலங்கள் ஆதரவற்றோர் இல்லங்களிலும், பிள்ளைகள் படித்து வசதியாக நல்ல நிலையில் இருந்தால் வயதான பெற்றோர்களின் இறுதிக்காலங்கள் அவரவர் வசதிக்குத் தகுந்தபடியான முதியோர் இல்லங்களிலும் கழிக்கப்படுகின்றன. மொத்தத்தில் அவர்கள் இறுதிக் காலங்களில் அனுபவிப்பது என்னவோ தனிமையைத்தான். ‘முதுமையில் தனிமை’ என்பது மிகவும் கொடுமையானது. அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது நன்கு புரியும்.

     இந்த தனிமைக் கொடுமையிலும் ஒரு ஆறுதலான மாறுதல் என்ன தெரியுமா? ஒரு பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் பிள்ளைகள் தங்களைத் தனிமையில் விட்டு விட்டார்களே என்று தங்கள் நிலை குறித்து வருந்தி மாய்ந்து மாய்ந்து வருத்தப்படும் பெற்றோர்கள். இப்போது பிள்ளைகள் நடவடிக்கைகளாலும், செய்கைகளாலும் மனம் வெறுக்கப்பட்டு அவர்கள் அருகாமையை விட தனிமையே மேல் என்றும், தங்களுக்காக இனிமேலாவது வாழலாம் என்றும் மனதளவில் ஒரு நிம்மதியை ஏற்படுத்திக் கொள்வதுடன் தங்கள் பிள்ளைகளின் செயலுக்காகக் கவலைப்பட்டு மாய்ந்து போவதில்லை.

     “தாயின் காலடியின் கீழே சொர்க்கம் இருக்கிறது” என்பது பழமொழி. இந்தப் பொன்மொழியின் அருமை புரியாமல் யார் யாரெல்லாம் பெற்றோர்களைப் பிற்காலங்களில் மதிக்காமல் இருக்கிறார்கள் என்று பார்ப்போமா?

     - தனக்கு இந்த உயிரையும் உடலையும் தந்த நடமாடும் தெய்வங்கள் தங்கள் பெற்றோர்களே என்று நினைத்துப் பார்க்காத ‘கீழ்நிலை மக்கள்’.

     - தாங்களாகவே சிந்திக்கும் திறன் இன்றி தங்கள் பெற்றோர் தங்களுக்காக செய்த நன்மைகளையும் தியாகங்களையும் மறந்துவிட்டு மனம் போன போக்கில் இருக்கும் ‘செய்நன்றி மறந்தவர்கள்’.

     - மணமாகி புதிதாக ஒரு ஆத்மார்த்த சொந்தம் ஏற்பட்டதும் அவர்கள் தவறாக சொல்வதைக் கேட்டுக் கொண்டு மூன்று மாத சொந்தத்தில் முப்பது வருட இரத்த பந்தத்தையே பகைத்துக் கொள்ளும் ‘சுயநலவாதிகள்.’

     - படிப்பில் ஆர்வம் உள்ள தங்களை, நன்கு படிக்க வைத்து ஆளாக்கி அவையத்து முந்தி இருக்கச் செய்யாத பெற்றோரையும் குழந்தைகள் பிற்காலத்தில் மதிக்காமல் நடந்து கொள்கிறார்கள்.

     - தீய நண்பர்கள் சகவாசத்தால் குடிப்பழக்கம், போதை மருந்துப் பழக்கம் போன்றவற்றிற்கு ஆளானவர்களும், அதிலும் தங்களை மாற்றிக் கொள்ள எண்ணம் இல்லாதவர்களும் பெற்றோர்களையும், அவர்கள் அறிவுரையையும் மதிப்பதில்லை.

     இப்படியாக பல்வேறு காரணங்களுக்காக பிள்ளைகள் பெற்றோர்களைப் புறக்கணிக்கிறார்கள். தனிமைப்படுத்துகிறார்கள். உங்களில் யாராவது இந்தப் பட்டியலில் இருந்தால் அவர்களுக்காக இதோ சில வார்த்தைகள்:

     - உங்கள் வாழ்க்கைத் தரம் மென்மேலும் உயர வேண்டுமானால், நீங்கள் ஒரு நல்ல நிலைக்கு வந்து சமுதாயத்தினர் மத்தியில் ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டுமானால், முதலில் நீங்கள் உங்களை ஈன்றெடுத்த தாய் தந்தையர் உங்களைப் பெற ‘என்ன தவம் செய்தோமோ!’ என்று நினைக்கும்படியாக அவர்கள் மனதில் ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும். தாய் தந்தையரைப் பேணிய எந்த மகனோ, மகளோ உருப்படாமல் போனதில்லை. தாய் தந்தையரின் ஆசீர்வாதத்திற்கு அவ்வளவு ஒரு மகத்தான சக்தி இருக்கிறது என்பதை அன்றாடம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தாய் தந்தையரை இழந்தவர்கள் அவர்களை மனதார நினைத்து வழிபட்டு தங்கள் காரியங்களைத் தொடங்கலாம். “தாயிற் சிறந்த கோயிலும் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” அல்லவா?

     - திருமணமாகி, பிள்ளை குட்டிகள் பெற்று இன்று நீங்கள் ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்கலாம். தினமும் சின்னச் சின்ன விஷயங்களில் நீங்கள் தாயின் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள். சாப்பிடும் நேரம், ‘அம்மா சாப்பிட்டார்களா?’ என்று ஒரு வார்த்தை கேளுங்கள். வெளியே செல்லும் நேரம் தாய் தந்தையர் உடன் வருகிறார்களா, ஏதாவது பொருட்கள் வாங்கி வர வேண்டுமா என்று கேளுங்கள். உடல் நலமில்லாத போது நல்ல முறையில் கவனிக்க யோசிக்காதீர்கள். நீங்கள் உங்கள் தாய்தந்தையரை மதிக்க மதிக்க உங்கள் மனைவியும், குழந்தையும் அவர்களை மதிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எவ்வளவு தூரம் உங்கள் பெற்றோரை அரவணைக்கிறீர்கள் என்று அருகிருந்து அன்றாடம் பார்க்கிறது உங்கள் குழந்தை என்பது நினைவில் இருக்கட்டும். அந்த அளவுகோலிலேயே நீங்களும் பிற்காலத்தில் மதிக்கப்படுவீர்கள் என்பதும் நினைவில் இருக்கட்டும்.

     - வீட்டில் தெய்வங்களை வைத்துக் கொண்டு வெளியில் தேடாதீர்கள். எத்தனையோ பேர்களைப் பார்க்கிறோம். தங்கள் பிறந்த நாளின் போது தாய் முதியோர் இல்லத்தில் இருக்க கோயிலுக்குச் சென்று டப்பா டப்பாவாக இனிப்பு விநியோகம் செய்து கொண்டிருப்பார்கள். இனிப்பு வழங்கும் போது தாய் தந்தையரை அருகில் வைத்துக் கொண்டு வழங்கிப் பாருங்கள். இன்பம் இரட்டிப்பாகும். இறை அருளும் இரட்டிப்பாகும். இன்பத்தைப் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இன்பம் இரட்டிப்பாகும். துன்பத்தை பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். துன்பம் பாதியாகக் குறையும்.

     - வேலை காரணமாக மேலை நாடுகளுக்குச் சென்று பணிபுரிகிறீர்களா? அவ்வப்போது ஃபோனில் தாயிடமும் தந்தையிடமும் பேசுங்கள். செல்ஃபோன், லேண்ட்லைன், இன்டர்நெட் என்று தகவல் தொடர்புத்துறை மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் நீங்கள் தாயிடம் பேசுவதற்கு நேரமே இல்லாதது போலவும், பணம் செலவாவது போலவும் நடந்து கொள்ளாதீர்கள். உங்கள் ஃபோனில் அழைப்பை எதிர்பார்த்து வயோதிக உள்ளங்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றன என்று தினமும் நினைத்துப் பாருங்கள்.

     அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் ‘மனவளக் கலை’ பயிற்சியின் போது ஒவ்வொருவரும் தியானத்தின் போதும், யோகப் பயிற்சியின் போதும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் என்ன தெரியுமா? “அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்தியாகவும் அமையுமாக. அன்னைக்கு வணக்கம், தந்தைக்கு வணக்கம். ஆசானுக்கு வணக்கம்” என்பதே. ஆம்... அன்னையும், தந்தையும் குரு தெய்வமாக மதித்து ஒவ்வொரு செயலையுமே தொடங்கிப் பாருங்கள். வெற்றி நிச்சயம்.

     இந்தத் தொடரை விடாமல் படித்து உங்களை நீங்களே செதுக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் இன்றிலிருந்து செய்ய வேண்டியது என்ன தெரியுமா? காலை எழுந்ததும் படுக்கையிலிருந்தபடியே கூட உட்கார்ந்து, ஒரு சில நிமிடங்கள் அன்னையையும், தந்தையையும் மனக்கண்ணால் பார்த்து, எதிரே இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, அவர்களை வணங்கி அவர்கள் ஆசிர்வாதங்களை வேண்டுங்கள். அதிகாலையில் அருட்பேராற்றல் வாயிலாக உங்கள் அன்னை தந்தையின் ஆசீர்வாதங்கள் ஒளிவெள்ளமாக முழுமையாக உங்களுக்குக் கிடைக்க, இனி உங்கள் வாழ்க்கையில் அலை அலையாகப் பிரகாசம் தான். அந்தப் பிரகாசம் மூலம் ‘பளிச்’ என்று ஒரு உன்னதமான மனிதராக நீங்கள் உலகத்தினர் முன் அடையாளம் காட்டப்படுவீர்கள். இது உறுதி.