உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) முதல் பாகம் - காலச் சக்கரம் முன்னுரை நாடகத்துக்கு முன்னால் - சூத்திரதாரன் வருவது போல் நமக்கு ஒரு மனிதர் : ஆம்! ஒரு சோதிடர். அவர் ஒரு சன்னியாசி என்ற தோரணையில் ஆடை அணிந்து இருக்கா விட்டாலும் அவர் வாழ்க்கை நிலை ஒரு சன்னியாசியின் வாழ்க்கை நிலையை யொட்டித்தான் இருந்தது. அந்த மனிதருக்குத் தெரியாத கலைகள் எதுவும் இல்லை. அந்த மனிதர் அறிந்து கொள்ளாத மொழி எதுவும் இல்லை. அந்தத் தனி மனிதரை தரிசிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் குடந்தை நாகேசுவர சுவாமி கோயில் கோபுர வாயிலில் உள்ள மேடையில் எப்பொழுதும் தரிசிக்கலாம். கருகருவென்று வளர்ந்திருக்கும் தாடி, தோளில் திரி திரியாகப் புரண்டு விழும் கேசம், கூர்மையான விழிகள், நெற்றியில் தீர்க்கமாகப் பிரகாசிக்கும் குங்குமப் பொட்டு, வெற்றிலைக் காவி படிந்த தடித்த உதடு, உடம்பை மறைத்திருக்கும் பூக்கரை போட்ட கதர் சால்வை. விசுவாமித்திரர் தவ நிலையில் அமர்ந்ததைப் போல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் நிலை நமக்கு அவரிடம் ஒரு மதிப்பைத் தான் உண்டாக்கும். அன்று வெள்ளிக்கிழமை. அம்பிகையைத் தரிசித்துவிட்டு வரலாம் என்று தான் நான் நாகேசுவரசுவாமி கோயிலுக்குப் போனேன். ஆனால் அந்தச் சந்நியாசியிடம் சிக்கிக் கொண்டு விடுவேன் என்று நான் சொப்பனத்தில் கூட நினைக்கவில்லை. இருவரும் கோயிலுக்குள் சென்றோம். "சுவாமி தரிசனம் இருக்கட்டும். இந்தக் கோயிலைப் பற்றி உன் அபிப்பிராயம் என்ன?" என்றார். "உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்களேன்!" என்றேன். "இது ஏற்கனவே ஒரு பௌத்த விகாரமாய் இருந்திருக்கலாம் என்று சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். ஆராய்ச்சித் திறனோடு பார்த்தால் அதையும் நாம் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது. உள் பிரகாரத்தைப் பார்த்தால் அது நன்றாகத் தெரியும். மூல கிருகத்தைச் சுற்றியுள்ள சிலைகளைப் பார்த்தால் உனக்கு விளங்கலாம். நின்ற திருக்கோலத்தில் அங்கு ஒரு புத்த பெருமானின் சிலையும் இருக்கிறது. நீ அஜந்தா, அமராவதி இங்கெல்லாம் போயிருக்கிறாயா?" "போனதில்லை." "இந்தக் கோயிலில் அமைந்த சிற்பங்கள் எல்லாம் அந்த பாணியில் அமைந்தவை" என்று சொல்லிக் கொண்டே வரும்போது நாங்கள் நடராஜப் பெருமானுடைய சன்னிதானத்துக்கு எதிரில் வந்த போது அவர் சட்டென்று என் கையைப் பிடித்து நிறுத்தி, "இதோ பார். அந்தச் சக்கரத்தை நீ பார்த்திருக்கிறாயா?" என்று அங்குள்ள சக்கரம் ஒன்றைச் சுட்டிக்காட்டினார். நாகேசுவரசுவாமி கோயிலில் நடராஜப் பெருமானின் சன்னிதி மிக விசேஷம். எங்கும் காணாத வண்ணம் அதன் அமைப்பே விசேஷமாக இருக்கும். அந்த மண்டபம் ரதம் போன்றது என்பதற்கு அறிகுறியாக இருபுறங்களிலும் இரு கருங்கல் சக்கரங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். அந்தச் சக்கரங்களுக்கு முன்னால் பக்கத்துக்கு ஒன்றாக இரு புறங்களிலும் குதிரைகள் பாயும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும். குதிரைகளுக்கு முன்னால் நான்கு பெரிய யானைகள். அவர் என்னை அச் சக்கரத்துக்குச் சமீபமாய் அழைத்துப் போய் அந்தச் சக்கரத்தின் கடைக்கால்கள் போல் சுற்றிலும் செதுக்கப்பட்டிருக்கும் உருவத்தையும் அதன் பக்கத்தில் தாமரை மொட்டு போல் செதுக்கப்பட்டிருக்கும் பொருளையும் காட்டி, "இது சூரியனின் உருவம் தான். சூரியனுக்குப் பக்கத்தில் இருக்கும் பொருள், காலம் காட்டும் கருவி. மேலே தாமரை மொட்டு போல இருப்பதற்கு நடுவே வட்டமாகச் செதுக்கப்பட்டிருக்கும் குழியில் நிழல் விழுவதை அனுசரித்து நேரத்தைத் தெரிந்து கொள்வார்கள். அதனால் தான் அது சூரியனுக்குப் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. சூரியனையும் காலக் கருவியையும் வைத்து அமைக்கப்பட்ட இதுதான் காலச் சக்கரம். இரவு பகல் என்று இரு பக்கமும், இரு சக்கரங்கள் பொருத்தப் பட்டிருக்கும் இந்த ரதத்தின் பெயர் காலத்தேர். இப்பொழுது புரிகிறதா? போகட்டும் இச் சக்கரத்தில் இருக்கும் சூரியனின் பிம்பங்களையும், காலங் காட்டும் கருவிகளையும் எவ்வளவு இருக்கின்றன என்று எண்ணிப் பார்" என்று எனக்கு உத்தரவு போடுகிறவர் போல் அன்பு நிறைந்த குரலில் சொல்லிவிட்டுக் காலச் சக்கரத்தைப் பார்த்தார். நான் அவைகளை எண்ணிப் பார்த்து விட்டு, "பன்னிரண்டு சூரியனுடைய உருவங்களும், பன்னிரண்டு காலங் காட்டும் கருவிகளும் இருக்கின்றன" என்று கூறினேன். "இது எதைக் குறிக்கிறது தெரியுமா? சூரியனின் சஞ்சார கதியைச் சொல்லுகிறது. அவன் சித்திரை முதல் ஒவ்வொரு மாதத்திலும் மேஷம் முதல் மீனம் வரையில் உள்ள பன்னிரண்டு ராசிகளை அடைகிறான். காலச் சக்கரத்தின் சுழற்சியில் மேல்தடம் கீழ் நோக்கி வரும்போது அவனுடைய சீதோஷ்ண பலன் குறையும். அது மேல் நோக்கிச் செல்லும் போது அதன் சீதோஷ்ண நிலை உயரும். இதைத்தான் நமது சோதிடர்கள் சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியை அடையும் போது உச்சனாகி இருக்கிறான் என்றும் ஐப்பசி மாதத்தில் துலா ராசியில் பிரவேசிக்கும் போது நீசனாகி விட்டான் என்றும் சொல்லுவார்கள். இந்தச் சக்கரத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் பன்னிரண்டு காலம் காட்டும் கருவியும் ஒரு வருடத்தில் அவன் ஒவ்வொரு மாதத்திலும், ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரித்துச் சுற்றி வருவதைக் காட்டுகிறது. சூரியன் தான் காலத்தேரை ஓட்டுகிறான் என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் சர்வேசுவரன் தான் சூரியனைத் தன் காலத் தேரின் சக்கரமாக அமைத்து அதை நடத்துகிறான் என்பது நமது உயர்ந்த கொள்கை. இதோ பார், இந்தக் காலத் தேருக்கு இரண்டு சக்கரங்களையும் வைத்தான். இரண்டு குதிரைகளையும் பூட்டினான். முன்னால் நான்கு சக்கரங்கள் போவது போல் நான்கு யானைகளையும் வைத்தான். ஆனால் இக்காலத் தேரை ஓட்டுவதற்கு ஒரு சாரதியை வைத்தானோ? இல்லை, எம்பெருமானின் திருக்கூத்தில்தான் இக்காலத்தேர் அசைந்து நகர்ந்து கொண்டிருக்கிறது. அவனுடைய ஆட்டத்தில் சிறிது லயம் மாறினால் காலத்தேர் சிறிது திசை மாறும். மழை, புயல், வெள்ளம், பூகம்பம், தீ இத்தகைய அபாயங்களெல்லாம் அவன் ஒரு லயத்தில் நின்று ஆடும் போது ஏற்படும் சஞ்சார பேதங்கள். அவன் கூத்தில் ஆனந்தக் கூத்தும் உண்டு, ஆவேசக் கூத்தும் உண்டு. அவனுடைய ஆவேசக் கூத்து உச்ச நிலையை அடைந்தால் இந்தப் பூமியையே கூட விழுங்கினாலும் விழுங்கிவிடலாம்" என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு. அவர் மறுபடியும் உணர்ச்சிப் பெருக்கோடு, "இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னால், இந்தத் தமிழ் நாடு இருந்த நிலையை எண்ணிப் பார்ப்போம். சரித்திர ஆதாரங்கள், மத கிரந்தங்களின் ஆதாரங்கள், சிலாசாசன ஆதாரங்கள், சிற்ப சித்திர ஆதாரங்கள், புதை பொருள் ஆராய்ச்சிகள் எல்லாம் இருக்கின்றன. காலச் சக்கரத்தின் வேகம் எவ்வளவை அழித்திருக்கிறது. எவ்வளவை மாற்றி இருக்கிறது? இந்தத் தமிழ் நாட்டில், புத்த சமயமும் ஜைன சமயமும் எப்படி வேரூன்றித் தழைத்து நின்றன? மனக்கண்ணால் நினைத்துப் பார்த்தால் பெரிய சாகரத்தையே அழித்து விட்டது போல் தோன்றும்" என்று கூறி என் பதிலை எதிர்பார்த்தார். அவரே பதில் சொல்லட்டும் என்று மௌனமாக உட்கார்ந்திருந்தேன். "இதையெல்லாம் அவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட முடியாது. இந்தக் குறிப்புகளைப் பார்த்தால்தான் உனக்குத் தெரியும்" என்று சொல்லித் தான் மறைத்து வைத்திருந்த புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்து விட்டு "நாளையிலிருந்து நீ என்னைப் பார்க்க முடியாது. நான் காசி யாத்திரை போகிறேன்" என்று சொல்லிப் புறப்பட்டு விட்டார். நான் புத்தகத்தைப் புரட்டினேன். கோவை யில்லாமல் பல விஷயங்கள் எழுதப்பட்டிருந்தன. சிதறிக் கிடந்து பிரகாசிக்கும் அந்த நவரத்தின மணிகளைக் கோத்து மாலையாக்க நினைத்தேன். |