மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம் - காலச் சக்கரம்

அத்தியாயம் 1 - சுகமும் சொர்க்கமும்

     காலச் சக்கரம் முன்னோக்கிச் சுழலுமே தவிர, பின்னோக்கிச் சுழலுவதில்லை. அது சுற்றி வரும் வேகத்தில் எவ்வளவோ அழிகின்றன. எவ்வளவோ உற்பத்தியாகின்றன. சிறிது நாட்களுக்கு முன் புறக்கண் எதிரே நின்றவைகளை யெல்லாம் இன்று நினைத்துப் பார்க்க முடிகிறது. பல ஆண்டுகளுக்கு முன் நாம் பார்த்து அறியாதவைகளைக் கூட நாம் ஓரளவு சிந்தித்துத் தெரிந்து கொள்ளும் வண்ணம் அழிந்தும் அழியாமலும் இருக்கும் காலச் சக்கரத்தின் அடிச்சுவடுகள் நமக்குச் சிறிது உதவி புரிகின்றன. சிந்தித்துப் பார்த்தால் அவை கனவு போலிருக்கின்றன. நேற்றும் மழை பெய்தது. இன்றும் மழை பெய்கிறது. ஆனால் நேற்று பெய்த மழை இல்லை இது. இது வேறு மழை; புது மழை. சென்ற வருடம் புயல் அடித்தது. இன்றும் அடிக்கிறது. ஆனால் இது சென்ற வருடம் அடித்த புயல் இல்லை. அதைப் போன்ற புயலாக இருக்கலாம். ஆனால் புதிது. காலச் சக்கரத்தின் வழிச் சுவட்டோடு தெரிந்து அது ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எங்கெல்லாம் உருண்டு வந்ததோ அங்கெல்லாம் செல்வோம். 'இதுவும் அழிந்து விடுமா' என்று நினைக்கக் கூடிய நிலையிலிருந்த சோழ சாம்ராஜ்யத்தைப் பார்ப்பதற்காகக் காலச் சக்கரம் வரும் பாதையில் எதிர்நோக்கிச் செல்வோம். எவ்வளவோ கண்களில் படும். எவ்வளவோ சிந்தனையில் இடம் பெறும். எவ்வளவையோ நிர்மூலமாக்கிக் கொண்டு வந்த காலச் சக்கரம் சோழ சாம்ராஜ்யத்தின் பெருமையையும் அழுந்திய தன் சுவட்டின் பக்கத்திலேயே ஒதுக்கி இருக்கிறது. அது நமக்குப் போதாதா? இடிந்து வீழ்ந்திருக்கும் ஒரு மாளிகையைப் பார்த்தால் அது எப்படிப்பட்ட உன்னத நிலையில் இருந்திருக்கும் என்று நமக்கு விளங்காதா?

     பூம்புகார் என்னும் பொன் நகரைச் சிருஷ்டித்து, புவனம் மெச்ச அரசாண்டான் கரிகாலன். அவனுக்குப் பின் அவன் பரம்பரையில் மாட்சிமையுடன் ஆண்ட மன்னர்கள் எத்தனையோ பேர். ஆனால் எண்ணெய் வற்றிக் கொண்டே வரும் தீபம் போல் மெதுவாக அமிழ்ந்து விட்டது அந்த வம்சம். சோழ மண்டலத்திலுள்ளோர் இருளில் நின்று பெருமைகளையும் உரிமைகளையும் கதையாகப் பேசிக் கொள்ளும் காலமாகி விட்டது அந்தக் காலம். காஞ்சியில் பல்லவரின் நந்திக் கொடி பகட்டிப் பறந்தது. மதுரையில் பாண்டியர்களின் மீன் கொடி விண்ணைத் தொட்டுத் தன்னிகரில்லையெனப் பறந்தது. சாம்ராஜ்ய ஆசைகள் யாரை விட்டது?

     போர் முரசின் முழக்கம் இடைவிடாது கேட்டுக் கொண்டுதான் இருக்கும். வடக்கிலிருந்து வரும் பல்லவர்களும், தெற்கிலிருந்து வரும் பாண்டியர்களும் வந்து மோதிப் போர் புரியும் யுத்தகளமாகத்தான் இருந்தது பெருமை மிக்க சோழ நாடு. ஆம்! குருக்ஷேத்திரமாகத்தான் விளங்கியது அவ்வள நாடு.

     பராக்கிரமம் பொருந்திய ஒரு அரசர் கீழ் இல்லாமல் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கும் பல சிற்றரசர்களின் கட்டுப்பாடற்ற நீதி முறை தவறிய ஆட்சிக்குள் அகப்பட்டுத் தத்தளித்தது. ஒரு காலத்தில் பெருஞ்சிறப்புப் பெற்று விளங்கிய சோழ நாடு, ஆட்சி முறையில் போராட்டமும் குழப்பமும் மிகுந்திருந்தது. பௌத்தர்கள், ஜைனர்கள், சைவர்கள், நாஸ்திகர்கள், ஆஜீவகர்கள், வேதவாதிகள், பூதவாதிகள், நரபலி கொடுத்துப் பராசக்தியின் அருளைப் பெற நினைக்கும் கபாலிகர்கள் - இப்படிப் பல வகை. ஒரு புறம் அரசியல் போராட்டம் - மறுபுறம் மதப் போராட்டம்! இந்நிலையில் மக்களின் மனோநிலையைப் பற்றி என்ன சொல்வது? ஒவ்வொரு மனிதனின் அகமும் புறமும் நிலைகொள்ளா வேதனையில்தான் உழன்றது! பல மன்னர்களும் முடி தாழ்த்தி வணங்கப் பார் முழுதும் ஆண்ட கரிகாலனின் பெருமை, தேய்ந்த கனவாகவும் பழங்கதையாகவும் ஆகிவிட்டன. மறுபடியும் அத்தகைய பெருமை என்று கிடைக்கும் என்று சோழநாட்டு மக்கள் ஏங்கி நிற்கும் காலமாகி விட்டது அது.

     சாம்ராஜ்யம் சிதைந்து விட்டது. ஆனால் அழிந்த சாம்ராஜ்யத்தின் மகோன்னத நிலையை விளக்கும் கலைச் சின்னமாகத் திகழ்ந்தது பூம்புகார் நகரம். அமர உலகுக்குச் சென்று வந்து அதைவிடச் சிறப்பாக ஒரு நகரைச் சிருஷ்டித்தான் கரிகாலன் என்றால் அது வெறும் புராணக் கதை அல்ல என்பதை எடுத்துக் காட்டுவது போல் திகழ்ந்தது அப் பொன் நகரம். ஆம். அப்பொழுதும் அவ்வளவு அழகோடு விளங்கியது அந் நகரம். அழிந்த பேரரசை மறுபடியும் நிலை நிறுத்த முடியும் என்ற திடத்தையும் மன எழுச்சியையும் தூண்டி விடும் வண்ணம் அப் பொன் நகரம் காட்சியளித்து நின்றது. வம்ச பாரம்பர்ய வீர உணர்ச்சியைக் கிளறி நினைவு படுத்தும் அடையாளச் சின்னமாகவே அது திகழ்ந்தது. அந்த வீர உணர்ச்சித் தணல் தாழ்மைப்பட்டுக் கிடக்கும் மனத்தில் எழும்பி உரிமைப் போராட்டத் துடிப்பை என்று எழுப்பியதோ அன்றையச் சூழ்நிலையில் தான் இந்தக் கதையும் ஆரம்பமாகிறது.

     நாட்டிலேயே சிறந்த துறைமுகப்பட்டினமாகவும், வியாபார ஸ்தலமாகவும் திகழ்ந்த புகார் எனும் காவிரிப்பூம்பட்டினம் செல்வம் நிறைந்த உலகப் பெரும் மக்களின் இடமாகத் திகழ்ந்ததால் பல்லவ மன்னனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தாலும் சிறப்பில் குன்றாது இருந்தது. பல்லவ சாம்ராஜ்யத்தின் துறைமுகமாகக் கடல் மல்லையும், மயிலையும் அன்று பெருமையோடு திகழ்ந்தாலும் பூம்புகார் மதிப்பும் பெருமையும் குறையாது இருந்தது. வணிகப் பெருமக்களின் வாழ்விடமாகத் திகழ்ந்த அந் நகரின் சிறப்புக்கு என்ன குறை இருக்கப் போகிறது? என்றும் திருவிழாப் போல் திகழும் அம்மாநகருக்குத் தினம் தினமும் பல தேசத்து வணிகர்களையும் மன்னர்களையும் விருந்தினராக அழைத்து வரும் பெருத்த மரக்கலங்கள் கடலில் ஆனந்தத்தோடு வருவது அந்நகரைக் கண்ட பெருமையில் அதிவேகமாக வருவது போல்தான் இருக்கும். அந்த நகரில் பல நாள் விருந்தினராக இருந்த மன்னர்களையும், வணிகப் பெருமக்களையும் அவரவர்கள் நாடுகளுக்கு அழைத்துச் செல்லும் மரக்கலங்கள் அந்த நகரை விட்டுப் பிரிய மனம் இல்லாத மன்னர்களின் உள்ளம் போல் தயங்கித் தயங்கித் துறைமுகத்திலிருந்து மெதுவாக நகரும். கடற்கரையிலிருந்து வெகு தூரம் ஒளி காட்டும் கலங்கரைவிளக்கம் உலகில் எட்டு திசைகளிலும் உள்ள மக்களையெல்லாம் இதுதான் செல்வம் கொழிக்கும் பூம்புகார், இதுதான் அமர உலகையும் அழகில் வென்ற காவிரிப்பூம்பட்டினம் என்று சொல்லி அழைப்பது போல் இருந்தது.

     அந்த அழகான நகரம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்ததுதான் அந்நகரை அமைத்தவனுடைய சிறப்பை இன்றும் நினைவுபடுத்துவதாக இருந்தது. கடற்கரையை எட்டித் திகழ்வது தான் மருவூர்ப்பாக்கம். அதை ஒட்டிச் சிறிது கிழக்கே மாடமாளிகை, கூட கோபுரங்களோடும் மகோன்னதமாகத் திகழ்வதுதான் பட்டினப்பாக்கம். பட்டினம் என்பது கண்ணையும் கருத்தையும் கவரும் பெரிய மாளிகைகள், அரண்மனைகள், ஆலயங்கள், பூஞ்சோலைகளோடு திகழ்ந்ததென்றால் மருவூர்ப்பாக்கமும் அதன் பெருமைக்குக் குறையாது பல நாட்டு வர்த்தகர்களும் அரச குலத்தினரும் நடமாடும் உன்னத வியாபாரஸ்தலமாகக் காட்சியளிக்கிறது.

     கடற்கரைத் துறைமுகத்தை ஒட்டினாற்போல் இருக்கும் மருவூர்ப்பாக்கத்தில் வெளிநாட்டிலிருந்து வந்துள்ள வியாபாரிகளும், பிரபுக்களும் அரச குலத்தினரும் தங்குவதற்கு வசதியாய்ச் சிறுசிறு மாளிகைகளும், அதையொட்டிப் பகுதி பகுதியாய்ப் பிரிக்கப்பட்ட வியாபார ஸ்தலங்களும் காட்சியளித்தன. பல தேசங்களிலிருந்து வந்திருக்கும் வியாபாரிகள் மதம், ஆசாரம், மொழி, உடை இவைகளில் மாறுபட்டவர்களாய் இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் சினேக மனப்பான்மையுடன் மகிழ்ச்சியோடு பேசிப் பழகி உலகில் வித்தியாசம் இல்லாத மனப்பான்மையோடு கூடிக் குலாவுவதில் உள்ள மன நிம்மதியையும் நன்மையையும் எடுத்துக் காட்டுவது போலிருந்தது. யவனர், சிங்களர், சீனர், கேரளர், மராட்டியர், வங்காளிகள் முதலிய வணிக மரபினர் தாங்கள் கொண்டு வந்திருக்கும் பொருள்களை நல்ல லாபத்தோடு மற்றவர்களிடம் விற்க வேண்டும் என்ற கருத்தோடு மிகவும் நட்புரிமை கொண்டு உபசரித்துப் பெருமை கொள்ளப் பேசி உறவாடுவது பார்க்க ஆனந்தமாகத்தான் இருந்தது. வியாபாரம் செய்யும் பொருள்களுக்குத் தக்க வண்ணம் பகுதி பகுதியாகப் பிரிக்கப் பட்டிருக்கும் அழகான கடைகள், அக்கடைகளை ஒட்டினாற் போல மக்கள் நடப்பதற்குரிய அழகான தாழ்வாரங்கள், ஒவ்வொரு கடையிலும் இந்த வர்த்தகர்கள் அந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதை அறிவிப்பதற்கு உரிய சின்னமாகத் துலங்கும் பலதேசக் கொடிகள் பறப்பதும் ஓர் அழகாகத் தான் இருந்தது. அக் கொடிகளோடு ஒவ்வொரு வியாபாரப் பகுதியிலும் எத்தகைய பொருள்கள் விற்கப்படும் என்பதற்குச் சின்னமாக விளங்கும் கொடிகளும் பறந்தன.

     மாலை வேளை; வியாபாரம் விருவிருப்பாக நடக்கும் நேரம். மருவூர்ப்பாக்கத்தில் எல்லா வியாபார ஸ்தலங்களிலும் என்றும் போலில்லாது அன்று சிறிது கூட்டம் அதிகம். நாளை மறுதினம் வைசாக பௌர்ணமி, இந்திர விழா கொண்டாட்டம். சோழ மன்னர்களின் காலத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்ட அவ் விழாவை அப்பொழுதும் காவிரிப்பூம்பட்டினத்து மக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடி வந்தனர். கரிகாலன், கோச்செங்கணான், நலங்கிள்ளி முதலிய சோழப் பேரரசர்களின் பெருமையைப் பேசிப் புகழவும் பாடிப் பரவவும் ஏற்ற திருநாளாகவும் இந்திர விழா இருந்தது, முன்னிலும் அதற்குரிய பெருமையையும் சிறப்பையும் அதிகமாக்கியது.

     பல வாலிபர்கள் அரம்பையர் போல் திகழும் தங்கள் இளம் காதலிகளுக்குப் பிரியமான ஆடை ஆபரணங்களை வாங்கிக் கொடுப்பதற்காக அவர்களையும் தங்களோடு அழைத்துக் கொண்டு வந்திருப்பது மனோரம்யமாக இருந்தது. முத்து, ரத்தின, ஆபரணங்கள் விற்கும் கடைகளிலும், பட்டாடைகள் விற்கும் கடைகளிலும், வாசனைத் திரவியங்கள் விற்கும் கடைகளிலும், புஷ்பக் கடைகளிலும் நின்று பேரம் பேசித் தங்களுக்குப் பிடித்தமானவைகளை வாங்கும் இளந் தம்பதிகளின் வசீகர அழகு மனத்தை மயக்க வைக்கும் காட்சியாக இருந்தது. ஒரு தான்ய வியாபாரி பரபரப்போடு தன்னோடு வியாபார விஷயமாகப் பேசிக் கொண்டிருக்கும் மற்றொரு வியாபாரியிடம் கடைவீதித் தாழ்வாரத்தில் தனிமையாகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு வாலிபனைச் சுட்டிக் காட்டி ஏதோ சொன்னான். மற்றவன் அவ்வாலிபனை ஆச்சரியத்தோடு கூர்ந்து பார்த்துவிட்டு ஏதோ சொன்னான். அந்த வாலிபன் யார்? அவனைச் சுட்டிக் காட்டி அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள்? ஒரு வேளை அவன் மற்றவர்களைப் போல் தன் காதலியோடு கடைவீதிக்கு வராமல் தனியாகக் கடை வீதிக்கு வந்தது பற்றிக் குறையாகப் பேசிக் கொண்டிருக்கலாம்? அப்படி இருக்காது. அவனைக் கூர்ந்து பார்த்து விட்டு இவ்வளவு அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொள்ளுவதற்கு ஏதோ காரணம் இருக்கத்தான் வேண்டும்.

     அவனுக்கு வயது இருபத்தைந்து இருக்கலாம். நல்ல உயரம். பிரகாசமான கண்கள், திரண்ட புஜம், அகன்ற மார்பு, கட்டுக் குலையாத கம்பீரமான தேக வனப்பு, பார்வைக்கு மிகவும் படித்தவனாகவும், விவேகியாகவும் தோன்றினான். அவன் ஒரு அரசகுமாரனோ பிரபுக்களின் வம்சத்தைச் சேர்ந்தவனோ என்று சொல்வதற்குரிய ஆடை அலங்காரங்கள் ஏதுமில்லை. வெண்மையான சாதாரண உத்தரீயத்தினால் தன் வசீகரமான பொன் மேனியைப் போர்த்தி மறைத்திருந்தான். இதைத் தவிர அவனிடம் கண்டதெல்லாம் அவன் அணிந்திருந்த பாதரட்சை ஒன்று தான். அவன் அந்த வியாபார ஸ்தலத்துக்கு எதையோ விற்க வந்தவனாகவோ, அல்லது வாங்க வந்தவனாகவோ தெரியவில்லை. அவன் ஒவ்வொன்றையும் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டே நடந்தாலும் அவனுடைய கண்கள் அவன் விவேகமும் பேரறிவும் படைத்தவன் என்பதையே எடுத்துக் காட்டின.

     அவன் தானியம் விற்கும் பகுதியைக் கடந்து ஆபரணம் விற்கும் பகுதியை அடைந்தான். வாலிபர்களும் மங்கையர்களும் நடமாடும் இந்தப் பகுதியில் வேடிக்கை பார்க்க வந்த அவனுக்கு இன்னும் சிறிது கவர்ச்சியையும் ஆனந்தத்தையும் கொடுக்கலாமல்லவா?

     அங்கொரு முத்துக் கடை: ரகவாரியாகப் பிரிக்கப்பட்ட முத்துக்கள் சிறுசிறு மணிக்குன்றுகள் போல் குவிக்கப்பட்டு ஆண்களின் கண்களையும், பெண்களின் கருத்தையும் பறித்தன. விலையுயர்ந்த முத்துக்கள் கடையை அலங்கரிப்பது போல் சரஞ்சரமாகக் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தன. ஒரு பெண் அங்கு தொங்கிய முத்துச் சரம் ஒன்றைக் கையால் பிடித்துக் கொண்டு பக்கத்தில் நிற்கும் தன் காதலனின் முகத்தையே கெஞ்சுதலோடும் ஆர்வத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய காதலன் சிங்களத் தீவிலிருந்து வ்ந்திருக்கும் முத்து வியாபாரியோடு ஏதோ பேரம் பேசிக் கொண்டிருந்தான். நடை பாதை தாழ்வாரத்தில் வேடிக்கை பார்த்த வண்ணமே வந்து கொண்டிருந்த வாலிபன், முத்துக் கடையில் ஒரு வாலிபன் தன் காதலியோடு நின்று பேரம் பேசுவதைப் பார்த்துச் சட்டென்று அக்கடை எதிரிலேயே நின்று கவனித்தான்.

     சிங்கள வியாபாரி "அந்த முத்துச்சரம் எட்டுக் கழஞ்சு பொன்னுக்குக் குறையாது" என்று சொன்னான்.

     தன் காதலியின் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்த வாலிபன், "ஆறு கலஞ்சுக்குத் தருவாயா, மாட்டாயா?" என்று தர்க்கம் செய்தான்.

     முத்து வியாபாரி "விலை குறையாது, எட்டுக் கழஞ்சுதான்" என்றான்.

     "எல்லாம் குறைக்கலாம். ஆறு கழஞ்சு தருகிறேன்" என்றான் வாலிபன்.

     "அதற்கு இந்த முத்துச்சரம் கிடைக்காது" என்றான் அந்த முத்து வியாபாரி.

     வாலிபன் தன் காதலியின் முகத்தைப் பார்த்தான். அவள் அந்த முத்துச் சரத்தையே கையால் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆர்வத்தோடு.

     "அது விலை அதிகமாக இருக்கிறது. வேறு சரம் வேண்டுமானால் வாங்குவோமே?" என்றான் தன் காதலியிடம்.

     "வேறு சரம் எனக்கு எதற்கு? மனத்துக்குப் பிடித்ததை வாங்கத்தானே இங்கு வந்தோம்" என்றாள்.

     வாலிபன் பிடிவாதமாக இருக்கும் தன் காதலியைக் கோபக் கண்களோடு முறைத்துப் பார்த்தான்.

     இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற வாலிபன் முத்துக் கடையில் தன் காதலியோடு நின்று கொண்டிருக்கும் அவ் வாலிபனை நெருங்கியபடி, "ஏனப்பா! இவ்வளவு கோபமாக அந்தப் பெண்ணைப் பார்க்கிறாய்? கோபம் இன்பத்துக்குப் பகை. இந்த உலகத்தில் நாம் சுகம் அனுபவிக்கத் தானே பிறந்திருக்கிறோம்? இந்தப் பிறவியில் அடைய வேண்டிய இன்பத்தை அனுபவிக்கா விட்டால் இந்தப் பிறவியே பாழ். நீ உன் காதலியை இங்கு எதற்காக அழைத்து வந்தாய்? அவளுக்குப் பிரியமானதை அன்போடு வாங்கித் தருவதற்காகத்தானே? அவள் விரும்புவதை மறுக்காமல் வாங்கிக் கொடுத்தால் அவளுக்கும் மகிழ்ச்சி, அதனால் உனக்கும் ஒரு இன்பம். 'அந்த முத்துச் சரம் எட்டுக் கழஞ்சு' என்கிறார் அந்த வியாபாரி. நீ 'ஆறு கழஞ்சுக்குக் கொடுங்கள்' என்கிறாய். அவருக்குச் சம்மதமில்லை. ஆறு கழஞ்சுக்குக் கொடுப்பதில் நஷ்டம் இல்லையென்று பட்டால் அவர் இவ்வளவு நேரம் கொடுத்து விட மாட்டாரா? செல்வம் இன்பம் அனுபவிக்கத்தானே இருக்கிறது. இரண்டு கழஞ்சுக்காகப் பார்த்துத் துக்கத்தைச் சுமத்திக் கொள்ளலாமா? போகட்டும், இரண்டு கழஞ்சு என்ன அதிகமா? உன் நாயகி ஆசைப்படும் பொருளை வாங்கிக் கொடு, உன்னிடம் இல்லாவிட்டால் நான் இரண்டு கழஞ்சு தருகிறேன். அவளுக்குப் பிரியமானதை வாங்கிக் கொடு" என்றான் அந்த அழகன்.

     தன் மனைவிக்கு முத்துச்சரம் வாங்கிக் கொடுப்பதற்கு யாரோ ஒரு முகமறியாத வாலிபன் வந்து பரிந்து பேசியதுடன் இரண்டு கழஞ்சு பொன்னும் தருவதாகச் சொன்னது அவ்வாலிபனுக்கு மிக்க ஆத்திரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.