உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) முதல் பாகம் - காலச் சக்கரம் அத்தியாயம் 11 - ரவிதாசனின் கொலை வீரவிடங்கனும் மாலவல்லியும் மரத்தடியிலிருந்து விடைபெற்றுச் சென்றதும், பூதுகன், வைகைமாலையின் வீடு நோக்கி நடந்தான். அவன் மனத்தில் எத்தனை எத்தனையோ எண்ணங்கள் எழுந்தன. அவன் எதிர்பாராத வண்ணம் அன்று நடந்த காட்சிகள் மிகவும் சிந்திக்க வைத்தன. வைகைமாலை வீட்டுக்கு வருவது போல் புத்த விஹாரத்தை விட்டு வெளிவரும் மாலவல்லி, இடை வழியில் தன் காதலனைச் சந்திப்பது எதிர்பாராத ஒரு நிகழ்ச்சியாகத் தான் இருந்தது. அதோடு மட்டுமல்ல; அன்று மாலை புத்த விஹாரத்தில் தன்னோடு மிகவும் அந்தரங்கமாகப் பேசிக் கொண்டிருந்த கலங்கமாலரையர் அன்று இரவு வேளையில் எதிர்பாராத வண்ணம் தன் மீது திடீரென்று பாய்ந்து கொல்ல எத்தனித்ததும் அவனுக்குச் சிறிது வியப்பைத் தான் அளித்தது. அது மாத்திரமல்ல; மாலவல்லியின் காதலன் வீரவிடங்கன் தன்னை ஒரு சாதாரணப் போர் வீரன் என்று சொல்லிக் கொண்டதையும் அவனால் நம்ப முடியவில்லை. அவனுடைய கம்பீரமான உருவமும், அழகும், அவன் சவாரி செய்யும் குதிரையின் லட்சணமும் அவனை ஒரு சாதாரண வீரன் என்று மதிக்கக் கூடிய நிலையில் இல்லை. கங்கபாடியைச் சேர்ந்தவனா அல்லது வேறு நாட்டைச் சேர்ந்தவனா என்ற கவலை அவனுக்கு இல்லை. அவன் சாதாரண வாலிபன் அல்ல என்பது மாத்திரம் அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. 'மாலவல்லி பிக்ஷுணிக் கோலம் பூண்டு திரிவது போல் அவனும் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தன் பெயரை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறான்' என்று அவன் திடமாக நம்பினான். ஆனால் அவனுக்கு ஒரு உண்மை விளங்கி விட்டது. அவன் ஜைன மதத்துக்கு ஆதரவாக நின்று தன் காதலி மாலவல்லியினிடமே தர்க்கம் செய்யத் தொடங்கியதிலிருந்து அவன் ஜைன சமயத்தைச் சேர்ந்தவன் தான் என்று திடமாக நம்பினான். கங்கை குல மன்னர்களும், கங்க நாட்டு மக்களும் ஜைன சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவனுக்குத் தெரியும். மிகவும் கம்பீரமாக விளங்கும் வீர விடங்கன் கங்கை குல அரச பரம்பரையைச் சேர்ந்தவனாக இருப்பானோ என்ற சந்தேகம் வேறு அவனுக்கு ஏற்பட்டது. நிச்சயம் அவன் ஒரு சாதாரணப் போர் வீரனல்ல என்ற முடிவுக்குத் தான் அவன் வந்தான். 'கலங்கமாலரையன் ஏன் கடற்கரைக்கு இந்தச் சமயத்தில் வந்தான்' என்ற குழப்பம் வேறு அவனுக்கு ஏற்பட்டது. மாலவல்லி புத்த விஹாரத்தை விட்டுக் கிளம்பிய போது அவளைப் பற்றிய விவரம் தனக்கு ஒன்றும் தெரியாது போலத் தன்னிடம் பேசிய கலங்கமாலரையன் அதற்கு முன்பே அவளைப் பற்றி ஏதோ சில விவரங்கள் அறிந்து அவளை உளவு பார்த்துக் கொண்டு வந்திருக்கிறான் என்றும் பூதுகனுக்குத் தோன்றியது. பூசைக்குப் பின் எல்லாப் பிக்ஷுக்களும் சபையை விட்டுக் கலைந்ததும் பின்னும் கலங்கமாலரையன் அங்கு நின்று கொண்டிருந்தது, ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் இருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. எப்படி இருந்தாலும் இவ்விஷயத்தில் அதிக கவனம் செலுத்தித் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவன் தீர்மானித்தான். பூதுகன் வைகைமாலையின் வீட்டை அடைந்த போது நடுநிசியிலும் அந்த வீட்டின் கதவு திறந்திருந்தது. வீட்டுக்குள் சரவிளக்குகள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. வீட்டின் வெளி வாசலில் வெளிப்புறத்தை நோக்கியவாறு உட்கார்ந்திருந்த வைகைமாலை அவன் வரவை எதிர்நோக்கி இருந்தவள் போல் பரபரப்போடு காணப்பட்டாள். அவன் வீட்டில் நுழைந்ததும் எதிரே ஓடி வந்து, "என்ன நடந்தது? மாலவல்லி பத்திரமாகப் போய்ச் சேர்ந்து விட்டாளா?" என்று கேட்டாள். பூதுகன் விஷமமாகச் சிரித்துக் கோண்டே, "ஒரே வார்த்தையில் உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. அவளுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. ஆனால் நீ ஆச்சரியப்படக் கூடிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. மனத்தைக் கொஞ்சம் அமைதியாக வைத்துக் கொண்டு என்னோடு வா! நான் மிகவும் களைத்திருக்கிறேன். பொழுது விடிவதற்கு இன்னும் அதிக நேரம் இல்லை. இன்ப வேட்கையில் அலைபவன் இந்தச் சிறிது நேரத்தையும் வீணாக்கி விட்டானானால் வாழ்வின் முக்கால் பாகத்தையும் இருளில் தடுமாறி வீணாக்கியதற்கு ஒப்பாகும். வைகைமாலா! இன்பம் சொரியும் வெண்ணிலவு மேல் வானில் சென்று அமிழ்வதற்கு முன்னால் நாம் மேல் மாடத்துக்குச் செல்வோம், வா!" என்று சொல்லியபடியே அவளுடைய மெல்லிய கரத்தைப் பற்றி இழுத்த வண்ணமே மாடத்துக்கு நடந்தான். அவனுடைய கைப்பிடியில் சிக்கி நடந்து கொண்டிருந்த வைகைமாலை, "கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடும்?" என்றூ சொல்லிக் கொண்டே நடந்தாள். அவன் அவளுக்கு எதுவுமே பதில் சொல்லாமல் அவள் கையையும் விடாமல் பற்றிக் கொண்டு மேல் மாடத்துக்கு வந்து அங்கிருந்த மஞ்சத்தில் அவளை அமர்த்தி அவளுக்குப் பக்கத்தில் தானும் அமர்ந்து கொண்டான். "கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போய்விடாது - எனக்குத் தெரியும். ஆனால் அந்தக் கிணற்று நீர் வற்றி விடக் கூடாதல்லவா? வைகைமாலா! உன்னுடைய மனத்தில் தோன்றும் உணர்ச்சி ஊற்றும் எப்பொழுதும் ஒரே விதமாக இருப்பதில்லை. இன்று மனத்தில் ஏற்படும் ஆசையும் நாளை வா என்றால் வருவதில்லை. இன்று அனுபவிக்க வேண்டியதை இன்றே அனுபவித்துவிட வேண்டும். இப்பொழுது இளமையும் அழகும் கொண்ட இவ்வுருவம் தளர்ந்து அழகு குன்றி விடுகிறது. இந்த உடல் வேறு, ஆன்மா வேறு என்று சொல்கிறவர்களின் வாதத்தை மறுக்கிறவன் நான். ஒவ்வொரு ஜீவனின் பருவ முதிர்ச்சிகளுக்குத் தக்கவாறு, தேக நிலையின் மாறுதலுக்குத் தக்கவாறு அவனுடைய எண்ணங்களும் செய்கைகளும் மாறுபடுகின்றன. இதனால் ஆத்மாவும் தேகத்தோடு சம்பந்தம் உள்ளதுதான். இந்த உடல் சுகத்தை விரும்பும் போது அதுவும் சுகத்தை விரும்புகிறது. இந்த உடல் அழியும் போது அதுவும் அழிந்து விடுகிறது. இந்தப் பிறப்பிலேயே இந்த உடலை ஒட்டிய ஆத்மா அல்லது இந்த ஆத்மாவை யொட்டிய உடல் தன் சுகத்தையும் துக்கத்தையும் அனுபவித்துத் தீர்த்து விட வேண்டும். இந்த உலகத்தில் சுகமும் இன்பமும் அனுபவித்தால் அதுவே சுவர்க்கம். இந்த உலகத்தில் துக்கமும் கஷ்டமும் அனுபவித்தால் அதுவே நரகம். இதுதான் நாஸ்திகவாதி என்று உலகம் சொல்லும் எங்களுடைய கொள்கை. வைகைமாலா! எனக்கு நீ இன்பமும் சுகமும் தந்து சுவர்க்க போகத்தைக் கொடு. துடிப்புக்கும் துக்கத்துக்கும் உள்ளாக்கி என்னை நகரத்தில் ஆழ்த்தி விடாதே!" என்றான். வைகைமாலை ஏளனமாகச் சிரித்தாள். "உங்கள் கொள்கைகளைப் பற்றி வேறு எங்கேனும் பிரசாரம் செய்து கொண்டு போங்கள். உங்களிடமிருந்து இதைப் போன்ற வார்த்தைகளை ஆயிரம் தடவை கேட்டு விட்டேன். இப்பொழுது நான் உங்களிடமிருந்து எதைக் கேட்க விரும்பினேனோ, அதைப் பற்றிப் பேசுவதுதான் இலட்சணமாகும். நீங்கள் எத்தகைய கொள்கை உடையவர்கள் ஆயினும் உங்களுக்காக என்னை எப்பொழுதோ அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றத்தான் நான் இருக்கிறேன். உங்களுக்குள்ள மன ஆர்வமும் துடிப்பும் எனக்கும் உண்டு. ஆனால் நடந்த விவரங்களைத் தெரியப்படுத்தினால் என் மனம் ஆறுதல் அடையும். எனக்கு மன ஆறுதலை அளிக்காமல் நீங்கள் பேசுவதையே பேசிக் கொண்டு போனால்..." என்று சொல்லி ஒருவிதமான கோபமும் பரிவுணர்ச்சியும் கொண்டவள் போல் பார்த்தாள். "அட! ஒரு பௌத்த பிக்ஷுணி கூடத் தன் காதலனிடம் பிணக்கம் காட்டாத போது உனக்கு இவ்வளவு பிணக்கம் ஏற்படுவதுதான் மிக்க ஆச்சரியமாய் இருக்கிறது. இது அவன் செய்த பாக்கியம்!" என்றான். பூதுகனின் வார்த்தையைக் கேட்டதும் வைகைமாலை ஆச்சரியம் அடைந்தவளாக, "நீங்கள் என்ன சொன்னீர்கள்?" என்றாள் அவன் முகத்தை உற்று நோக்கிக் கொண்டே. "என்ன சொன்னேனா? நான் எதைச் சொல்லியிருந்தாலும் அதை உனக்குப் புரியும்படியாகத்தான் சொல்லி இருப்பேன்" என்றான் பூதுகன். "எல்லாம் புதிர் போடுவது போல் இருக்கிறதே?" என்றாள் அவள். "ஆமாம்! புதிர் போடுவது போலத்தான் ஒவ்வொன்றும் நடக்கிறது. இவைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் நான் எவ்வளவு திணறுகிறேன் தெரியுமா? வைகைமாலை! நான் இந்தச் சந்தர்ப்பத்தில் உயிர் பிழைத்து வந்ததே துர்லபம் என்று தான் சொல்லவேண்டும். அதனால் தான் இந்த இன்பகரமான இரவைப் போல் வாழ்க்கையில் மறுபடியும் ஓர் இரவு கிடைக்குமோ, கிடைக்காதோ என்று எண்ணி இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்" என்றான். வைகைமாலை அவனுடைய பேச்சைக் கேட்டதும் மேலும் திகைப்படைந்தவளாய், "உங்கள் உயிருக்கு அபாயம் நேர்ந்ததா? அப்படி என்ன நடந்தது?" என்று கேட்டாள். "அவைகளை யெல்லாம் விவரமாகச் சொன்னால் தான் விளங்கும். நான், இங்கிருந்து புறப்பட்டு மாலவல்லியைக் கவனிக்கச் சென்றேனல்லவா? நான் மரூர்ப்பாக்கம் தாண்டிக் கடற்கரையோரமாகச் சம்பாதி வனத்தை நோக்கி நடந்த போது மாலவல்லி தன் காதலனுடன் கலங்கரை விளக்கத்துக்குச் சமீபமாக இந்த உல்லாச நிலவொளியில் ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன்..." என்று இழுத்தாற் போல் மெதுவாக நிறுத்தினான். பூதுகனின் இந்த வார்த்தை எதிர்பாராத விதமாக வைகைமாலைக்கு அதிர்ச்சியைத்தான் அளித்தது. "என்ன, நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லையே?" என்றாள் அவள் மனம் குழம்பிய வண்ணம். பூதுகன் அமைதியாகப் பதில் அளித்தான். "நம்ப வேண்டாம். நீங்கள் அறிவுக்குப் புலனாவதை யெல்லாம் நம்பாமல், அறிவுக்குப் புலனாகாததை யெல்லாம் நம்புகிறவர்கள் தானே?" என்றான். "நான் உங்கள் வார்த்தையை நம்பாமலில்லை. நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் பௌத்த பிக்ஷுணியாகிய மாலவல்லிக்கு ஒரு காதலர் உண்டு என்பதைக் கேள்விப்பட்டதும் என்னால் எளிதில் நம்ப முடியவில்லை! போகட்டும். எல்லாவற்றையும் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள்" என்றாள். "விவரமாகத்தான் சொல்லிக் கொண்டு வருகிறேன் - மாலவல்லி தன் காதலனோடு உல்லாசமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களைக் கவனிப்பதற்காகக் கலங்கரை விளக்கத்துக்குச் சமீபமாகப் போய் நின்றேன். எவ்வளவு சமீபத்தில் போய் நின்றாலும் காதல் உலகத்தில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த அவர்கள் என்னைக் கவனிக்கவேயில்லை. நான் அந்தச் சமயத்தில் அவர்களுக்கு இடையூறு செய்வது தகாதென்று திரும்ப எத்தனிக்கையில் இருளில் மறைந்திருந்த உருவம் - வஞ்சகன் - திடீரென்று என் மீது பாய்ந்து என்னைத் தாக்கிக் கொன்று விட நினைத்தான்..." என்று சொல்லி நிறுத்தி வைகைமாலையின் முகத்தைப் பார்த்தான். "அப்படியா? யார் அந்த முரடன்?" என்றாள் வைகைமாலை. "யாராக இருக்கும்? புத்த பிக்ஷு வேஷத்திலிருக்கும் கலங்கமாலரையன் தான். அவன் அங்கு எதற்காக வந்தான் என்பதும் எனக்குத் தெரியாது. அவன் மறைந்திருந்து திடீரென்று புலி போல் என் மீது எதற்காகப் பாய்ந்தான் என்பதும் எனக்குத் தெரியாது. நான் அந்த வஞ்சகனிடம் அவனுடைய அபிப்பிராயங்களுக்கு ஒத்தவன் போல் நடந்து அவனையே உளவு பார்க்க நினைத்தேன். ஆனால் அவன் நம்முடைய அந்தரங்கக் காரியங்களை எப்படியோ தெரிந்து கொண்டிருக்கிறான் என்று தான் தெரிகிறது. இல்லாவிட்டால் அவன் என்னைக் கொல்வதற்கு முயன்றிருப்பானா? முக்கியமாக மாலவல்லி இந்த மாளிகைக்கு வருவதையும் அவன் அறிந்து கொண்டிருப்பான் என்று தான் நினைக்கிறேன். மாலவல்லியைத் தொடர்ந்து வந்த பிக்ஷுவும் அவனுடைய ஒற்றன் என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது!..." என்றான். "அப்படித்தானிருக்கும். அதிருக்கட்டும். அவன் உங்களைத் தாக்கிய பின் நீங்கள் அவனை என்ன செய்தீர்கள்?" என்றாள் வைகைமாலை துடிப்போடு. "நான் என்ன செய்வது? அவனை ஒன்றும் செய்யவில்லை. அவனை மெதுவாகத் தூக்கிக் கடலில் எறிந்தேன். அவ்வளவுதான்!" "அப்படியென்றால் அவன் கடலில் விழுந்து இறந்து விட்டானா?" "இல்லை. அவனுக்குச் சுயமாகவே கொஞ்சம் நீந்தத் தெரியும் போலிருக்கிறது. அதோடு அவனை அலை வேறு கொண்டு வந்து கரையில் விட்டு விட்டது. அவன் மறுபடியும் என்னை ஆவேசமாகத் தாக்க ஓடி வந்தான். மறுபடியும் அவனைக் கடலில் தூக்கி எறிந்தேன். முடிவு தான் ரொம்ப சுவாரஸ்யம். நாங்கள் இப்படிப் போராடிக் கொண்டிருப்பதைச் சற்றுத் தூரத்தில் உட்கார்ந்து பார்த்த அந்த வாலிபன் எழுந்தோடி வந்து என்னைத் தாக்க ஆரம்பித்தான்" என்றான் அமைதியாக. இதைக் கேட்டதும் வைகைமாலை ஆச்சரியமும் பரபரப்பும் அடைந்தவளாய், "அவன் யார்...?" என்றாள். "அவன் யாரென்றால்...? மாலவல்லியின் காதலன்." "சரி! சண்டை எப்படித்தான் முடிந்தது?" என்று கேட்டாள். "மாலவல்லியின் காதலன் என்னைத் தாக்க ஆரம்பித்தான். உடனே மாலரையனும் என்னை வீராவேசத்தோடு தாக்க ஆரம்பித்தான். மாலரையன் என்னைத் தாக்க ஆரம்பித்தவுடன் மாலவல்லியின் காதலன் என்னைத் தாக்குவதை நிறுத்திக் கொண்டான். உடனே மாலரையனைத் தூக்கிக் கடலில் எறிய எத்தனித்தேன். உடனே மாலவல்லியும் அவள் காதலனும், மாலரையனை மன்னித்து விடும்படி வேண்டிக் கொண்டனர். நானும் அவர்களுடைய வார்த்தைகளுக்கிணங்கி, அவன் மறுபடியும் இந்தக் காவிரிப்பூம்பட்டினத்தில் தலை நீட்டக் கூடாது என்று சொல்லி விரட்டி அனுப்பிவிட்டேன். அதற்குப் பின் நாங்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டோம். மாலவல்லி புத்த விஹாரத்துக்குச் சென்றாள். அவளுடைய காதலன் தன்னுடைய கம்பீரமான குதிரையில் உல்லாசமாக அமர்ந்து எங்கோ சென்றான். நான் இந்த இரவு வீணாகிவிடுமோ என்றெண்ணி ஓடோடி வந்தேன், உன்னைப் பார்க்க. அவ்வளவு தான்" என்று சொல்லி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு நிறுத்தினான். "அதிருக்கட்டும். அந்த மாலவல்லியின் காதலன் என்றீர்களே அவன் யார்?" என்றாள் வைகைமாலை. "அவன் தான் கங்கபாடியைச் சேர்ந்தவன் என்றும், சாதாரணப் போர் வீரன் என்றும், தன் பெயர் வீரவிடங்கன் என்றும் சொல்லிக் கொள்கிறான். இது எவ்வளவு தூரம் உண்மையோ? என்னால் நம்பவே முடியவில்லை. காதல் விவகாரம் என்றாள் இப்படிப்பட்ட பொய் பித்தலாட்டங்களெல்லாம் நிறைய உண்டு..." என்றான் பூதுகன். "ஏன் உங்களால் நம்பமுடியவில்லை? இதெல்லாம் பொய் பித்தலாட்டமென்று நீங்கள் நினைக்கக் காரணம் என்ன?" என்று கேட்டாள். "அவன் சவாரி செய்யும் குதிரை சாதாரணப் போர்வீரன் சவாரி செய்யும் குதிரையாகத் தோன்றவில்லை. அத்தகைய உயர்ந்த சாதிக் குதிரை ஒரு அரசனையோ அல்லது அரச குமாரனையோ தான் தன் முதுகில் கம்பீரமாக ஏற்றிச் செல்லும் என்று நினைக்கிறேன்" என்றான் பூதுகன். "அப்படி என்றால் அவனை ஒரு அரசகுமாரன் என்கிறீர்களா?" "ஆம்! அவனைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. ஒரு வேளை அவன் சொல்லுகிறபடி சாதாரணப் போர்வீரனாக இருந்தால் இத்தகைய அழகோடும், கம்பீரத்தோடும், துரதிர்ஷ்டத்தையும் பெற்றவன் என்று தான் சொல்லவேண்டும்" என்றான். வைகைமாலை பேசாது மௌனத்தில் ஆழ்ந்திருந்தாள். அவள் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாள் என்பதை அவள் முகக்குறி எடுத்துக் காட்டியது. "என்ன யோசிக்கிறாய்? இவைகளையெல்லாம் யோசித்துக் கண்டுபிடித்து விட முடியாது. அதோ அந்த நிலவைப் பார், நம்மிடம் விடைபெற்றுக் கொள்ள மன்றாடுகிறது. உடலைச் சிலிர்க்க வைக்கும் இந்தத் தென்றல் காற்றில் ஏதோ ஒரு மணம் வீசுகிறது பார்! இது எந்த மலரின் மணம் என்று கண்டுபிடிக்க முடியாதபடி எல்லா மணங்களின் மலரையும் கலந்தல்லவா எடுத்துக் கொண்டு வந்து வீசுகிறது? நீ அதிகமாக மனம் குழம்பி யோசித்தால் தாமரையின் மேல் நிழல் படர்ந்தாற் போல் உன் அழகு சிறிது மங்கி விடுகிறது. இன்று நீ உன் நீண்ட அழகிய கூந்தலை எடுத்துச் சுருட்டிக் கொண்டை போட்டிருப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா? வைகைமாலா! கொஞ்சம் என்னைப் பார்! அதோ சந்திரனை மறைக்க மேகம் ஒன்று வருகிறது. அதற்குள் நீ ஒரு புன்சிரிப்பு சிரித்து உன் முகத்தின் முழு சௌந்தர்யத்தையும் எனக்குக் காட்டிவிடு" என்று சொல்லித் தன் அகன்ற விழிகளால் அவளை விழுங்கிவிடுவது போல் பார்த்தான். அவன் விழிகளில் காதல் களிநடம் புரிந்தது. அவள் மிகவும் வெட்கம் நிறைந்தவளாக, "அதிருக்கட்டும், மாலவல்லியைப் பற்றியும் அவள் காதலனைப் பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டாள். "இந்த இன்பகரமான இரவு வேளையில், இருவரும் அவர்களையே பற்றிப் பேசிப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தால் இந்த நிலவு நம்மைப் பார்த்து ஏளனம் செய்து சிரித்து விட்டுப் போய்விடும். இதோ பார். அவ்விரு காதலர்களைப் பற்றியும் நாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம். இப்பொழுது நாம் இருவரும் காதலர்கள் என்பதை மாத்திரம் நினைவு வைத்துக் கொள்" என்றான் பூதுகன் காதல் பொங்கி வழிய. "போதும் உங்கள் பரிகாசம்" என்றாள் வைகைமாலை. மேல் வானத்தடியில் நகர்ந்து கொண்டிருந்த வட்ட நிலவை ஒரு கருமேகம் வந்து தழுவிக் கொண்டது. காதலர்கள் இருவரும் இவ்வுலகையே மறந்து இன்பப் பேச்சுகளிலே மூழ்கியிருந்தனர். மறுநாட் காலை பூதுகன் வைகைமாலையிடம் ஏதோ சொல்லிவிட்டு அவளிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான். அவன் பட்டினப்பாக்கம் தாண்டி மரூர்ப்பாக்கத்துக்கு வந்த போது அங்கிருந்த வர்த்தகர்கள் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்காகத் தங்கள் கடைகளைத் திறந்து கொண்டிருந்தனர். என்றும் போல் இல்லாமல் இன்று மரூர்ப்பாக்கத்திலிருந்த வியாபாரிகளிடையே ஏதோ பரபரப்பு மிகுந்திருந்தது. பலர் பல இடங்களில் சிறு சிறு கும்பலாகக் கூடி எதையோ பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். பூதுகனுடைய ஆவலெல்லாம் முதல் நாளிரவு சந்தித்த மாலவல்லியின் காதலன் வீரவிடங்கனை அங்கெங்கேனும் காணலாமோ என்பதுதான். ஆனால் அங்குமிங்கும் வர்த்தகர்கள் கூடி எதையோ பற்றிக் கவலையாகப் பேசிக் கொண்டிருப்பதிலிருந்து நகரிலோ அல்லது அதன் சுற்று வட்டாரங்களிலோ ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்பதை அவனுக்கு அறிவுறுத்துவது போல இருந்தது. அவன் ஓரிடத்தில் பேசிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தினரை நெருங்கி, அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டான். அவன் அங்கு கேள்விப்பட்ட விஷயம் அவனுக்கே பெருத்த ஆச்சரியத்தையும் திகைப்பையும் அளிப்பதாக இருந்தது. அன்று காலையில் பௌத்த விஹாரத்தில் காஞ்சியிலிருந்து புதிதாக வந்திருந்த பௌத்த பிக்ஷு ரவிதாசர் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் என்ற செய்திதான் அது. அவனுக்கு எல்லாம் ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியமாக இருந்தது. முதல் நாள் இரவு நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவன் நினைவுக்கு வந்தது. 'ரவிதாசன் யாரால் கொல்லப்பட்டிருப்பான்? ஒருவேளை கலங்கமாலரையன் அவனைக் கொன்றிருக்கலாமோ? அல்லது தனக்கு எதிராக இருந்து தன் ரகசியங்களைத் தெரிந்து கொண்டு தன்னை அவமானப்படுத்துவதற்கு நினைக்கும் ரவிதாசனைக் கொல்வதற்கு மாலவல்லியும் அவள் காதலன் வீரவிடங்கனும் ஏதேனும் சூழ்ச்சிகள் செய்திருக்கலாமோ' என்றெல்லாம் மனங் குழம்பியவாறு அவன் நிற்கும் போது அவனுடைய தோளை யாரோ பின்புறத்திலிருந்து தொடவே சட்டென்று திரும்பிப் பார்த்தான். அவன் எதிரே வீரவிடங்கன் நின்று கொண்டிருந்தான். |