மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம் - காலச் சக்கரம்

அத்தியாயம் 12 - அக்கமகாதேரர்

     "ஓ, நண்பரா! வாருங்கள். இவ்வளவு சீக்கிரத்தில் மறுபடியும் உங்களைச் சந்திக்க முடியும் என்று நான் நினைக்கவே இல்லை. ச்ம்பாதி வன புத்த விஹாரத்தில் யாரோ ஒரு புத்த பிக்ஷுவை எவனோ கத்தியால் குத்திக் கொன்றுவிட்டுப் போய் விட்டானாம். என்ன அக்கிரமம், பாருங்கள்" என்றான் பூதுகன் வீரவிடங்கனிடம்.

     "ஆமாம், அக்கிரமம்தான்! நேற்று இரவு உங்களிடம் சிக்கிக் கொண்ட புத்தபிக்ஷுவைப் பிடிக்க வந்த எமன் உங்களிடமிருந்து அவனைப் பிரிக்க முடியாமையால் வேறு எங்கோ ஏமாந்திருந்த வேறு ஒரு புத்த பிக்ஷுவின் உயிரைக் கொள்ளை கொண்டு போய் விட்டான். தம்முடைய கொள்கைகளிலிருந்து மாறி அக்கிரமச் செயல் புரிய நினைக்கும் எந்த வெளி வேஷத் துறவிக்கும் இத்தகைய கதிதான் நேரிடும்" என்றான் வீரவிடங்கன்.

     "அது தான் தெரிந்திருக்கிறதே! ஆனால் தம்மீது பிறர் வஞ்சம் வைத்துப் பிறர் தம்மைக் கொல்ல நினைக்கும் அளவில் ஒரு பௌத்த பிக்ஷு என்ன அப்படி அக்கிரமச் செயல் செய்திருக்கப் போகிறார்?" என்றான் பூதுகன்.

     "என்ன அக்கிரமச் செயலில் ஈடுபட்டிருந்தாரோ யார் கண்டார்கள்? ஏதேனும் தகாத காரியங்களில் ஈடுபடாத வரையில் சாதாரண புத்த சன்னியாசியைப் படுகொலை செய்ய வேண்டுமென்று எந்த மனிதனுக்கு எண்ணம் ஏற்பட்டிருக்கப் போகிறது?" என்று பதிலளித்தான் வீரவிடங்கன்.

     "அந்தப் பௌத்த பிக்ஷு காஞ்சியிலிருந்து வந்தவராம். ஏற்கெனவே அவர் ஜைன சமயத்தினராக இருந்தார் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஒரு வேளை அவர் ஜைன மதத்திலிருந்து விலகிய பிறகு ஜைன மதவாதிகள் அவர் மீது ஆத்திரம் வைத்து ஏதேனும் செய்திருக்கலாமோ?" என்றான் பூதுகன்.

     "ஜைன மதவாதிகளா? ஒரு நாளும் இத்தகைய காரியங்களில் ஈடுபட மாட்டார்கள். வேறு யாரோ தான் அவரைக் கொலை செய்திருக்க வேண்டும்" என்றான் வீரவிடங்கன்.

     "நீங்கள் சொல்வதும் சரிதான். பல கெட்ட எண்ணங்கள் கொண்ட வஞ்சகர்கள் எல்லாம் புத்த சங்கத்தில் சுலபமாக பிக்ஷுக்களாகச் சேர்ந்து விட முடிகிறதென்றால் அக்கிரமங்கள் நடப்பதற்குக் கேட்பானேன்? என் மனத்தில் ஒரே கவலைதான். நேற்று இரவு நெடு நேரம் வரையில் கடற்கரையில் இருந்த மாலவல்லியே இந்தக் கொலைக்குக் காரணமாவாள் என்று உலகம் கூறினாள் அது அவளுக்கு எத்தகைய தீங்கை விளைவிக்கும் என்பதைப் பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது" என்றான் பூதுகன்.

     இதைக் கேட்டதும் வீரவிடங்கன் திகைப்படைந்தவனாக, "அப்படி அவள் மீது பழியைச் சுமத்துவதற்குக் காரணம் என்ன இருக்கிறது?" என்று கேட்டான்.

     "தினம் இரவு வேளையில் ஒரு பிக்ஷுணி தனக்குரிய இடமாகிய பௌத்த விஹாரத்திலிருந்து வெளிக் கிளம்பிச் செல்லுவதே மிகத் தவறான காரியம் அல்லவா?" என்றான் பூதுகன்.

     "தவறுதான். ஆனால் அவளுக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தம் இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று கேட்டான் வீரவிடங்கன்.

     "நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் மாலவல்லியின் நடத்தையைக் கண்டு மற்றவர்கள் அவளைச் சந்தேகித்துக் குற்றம் சொல்லாமல் இருக்க முடியாது அல்லவா?" என்றான் பூதுகன்.

     "அது உண்மைதான்" என்று கூறிச் சிறிது நேரம் யோசனையிலிருந்து விட்டு, "அப்படி ஏதேனும் நடந்தால் அதை என்னால் பொறுக்க முடியாது. நான் என்னுடைய உயிரைக் கொடுத்தேனும் அவளைக் காப்பாற்றி விடுவேன்?" என்றான் வீரவிடங்கன் தீர்மானமான குரலில்.

     "இது கூட நீங்கள் செய்யாவிட்டால் என்ன இருக்கிறது? ஆனால் இப்பொழுது அதைப் பற்றி யோசித்து நாம் குழப்பமடைவதை விட இத்தகைய ஆபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பதற்கு வேண்டிய யோசனை செய்வதுதான் நல்லது" என்றான் பூதுகன்.

     "என்ன செய்யலாம்?"

     "நாம் முதலில் நிலைமையை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். நாம் இருவரும் புத்த விஹாரத்துக்குப் போய்ப் பார்த்தால், அங்குள்ளவர்கள் என்ன பேசிக் கொள்ளுகிறார்கள் என்பது நமக்கு விளங்கி விடுமல்லவா?" என்று யோசனை கூறினான் பூதுகன்.

     "அதுவும் நல்ல யோசனை தான். வாருங்கள் போவோம். நேற்று உங்கள் நட்பு கிடைத்தது நல்லதென்று நினைத்தேன். இன்று கிடைத்த உங்கள் நட்பு கிடைத்தற்கரியது என்று எனக்கு விளங்கிவிட்டது!" என்றான் வீரவிடங்கன் மகிழ்ச்சியோடு.

     "நண்பர்களாகி விட்டால் ஒருவரோடு ஒருவர் உண்மையாகவும் உள் அந்தரங்கத்தோடும் ஒளிவு மறைவு இல்லாமலும் நடந்து கொள்வது எவ்வளவு சிறந்ததாக இருக்கும் தெரியுமா? அப்படியே நீங்கள் நடந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினான் பூதுகன்.

     பூதுகனின் வார்த்தை வீரவிடங்கனின் மனத்தில் ஏதோ கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது என்பது அவனுடைய முக பாவத்திலிருந்து நன்கு தெரிந்தது. "நான் எப்பொழுதும் என்னோடு உயிருக்கு உயிராகப் பழகுகிறவர்களிடம் உண்மையாகவும் உள் அந்தரங்க சுத்தியோடும் தான் நடந்து கொள்வது வழக்கம்" என்றான் வீரவிடங்கன்.

     "அதுவரையில் சந்தோஷம். அப்படியே நாமும் நடந்து கொள்வோம்" என்று சொல்லியபடியே அங்கிருந்து நடந்தான் பூதுகன்.

     அவனைப் பின் தொடர்ந்து நடந்து சென்றான் வீரவிடங்கன். அவர்கள் இருவரும் சம்பாதி வன புத்த விஹாரத்தை அடைந்த பொழுது அங்கு சிறிது கூட்டம் நிறைந்ததாக இருந்தது. அந்த விஹாரத்திலுள்ள பௌத்த பிக்ஷுக்களும், நகர மக்களில் சிலரும், அரசாங்க அதிகாரிகள் சிலரும் கூடி இருந்தனர். எல்லோருடைய முகத்திலும் ஒரு பரபரப்பு உணர்ச்சி தென்பட்டது. சிலர் கூடிக் கூடி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். பூதுகனும் வீரவிடங்கனும் புத்தபிரான் சன்னதி போல் விளங்கிய அந்தப் பெரிய கூடத்துக்கு வந்து சேர்ந்தனர். அந்தக் கூட்டத்தின் நடுவே கொலையுண்ட ரவிதாசரின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் அரசாங்க அதிகாரிகளும், பிக்ஷுக்களும் குழுமி இருந்தனர்.

     ரவிதாசரின் மார்பில் கத்தியால் குத்தப் பட்டிருந்த காயம் ஆழமாகப் பதிந்திருந்தது. அதோடு மட்டுமல்லாமல் அவருடைய தேகத்தில் பல பாகங்களில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர் தம்மைக் கொல்ல வந்த எதிரியோடு தீவிரமாகப் போர் புரிந்த பின் தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை அவர் உடலில் பல இடங்களில் இருந்த காயங்கள் நன்கு உணர்த்தின. அரசாங்க அதிகாரிகள் அந்தப் புத்த சங்கத்தின் மகாதேரராய் விளங்கும் அக்கமகாதேரரை விசாரணை செய்து கொண்டிருந்தார்கள். வீரவிடங்கனின் கண்களும், பூதுகனின் கண்களும் பிக்ஷுணிக் கோலம் தரித்த மாலவல்லி அங்கெங்கேனும் இருக்கிறாளா என்பதைத்தான் தேடின. ஆனால் அவளைப் பார்க்க முடியவில்லை.

     அங்கு நின்று பேசிக் கொண்டிருந்த பலருடைய வார்த்தைகளைக் கேட்க முடிந்தது, அவர்களால். அவர்களுடைய வார்த்தைகள் பூதுகனுக்கும் வீரவிடங்கனுக்கும் பெரிய கலக்கத்தையும், அதிருப்தியையும் கொடுப்பதாய் இருந்தன.

     அந்த புத்த விஹாரத்தில் பிக்ஷுவாயிருந்த கலங்கமாலரையரும் பிக்ஷுணியாக இருந்த மாலவல்லியும் திடீரென்று தலைமறைந்து விட்டதால் ரவிதாசர் கொலைக்கு அவர்கள் தான் காரணமாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள். அதிலும் முக்கியமாக ரவிதாசர் பிக்ஷுணியாகிய மாலவல்லியிடம் ஏதோ குற்றங்கண்டு அதை விசாரணை செய்ய வேண்டும் என்று விரும்பியதும் மற்ற எல்லோருக்கும் தெரியும். இந்த விரோதத்தின் காரணமாக இத்தகைய கொடூரமான செய்கை நடந்திருக்கலாமோ என்று யாவருக்கும் தோன்றியது. அங்கு விசாரணைக்காக வந்திருந்த அரசாங்க அதிகாரிகளிடம் ஒவ்வொருவரும் அதையே தான் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

     தலைமை பிக்ஷுவாக இருந்து அந்த விஹாரத்தைப் பாதுகாத்து வந்த அக்கமகாதேரர் மிகவும் மனம் உடைந்து போயிருந்தார். புத்தரின் சன்னிதானத்தில் இத்தகைய கொடூரமான செய்கை நடந்தது, உன்னதமான புத்த லட்சியங்களைக் கொண்ட சங்கத்துக்கும், பௌத்த சமயத்துக்கும் இழுக்கை ஏற்படுத்தி விட்டதாக எண்ணி மனம் புழுங்கினார் அந்த மகான். கருணை உருவாகிய புத்தர் பெருமானின் கொள்கைகள், இலட்சியங்கள், கனவுகள் இவைகளெல்லாம் அவருடைய சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களாலேயே பாழாக்கப் படுவதை எண்ணி அவர் மனம் புழுவாய்த் துடித்தது. அவர் இப்பொழுது எதுவுமே பேசும் நிலையில் இல்லை. அவருடைய மனம் புத்த பெருமானின் பொறுமை மிக்க திருவுருவை எண்ணி, 'பொறுமை எங்கே? பொறுமை எங்கே?' என்று தேடிக் கொண்டிருந்தது. இத்தனை நன்மார்க்கங்களைப் பின்பற்றாத பிக்ஷுக்களும், பிக்ஷுணிகளும் நிறைந்த அந்த விஹாரத்திலிருந்து எங்கேனும் வனாந்தரங்களிலுள்ள மலைக் குகைகளில் போய்த் தங்கியிருந்து நிர்வாண சித்தியை அடையும் மார்க்கத்தைக் கைக்கொள்ளலாம் என்றே நினைத்தது.

     மாலவல்லியை அங்கே காணாமல் மனக்குழப்பமும் திகிலும் அடைந்திருந்த பூதுகனுக்கு அக்கமகாதேரரின் வேதனை சூழ்ந்த முகம் மிகுந்த பச்சாத்தாபத்தை உண்டாக்கியது. இத்தகைய புனித மூர்த்தி ஏன் இந்த ஊழல்கள் நிறைந்த பிக்ஷுக்களிடையே சுழன்று கொண்டிருக்க வேண்டும் என்று தான் அவனுக்குத் தெரியவில்லை. அக்கமகாதேரர் ஒருவரைத் தவிர அங்குள்ள மற்ற எந்த பிக்ஷுவும் புத்த பெருமானின் புனித மார்க்கங்களை அனுசரித்து ஒழுகும் சீலர்களாக அவனுக்குப் படவில்லை. கொடூர செய்கைக்குக் காரணமாக மாலவல்லி இருக்க மாட்டாள் என்று அவன் நினைப்பது போல் அக்கமகாதேரரும் நினைக்கக் கூடும் என்று நம்பினான். மெதுவாக அவரிடம் நெருங்கிப் பேசி அவருடைய மன அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ள நினைத்தான். அவரை அணுகித் தன் வணக்கத்தைச் செலுத்திவிட்டு, "இந்தக் கொடூரமான செயல்களைப் பற்றி அடிகளின் அபிப்பிராயம் என்ன?" என்று கேட்டான்.

     ஆழ்ந்த சிந்தனையிலிருந்த அக்கமகாதேரர் வருத்தம் நிறைந்த குரலில், "எதையும் புத்தர்பிரான் தான் அறிவார். உலகத்தின் துயரைத் துடைத்து அன்பை நிலைநாட்டுவதற்காக நிறுவப்பட்ட தரும சங்கத்திலும் கூட இத்தகைய கொடூரமான செய்கைகள் நடப்பதை எண்ணித்தான் மனம் இடிந்து போய்விட்டது. நான் எதையும் சொல்ல முடியாத நிலையில் இப்பொழுது இருக்கிறேன். இது நடந்ததற்காக வருந்துகிறேனே தவிர, 'இது எப்படி நடந்தது? இதை யார் செய்தார்கள்?' என்பதில் என் சிந்தனையைச் செலுத்துவதும் தவறு. என்னைப் போன்ற நிலையில் உள்ளோர் இது மாத்திரம் அல்ல, எங்குமே இம்மாதிரி நேராவண்ணம் தடுக்க வேண்டுமென்று புத்தர்பிரானைப் பிரார்த்திப்பதுதான் வழி" என்றார்.

     அந்த மகாபுருஷரின் வார்த்தைகள் அவர் எத்தகைய உயர்ந்த நோக்கமும் கொள்கையும் உடையவர் என்பதைத் தான் பூதுகனுக்கு எடுத்துக் காட்டுவதாக இருந்தன. அவரைக் கிளறி எதையும் கேட்க விரும்பாவிட்டாலும் அவர் மனத்திலும் ஒரு உண்மையைப் பதிய வைக்கப் பூதுகன் விரும்பினான்.

     "தேவரீர்! இச்சங்கத்தில் மகாதேரராய் இருக்கிறீர்கள். இச்சங்கத்தின் பொறுப்புக்களை நீங்கள் உணராமல் இருக்க முடியாது. இச்சங்கத்தைச் சீராக வைத்துக் கொள்வதில் மற்றவர்களுக்கு உள்ள கடமையை விட உங்கள் கடமை மிகப் பெரிது. இன்று நடந்த காரியத்தை இப்படியே விட்டு விட்டால் நாளை புத்தர் பெருமானின் சன்னிதானத்தில் இதை விட ஈனமான காரியங்களெல்லாம் நடப்பதற்கு இடம் கொடுப்பது போல் ஆகி விடுமல்லவா? நான் தங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டாம். தாங்கள் இது விஷயத்தில் சிறிது கவனம் செலுத்துவீர்கள் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் நீங்கள் கவனம் செலுத்தா விட்டால் உண்மையான குற்றவாளி கண்டு பிடிக்கப்படாமல், குற்றமற்றவர்கள் கொடுமை யனுபவிக்கும் நிலைமை ஏற்படும். இந்தச் சங்கத்தில் ஏற்பட்ட கொடுமையோடு இன்னொரு கொடுமையும் அறியாமையினால் ஏற்படுமானால் அது புத்தர்பிரானின் உள்ளத்துக்கு உவப்பானதாகாது."

     "நீ சொல்வது சரிதான். உண்மையான துறவு மார்க்கத்தைக் கொண்ட ஒருவன் இத்தகைய காரியங்களில் எல்லாம் ஈடுபடுவது அவனுடைய மனச்சாந்தியைக் குலைப்பதோடு அவனுடைய தருமத்துக்கும் புறம்பானதாக இருக்கிறது. நான் கூடுமான வரையில் பிக்ஷுக்களையும், பிக்ஷுணிகளையும் அழைத்து ஓரளவு வேண்டுமானால் விசாரிக்க முடியும். அவர்களிடமிருந்து ஏதேனும் உண்மை வெளியானால் நல்லது தான். அந்தக் கடமை எனக்கு எப்பொழுதும் உள்ளது. அது மனவேதனை நிரம்பியதாயினும் அதைச் செய்ய நான் எப்பொழுதும் சித்தமாய் இருக்கிறேன்" என்றார் அக்கமகாதேரர்.

     "இந்த விஷயத்தில் இதுவரை கவலை செலுத்த அடிகளார் மனம் ஒப்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சி யடைகிறேன். இந்தக் குரூரம் நடந்ததற்கு இங்கிருந்த ஒரு பௌத்த பிக்ஷுணியே காரணமாக இருப்பாள் என்று தங்களுக்கு ஏதேனும் தோன்றுகிறதா?..." என்று கேட்டான்.

     "அதையும் புத்தர்பிரான் தான் அறிவார். நான் சட்டென்று எப்படி அப்படிச் சொல்ல முடியும்?"

     "இங்குள்ள மற்றவர்கள் அப்படிப் பேசிக் கொள்ளுகிறார்களே...?"

     "மற்றவர்களின் மன அபிப்பிராயத்துக்கு நான் என்ன செய்ய முடியும்?" என்றார் அவர்.

     "அதுவும் உண்மைதான். ஆனால் இந்தச் சங்கத்தை அரசியல் நோக்கம் கொண்ட சூழ்ச்சிக்காரர்கள் தலைமறைவாக இருந்து காரியங்களைச் செய்ய அனுகூலமான இடம் எனக் கருதி பிக்ஷுக் கோலம் பூண்டு புகலிடமாக அடைந்திருக்கிறார்களே, அது உங்களுக்குத் தெரியுமா?"

     "இருக்கலாம். புத்த சங்கத்தில் ஈடுபட்டுச் சில மார்க்கங்களைப் பின்பற்றத் துணிந்தவர்களுக்கு இங்கு பிக்ஷுக்களாக உரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் யார் யார் எந்த நோக்கத்தில் சங்கத்தில் வந்து சேருகிறார்கள் என்று நான் எப்படி அறிந்திருக்க முடியும்?"

     "அதை நான் ஒப்புக் கொள்கிறேன். கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் ரவிதாசரும் தலைமறைவாகப் போய்விட்ட கலங்கமாலரையரும் ஏதோ தங்கள் சொந்த நோக்கத்துடன் தான் இந்தச் சங்கத்தில் புகுந்து ஏதோ சூழ்ச்சிகரமான காரியங்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது தங்களுக்குத் தெரியுமா? அதோடு பிக்ஷுணியாக இருக்கும் இளம் பெண் மாலவல்லி ஏதோ உலகத்தில் தன்னைச் சூழ்ந்திருந்த ஆபத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு வாழவோ, அல்லது தான் அனுபவிக்க விரும்பும் சுகங்களைப் பிறருடைய இடையூறின்றி அனுபவிக்கவோதான் இந்த புத்த சங்கத்தில் பிக்ஷுணியாகச் சேர்ந்தாள் என்று நான் நினைக்கிறேன். முக்கியமாக, கலங்கமாலரையர் தஞ்சை மன்னர் மாறன் முத்தரையரின் சேனாதிபதியாக இருந்தவர். அவருடைய எண்ணம் எல்லாம் மறுபடியும் இந்நாட்டில் சோழ வம்சத்தினரின் உன்னத சாம்ராஜ்யம் ஏற்படக் கூடாது என்பது தான். அதற்காக அவர் பல சூழ்ச்சிகளையும் அடாத செயல்களையும் செய்து வருகிறார். அவருடைய சூழ்ச்சிகளையும் தகாத காரியங்களையும் சுய ரூபத்தில் இருந்து செய்வது தன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதை உணர்ந்து தான் பிக்ஷுக் கோலம் பூண்டு பல காரியங்களைச் செய்ய முயன்றிருக்கிறார் என்று தெரிகின்றது. இத்தகைய கேவலமான காரியங்களை யெல்லாம் மகா உத்தமராகிய நீங்கள் எப்படி அறிந்திருக்க முடியும்? அதோடு மட்டுமல்ல; கொலையுண்டு கிடக்கும் ரவிதாசர் காஞ்சியிலிருந்து வந்தவர். ஏற்கனவே ஜைன சமயத்தைச் சேர்ந்தவர் எனக் கருதுகிறேன். இளம் துறவி மாலவல்லியும் காஞ்சியிலிருந்து வந்தவள். மாலவல்லி இக் காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்து ஒரு பௌத்த பிக்ஷுணி ஆகிவிட்டாள் என்பதையறிந்து தான் ரவிதாசரும் இங்கு வந்து ஒரு பௌத்தத் துறவி ஆகி இருக்க வேண்டும். அவர் ஒரு பௌத்த பிக்ஷுக்குரிய கடமைகளையும் தர்ம வழிகளையும் பின் பற்றாமல் 'எப்பொழுதும் பிக்ஷுணியாகிய மாலவல்லி என்ன செய்கிறாள்? எங்கே போகிறாள்?' என்பதிலேயே கவனம் செலுத்தக் கூடியவராக இருந்திருக்கிறார். இவற்றை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டாம். நேற்று மாலை இங்கு புத்தர் பெருமானின் திருவடிகளில் அந்த பிக்ஷுணி மலர்களைச் சமர்ப்பிக்கச் சென்ற போது அவள் ஏதோ தகாத காரியங்களைச் செய்து விட்டாள் என்று ரவிதாசர் குற்றம் சாட்டி அவள் பெருமானின் திருவடிகளில் மலர் அர்ச்சிக்க அருகதையற்றவள் என்று கூச்சலிட்டதையும் தாங்கள் அறிவீர்கள். அந்த பிக்ஷுணி ஏதோ குற்றம் செய்தவளாகவே இருப்பினும் பூசை நேரத்தில் அவளைத் தடுப்பது எவ்வளவு மதியீனம், கேவலம்? இது உண்மையான ஒரு பிக்ஷுக்குரிய தருமமா? இதிலிருந்து தாங்கள் ஊகித்துத் தெரிந்து கொள்ளலாம். இந்த பௌத்த விஹாரத்தில் எத்தகைய மனிதர்கள் எல்லாம் துறவுக்கோலம் பூண்டு திரிகிறார்கள் என்று."

     அக்கமகாதேரர் எல்லாவற்றையும் கேட்டு விட்டுக் கண்களை மூடிக் கொண்டு மௌனமாக நின்று கொண்டிருந்தார். அவர் மனத்தில் எத்தகைய வேதனைகள் எழுந்து துன்புறுத்துகின்றன என்பது அவருடைய முகக்குறியிலிருந்து விளங்கியது. "இங்கு என்ன நடக்கிறது என்று அறியாது போனது என்னைப் போன்ற துறவிக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டம் தான். எப்படியோ இந்தப் பௌத்த விஹாரத்துக்கும் பௌத்த சங்கத்துக்கும் ஏற்பட்ட பெரிய களங்கம் இது ஒன்று போதும். இனிமேல் இப்படிப்பட்ட களங்கம் ஏற்படாத வண்ணம் இந்த சேதியமும், சங்கமும் காப்பாற்றப்படட்டும்" என்று சொல்லிவிட்டுத் திரும்பினார். உலகில் யாவற்றையும் துச்சமாக எண்ணித் துறந்து விட்டுச் சாந்தி நிலையில் மனத்தைப் பக்குவப்படுத்தி வைத்துக் கொண்டிருந்த அக்கமகாதேரரின் மனநிலை பூதுகனைத் திகைக்க வைத்தது.

     தன்னோடு வந்த வீரவிடங்கனின் ஞாபகம் வரவே அவன் எங்கே இருக்கிறான் என்பதைப் பார்க்க விரும்பினான். ஆனால் சிறிது நேரத்துக்கு முன் வரை தனக்குச் சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்த வீரவிடங்கனை அப்போது காணவில்லை. அவன் வேறு எங்கேனும் போயிருப்பானோ என்று சுற்றிலும் தேடினான். பூதுகனுக்கு எல்லாம் விநோதமாக இருந்தது. வீரவிடங்கன் இப்பொழுது எங்கே போயிருப்பான்? ஒரு வேளை அவன் வெளியே ஆசிரமத்தில் எங்கேனும் இருப்பானோ என்று நினைத்து அங்கிருந்து வெளியே வந்து தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினான். சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தான். பாவம்! தோட்டத்திலும் அவனைக் காணவில்லை. தன்னிடம் சொல்லாமல் வீரவிடங்கன் அந்த இடத்தை விட்டு அகன்றதற்குக் காரணம் தெரியவில்லை.

     பூதுகனுக்கு வீரவிடங்கன் அந்த இடத்தை விட்டே போய் விட்டான் என்பது நன்கு விளங்கியது. தனக்கு உற்ற நண்பனாகி விட்டது போல் பேசிய வீரவிடங்கன் இப்படிப்பட்ட முக்கியமான சந்தர்ப்பத்தில் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போய் விடுவான் என்று நினைக்கவில்லை. அவனுடைய காதலி அந்த புத்த விஹாரத்திலிருந்து தலைமறைவாக எங்கோ போய் விட்டாள் என்பதைக் கேள்விப்பட்டதும், புத்தவிஹாரத்தை விட்டு ஓடி விட்டவள் தான் அங்கு நடந்த கோரக் கொலைக்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் பேசிக் கொண்டதும், வீரவிடங்கன் உள்ளத்திலும் பெரிய திகிலையும் துயரத்தையும் ஏற்படுத்தி விட்டது என்பதைப் பூதுகன் உணர்ந்திருந்தான். ஆனால் அவன் இத்தகைய துயரம் நிறைந்த வேளையில் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமலேயே போய் விடுவான் என்று அவன் நினைக்கவில்லை.

     அப்பொழுது தான் அவன் உள்ளத்திலும் அந்தக் கோரக் கொலைக்கும் வீரவிடங்கனுக்கும் கூட ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று நினைப்பதற்கு இடம் உண்டாயிற்று. பெரிய சாம்ராஜ்யச் சூழ்ச்சியில் இத்தகைய கொலை நடந்திருக்கா விட்டாலும் காதலிலும், பெண்ணாசையிலுங் கூட இத்தகைய கோரக் கொலைகள் நடப்பது சகஜம் தானே? மாலவல்லியை உளவு பார்த்து வந்த ரவிதாசனைப் பற்றி வீரவிடங்கன் நிச்சயமாக அறிந்துதான் இருக்க வேண்டும் என்று திடமாக நம்பினான். மாலவல்லி, ரவிதாசன், வீரவிடங்கன், கலங்கமாலரையன் இவர்கள் நால்வரும் ஏதோ ஒரு பகைமையோடும் போட்டியோடும் கூடிய காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைப் பூதுகன் உணர்ந்து கொண்டான். அவன் மனம் குழம்பியபடியே மெதுவாக நடந்தான்.