மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம் - காலச் சக்கரம்

அத்தியாயம் 13 - விதியும் மதியும்

     அன்று காலையில் வெளியே சென்ற பூதுகன், அவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்து விடுவான் என்று வைகைமாலை நினைக்கவில்லை. அவன் அவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்ததை எண்ணி அவள் திகைப்படைந்ததோடு அவன் முகத்திலும் மிகுந்த வாட்டம் இருந்ததைக் கண்டு திகைப்புற்றாள். அவளுடைய சகோதரி சுதமதி தாழ்வாரத்தில் உட்கார்ந்து வீணை மீட்டிக் கொண்டிருந்தாள். முதல் நாள் இரவு நெடு நேரம் வரையில் கண் விழித்ததால் மிகவும் அசதியோடும் களைப்போடும் மஞ்சத்தில் சாய்ந்திருந்த வைகைமாலை பூதுகனைக் கண்டதும் சட்டென்று எழுந்து, "ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டீர்கள்? ஏதேனும் விசேஷம் உண்டா?" என்று கேட்டாள்.

     "நிறைய விசேஷம் உண்டு. ஆனால் எல்லாம் விபரீதமாகவே போய்க் கொண்டிருப்பதால் தான் மனம் மிகவும் வேதனை அடைகிறது. சம்பாதி வனத்திலுள்ள புத்த சேதியத்தில் ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது..." என்று இழுத்தாற் போல் கூறினான்.

     "புத்த சேதியத்தில் கொலையா? என்னால் நம்ப முடியவில்லையே?" என்றாள் வைகைமாலை திகைப்போடு.

     யாழை மீட்டிக் கொண்டிருந்த சுதமதி யாழைக் கீழே வைத்து விட்டு மெதுவாக எழுந்து வந்து, "புத்த சேதியத்தில் கொலையா? என்ன அநியாயம்? இப்படியும் நடக்குமா? காலம் ரொம்பவும் கெட்டுப் போய் விட்டது! ஏன் நடக்காது? இந்த நாடு சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்திருக்குமானால் இப்படிப்பட்ட காரியங்களெல்லாம் நடந்திருக்குமா?..." என்றாள்.

     "சோழ மன்னர்கள் ஆண்டாலா? துளிக்கூட நடக்காது. இப்பூம்புகாரைப் பல்லவ சக்கரவர்த்திக்கு மரியாதையோடு திரை செலுத்திக் கொண்டு களப்பரகுல திலகர்களான மன்னர்கள் அல்லவா ஆளுகிறார்கள்? புத்த சமயத்தைச் சேர்ந்த அம்மன்னர்கள் இப்படித்தான் பௌத்த தருமத்தையும் காப்பாற்றுகிறார்கள்..." என்றான் பூதுகன்.

     திகைப்பிலும் குழப்பத்திலும் இருந்த வைகைமாலை, "யார் கொலை செய்யப் பட்டார்கள்? யார் கொன்றார்கள்?" என்று கேட்டாள்.

     "புத்த விஹாரத்தில் வேறு யார் வரப்போகிறார்கள்? அங்கு பிக்ஷுக்கள் கூட்டம் தானே அதிகம்? யாரோ ஒரு பிக்ஷு யாரோ ஒரு பிக்ஷுவைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டான்..." என்றான் பூதுகன்.

     "வேறு யாராக இருக்கும்? எனக்குத் தெரியும், அந்த பிக்ஷுக்களே எமகாதகர்கள். நான் அவர்களை நம்புவதே இல்லை. அவர்களுடைய கொள்கைகளும் எனக்குப் பிடிப்பதே இல்லை. ஆனால் இவளுக்கு மாத்திரம் நான் எவ்வளவு சொன்னாலும் புரிவதே இல்லை. அந்தப் பிக்ஷுக்களிடமும் பிக்ஷுணிகளிடமும் அசாத்திய பக்தி வைத்திருக்கிறாள். நம் குலத்தில் உதித்த மணிமேகலையும், மாதவியும் அந்த மார்க்கத்தைப் பின்பற்றினார்கள் என்றால் நாமும் அந்த மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்பது ஏதாவது விதியா? அந்தக் காலத்தில் உலகம் அப்படியிருந்தது. அவர்கள் அந்த மார்க்கத்தைக் கைக் கொண்டார்கள். அன்று சோழ சாம்ராஜ்யம் உலகில் தருமத்தைக் காத்து வந்தது. ஆனால் இன்று அப்படியில்லையே? இந்த நாட்டில் பல சமயங்களைச் சேர்ந்த பல அரசர்கள் ஆளத் தொடங்கியதிலிருந்து, தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி ஊழல் தானே மிகுந்து கொண்டு போகிறது? புத்த தருமத்தைப் பின்பற்றும் சிரமணர்களுக்கு சாம்ராஜ்ய ஆசையும் இருந்து கொண்டு வருகிறது. சாம்ராஜ்ய ஆசை கொண்ட முரடர்களையும், சூழ்ச்சிக்காரர்களையும் வஞ்சகர்களையும் சுலபமாக மதத்துக்குள் சேர்த்துக் கொண்டு விடுகின்றனர். அவர்களும் தலையை முண்டிதம் செய்து கொண்டு துவராடையைப் போர்த்திக் கொண்டு சிரமணர்கள் என்று சொல்லிக் கொண்டு ஊரில் திரியத் தொடங்கி விடுகின்றனர். இதெல்லாம் வைகைமாலையின் மனத்தில் படவே படாது. புத்த, ஜைன சமயத் தருமங்கள் எல்லாம் - தத்துவங்க ளெல்லாம் கடல் போன்ற நம்முடைய பிராசீன தருமமான வேத மார்க்கத்தில் இல்லாமல் போகவில்லை. அவைகள் எல்லாம் நம்முடைய மார்க்கத்திலும் அமைந்த சாதாரண தருமங்கள் தான். 'சர்வம் பிரம்மமயம் ஜகத்' 'அன்பே சிவம்' என்ற கொள்கைகளைப் புரிந்து கொண்டு நாம் அதை அனுசரித்தால் போதாதா...?" என்றாள் சுதமதி ஒரு நீண்ட பிரசங்கத்தைச் செய்து முடித்தவள் போல.

     பூதுகன் சுதமதியின் வார்த்தைகள் யாவற்றையும் கேட்டுக் கொண்டு நின்றான். அதற்குள் அவள் தன் பிரசங்கத்தை முடித்துக் கொள்வாள் என அவன் நினைக்கவில்லை. அவனுக்குச் சுதமதியைப் பற்றி நன்கு தெரியும். சுதமதியும் வைகைமாலையும் ஒருவரின் மீது ஒருவர் அன்பும் பாசமும் வைத்திருக்கும் சகோதரிகளே தவிர, கொள்கைகளில் மிகவும் நேர்மாறானவர்கள். சுதமதி மிகுந்த சிவபக்தி உடையவள். பல சாஸ்திரங்களையும் நன்கு படித்தவள். சில விரதங்களைத் தீவிரமாகக் கைக்கொண்டவள். தனக்கு அடங்கியவளானாலும் தன்னுடைய தங்கை வைகைமாலையின் கொள்கைகளையோ, அவள் நடைமுறைகளையோ அவள் தடுத்ததில்லை. நெடு நாட்களுக்குப் பிறகு பூதுகன் கொண்டு வந்த செய்தியினால் தன் மனத்தில் தோன்றியதைச் சொல்லும்படியான நிர்ப்பந்தம் அன்று சுதமதிக்கு ஏற்பட்டு விட்டது.

     சுதமதியின் வார்த்தையைக் கேட்டு வைகைமாலை மன வருத்தமோ, கோபமோ அடையவில்லை. தன் சகோதரி தன்னுடைய போக்குக்கு இடையூறு செய்யாமல் எந்த அளவுக்குச் சகிப்புத் தன்மை காட்டினாளோ அந்த அளவுக்கு வைகைமாலையும் சகிப்புத் தன்மை காட்டி வந்தாள். தன் சகோதரியின் நோக்கம், அவளுடைய கொள்கை, அன்பு நிறைந்த உள்ளம் எல்லாம் அவளுக்குத் தெரியும். இதன் காரணமாக வைகைமாலைக்குச் சுதமதியின் பேரில் பக்தியும் பாசமும் அதிகமாயிற்றே தவிர, வெறுப்போ பகை உணர்ச்சியோ ஏற்பட்டது கிடையாது.

     வைகைமாலை சிரித்துக் கொண்டே, "அக்காவின் வார்த்தைகளிலும் உண்மை இருக்கிறது. ஆனால் என் கவலைகள் எல்லாம் வேறு. நீங்கள் தயவு செய்து எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லுங்கள். புத்த சேதியத்தில் யார் கொன்றார்கள்? நம்முடைய மாலவல்லி அங்கு தானே இருக்கிறாள்?" என்று கேள்விகளை அடுக்கினாள்.

     "புத்த விஹாரத்தில் கொல்லப்பட்டுக் கிடப்பவர் ரவிதாசர் என்ற பிக்ஷு. மாலவல்லி இந்த மாளிகைக்கு வரும் போது எவர் அவளைப் பின் தொடர்ந்து வந்தாரோ, அவரே தான் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கிறார். புத்த பிக்ஷுவாக இருந்த கலங்கமாலரையரையும் காணவில்லை. அவர் காணாமல் போனதற்குரிய காரணம் உனக்குத் தெரியும். ஆனால் மாலவல்லியும் காணாமல் போனதுதான் எனக்குப் பெரிய குழப்பத்தை அளிக்கிறது..." என்று சொன்னான் பூதுகன்.

     இதைக் கேட்டதும் வைகைமாலை திடுக்கிட்டு, "மாலவல்லியும் காணவில்லையா? இது என்ன விபரீதம்? அவள் எங்கே போயிருப்பாள்? அவளுக்கும் இந்தக் கொலைக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?" என்று கேட்டாள்.

     "அதை யார் கண்டார்கள்? நீ குழப்பம் அடைவதிலோ ஆச்சரியப்படுவதிலோ அர்த்தமே இல்லை. இப்படி எது நடந்தாலும் எதிர்பார்க்கக் கூடியதுதான். ஏனென்றால் இது காதல் விஷயம். அதிலும் களவியல் காதல். நான் தான் உன்னிடம் முன்பே சொன்னேனே, பௌத்த பிக்ஷுணிக் கோலம் பூண்டு திரியும் மாலவல்லியின் அந்தரங்க வாழ்க்கையில் ஏதோ ரகசியமான கதை இருக்கிறதென்று..."

     வைகைமாலை பிரமை பிடித்தவள் போல் ஒன்றும் தோன்றாதவளாக நின்று கொண்டிருந்தாள். சுதமதியின் முகத்தில் ஒரு ஏளனச் சிரிப்பு எழுந்தது. "எனக்குத் தெரியும், அந்த மாலவல்லியின் நடைமுறை சரியில்லையென்று. இந்த இளம் வயதில் துறவுக் கோலம் பூண்ட ஒரு பெண் வாழ்க்கையை நேரிய முறையில் நடத்த முடியாதென்று. புதருக்குள்ளே மல்லிகை மலர் பூத்திருந்தாலும் அதன் மணம் வெளியே பரவி அதைக் காட்டிக் கொடுத்து விடும். அதைப் போலத் தன் மனத்தைத் தான் பக்குவப் படுத்திக் கொண்டாலும், நல்லாடைகளையும் ஆபரணங்களையும் துறந்து சீவர ஆடைக்குள் தன் பொன் மேனியைப் புதைத்துக் கொண்டிருந்தாலும் யௌவனமும் அழகும் பிறர் பார்வையில் பட்டு மனத்தைக் கலக்காமல் இருக்காது. இயற்கையாக இந்தப் பருவத்தில் அவளுக்குத் துறவு மனப்பான்மை ஏற்பட்டுவிட்டது என்பதை நான் நம்பவே இல்லை. அப்படி ஏற்பட்டிருக்குமானால் தினமும் தனக்குரிய தருமத்தைப் புறக்கணித்து இரவு வேளையில் இரகசியமாக விஹாரத்தை விட்டுப் புறப்பட்டு இந்த மாளிகைக்கு வர மாட்டாள். அவள் இந்தக் கலையில் தேர்ந்தவள், தினமும் பாட வேண்டும் என்ற துடிப்பால் இங்கு வந்தாள் என்றால் நம்ப முடியாது. புத்த விஹாரத்தில் இருந்து கொண்டே தாராளமாகப் பேரின்பமயமான பாடல்களைப் பாடியிருக்கலாமே? இந்நாட்டில் பிராசீனமாக வந்த வேத உபநிஷத மார்க்கங்களை மறுபடியும் புனருத்தாரணம் செய்ய வேண்டும் என்பதற்காக ஆங்காங்கு பக்தி மார்க்கத்தில் ஈடுபட்ட சைவ நாயன்மார்களும் வைஷ்ணவ ஆழ்வார்களும் இசையில் தேர்ந்தவர்களாய் மனமுருகப் பக்திரசப் பாடல்களைப் பாடி மக்களின் மனத்தை வசீகரித்துக் கொண்டு வருகிறார்கள். ஆங்காங்கு இசையோடு கூடிய நாட்டியம், நாடகம் இவைகளை நடத்தி மக்களுக்குப் புராதன தரும மார்க்கத்தைப் புகட்டி எளிதில் அவர்களைத் தங்கள் மார்க்கத்துக்கு இழுக்கிறார்கள். இந்தப் புதிய வழியை, கலா ஞானத்தோடு கலந்த இந்தப் புதிய பிரசார வழியைக் கண்டு புத்த சமயத்தினரும் அவ்வழியில் செல்ல ஆசைப்படுகின்றனர். இந்தச் சமயத்தில் மாலவல்லியைப் போன்ற இசையில் தேர்ந்த புத்த பிக்ஷுணி ஒருத்தி சங்கத்திலிருப்பதை அவர்கள் பாக்கியமாக எண்ணிப் பயன்படுத்திக் கொள்வார்களே தவிர, அவளுடைய இசை ஞானத்தை முடக்கி வைத்து, வறண்ட துறவற வாழ்க்கைக்குள்ளேயே அவளை ஈடுபடுத்தமாட்டார்கள். அப்படி இருக்கையில் அவள் பாடுவதற்காகவே இங்கு இரவு வேளையில் ஒளிந்து மறைந்து வருகிறாள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் பாவம்! வைகைமாலை எதை அறிவாள்? அவளுக்கு வெளுத்ததெல்லாம் பால். அதிக உலக அனுபவம் பெறாதவள். எல்லாம் ஒரு நாள் தானே தெரிந்து கொள்வாள் என்று தான் பேசாமல் இருந்தேன். இன்று எல்லாம் விளங்கி விட்டன" என்றாள் சுதமதி.

     வைகைமாலை எதுவுமே பேசாமல் தலை குனிந்த வண்ணமே மனம் குழப்பியபடி நின்று கொண்டிருந்தாள். அவளுடைய அழகிய முகம் எதிர்பாராத செய்தியைக் கேட்டதனால் கலக்கமும் துயரமும் அடைந்து வாடி இருந்தது.

     பூதுகன் சிரித்தான். எப்பொழுதுமே, எதையுமே, பெரிய விபரீதமாகக் கருதி வாட்டமடைந்து, மனத் தளர்ச்சி அடைபவன் அல்ல அவன். இந்த உலகத்தில் எதையுமே சாதாரணமாக மதித்து, மன சந்தோஷத்தைக் குலைத்துக் கொள்ளாமல் ஆனந்தமாக வாழ்நாளைக் கழித்து விடுவதுதான் சுவர்க்கம் என்ற கொள்கையுடையவன் அல்லவா அவன்? தன்னுடைய காதலியின் மன வருத்தத்தையும் குழப்பத்தையும் அறிந்திருந்தும் அவன் மனம் குலையாமல் சிரித்துக் கொண்டிருந்தானென்றால் வியப்படைய என்ன இருக்கிறது!

     "அப்படியென்றால் மாலவல்லிக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தம் இருக்கும் என்று சொல்லுகிறீர்களா?" என்று கேட்டாள் வைகைமாலை.

     "நான் அப்படியெல்லாம் ஒரு முடிவுக்கு வர மாட்டேன். நான் இதில் தீர்மானமாக எதுவும் சொல்ல முடியாது. ஆனால் சில காரியங்கள் யார் மனத்திலும் சந்தேகத்தை யெழுப்பக் கூடியதாகத் தான் இருக்கின்றன. கொலை நடந்ததும் கலங்கமாலரையரும் மாலவல்லியும் தலைமறைவாய் எங்கோ போய் விட்டது யார் மனத்திலும் சந்தேகத்தை யெழுப்பக் கூடியது தானே? அதோடு மாத்திரமல்ல; புத்த விஹாரத்தில் நடந்த இக்கொலையின் விஷயம் அறிந்ததும் மாலவல்லியின் கதி என்ன ஆயிற்று என்று பார்ப்பதற்காக என்னோடு வந்த வீரவிடங்கனும் திடீரென்று என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் மாயமாய் மறைந்து விட்டான். இதுதான் எனக்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யத்தை அளிக்கிறது. மருவூர்ப்பாக்கத்துக்கு வந்து அங்கு இருக்கும் சாலைகளில் எல்லாம் தேடினேன். காணவில்லை. மருவூர்ப்பாக்கத்துக்கு நான் வந்ததற்குச் சிறிது நேரத்துக்கு முன்னால் ஒரு வீரன் குதிரையின் மீது அமர்ந்து எங்கோ சென்றதாக ஒரு வர்த்தகன் என்னிடம் சொன்னான். சந்தேகமின்றி அவன் வீரவிடங்கன் தான் என்று எனக்கு நிச்சயமாகத் தோன்றி விட்டது. நிச்சயம் வீரவிடங்கனுக்கு மாலவல்லி எங்கே போயிருக்கிறாள் என்பது தெரியாமல் இருக்காது என்று தான் நான் நினைக்கிறேன். வைகைமாலா! நீ இதைக் குறித்து வருந்துவதில் எவ்வித லாபமும் இல்லை. அவரவர்கள் தங்கள் வாழ்க்கை சுகத்துக்கு வழி வகுத்துக் கொள்கிறார்கள். அது சுலபமான வழியாகவும் இருக்கலாம்; அபாயகரமான வழியாகவும் இருக்கலாம். மாலவல்லி அவளுடைய யௌவனத்துக்கும் அழகுக்கும் ஏற்றாற்போல் கண்கவரும் கம்பீரமான யௌவன புருஷனைக் காதலனாக அடைந்திருக்கிறாள். இத்தகைய சிறந்த காதலனைப் பெற்றிருக்கும் போது, இத்தகைய தொடர்பு அவளுக்கு இருக்கும் போது, அதற்கு நேர்மாறான பிக்ஷுணி வாழ்க்கையை அவள் ஏன் கைக்கொள்ள வேண்டும்? கங்க நாட்டைச் சேர்ந்த அந்த வாலிபன் காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள புத்த சேதியத்திலுள்ள அவளைச் சந்திப்பதற்காக ஏன் ஓடோடி வரவேண்டும்?" என்றான் பூதுகன்.

     "அப்படியென்றால் அவர்கள் எங்கே போயிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்டாள் வைகைமாலை.

     "எனக்கு என்ன தெரியும்? காஞ்சிக்குப் போயிருக்கலாம். கங்கபாடிக்கும் போயிருக்கலாம். வேறு எங்கேயாவது போயிருக்கலாம். ஒன்றும் நாம் இப்பொழுது நிச்சயமாகச் சொல்ல முடியாது. என் மனத்தில் எத்தனையோ சந்தேகங்களெல்லாம் எழுந்து குழம்புகின்றன. உன்னோடு இவ்வளவு அந்தரங்கமாக பழகிய மாலவல்லி உன்னிடம் கூடச் சொல்லாமல் இப்படித் தலைமறைவாகப் போனது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உன்னிடம் அவள் தன் வாழ்க்கை ரகசியத்தையெல்லாம் மறைத்திருக்கிறாள். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்தது போல் இன்றிரவும் நீ எதிர்பார்க்க முடியாது. அவளுடைய இனிய இசையை நீ எப்பொழுது கேட்கப் போகிறாயோ? அவள் இசையோடு கலந்த உன்னுடைய ஆட்டம் ஊரறியப் பரிமளிக்கா விட்டாலும் மாளிகையினுள்ளே பரிமளித்துக் கொண்டிருந்தது. இதையெல்லாம் நினைத்தால் உனக்கு மிகுந்த துயரம் தான் ஏற்படும்..." என்றான் பூதுகன்.

     "எனக்கு ஏற்பட்டுள்ள வருத்தம் வாய்ச் சொல்லில் அடங்காது. அவளுடைய வாழ்க்கையில் இவ்வளவு ரகசியங்கள் புதைந்து கிடக்கும், இப்படியெல்லாம் நேரும் என்று நான் நினைக்கவே இல்லை. ஒன்றுக்குப் பின் ஒன்றாக எல்லாம் ஆச்சரியத்தைத்தான் அளிக்கின்றன. நீங்கள் என்ன சொன்னாலும் அவளுக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்திருக்குமோ என்று நான் அஞ்சுகிறேன். அவள் புத்த பிக்ஷுணிக் கோலம் பூண்டு தன்னை மறைத்து வாழ வழி ஏற்பட்டிருந்தாலும், இத்தகைய கொடூரமான காரியங்களைச் செய்வதற்காக இந்தகைய கோலங்களை அவள் கொண்டிருப்பாள் என்பதை நான் நம்ப மாட்டேன். அவள் மிகவும் அடக்கமானவள், அன்புருவானவள். ஏதோ விதிதான் அவளை இப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது" என்றாள் வைகைமாலை.

     'விதி' என்ற வார்த்தையைக் கேட்டதும் பூதுகன் சிரித்தான். "விதி, விதி என்று தனியாக ஒரு கற்பனையை வளர்த்துப் பெரிய ஞானவான்கள் கூடத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் போது, பாவம்! பேதைப் பெண் நீ, விதியைப் பற்றி நிறையப் பேச மாட்டாயா? தனியாக விதியொன்று இருந்து ஆட்டுவதாக நாம் நினைப்பதே தவறு. மாலவல்லிக்குத் தான் புத்த விஹாரத்திலிருந்து மறைய வேண்டுமென்று அவளுடைய புத்திக்குத் தோன்றியதாக இருக்கலாம். அல்லது வேறொருவருடைய புத்திக்குத் தோன்றிய விஷயமாக இருக்கலாம். ஆகையால் இதையெல்லாம் விதி என்று சொல்லாமல் புத்தியால் யோசித்து முடிவு செய்த விஷயமாக நினைக்கிறேன்" என்றான்.

     வைகைமாலை ஏதோ பதில் சொல்ல நினைத்தாள். ஆனால் அதற்குள் அவளுடைய சகோதரி சுதமதி சிறிது ஆத்திரம் நிறைந்த குரலில், "நீங்கள் மிகவும் புத்திசாலி, மிகவும் கெட்டிக்காரர். ஆனால் உங்கள் கொள்கைதான் எனக்குப் பிடிக்கவில்லை. நம்முடைய புத்திக்கும் சக்திக்கும் மீறிய சக்தியொன்று இருந்துதான் நம்மையெல்லாம் ஆட்டி வைக்கிறது என்று தான் நான் கூறுகிறேன். இதெல்லாம் நம் முன்னோர்கள் கண்ட உண்மை. இதை நீங்கள் மறுத்துக் கூற முடியாது" என்றாள்.

     பூதுகன் எப்பொழுதும் போல் ஒரு சிரிப்பு சிரித்தான். "நம்முடைய சக்திக்கும் மீறிய சக்தியொன்று இருக்கிறது என்பதும் நம்முடைய புத்திக்குத் தானே படுகிறது" என்றான்.

     "நீங்கள் சொல்லுகிறபடி தங்களுடைய புத்தியாலும் சக்தியாலுமே ஒரு பொருளைக் கண்டு பிடித்தார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவர்கள் கண்டு பிடித்த உண்மைகளை நீங்கள் மறுக்க முடியாதல்லவா?" என்றாள் சுதமதி.

     "மறுக்க முடியாதா? அதைத் தானே நான் மறுத்துக் கொண்டு வருகிறேன். அவர்கள் முயற்சியில் கண்ட பொருளை, சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ள முடிகிறதே தவிர அவர்கள் கண்ட பொருளை நாம் காண முடிவதில்லை அல்லவா? நமக்கும் அவர்களால் காட்ட முடியவில்லை அல்லவா?"

     இதற்குத் தக்க பதில் சொல்லச் சுதமதி முயற்சித்தாள். ஆனால் அதற்குள் யாரோ, "சுவாமி" என்று கூப்பிடும் குரல் கேட்கவே அவர்கள் கவனம் எல்லாம் வாயிற் பக்கம் சென்றது.

     பூதுகன் வெளியில் சென்று அங்கு வந்திருந்த ஒரு மனிதரிடம் ஏதோ சில வினாடிகள் பேசிக் கொண்டிருந்து விட்டு அவசரம் அவசரமாக உள்ளே வந்து, "வைகைமாலா! நான் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது. நான் எங்கே போகிறேன் என்பதை முடிவாகச் சொல்ல முடியாது. எப்பொழுது திரும்புவேன் என்றும் சொல்ல முடியாது. ஆனால் எங்கும் நான் தங்கிவிட மாட்டேன். ஏனென்றால் எதைச் சகித்துக் கொண்டாலும் உன் பிரிவாற்றாமையை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது, நீ கவலைப்படாதே. உன் தோழி எங்கே இருக்கிறாள், எப்படி இருக்கிறாள் என்பதையெல்லாம் கண்டுபிடித்துத் தெரிந்து கொண்டு உன்னிடம் வந்து சொல்ல வேண்டியது என் பொறுப்பு" என்று சொல்லி வைகைமாலையை அன்புறத் தழுவி விடைபெற்றுக் கொண்டான்.