மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம் - காலச் சக்கரம்

அத்தியாயம் 14 - புதிய விருந்தினன்

     சோழ வள நாட்டில் கரிகாலனால் சமைக்கப்பட்ட பூம்புகார் நகருக்குச் சிறிது புகழ் குறைந்து விட்டது என்ற உண்மை தொண்டை நாட்டிலுள்ள காஞ்சி நகரைப் பார்க்கக் கொடுத்து வைத்தவர்களுக்குத்தான் தெரியும். ஒரு காலத்தில் பூம்புகாருக்கு எத்தகைய சிறப்பும் பெயரும் இருந்ததோ, அத்தகைய பெருமையும் சிறப்பும் காஞ்சிமா நகருக்கு இருந்தது.

     அவனி நாராயணன் என்ற இயற் பெயரையும், நந்திவர்மன் என்ற குலப் பெயரையும் பெற்றுக் காவிரி நாடன் என்ற சிறப்புப் பெயரையும் தாங்க நின்ற பல்லவப் பேரரசர் ஆளுகையில் அப்பொழுது தலைநகராக விளங்கிய காரணத்தால் மிகுந்த கர்வம் அடைந்தது போல் திகழ்ந்து கொண்டிருந்தது காஞ்சிமா நகரம். இதற்கு அடையாளமாக நந்தியைச் சின்னமாகப் பொறிக்கப்பட்ட வெண் கொடிகள் வெற்றியைப் பாடி வானளாவப் பறந்து கொண்டிருந்தன. அவனி நாராயணன் சைவ சமயத்தவராக இருப்பினும் எல்லாச் சமயங்களையும் ஆதரிக்கும் மனப் பண்பு உள்ளவராகத் திகழ்ந்ததால் காஞ்சிமா நகரில் வைஷ்ணவர்கள், சைவர்கள், ஜைன, புத்தசமயத்தைச் சேர்ந்தவர்கள் யாவருமே தங்கள் மத சம்பிரதாயங்களைப் பரப்பி மிக சுதந்திரத்துடன் வாழ்ந்து வந்தனர்.

     அவனி நாராயணன் சிவபெருமானிடம் பக்தி கொண்டவராய் எப்பொழுதும் நெற்றியில் திருநீறு அணிந்து பெருமானைப் புகழ்ந்து பாடுவதிலும் பெருமானைப் பாடுவதைக் கேட்டுக் களிப்பதிலுமே சிந்தையைச் செலுத்துபவராய் இருந்தார். ஆனாலும் நகரில் வணிகப் பெரு மக்களின் பேராதரவு பெற்று வளர்ந்து நின்ற சமண சமயத்துக்கு எவ்விதத் தீங்கும் நினையாது பெருங் குணம் படைத்த புரவலராக வாழ்ந்து வந்தார். நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வந்த ஜைன சமயத்தின் காரணமாகக் காஞ்சி நகரின் ஒரு பகுதியே ஜனகஞ்சி என்ற பெயர் பெற்றுத் திகழ்ந்தது.

     அச் சமயம் புத்த சமயம் மிகச் சிறப்புள்ள நிலையிலே இல்லாவிடினும் காஞ்சிமா நகரில் சில குறிப்பிட்ட இடங்களில் பௌத்த விஹாரங்களும் பௌத்த மதப் பள்ளிகளும் மிக உன்னத நிலையில் தான் இருந்தன. அழகான வீதிகளில் துவராடை பூண்டு பிக்ஷா பாத்திரம் ஏந்திச் செல்லும் பௌத்த பிக்ஷுக்களையும், மயில் பீலி தாங்கித் திரியும் சமணத் துறவிகளையும், விபூதி ருத்திராட்சம் துலங்கக் காட்சியளிக்கும் சிவனடியார்களையும், வைணவ பாகவதோத்தமர்களையும் நேச மனப்பான்மையுடன் கலந்திருக்கக் காண முடிந்தது. சைவமும் வைணவமும் மிகவும் முன்னேறி வந்த அக்காலத்திலும் புத்த மதத்தினரும், சைவ மதத்தினரும் தங்கள் மதப் பிரசாரத்தில் தீவிர நிலையைக் காட்டி வந்தனர் என்றால் அதை அனுமதித்து வந்த சைவ வைணவர்களின் பெருந் தன்மையையும், மன்னரின் சம நோக்கத்தையும் நாம் புகழாமலிருக்க முடியாது.

     பௌத்த மதத்தினரை விட ஜைன மதத்தின் பிரசார வேகமும் பலமும் தலை தூக்கி நின்றன. வணிகப் பெருமக்களின் பேராதரவும் மக்களின் மதிப்பும் பெற்று இருந்த அச் சமயத்தினர் மற்ற சமயத்தினரின் செல்வாக்கில் மிகுந்தே இருந்தனர். இந்தத் தருணத்தில் சமண சமயத்திலுள்ள சிலரிடையே வேற்றுமை மிகுந்திருந்தது. சிலர் மிகவும் செருக்குடையவர்களாக இருந்தனர். சிலர் அரசியலில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியிருந்தனர். வணிக மக்களிடம் பெருமதிப்புப் பெற்றிருந்த சமணத் துறவிகள் தங்களிடம் அபிமானம் வைத்த குடும்பத்தினரிடமே தங்களுடைய அதிகாரங்களைப் பிரயோகிக்கத் தொடங்கினர். அதோடு நந்திவர்மனின் தம்பி முறையாக வேண்டிய சிம்மவர்மன் ஒரு தீவிர சமணவாதியாக இருந்தான். சிம்மவர்மன் பல்லவ அரசன் நந்திவர்மனுக்குச் சொந்தத் தம்பியாய் இல்லாவிட்டாலும் அவனுக்கு அரசாங்கத்தில் பெரு மதிப்பும் கௌரவமும் இருந்தன. இதற்குக் காரணம் பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக, சிம்மவர்மனின் பாட்டனாகிய சித்திரமாயன் தான் அரசனாக வேண்டியவன். ஆனால் சித்திரமாயன் பட்டத்துக்கு வரும் சந்தர்ப்பத்தில் சாம்ராஜ்யத்தையே சிதைக்கக் கூடிய போர்க் குழப்பங்கள் ஏற்பட்டிருந்த படியால் அவனுக்குச் சித்தப்பனான இரணியவர்மனின் மேற்பார்வையில் அவன் மகன் இரண்டாம் நந்திவர்மன் பட்டம் சூட்டிக் கொண்டான். அதிலிருந்து ராஜ்யப் பாரம்பர்யம் கைமாறிவிட்டது. அவ்வழியில் வந்த வீரநாராயணன் என்னும் மூன்றாம் நந்திவர்மன் அரச சிம்மாசனம் ஏறினான். முதற்கிளையில் உதித்த சிம்மவர்மனுக்குச் சிம்மாசனம் ஏறும் பாக்கியம் கிடைக்காவிட்டாலும், அவனுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் செல்வாக்கும் அளித்திருந்தான் நந்திவர்மன். என்னதான் தனக்கு மரியாதையும் செல்வாக்கும் இருந்தாலும் உலகையாளும் அரசன் என்ற புகழ் துர்ப்பாக்கியவசமாக வேறு கைக்கு மாறிவிட்டதே என்ற பொறாமையில் சிம்மவர்மன் நந்திவர்மனின் அரசைக் கவிழ்க்கும் சில சூழ்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கினான். பாவம், அவனுடைய சூழ்ச்சிகளுக்குச் சமண சமயத்தைச் சேர்ந்த சில செல்வம் மிகுந்த வணிகர்களும் புகழ்பெற்ற சமயப் பிரசாரகர்கள் சிலரும் உதவி செய்தது தான் மிகவும் பரிதாபகரமானது.

     மாலை வேளை. தேவர்களின் அமராவதி பட்டினத்தையும் அழகில் மிஞ்சியதாக விளங்கும் காஞ்சிமா நகரின் வானளாவும் மாடங்கள் நிறைந்த மாளிகைகளின் சாளரங்களில் தீப அலங்காரங்கள் செய்யப்பட்டு நகரையே ஒளி மயமாக்கின. அன்றுதான் அந்த ஊருக்கே புதிதாக வந்தவன் போலும், அந்த நகரின் பேரழகைக் கண்டு பெரு வியப்பில் ஆழ்ந்து விட்டவன் போலும் தோன்றிய வாலிபன் ஒருவன் விசித்திர விசித்திரமாகத் தோன்றும் அழகிய பெரிய மாளிகைகளையும் தேவாலயங்களையும் பார்த்துக் கொண்டே பல வீதிகளையும் கடந்து நடந்து வந்தான். பல தெருக்களையும் கடந்து நடந்து கொண்டிருக்கும் அவன் எந்த வீதியிலோ தனக்கு வேண்டிய யாரையோ தேடிக் கொண்டு போகிறான் என்பதைத் துருவித் துருவிப் பார்க்கும் அவன் கண் பார்வையிலிருந்து நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது.

     அவன் ஒரு பெரிய வீதியை அடைந்ததும் ஒரு வீட்டிலிருந்து யாழின் ஒலியும், இன்னொரு வீட்டில் சதங்கை ஒலியும், மற்றொரு வீட்டிலிருந்து குழல் ஒலியும், பிரிதொரு வீட்டிலிருந்து இனிய குரலால் ஒரு பெண் பாடும் ஒலியும் வரிசையாகக் கேட்டுக் கொண்டிருந்தன. அவன் ஓர் இடத்தில் தயங்கி நின்றான். அவன் நாடி வந்த வீதி இது தான் என்பதைப் பிறரைக் கேட்காமலேயே அறிந்து கொண்டு விட்டான். ஆனால் அவன் யாரை நாடி வந்தானோ அவர்கள் இருக்கும் மாளிகையை அறிந்து கொள்வது எப்படி என்று தான் தயங்கி நின்றிருக்க வேண்டும். நல்லவேளை, அவன் எதிரே ஒரு மனிதர் வந்து கொண்டிருந்தார். அந்த வாலிபன் மெதுவாக அந்த மனிதரிடம் நெருங்கி, "ஐயனே! இங்கு சோழ நாட்டிலிருந்து வந்து குடி புகுந்திருக்கும் 'தேனார்மொழி' என்னும் இசைக் கணிகையின் மாளிகை எது?" என்றான்.

     அந்த வாலிபனின் கேள்விக்குப் பதில் அளிக்காமல் அந்த மனிதர் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே, "சோழ நாடு... அப்படி ஒரு நாடு கூட இருக்கிறதா? என்னையா பழைய புராண காலத்து நாடுகளை யெல்லாம் பற்றி இப்பொழுது பேச வந்து விட்டீர்? இப்பொழுது நீர் குறிப்பிடும் அந்த நாடுகள் எல்லாம் பல்லவ நாடு என்பதை மறந்து, இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகரில் வந்தே 'சோழ நாடு' என்று பேசுகிறீரே?" என்றார்.

     அந்த வாலிபனும் சிறிது அலட்சியமாகச் சிரித்தான். "உண்மைதான், தவறு தான். கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையை நினைத்துப் பார்ப்பது கூட இப்பொழுது நீங்கள் சொல்வது போல் ஏதோ புராண காலத்தையோ புராதன காலத்தையோ நினைத்துப் பார்ப்பது போல் தான் இருக்கிறது. என்ன செய்வது? புராண காலத்திலோ புராதன காலத்திலோ ஏற்பட்டவைகளையெல்லாம் நம்முடைய நினைவுக்குக் கொண்டு வர இன்னும் காவியங்களும் ஓவியங்களும் அழியாமல் இருக்கின்றன அல்லவா? பெருமை பொருந்திய இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தின் தலை நகரிலிருந்து, நான் சோழ நாடு என்று சொன்னதன் காரணமாகச் சோழ பரம்பரையை நினைவுப்படுத்திவிட்டது பிசகுதான். வேறு அடையாளம் சொல்லிக் கேட்க முடியாமையாலும் சோழ நாடு, சோழ நாடு என்று சொல்லிப் பழக்கம் ஏற்பட்டு விட்டதாலும் அப்படிக் கேட்டேன். பல்லவர்கோனும் தன்னைத் "தமிழ்த் தென்றல் புகுந்துலவும் தண் சோணாடன்" என்று சொல்லிக் கொள்வதால் சோழநாடு என்று சொல்லுவதில் தவறு இல்லை என்று எண்ணி விட்டேன். போகட்டும், இப்பொழுது என் தவறை உணர்ந்து விட்டேன். குடந்தைக் கோட்டத்திலிருந்து இங்கு வந்து குடிபுகுந்திருக்கும் தேனார்மொழியால் என்ற அணங்கின் வீடு எது என்று கேட்கிறேன். தயைசெய்து தங்களுக்குத் தெரிந்தால் சொல்லுவீர்களா?" என்று கேட்டான்.

     அந்த மனிதர் அவ் வாலிபன் பேச்சிலிருந்து அவன் ஒரு சாதாரண வாலிபன் அல்ல, நன்கு படித்த பேரறிவாளன் என்பதை உணர்ந்து கொண்டு தம்முடைய மதிப்பையும் விட்டுக் கொடுக்காதவர் போல், "பழக்கத்தினால் ஏற்பட்ட தவறை நான் பெருங் குற்றமாய்க் கருதவில்லை. இங்கிருந்து மேற்கே பொன் தகடு போர்த்தியது போல் துலங்கும் அதோ அந்த மஞ்சள் நிற மாளிகை தான் தேனார்மொழியாளின் மாளிகை" என்று சொல்லி விட்டு நடந்தார். அந்த வாலிபனும் அலட்சியமாகப் புன்முறுவல் பூத்தபடியே அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு நடந்தான். ஆனால் சில வினாடிகளே பேசிக் கொண்டிருந்தாலும் அந்த மனிதரின் முகத்தைத் தன் நினைவில் வைத்துக் கொள்ள நினைத்தான் அந்த வாலிபன்.

     தேனார்மொழியாள் சோழ நாட்டிலுள்ள குடந்தைக் கோட்டத்திலிருந்து பல்லவரின் அரச சபையில் ஒரு இசைக் கணிகையாக ஊழியம் செய்ய வந்தவள். இசைக் கலையில் மிகவும் தேர்ந்தவள் என்பதோடு, பல்லவ அரசர்களில் மிகவும் சிறந்தவனாக விளங்கியவனும் இசைக் கலையில் லய வகைகளில் பல நடைகளைக் கண்டு சாஸ்திரம் வகுத்தவனுமான மகேந்திர பல்லவன் மீட்டிய பரிவாதினி என்னும் எட்டு பொன் நரம்புகளைக் கொண்ட அற்புத யாழை அவனுக்குப் பின் எடுத்து மிகவும் அழகாக வாசிக்கும் திறமையும் பெற்றிருந்தாள் தேனார்மொழியாள். குடந்தைக் கோட்டத்திலிருந்த அவள் இசைத்திறனை அறிந்து வீரநாராயண நந்திவர்மன் மிகப் பெருமையோடு அவளைத் தன் சபையில் பிரதான இசைக் கணிகையாக அமர்த்திக் கொண்டான். அரசனின் அன்பும், நன்மதிப்பும் இசைக் கலையில் பிறரை வசீகரிக்கும் தேர்ச்சியும் பெற்று மக்களின் நன்மதிப்புக்கும் பாத்திரமான தேனார்மொழியாளின் பெருமையைப் பற்றி நாம் சொல்ல வேண்டுமா? உண்மையாக அவளுடைய பெரிய மாளிகை பளபளக்கும் மஞ்சள் வர்ணக் குழம்புகளால் பூசப்பட்டிருந்தாலும் பொன் தகட்டால் போர்த்தப்பட்டது போல் தானிருந்தது. உண்மையிலேயே தன் மாளிகையையே பொன் மாளிகையாக்கிக் கொள்ளும் செல்வச் செருக்கும் அவளுக்கு இருந்தது.

     அந்த வாலிபன் அந்த மாளிகையின் வாசலில் வந்து சிறிது நேரம் தயங்கி நின்றான். உள்ளிருந்து வந்த அந்த யாழின் ஒலி கேட்டு அவன் அப்படித் தயங்கினானோ அல்லது திடீரென்று அந்த மாளிகைக்குள்ளே போவது அவனுக்குச் சங்கோசத்தைக் கொடுத்ததோ தெரியாது. ஏதோ யோசனை செய்த வண்ணமே தயங்கியபடியே மெதுவாக உள்ளே சென்றான்.

     அந்த மாளிகைதான் எவ்வளவு அழகு! வெளிப்புறத்தை விட உட்புறம் சித்திர வேலைப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. வெளிப்புறத்தில் பார்வைக்குப் பொன் வண்ணமாகக் காட்சியளித்த அந்த மாளிகை உட்புறத்தில் பொன் மயமாகவே காட்சியளித்தது. வட்ட வடிவமான தாழ்வாரத்தைச் சுற்றிலும் அழகான பொன் தூண்கள் தாங்கி நின்றன. சுவர்களில் நீண்ட நிலைக் கண்ணாடிகளும் சிவபெருமானின் பல திருக்கோலங்களைக் காட்டும் அழகான ஓவியங்களும் பதிக்கப்பட்டிருந்தன. தரையெங்கும் விலையுயர்ந்த இரத்தினக் கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன. சீன நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட வர்ணக் கண்ணாடி தொங்கு விளக்குகள் தங்கள் வர்ண ஒளியால் அந்த அழகிய தாழ்வாரத்தைக் கற்பனைக்கு எட்டாத ஒரு ஒளி உலகத்தைக் கனவில் கொண்டு வந்து காட்டுவது போன்று சூழ்நிலையும் ஏற்படுத்தின. ஆம்! அந்த ஒளி உலகமே மன மயக்கத்தைக் கொடுப்பதாய்த் தானிருந்தது. அந்த ஒளி உலகத்தையே தனி அரசாட்சி செய்யும் பேரரசு போல் பொன்னாடையணிந்து, பொன் மணி பூஷணங்கள் அணிந்து உலகை மறந்து இசையில் கலந்து இருக்கும் சுந்தரியையும் பார்த்த பின் இரும்பான மனசும் மெழுகாக உருகிவிடும் என்பது நிச்சயம். ஆம்! அவள் தான் தேனார்மொழி. அவளுடைய பேரெழில் தான் என்ன? அவள் இள நங்கையல்ல! அவளுக்கு வயது முப்பதுக்கு மேலிருக்கும். ஆயினும் அந்தப் பொன் மேனியின் அழகில் மாசுமறுவற்ற இளமை யெழில் தான் மிகுந்திருந்தது. உண்மையிலேயே அந்த வாலிபன் தட்டுத்தடுமாறி ஏதோ ஒரு உலகத்துக்கு வந்து விட்டவன் போல் தான் மயங்கி நின்று கொண்டிருந்தான். அவனுடைய மயக்கம் தெளியச் சிறிது நேரம் சென்றது. இசையில் மெய் மறந்து இருக்கும் அந்த அணங்கின் கவனத்தை எப்படித் திருப்புவது என்றுதான் அவனுக்குத் தெரியவில்லை. அவன் மெதுவாக நடந்து தேனார்மொழியாளுக்குச் சமீபமாகப் போடப்பட்டிருந்த ஒரு ஆசனத்தில் உட்காருபவன் போல உட்கார்ந்து, அதைச் சிறிது சத்தம் எழும்படி நகர்த்தி அவள் கவனத்தைக் கவர்ந்தான்.

     யாழின் சுருதியோடு இணைந்து அமைதியான இசை வெள்ளத்தில் மூழ்கியிருந்த தேனார்மொழியாளுக்கு இடையே களங்கத்தை ஏற்படுத்துவது போல் ஒரு சத்தம் எழவே சுய உணர்வு பெற்றவளாய்த் தன் அழகான விழிகளைத் திறந்து பார்த்தாள். தன் எதிரே ஆசனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் வாலிபனைக் கண்டதும் அவளுக்குச் சிறிது திகைப்பு ஏற்பட்டது. அவளுடைய அழகிய விழிகள் பரபரப்பு அடைந்து வியப்பில் சுழன்றன.

     அவ்வேளையில் ஒருவரும் அறியா வண்ணம் தன் மாளிகையில் நுழைந்ததோடு எவரும் உபசரித்து 'உட்காரு' என்று சொல்லாதபோது தானே வந்து ஆசனத்தில் அமர்ந்திருக்கும் மனிதரைப் பற்றி அவள் என்ன நினைப்பது? உண்மையிலேயே அவ்வாலிபன் சிறிது அதிர்ஷ்டம் செய்தவனாகத்தானிருக்க வேண்டும்? இல்லாவிட்டால் ஒரு வாலிபன் அந்த நிலையில் துணிவோடு வந்து தன் எதிரில் அமர்ந்திருப்பதைப் பார்த்தும் தேனார்மொழியாள் பொறுமையோடு இருந்தாள் அல்லவா? பாவம்! இயற்கையிலேயே அந்த வாலிபனின் கம்பீரமான முகவொளி தேனார்மொழியாளின் மனோ வேகத்தையே அடக்கிப் பிடித்திருக்க வேண்டும். எத்தனையோ அரச குமாரர்களின் முகங்களையும், பிரபுக்களின் முகங்களையும் பார்த்திருக்கும் அவளுக்கு அந்தப் புதிய முக கம்பீரம், காணாத புது வசீகரமாகத்தான் இருந்தது. சில நிமிட நேரங்கள் அந்த வாலிபனின் ஒளி முகத்தை அவள் பார்க்க முடியாதபடி இனமறியாத நாணம் அவளைப் பிடித்துக் கொண்டு தலைகுனிய வைத்தது. அவள் தன் பெயருக்கு ஒத்த இனிய குரலில், "தாங்கள் யார்?" என்று கேட்டாள், மிகுந்த மரியாதையோடும் அடக்கத்தோடும்.

     "நான் சோழ நாட்டைச் சேர்ந்தவன்..." என்று அவனும் சுருக்கமாகவே சொல்லி நிறுத்தினான். அவன் இவ்வளவு சுருக்கமான பதில் சொல்லி நிறுத்துவான் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவனோடு பேசுவதற்கே வெட்கப்பட்ட அவளுக்கு இந்த நிலை மேலும் சற்றுத் தர்மசங்கடத்தைத்தான் உண்டாக்கியது.

     "தங்கள் சொந்த ஊர் எதுவோ? நான் தெரிந்து கொள்ளலாமா?" என்று வினவினாள் பணிவான குரலில்.

     "உங்கள் சொந்த ஊருக்குச் சமீபம் தான். குடந்தைக்குச் சமீபமாக உள்ள திருப்புறம்பியம்!" என்று சொல்லி நிறுத்திக் கொண்டான் அவன்.

     'சோழ நாட்டைச் சேர்ந்தவன். அதிலும் தன்னுடைய சொந்த ஊருக்குச் சமீபத்தில் இருப்பவன்' என்பதைக் கேட்ட அவளுக்கு அவனிடம் ஒரு மதிப்பும் பரிவும் ஏற்பட்டன. இதன் காரணமாக அவனோடு இன்னும் கொஞ்சம் பேசத் தைரியமும் ஏற்பட்டிருக்க வேண்டும். அவன் முகத்தை அவள் மறுபடியும் உற்றுக் கவனித்து விட்டு, "தாங்கள் திருப்புறம்பியத்தைச் சேர்ந்தவர்களா? மிக்க மகிழ்ச்சி. சோழ நாட்டவர்கள் வந்தால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் என் வீட்டில் விருந்தினராகத் தங்கலாம். தாங்கள் என் வீட்டை நாடி வந்ததற்கு மிகவும் சந்தோஷம்" என்றாள் சிறிது வெட்கமும் பரிவும் நிறைந்த குரலில்.

     அந்த வாலிபன் சிரித்தான். "தங்கள் உபசார வார்த்தைக்கு நன்றி. நான் இந்தக் காஞ்சிக்கு விருந்து சாப்பிடுவதற்காக வரவில்லை. சோழ நாட்டில் வாழும் ஒருவனுக்கு மற்ற எந்த நாட்டின் விருந்தும் மிக உன்னதமாக இருந்ததில்லை. நான் இந்தக் காஞ்சிக்கு வந்த காரணமே வேறு. அதுவும் உங்களைத் தேடி வந்த காரியம் மிக முக்கியமானது" என்றான்.

     அந்த வாலிபனின் வார்த்தைகள் அவளுக்கு மிகுந்த வியப்பை அளித்தன. அவள் ஒருவிதமாகத் தன்னைச் சமாளித்துக் கொண்டு, "நீங்கள் எந்தக் காரியமாகவேனும் இந்த ஊருக்கு வந்திருக்கலாம். ஆனால் சோழ நாட்டிலிருந்து வந்திருக்கும் தங்களுக்கு உபசாரம் செய்ய வேண்டியது என்னுடைய கடமை. சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் எவரும் எங்கே இருந்தாலும் அவர்களோடு ஒட்டிய இந்தப் பண்பாட்டிலிருந்து விலக முடியாதல்லவா? இருக்கட்டும் - தாங்கள் என்னிடம் எவ்விஷயமாக வந்திருக்கிறீர்கள்? தெரியப்படுத்தினால் நன்மையாக இருக்கும். தங்களுக்கு அரசாங்கத்தில் ஏதேனும் உதவிகள் வேண்டுமாயின் செய்யச் சித்தமாய் இருக்கிறேன். தங்களுக்கு ஏதேனும் உத்தியோகம் அரண்மனையில் வேண்டுமாயினும்..." என்று மெதுவாகச் சொல்லி நிறுத்தினாள்.

     அந்த வாலிபன் கொஞ்சம் ஏளனமாகச் சிரித்துக் கொண்டே, "எனக்கு அரச சமூகத்தில் ஆக வேண்டியது ஒன்றுமில்லை. நான் சோழ அரச சபையில் ஏதேனும் உத்தியோகம் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். இந்தப் பல்லவ அரசர்களின் அரச சபையில் உத்தியோகம் தேடிக் கொள்ளும் அளவுக்கு என் புத்தி சுய மதிப்பை இழந்து விடவில்லை. அதுவும் இந்த அரசாங்கத்தில் ஒரு பெண்ணின் சிபாரிசினால் உத்தியோகம் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு என்னுடைய நிலை வந்து விடவில்லை" என்றான்.

     அந்த வாலிபன் தன்னுடைய வார்த்தைகளுக்கு அத்தகைய முறையில் பதில் அளிப்பானென்று தேனார்மொழியாள் எதிர்பார்க்கவில்லை. தன் உள்ளத்தில் திடீரென்று ஏற்பட்ட பரிவும் உதவி செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியும் தனக்கு பல்லவ அரச சபையில் உள்ள மதிப்பு காரணமாக ஏற்பட்ட மமதையுமே தன் எதிரில் வந்து நிற்கும் ஒரு மனிதரின் மனநிலை, அந்தஸ்து இவைகளை அறிந்து கொள்ளும் முன்னால் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லும்படி செய்து விட்டன என்று அவள் நினைந்து மனம் வருந்தினாள். "மன்னிக்கவும் - நான் தங்கள் மன நிலையைப் பற்றியும், தங்கள் யோக்கியதையைப் பற்றியும், தாங்கள் வந்த காரியம் என்ன என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் முன்னால் இத்தகைய வார்த்தைகள் பேசியது தவறு தான். தாங்கள் யார்? தாங்கள் என்னிடம் வந்த காரியம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தங்களுடைய காரியம் என்ன என்று தெரிந்து கொண்ட பின் அக்காரியத்துக்கு என்னாலான உதவிகளை யெல்லாம் செய்யச் சித்தமாயிருக்கிறேன்" என்றாள்.

     "தங்களிடம் நான் வந்த காரியத்தைப் பளிச்சென்று சொல்லி விட முடியாது. அது மிகவும் அந்தரங்கமான விஷயம். இங்கு நீங்கள் தனித்திருக்கும் நிலையில் அந்த விஷயத்தைச் சொல்லலாம் - ஆயினும் திடீரென்று யாரேனும் வந்து நம்முடைய வார்த்தைகளைக் கேட்டுவிட்டால் மிகவும் விபரீதமாக முடியும்..." என்று கூறினான்.

     அவனுடைய வார்த்தைகள் தேனார்மொழியாளுக்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யத்தை யளித்தன. அவன் தன்னிடம் எத்தகைய அந்தரங்கமான காரியத்தை உத்தேசித்துப் பேச வந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடியாதபடி குழப்பம் தான் அப்பொழுது அவளுக்கு ஏற்பட்டது. "நீங்கள் பயப்பட வேண்டாம் - நீங்கள் என்னோடு தாராளமாகப் பேசலாம். உங்களுக்கு எவ்வித இடையூறோ ஆபத்தோ ஏற்படாது. அப்படி ஏற்பட்டாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் மேல் நான் வாயில் கதவை வேண்டுமானால் சாத்தித் தாழிட்டுவிட்டு வருகிறேன்..." என்று சொல்லிச் சட்டென்று வாசற் பக்கம் சென்று கதவை மூடித் தாழிட்டு விட்டு உள்ளே வந்து அவள் எதிரில் நின்றாள்.

     "நீங்கள் இவ்வளவு சகஜமான உள்ளமும் உபகார சிந்தையும் உள்ளவர்களாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. அதுவரையில் மகிழ்ச்சி. முதலில் நான் இன்னாரென்று தங்களுக்கு அறிமுகம் செய்து கொள்ள வேண்டாமா? என் பெயர் பூதுகன். நீங்கள் இந்தப் பெயரை இதற்கு முன் எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கலாம்..." என்று சொல்லி விட்டு ஆர்வத்தோடு அவள் முகத்தைப் பார்த்தான் அவன்.