உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) முதல் பாகம் - காலச் சக்கரம் அத்தியாயம் 16 - அதிசய உறவு! பூதுகன் அவள் சொல்லிய அறையில் கதவுக்குச் சமீபமாக ஒதுங்கி மறைந்து நின்றானே தவிர, அந்த இடத்திலிருந்த வண்ணமே வெளித் தாழ்வாரத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கக் கூடிய வசதி அவனுக்கு இருந்தது. அங்கே மெதுவான குரலில் பேசினாலும் கூட அவன் காதில் விழக்கூடிய நிலையில் தான் இருந்தது. அவன் மறைவிலிருந்தபடியே அங்கு என்ன நடக்கிறது என்பதை எட்டிப் பார்த்த வண்ணம், அங்கு வந்தவன் யார், அவன் எப்படி இருக்கிறான் அவன் எதற்காக வந்தான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு இருந்தான். தேனார்மொழியாள் உபசாரத்தோடு ஒரு மனிதரை உள்ளே அழைத்து வந்தாள். அந்த மனிதனுக்கு முப்பத்தைந்து வயது இருக்கலாம். மிகவும் கம்பீரமான முறையில் உடை அணிந்திருந்தான். அவன் இடையில் அணிந்திருந்த பட்டு உடையும், தோளில் போட்டிருந்த பீதாம்பரமும், கழுத்தில் மின்னும் இரத்தின மாலைகளும் காதில் தொங்கிய குண்டலங்களும் அவன் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதை எடுத்துக் காட்டின. அவன் இடையில் தங்க உறையில் இடப்பட்டிருந்த வாள் ஒன்று தொங்கியது. மிகவும் கம்பீரமான உருவம், ஆனால் கண்களில் மாத்திரம் கொடூரமும் வஞ்சனையும் தான் மிதந்தன. அவன் தம்முடைய அடர்ந்த மீசையைத் தன் கைகளால் அடிக்கடி தடவியபடி இருந்தான். அவன் அலட்சியமாகப் பார்த்துக் கொண்டே ஆடம்பரமாக அங்கிருக்கும் ஆசனத்தில் அமர்ந்து ஒரு தடவை கனைத்துக் கொண்டான். தேனார்மொழியாள் மிகவும் அடக்கமும் பயமும் கொண்டவள் போல அவன் எதிரில் நின்று கொண்டிருந்தாள். "ஹும்! தேனார்மொழி! இந்த வீட்டுக்குச் சிறிது நேரத்துக்கு முன்னால் யாரோ ஒரு புதிய மனிதன் வந்தானாமே? அவன் எங்கே? அவன் யார்?" என்றான் அந்த மனிதன். கம்பீரமாகவும் அதிகாரத் தொனியோடும். "ஆமாம், எங்கள் ஊரிலிருந்து வந்தார். எனக்கு ஒருவிதத்தில் அத்தை மகனாக வேண்டும். நாட்டியக் கலையில் நன்கு தேர்ந்த மனிதர். நட்டுவாங்கத்தில் மிகவும் தேர்ச்சியுள்ளவர். சங்கீதத்திலும் அப்படியே ரொம்ப மோகம். என்னுடைய பாட்டைக் கேட்க வேண்டுமென்று அவருக்கு அளவற்ற ஆசை. அதற்காகவே குடந்தையிலிருந்து இங்கு வந்தார். இப்பொழுதுதான் வெளியே சென்றார்..." என்றாள். "சரிதான்! எல்லாம் உண்மைதான். அவருக்கு நாட்டியத்தில் உள்ள தேர்ச்சியையும், சங்கீதத்தில் உள்ள பற்றையும் எடுத்துச் சொன்னாயே தவிர, அவருக்கு மறுபடியும் இந்த நாட்டில் எப்படியாவது சோழ மன்னர்களின் ஆதிக்கத்தை ஏற்படுத்தி விட வேண்டுமென்ற துடிப்பு இருக்கிறது என்பதைச் சொல்ல மறந்து விட்டாயே..." என்றான் அம்மனிதன். உடனே ஒளிந்திருந்த பூதுகனுக்கு அந்த மனிதன் தேனார்மொழியாளைக் கேட்ட கேள்வி மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. அந்த மனிதன் யாரென்று பார்த்தவுடனேயே தெரிந்து கொண்டான். அவன் தான் சிம்மவர்மன். பல்லவ மன்னரின் ஒன்று விட்ட சகோதரன். அவனுக்குத் தான் காஞ்சி வந்திருப்பதும் தேனார்மொழியாளின் வீட்டுக்கு வந்திருப்பதும் எப்படித் தெரிந்தது என்பது தான் பூதுகனுக்கு வியப்பாயிருந்தது. ஆனால் தேனார்மொழியாளின் வீட்டுக்கு வரும் போது எதிரில் சந்தித்த அந்த மனிதனின் ஞாபகம் வரவே அந்த மனிதன் தான் தன்னைப்பற்றித் தெரிந்து கொண்டு சிம்மவர்மனிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று எண்ணினான். எப்படியோ தான் அங்கு வந்திருக்கும் விஷயத்தையும், தான் யார் என்பதையும் அறிந்து கொண்டதிலிருந்து தன்னுடைய விவகாரங்கள் அவ்வளவையும் அந்த மனிதன் அறிந்திருக்கிறான் என்று பூதுகன் ஒருவாறு உணர்ந்து கொண்டான். பூம்புகார் புத்த சேதியத்தில் நடந்த கொலைக்கும் அந்த மனிதனுக்கும் சம்பந்தம் இருக்கத்தான் வேண்டும் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். அச்சமயத்தில் தேனார்மொழி தன்னைக் காட்டிக் கொடுத்தால் நிச்சயம் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதையும் அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் அந்த ஆபத்திலிருந்து மெதுவாகத் தப்பிப் பல்லவ மன்னருக்கு எதிரிடையாகச் சூழ்ச்சிகள் செய்து வரும் அந்த மனிதரிடம் எப்படியாவது நட்பு காட்டி அவனுடைய உதவியைக் கொண்டே தன்னுடைய லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று அவன் திட்டமிட்டான். இதற்குத் தேனார்மொழியாளும் சேர்ந்து தனக்கு உதவி புரிந்தால் சிம்மவர்மனின் நட்பு கிடைப்பதோ, அவனைப் பயன்படுத்திக் கொள்வதோ சிரமமான காரியம் ஆகாது என்று அவனுக்குத் தோன்றியது. அவன் மனம் பலவிதமாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தாலும் வெளியே தாழ்வாரத்தில் அவர்கள் என்ன பேசிக் கொள்ளுகிறார்கள் என்பதிலேயே அவன் மிகவும் கவனமாக இருந்தான். சிம்மவர்மனின் வார்த்தைகள் தேனார்மொழியாளைத் திகைக்க வைத்தன. சிம்மவர்மன் 'பூதுகன் யார்? அவன் எண்ணங்கள் என்ன?' என்பது பற்றித் தெரிந்து கொண்டிருப்பது அவளுக்கு மிகவும் வியப்பை அளித்தது. மறுபடியும் சோழ மன்னர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகப் பாடுபடும் ஒருவன் அந்தச் சமயத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகராகிய காஞ்சியில் வந்து சிக்கிக் கொண்டது எத்தகைய அபாயம்? சிம்மவர்மனின் கவனத்துக்கு இலக்காகிய பூதுகனின் கதி என்ன ஆகுமோ என்று பயந்தாள், தேனார்மொழியாள். அதோடு மட்டுமல்ல, அந்தப் பூதுகனுக்குத் தன் வீட்டிலேயே இடம் அளித்திருப்பது எத்தகைய ராஜத் துரோகம்? இதற்கு எத்தகைய ராஜதண்டனை தனக்குக் கிடைக்கும் என்பதை அவள் யோசித்த போது அவள் உள்ளம் நடுங்கியது. நெருக்கடியான அந்தச் சமயத்தில் எப்படியாவது சிம்மவர்மனின் கண்களில் பூதுகன் படாதவண்ணம் செய்து அவனை அனுப்பிவிட்டால் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணினாள். அவள் கொஞ்சம் நடிப்பில் கைதேர்ந்தவள். தேன்போல் இனிக்கும் அவள் கொஞ்சும் வார்த்தைகளிலும் விழிகளிலும் சாம்ராஜ்யத்தையே கலக்கிவிடும் சக்தி கூட இருந்தன. அவள் தன் அகன்ற கண்களை உருட்டி விழித்து பரபரப்பும் திகிலும் அடைந்தவள் போல நடித்தாள். பிறகு நடுக்கத்தோடு கூடிய இனிய குரலில், "அவர் அத்தகைய மனிதரா? அது எனக்குத் தெரியாதே...? அசட்டு மனிதர்! இத்தகைய மகத்தான பல்லவ சாம்ராஜ்யம் உலகில் திகழும் போது எதற்காக அழிந்து மடிந்து போன சோழர் ஆதிக்கத்தை மறுபடியும் உலகில் நிறுவலாம் என்று கனவு காணவேணும்? இதெல்லாம் எனக்குத் தெரியாது. இதிலெல்லாம் எனக்கு என்ன சம்பந்தம்? அதற்கு நான் ஏன் கவலைப்படப் போகிறேன்? அவர் என்னுடைய அத்தை மகன் என்ற காரணத்தாலும் இசையில் மிகுந்த பற்று உள்ளவர் என்பதாலும் அவரை வரவேற்று உபசரித்தேன். அவரும் தமக்குப் பிடித்தமான தேவாரப் பண்ணைப் பாடும்படி சொன்னார். பாடினேன். அதைக் கேட்டு விட்டுத் தமக்கு ஏதோ அவசர வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஒரு வேளை நாளை அல்லது மறுதினம் வந்தாலும் வரலாம்" என்றாள். சிம்மவர்மன் இடி இடித்து ஓய்வது போல் பரிகாசச் சிரிப்பு சிரித்தான். பிறகு, "நல்ல வேடிக்கை. பூதுகன் உன்னிடம் தேவாரப் பண் கேட்டானா? இதை இவ்வுலகம் கேட்டால் சிரிக்கும். தேனார்மொழி! என்னிடம் நடிக்காதே. அவனுக்குச் சங்கீதத்தில் பிரியம் இருக்கலாம். ஆனால் அவன் 'தேவாரப் பண் பாடு' என்று கேட்டான் என்கிறாயே, அதுதான் வேடிக்கை. பரம நாஸ்திகனா தேவாரப் பண் பாடு என்று சொல்லுவான்? இந்த இடத்தில் தான் உன் நடிப்பின் மெருகு கொஞ்சம் அழிந்து பல் இளிக்க ஆரம்பித்து விட்டது. பாவம், என்ன செய்வாய்? பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் ஒரு சைவப் பித்தன். பித்தனை வணங்கும் அப்பித்தனிடம் தேவாரப் பண் பாடி உனக்கு அதே நினைவாகி விட்டது. இந்த நிலையில் பரம நாஸ்திகனான பூதுகனும் ஏதோ தேவாரம் பாடச் சொன்னான் என்று பிதற்றுகிறாய். தேனார்மொழி! அவன் மறுபடியும் பல்லவ மன்னனுக்கு விரோதமாகச் சோழ ஆதிக்கத்தை நிலைநிறுத்தக் கனவு காண்கிறான் என்பது உனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவன் ஒரு நாஸ்திகன் என்பதையும் கூட நீ மறந்து விட்டது தான் விநோதம். அவன் சாதாரண நாஸ்திகன் இல்லை. கொலை பாதகச் செயல்களைக் கூடத் துணிந்து செய்யக் கூடியவன். ஒரு புத்த சேதியத்தில் துறவு மார்க்கத்தைக் கைக்கொண்ட ஒரு புத்த பிக்ஷுவைக் கத்தியால் கூசாமல் கொலை புரியும் துணிவு ஒரு நாஸ்திகனுக்குத் தானே ஏற்படும்? அவன் இன்னொரு புத்த பிக்ஷுவையும் கடலில் தள்ளிக் கொல்ல நினைத்தான். அவனுடைய கை வரிசை பலிக்கவில்லை. கடைசியில் தர்ம சிந்தனையும் சாத்விக குணமும் கொண்ட ஒரு புத்த பிக்ஷுவையாவது கொன்றால் தான் மனம் நிம்மதியடையும் என்று ஏதுமறியாத ஒரு புத்த பிக்ஷுவைக் கொன்றிருக்கிறான். இப்படியெல்லாம் செய்தால் சோழ ஆதிக்கத்தை ஏற்படுத்தி விட முடியுமா? தஞ்சை சிற்றரசர் மாறன் முத்தரையர் சாதாரண மனிதர் அல்ல. பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது பேரன்பு கொண்ட மகாவீரர். அங்குமிங்குமாகச் சோழ வம்சத்தினர் தலையெடுக்காத வண்ணம் செய்து வருவதிலேயே மிகக் கவனமாக இருக்கிறார். அவருடைய சேனாதிபதி கலங்கமாலரையரும் பெரிய வீரர். சோழ வம்சப் பூண்டு எங்கு கிளம்புவதாயிருந்தாலும் அதைத் தம் கால் கட்டை விரலால் தேய்த்து விடச் சித்தமாயிருக்கிறார். பழையாறை நகரிலிருந்து நம்முடைய சாம்ராஜ்யத்துக்குத் தலைவணங்கிப் பனாதி செலுத்தும் ஒரு பலவீனமான சோழப் பரம்பரையைப் பேரரசாக்கி விடலாம் என்று கனவு கொண்டு திரிகிறான் அந்தப் பூதுகன். நமக்கு நல்லவன் போல் நடந்து கொள்ளும் கொடும்பாளூர் அரசன் சோழப் பரம்பரையில் பெண் கொடுத்து, பெண் எடுத்த விஷயத்தில் அவர்களுக்கு ஆதரவு காட்டுவது போல் நடந்து கொள்கிறான். இதெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் நீ ஏதும் அறியாத பெண். ராஜ சபையில் சிறந்த பாடகி என்று பெருமதிப்பு பெற்றவள். உனக்கு இப்படிப்பட்ட ராஜத் துரோக சிந்தை உள்ளவர்களின் நட்பு கூடாது என்பதற்காகத்தான்" என்றான். சிம்மவர்மனின் பேச்சுக்கள் தேனார்மொழியாளுக்கு வியப்பையும் திகிலையும் தான் அதிகப்படுத்தின. அங்கு வந்திருக்கும் பூதுகனைப் பற்றிச் சிறிது கேள்வியுற்றிருந்தாளே தவிர, அதிகம் ஒன்றும் தெரியாது. பூதுகனைப் பார்த்ததுமே அவள் மனத்தை அவன் கவரும் உருவமாகி விட்டான். காரணம் இல்லாமலேயே அவன் மீது அவளுக்கு ஒருவித அன்பும், மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டு விட்டன. சிம்மவர்மனின் குணம் அவளுக்கு நன்றாகத் தெரியும். அவன் எவ்வளவு தான் பூதுகனிடம் பழி சுமத்தினாலும் அவன் வார்த்தைகளை அவள் நம்பத் தயாராக இல்லை. பூதுகன் பூம்புகார் புத்த விஹாரத்தில் புத்த பிக்ஷுவாக நடித்த ரவிதாசனைக் கொன்றிருப்பான் என்பதையும் நம்பத் தயாராக இல்லை. அப்படி அவனே ரவிதாசனைக் கொன்றிருந்தாலும் நாட்டில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு துரோகியைக் கொன்று நல்ல காரியத்தைச் செய்தான் என்று திருப்திதான் அவளுக்கு. தவிர, பல்லவ அரச சபையில் பெருமதிப்போடும் கௌரவத்தோடும் அவள் இருந்தாலும் தன் பிறந்த நாட்டின் மீது அவளுக்கு இயற்கையாகப் பற்றுதல் ஏற்படுவது குற்றமா? சோழ நாட்டைச் சேர்ந்த அவள் மனம் பழைய சோழ மன்னர்களின் வீரப் பிரதாபங்களைக் கதை கதையாகக் கேட்டிருக்கிறது. 'அத்தகைய மன்னர்களின் ஆட்சி மறுபடியும் எப்பொழுது ஏற்படும்? என்று சோழநாடு உலகிலேயே தலைசிறந்த நாடாகப் போகிறது?' என்ற கலவரமும் ஆசையும் அவள் மனத்தில் அடிக்கடி எழுவதுண்டு. பூதுகனைப் போன்ற ஒரு வீர வாலிபன் பாண்டிய, பல்லவ சாம்ராஜ்யங்களுக்கு எதிராக நின்று சோழ மன்னர்களின் பேரரசை நிலை நிறுத்த விரும்புவதற்கு ஆதரவாகத் தானும் இருக்க வேண்டும் என்று தான் அப்பொழுது அவளுக்குத் தோன்றியது. பல்லவ சாம்ராஜ்யத்தில் உயர்ந்த பதவியில் மதிப்போடு வாழ்ந்து வரும் அவள் இதை ஒரு இராஜத்துரோக நடத்தையாகவே கருதவில்லை. இந்தச் சமயத்தில் அவள் மிகுந்த புத்தி சாதுர்யத்தோடு நடித்துச் சிம்மவர்மனைச் சீக்கிரம் வெளியேற்ற நினைத்தாள். "பூதுகன் காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு புத்த பிக்ஷுவைக் கொன்று விட்டாரா? பாவம்! மகா பாவம். எந்த மதத்தினராக இருந்தாலும், மதத்துவேஷம் கொண்டவராயிருந்தாலும் கூட ஒரு துறவியைக் கொல்லுவது மகா கொடுமை. அது மிகவும் கோழைத்தனம். இத்தகைய கொடிய செய்கையில் ஈடுபடுகிறவர் தேசத்துரோகி மாத்திரம் அல்ல! கொடிய மதத்துரோகியும் கூட. எந்த மதமும் கொலையை ஆதரிக்கவில்லை. எந்த மதத்தினனாவது எந்தக் காரியத்துக்காகவாவது? பிறரைக் கொல்லும் காரியத்தில் ஈடுபடுவானானால் அவன் தன்னுடைய மதத்துக்கே துரோகிதான்" என்றாள் கணத்துக்கு கணம் மாறுதலான உணர்ச்சியைக் காட்டும் இனிய குரலில். சிம்மவர்மன் சிரித்தன். "பூதுகன் புத்திசாலி தான். அதோடு மட்டுமல்ல. அஞ்சாத வீர நெஞ்சு கொண்டவனென்றும் தெரிகிறது. எதற்கும் கலங்காத கலங்கமாலரையரைக் கூடச் சிறிது கலக்கம் காண வைத்து விட்டவன் அல்லவா? என்ன இருந்தாலும் அவனிடம் எனக்குச் சிறிது பயம் இருக்கத்தான் செய்கிறது. சாதுர்யமும் ஆண்மையும் இருக்குமானால் ஒரு தனி வீரன் மட்டுமே பெரிய சாம்ராஜ்யத்தை அழிக்கவோ, படைக்கவோ முடியும் என்பதை நான் நம்புகிறேன். அதனால் தான் அவனிடம் எனக்குச் சிறிது அச்சம் எழுகிறது. இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எத்தகைய இடுக்கண்ணும் ஏற்படாத வண்ணம் காப்பாற்றுவதற்காக அந்தத் துரோகியான பூதுகனை ஒழித்துக் கட்ட வேண்டுமென நினைக்கிறேனே தவிர, எனக்கு அவனைப் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணம் இல்லை. அதோடு அவன் உனக்கு உறவினன் என்பதை இப்பொழுது அறிந்ததும் அவனிடம் எனக்குச் சிறிது இரக்கம் கூட ஏற்படுகிறது" என்றான் சிம்மவர்மன். சிம்மவர்மன் சிறிது மன இரக்கம் கொண்டவன் போல் பேசும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தாள் தேனார்மொழி. அவள் ஒரு மயக்குச் சிரிப்பு சிரித்தாள். அத்தகைய சிரிப்பை அவள் மிகவும் முக்கியமான சந்தர்ப்பங்களில் தான் உபயோகப்படுத்துவது வழக்கம். பூதுகனைச் சிம்மவர்மனிடமிருந்து காப்பாற்றுவது ஒரு கோடிப் பொன்னைவிடச் சிறந்ததாக அவள் நினைத்திருந்தால் தானே இத்தகைய சிரிப்பு சிரித்திருக்க முடியும்? வீர நெஞ்சமும், உறுதியும் படைத்து அகந்தையோடு உயரத்தில் பறக்கும் சிம்மவர்மனின் மனமும் அந்தச் சிரிப்பில் எவ்வளவு எளிதாக வழுக்கிக் கீழே விழுந்து விட்டது என்பது அவனுடைய முகத்திலிருந்து தெரிந்தது. தேனார்மொழியாள் பேச ஆரம்பித்தாள். "பூதுகனை மன்னித்து விடுங்கள். ஆம்! என்னுடைய அத்தை மகன் என்பதற்காக நான் எப்படியேனும் அவருடைய பிசகை அவருக்கு எடுத்துக் காட்டி, அவர் மனத்தை மாற்றப் பிரயத்தனம் செய்கிறேன். அவரை இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தைப் போற்றிக் காக்கும் பணியில் ஈடுபடுத்த முயலுகிறேன். சிறந்த புத்தி நுட்பம் மிகுந்த அவர் உங்களுக்கு அனுகூலமுள்ளவராக இருக்க வேண்டுமென்பது தான் என் ஆவல். பெருந்தன்மையுள்ள நீங்கள் அவரிடம் சிறிது கருணை காட்டுங்கள். நாளைய தினம் அவர் வருவார். அவரிடம் எல்லாவற்றையும் சொல்லுகிறேன்" என்றாள். தேனார்மொழியாளின் சிரிப்பில் வழுக்கி விழுந்த சிம்மவர்மனின் மனம் அவளுடைய இனிய வார்த்தைகளின் கிளுகிளுப்புக்குள்ளாகிச் சுழன்றது. "தேனார்மொழி! உன்னைப்பற்றி எனக்குத் தெரியாதா? உன்னுடைய சிரிப்பிலோ வார்த்தையிலோ மயங்காத மனிதர் என்று யாரையாவது காட்டினால் அவர்களுக்கு அடிமையாகி விட நான் சித்தமாயிருக்கிறேன். அப்படி இருக்கும் போது இந்தப் பூதுகன் எம்மாத்திரம்? நீ எப்படியேனும் அவன் மனத்தை மாற்றி அவனை என் வார்த்தைகளுக்கு இணங்கக் கூடியவனாகச் செய்து விட வேண்டும். அப்படி நடக்குமானால் அரச சபையில் அவனை ஒரு உயர்ந்த பதவியில் அமர்த்திவிடுவது பெரிய காரியமில்லை..." என்று கூறினான் சிம்மவர்மன். "உங்களால் ஆகாத காரியம் ஏதேனும் உண்டா? நான் எப்படியாவது முயன்று அவரை வசப்படுத்தி விடுகிறேன்" என்றாள் தேனார்மொழியாள். "தேனார்மொழி! அவன் இங்கே வந்திருக்கிறான் என்பதை என்னுடைய நண்பன் குஞ்சரமாலன் மூலமாகக் கேள்விப்பட்டேன். அவனுக்குத் தீங்கு நினைப்பதை விட, அத்தகைய புத்தி நுட்பம் உடையவனை எனக்கு நண்பனாக்கிக் கொள்ள வேண்டுமென்பதில் தான் எனக்கு ஆவல் அதிகமாக இருக்கிறது. இதற்காகத்தான் உடனடியாக நான் இங்கு வந்தேன். இதில் உன்னுடைய உதவி எனக்கு மிகவும் அவசியம். உன்னுடைய முயற்சி சித்தியாகுமென்று நினைக்கிறேன்." "ரொம்ப சந்தோஷம். உங்களுடைய அன்பும் ஆதரவும் இருக்குமானால் எதையும் நான் எளிதாக முடித்து விட முடியும். நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் எதற்காக இருக்கிறேன்? இது என்னுடைய முக்கிய கடமையில்லையா?" என்றாள் தேனார்மொழியாள். "சரி! நான் போய் வருகிறேன். நாளைய தினம் மாலை நான் இங்கு வருகிறேன். அப்பொழுது பூதுகனைச் சந்திக்க ஏற்பாடு செய். எல்லாவற்றையும் சாமர்த்தியமாக முடிப்பது உன்னுடைய சாமர்த்தியம்" என்று சொல்லித் தேனார்மொழியாளிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றான் சிம்மவர்மன். தேனார் மொழியாள் ஏதோ மன ஆறுதலும் நிம்மதியும் அடைந்தவளாக அவனைத் தெருவரையில் கொண்டு போய் வழியனுப்பி விட்டு உள்ளே வந்தாள். அந்த அறையில் இருந்த வண்ணம் வெளித் தாழ்வாரத்தில் நடந்தவைகளையெல்லாம் தெளிவாக அறிந்து கொண்ட பூதுகன் பலவிதமாகச் சிந்திக்கத் தொடங்கினான். அவனுக்குப் பல உண்மைகள் விளங்கின. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த கலங்கமாலரையருக்கும் சிம்மவர்மனுக்கும் அதிக தொடர்பு இருக்கிறதென்பதை அறிந்து கொண்டான் பூதுகன். சிம்மவர்மனின் கையாளாகிய ரவிதாசன் கொலை செய்யப்பட்டதிலிருந்து இவர்களுக்கு விரோதமாக வேறு யாரோ இருந்து பல சூழ்ச்சிகள் செய்கிறார்களென்பதும் அவன் மனத்துக்குப் பட்டது. பல்லவ சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பாளன் போல் சிம்மவர்மன் பேசினாலும் அவன் பல்லவ சாம்ராஜ்யத்தையே கவிழ்க்க நினைக்கும் துரோகி என்பதை அவனுடைய பூடகமான பேச்சிலிருந்து நன்குணர்ந்து கொண்டான் பூதுகன். அதிலும் தன்னுடைய நட்பைச் சிம்மவர்மன் விரும்புவது எத்தகைய காரியத்துக்காக இருக்குமென்பது அவனுக்கு நன்கு விளங்கியது. எப்படி இருந்தாலென்ன? சிம்மவர்மன் தானாகவே வந்து தன் பொறியில் சிக்கிக் கொண்டான் என்று தான் பூதுகன் எண்ணினான். தன் லட்சியத்துக்கு, பல்லவ அரசருடைய துரோகியாக விளங்கும் சிம்மவர்மனின் நட்பு அத்தியாவசியமானதென்று அவன் எண்ணினான். எப்படியோ தேனார்மொழியாளின் மூலம் சிம்மவர்மனின் நட்பைச் சம்பாதித்துக் கொண்டு பல ரகசியங்களை யறிந்து கொள்ளலாமென்று பூதுகன் நினைத்தான். ஒரு சாம்ராஜ்யத்தின் துரோகியும், மற்றொரு சாம்ராஜ்யத்தில் பக்தி விசுவாசமுள்ளவனும் நண்பர்களானால் ஒரு சாம்ராஜ்யம் அழிவதற்கும் ஒரு சாம்ராஜ்யத்தை எழுப்புவதற்கும் வேறு காரணங்கள் வேண்டுமா? பல்லவ சாம்ராஜ்யத்தின் துரோகி ஒருவரின் நட்பு சோழ சாம்ராஜ்யத்தின் உதயத்துக்கு ஆரம்ப முகூர்த்தக் கால் நடுவது போன்ற சுப சூசகமல்லவா? சிம்மவர்மனை வாசல் வரையில் கொண்டு போய் விட்டு வந்த தேனார் மொழியாள் சிரித்துக் கொண்டே வந்து பூதுகனிடம், "எல்லாவற்றையும் தெரிந்து கொண்டீர்களல்லவா? வந்த மனிதர் யாரென்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே? நாங்கள் பேசிக் கொண்டிருந்தது உங்கள் காதில் விழுந்திருக்க வேண்டுமே?" என்றாள். "எல்லாம் தெரிந்து கொண்டேன். எல்லாவற்றையும் விட உன் நடிப்புத்தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னை உன்னுடைய அத்தை மகன் என்று சொல்லி விட்டாயே? பாவம், அந்த மனிதரும் நம்பியதுதான் அதிசயம். உனக்கும் இப்படி ஒரு அத்தை மகன் இருக்க வேண்டியதுதான். ஆனால் இதை உலகம் நெடுநாள் நம்ப வேண்டுமே?..." என்றான் பூதுகன். "ஆமாம், நான் கூட அந்த இடத்தில் ஏதோ பொருத்தமில்லாமல் தான் சொல்லி விட்டேன். அவரும் நம்பிவிட்டார். நீங்கள் குலத்தில் அந்தணரல்லவா...?" என்றாள் தேனார்மொழியாள். சட்டென்று நாணம் தோன்றி அவளைத் தலைகுனிய வைத்தது. |