உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) முதல் பாகம் - காலச் சக்கரம் அத்தியாயம் 17 - அன்பே சிவம்! அருளே சிவம்! பூதுகன் சிரித்தான். "அந்தணனாவது? அந்தணன் என்றால் என்ன அர்த்தம்? ஒரு குலத்தில் பிறந்ததற்காக ஒருவன் அந்தணனாகி விட மாட்டான். 'ஒருவன் அந்தணனாவது முடித்தலையாலல்ல, கோத்திரத்தாலுமல்ல, பிறப்பினாலுமல்ல. எவரிடம் சத்தியமும் தருமமும் நிலைத்துள்ளனவோ, அவன் தான் அந்தணன்' என்று புத்தபெருமான சொல்லுகிறார். என்னைப் போன்ற சார்வக சித்தாந்திக்குச் சாதி, மதம், குலம், கோத்திரம் போன்ற பந்தங்கள் ஒன்றும் கிடையாது. ஒரு வேளை நீ என்னை அந்தணன் என்று நினைப்பதைத் தவிர வேறு விதமாக நினைக்க முடியவில்லை யென்றால் நான் சத்தியத்திலும் தருமத்திலும் நிலைத்துள்ளவன் என்பதற்காக வேண்டுமானால் அப்படி நினைப்பதாக வைத்துக் கொள். நான் அக்னி ஹோத்ரம் போன்ற நித்யக்ருமானுஷ்டானங்கள் எதிலுமே பற்றுக் கொள்ளாவிட்டாலும், யக்ஞோபவீதம், கோபி சந்தனம் முதலிய குலச் சின்னங்களை அணிந்து கொள்ளா விட்டாலும், நம்மை மீறிய பரத்துவம் ஒன்று இல்லையென்று சொன்னாலும், பேராசையும், வஞ்சனையும், பொய்யும், சூதும், கொலை உணர்ச்சியும் நிறைந்த இந்த உலகத்தில் சத்தியத்திலும் தருமத்திலும் நாட்டமுள்ளவனாக இருக்கிறேன் என்பதற்காக என்னை நீ அந்தணன் என்று சொன்னால் அதை நான் ஒப்புக் கொள்கிறேன். அந்தணன் என்ற பெயரில் நான் கோழையாக விரும்பவில்லை. அந்தணன் என்ற பெயரில் ஆயுத பலம் உள்ள எதிரிகளைக் கண்டு அச்சமடைய விரும்பவில்லை. பாரதம் பொய்யோ நிஜமோ, ஆனால் அதில் வரும் துரோணனைப் போலும் - அசுவத்தாமனைப் போலும் - தன் கைக்கோடாரியால் ஆயிரக்கணக்கானவர்களின் தலையை வெட்டிக் குவித்த பரசுராமன் போலும் வீரத்தோடு திகழ நினைக்கிறேன்" என்றான். எவ்வித அங்கியும் அணிந்து கொள்ளாத அவனுடைய அகன்ற மார்பும், திரண்ட புஜங்களும், பிரகாசம் நிறைந்த கண்களும், புன்சிரிப்பும், அலட்சியம் நிறைந்த கணீரென்ற பேச்சும், தேனார்மொழியாளின் மனத்தை ஆழம் நிறைந்த சுழலில் விழுந்த துரும்பு போல் சுழல வைத்தன. இத்தகைய அழகனைத் தன் காதலனாக அடைந்த வைகைமாலை உலகிலேயே சிறந்த பாக்கியவதிதான் என்ற எண்ணம் கண நேரத்தில் அவள் மனத்தில் எழுந்தது. அவள் அவனுடைய கம்பீரமான முகத்தை அள்ளிப் பருகுபவள் போல் ஒருவிதமாக பார்த்து கொண்டே, "பல்லவ சக்கரவர்த்தியின் சகோதரராகிய சிம்மவர்மருக்குக் கூட உங்களிடம் அச்சம் இருக்குமென்று நான் நினைக்கவில்லை. உங்களை ஏதோ பழி வாங்க நினைப்பவர் போல் ஆவேசத்துடன் பேசிய அவர் உங்களுடைய நட்பை விரும்புகிறவர் போல் பின்னால் பேசியது எனக்கே கொஞ்சம் வியப்பாக இருந்தது. உண்மையாகவே நீங்கள் எல்லோருடைய மனத்தையும் கவரக் கூடியவராகத் தானிருக்கிறீர்கள். உலகத்தில் புத்தபெருமானைப் பற்றிச் சொல்லுவார்கள், அவருடைய உபதேசத்தைக் காட்டிலும் அவரது உருவமே மக்களின் மனத்தைக் கவர்ந்து விட்டதாக. அவருடைய உபதேசங்களைக் கேட்கும் முன்பே அவருடைய பேரொளி மயமான உருவத்தைக் கண்டதுமே ஒவ்வொரு நகரத்திலுமுள்ள ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாகச் சீவர ஆடையணிந்த பிக்ஷுக்களாகவும், பிக்ஷுணிகளாகவும் ஆகிவிட்டார்கள் என்று சொல்லுவார்கள். ராஜக் கிருஹத்திலே புத்தபெருமான் தங்கியிருந்த சமயம் கபிலவஸ்துவிலிருந்த அவருடைய தந்தை சுத்தோதன மன்னர், ஒன்பது தடவைகள் தமது மந்திரி, பிரதானிகளில் மிகவும் பிடித்தவர்களையும், புத்திசாலிகளையும் அனுப்பி அவர் மனத்தை மாற்றி அரண்மனைக்கு அழைத்து வர முயன்றாராம். ஆனால் புத்தபிரானை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல வந்தவர்களெல்லாம் புத்தபெருமானின் தெய்விக உருவத்தைக் கண்டதும் தங்கள் எண்ணத்தை மறந்து அவருக்கு அடியார்களாகித் துறவறம் பூண்டு ராஜக் கிருகத்திலுள்ள வேணுவனத்திலேயே தங்கித் தவங் கிடந்தார்களாம். இதனால் மனம் உடைந்த சுத்தோதனர் கடைசி முறையாக, புத்தபெருமானோடு குழந்தைப் பருவத்தில் நெருங்கிப் பழகினவனும், அவர் பிறந்த நாளிலேயே பிறந்தவனும் சகல சாஸ்திரங்களையும் படித்து மேதை என்று திகழ்ந்தவனுமாகிய உதாயி என்ற அந்தண வாலிபனை, போதிசத்துவரிடம் அனுப்பினாராம். உதாயி போதிசத்துவரிடம் போகும்போதே, 'குழந்தைப் பருவம் முதல் அவரோடு பழகியவனாதலால் அவருடைய உருவம் என்னைக் குலைத்து விடாது. ஆனால் அவருடைய பேச்சு என் மனத்தைக் குலைத்து விடுமோ என்று அஞ்சுகிறேன். அதற்காக அவருடைய வார்த்தைகளைக் கேட்காத வண்ணம் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டு புத்தபெருமானிடம் போகிறேன்' என்று சொல்லித் தன் இரு காதுகளிலும் பஞ்சையடைத்துக் கொண்டு புத்தபெருமானிடம் போனானாம் ஆனால் பாவம், அவனுடைய எண்ணத்துக்குப் பழுதாகப் புத்த பெருமானின் உள்ளம் கவரும் அழகு உருவம் காட்சியளிக்கவே அவனும் காஷாயதாரியாகி வேணு வனத்திலுள்ள ஒரு மரத்தடியில் கண் மூடி யோக நிஷ்டையில் அமர்ந்து விட்டானாம். இதைப் போல உங்கள் உருவமும் பேச்சும்..." என்றாள் இனிய குரலில். பூதுகன் சிரித்தான். "நீ சொல்வதைப் பார்த்தால் பெரிய விபரீதமாக இருக்கிறதே? பரம நாஸ்திகனான என்னையும் புத்த பெருமானையும் ஈடு கட்டாதே. என் உருவில் மயங்கி இதுவரையில் யாரும் சீவர ஆடை அணிந்து பிக்ஷுக்களாகி விட்டதாகத் தெரியவில்லை, ஜாக்கிரதை; உனக்கு ஏதாவது என் உருவைக் கண்டதும் மயக்கம் ஏற்பட்டிருந்தால் அதற்காக பிக்ஷுணியாகிவிட வேண்டுமென்று தீர்மானித்து விடாதே. நான் உலகில் யாரும் பிக்ஷுவாவதையோ, பிக்ஷுணியாவதையோ விரும்பவில்லை" என்றான். "நான் பிக்ஷுணியாக விரும்பவில்லை. இந்த மனத்தில் ஆசையும் மோகமும் விடாத வரையில் ஒரு பிக்ஷுணி ஆவதனால் என்ன பயன் இருக்கிறது? மாலவல்லியைப் போல் வாழ்விலொரு புறம் மோகமும், இன்னொரு புறம் துறவில் நாட்டமுமாகத் தடுமாறுவதற்கு நான் சித்தமாயில்லை. உங்களிடம் நான் கண்டதைப் பற்றிச் சொன்னேன். அதிருக்கட்டும். நீங்கள்தான் புத்த பிக்ஷுக் கோலத்தில் இருந்த ரவிதாசனைக் கொன்றதாகச் சிம்மவர்மர் சொல்லுகிறாரே? அவனைக் கொன்றதினால் தோஷமில்லை. ஆனால் அதை நீங்கள் செய்திருப்பீர்களா என்ற சந்தேகம் தான் எனக்கு..." என்றாள். "நான் செய்திருக்க மாட்டேன் என்று நீ நம்பினால் சரிதான். செய்திருப்பேன் என்று நீ சந்தேகித்தாலும் அந்தச் சந்தேகத்தை நிவர்த்திக்க நான் தயாராயில்லை. நான் இப்பொழுது முடிவான தீர்மானத்துக்கு வந்து விட்டேன். ரவிதாசனைக் கொன்றவர்கள் கலங்கமாலரையனைச் சேர்ந்தவர்களல்ல. மாலவல்லியோ, அல்லது அவளைச் சேர்ந்தவர்களோ அல்ல. சிம்மவர்மனோ அவனைச் சேர்ந்தவர்களோ அல்ல. இவர்களெல்லோரையும் தவிர வேறு யாரோ தான் அவனைக் கொன்றிருக்க வேண்டுமென்று நான் நம்புகிறேன். நான் தான் ரவிதாசனைக் கொன்றிருக்க வேண்டும் என்று சிம்மவர்மன் நம்பும் போது என்னிடமே அவன் நட்புக் கொள்ளப் பிரியப்படுவதுதான் விநோதம்" என்றான் பூதுகன். "உங்களிடம் அவர் நட்புக் கொள்ள விரும்புவதும் ஒரு சூழ்ச்சியாக இருக்கக் கூடாதா?" என்றாள் தேனார்மொழி. "சூழ்ச்சியாக இருக்கக் கூடாதா என்ன? சூழ்ச்சியே தான்." "அவர் உங்களோடு நட்புரிமை கொள்ள விரும்புவது ஒரு சூழ்ச்சி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் போது அவருடைய சிநேகிதத்தை நீங்கள் ஏன் வரவேற்க வேண்டும்? அதனால் உங்களுக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்படாதா?" "சிம்மவர்மனோடு நட்புரிமை கொள்வதால் மாத்திரம் எனக்கு ஆபத்து ஏற்படும் என்பதல்ல. எப்பொழுதுமே ஆபத்திடையேதான் நடமாடிக் கொண்டிருக்கிறேன். சிம்மவர்மனின் நட்பு ஒரு வகையில் ஆபத்தானதுதான். மற்றொரு புறத்தில் அவனுடைய நட்பு என்னுடைய காரியசித்திக்குப் பல விதத்திலும் உதவியாக இருக்கும். அவனிடமிருந்து சில ரகசியங்களைத் தெரிந்து கொண்டு, அதனால் எனக்கு ஏற்படும் தீமையிலிருந்து ஜாக்கிரதையாக விலகிக் கொள்வதுதான் சாமர்த்தியம். எலியைப் பிடிக்கப் பொறி வைத்தால் சாமர்த்தியமான எலி அந்தப் பொறியில் வைத்திருக்கும் பண்டத்தை மட்டும் தின்று விட்டு ஓடிவிடுவது போல..." என்றான் பூதுகன். "நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். உங்களுக்கு அத்தகைய சாமர்த்தியம் உண்டு. ஆனால் எனக்குச் சிறிது பயமாக இருக்கிறது. நீங்கள் மறுபடியும் சோழ சாம்ராஜ்யத்தை நாட்டில் நிலைநிறுத்தப் பாடுபடுவீர்களென்று அந்தச் சிம்மவர்மனுக்குத் தெரியும். அப்படி இருக்கும் போது அவன் உங்களைக் கொன்று விடத்தானே முயற்சி செய்வான்?" என்றாள் தேனார்மொழி. பூதுகன் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே, "இவ்வளவு அனுபவம் அடைந்தும் சிம்மவர்மனின் மனோநிலையையோ சூழ்ச்சியையோ நீ அறிந்து கொள்ளாததுதான் விநோதம். சிம்மவர்மன் நந்திவர்மன் நாட்டையாளுவதை விரும்பவில்லை. தானே பல்லவ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தைப் பெற நினைக்கிறான் என்பதை நீதானே சிறிது நேரத்துக்கு முன்னால் சொன்னாய்? பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எதிராளியாக இருக்கும் என்னைப் போன்றவர்களுடைய நட்பைச் சிம்மவர்மன் விரும்புவது இயற்கைதானே? என்னுடைய நட்பினால் அவனுடைய கனவு பலிக்காவிட்டாலும் என்னுடைய காரியத்துக்குச் சாதகமுண்டல்லவா? முதலாவதாக மாலவல்லி எங்கு மறைந்தாள் என்ற விஷயம் அவன் மூலமாகத் தெரியலாமல்லவா? அவனுக்கு அந்தரங்க நண்பன் போல் சில காலம் இருந்து எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். நீ அவன் கோரியபடி நாளையதினம் எப்படியாவது எனக்கும் அவனுக்கும் நட்பு ஏற்படுத்த முயற்சி செய்" என்றான். தேனார்மொழியாள் ஒரு மோகனப் புன்னகை புரிந்தாள். அவளுடைய அழகான பார்வை ஏதோ கனவு உலகத்திலாழ்ந்திருப்பது போலிருந்தது. அந்தப் புன்னகையையும், பார்வையையும் பூதுகனைப் போன்றவர்கள் புரிந்து கொள்வது கடினமல்ல. அவன் நெடு நேரத்துக்கு முன்பே அதன் பொருள் விளங்கப் பெற்றவனாய்ச் சிறிது விழிப்போடு தான் இருந்தான். "உங்களுடைய வார்த்தை ஒவ்வொன்றுக்கும் நான் கட்டுப்பட்டவளே. நீங்கள் எதைச் செய் என்றாலும் அதைச் செய்யச் சித்தமாயிருக்கிறேன். உங்களைப் பார்த்ததிலிருந்து என்னை உங்களுக்கு அர்ப்பணித்து விட்டேன். இந்த அடிமையின் அன்பை மாத்திரம் நிராகரிக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்..." என்றாள் தேனார்மொழியாள். அந்தச் சமயம் அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே பூதுகனுக்குப் புரியவில்லை. அவளால் அவனுக்குச் சில காரியங்கள் ஆக வேண்டியிருந்தன. உண்மைதான். அதற்காக அவள் விருப்பத்துக்கிணங்கித் தன்னுடைய நிலையான உள்ளத்திலும், பரிசுத்தமான வாழ்க்கையிலும் அவன் ஒரு களங்கத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அவன் சிறிது ஏளனமாகச் சிரித்துக் கொண்டே, "இத்தகைய அன்புத் தளையில் என்னைக் கட்டுப்படுத்துவாய் என்று நான் நினைக்கவில்லை, தேனார்மொழி! வைகைமாலை உனக்குத் தோழி. அவளும் ஒரு பெண்; வாழ்வில் அவளுக்குரியவன் நான் தான் என்பதை மறந்து விடாதே. எனக்காக அல்ல. உன்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு உரியதானதை நீ அபகரிக்க விரும்பாதே. இது உன் தோழிக்கு நீயே நினைக்கும் பெருந் துரோகமாகும்..." என்றான். தேனார்மொழி புன்னகையோடு பொற்கொடி போன்ற தன் உடலை நெளித்தாள். "நான் தோழிக்குத் துரோகம் செய்யவில்லை. அவள் மிகவும் நல்லவள். என் மன நிலை அறிந்து என்னிடம் இரக்கம் காட்டி என்னுடைய விருப்பத்தை அங்கீகரிப்பாள். நல்ல தோழர்கள் தாங்கள் அனுபவிப்பதைத் தங்கள் தோழர்களும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவதில்லையா? ருசிகரமான உணவைத் தன்னுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து அளிக்காமல் யாரேனும் சாப்பிடுவது உண்டா? பெருந்தன்மையுள்ள வைகைமாலை, என்னிடம் பேர் அபிமானம் வைத்துள்ள வைகைமாலை இதற்காக என்னை மன்னிப்பாள். உங்கள் மனத்தில் தான் அனுதாபத்துக்கும், இரக்கத்துக்கும், அன்புக்கும் கொஞ்சம் இடம் அளிக்க வேண்டும்" என்று கொஞ்சும் மொழிகளால் சொல்லிப் பிறகு மெதுவாக அவனை நெருங்கி அவனுடைய திரண்ட புஜங்களைத் தொட்டாள். திடீர் என்று "தேனார்மொழி" என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்கவே அவள் திகைப்புற்றுத் திரும்பினாள். பூதுகன் பரபரப்போடு விழித்தான். எதிர்பாராத வண்ணம் அங்கு வந்து காட்சியளித்த அந்த மனிதரின் உருவமும் அலங்காரமும் அவர் பரம சிவபக்த சிரோமணி என்பதைத்தான் எடுத்துக் காட்டின. சிம்மவர்மனை வழியனுப்பிவிட்டு வந்த தேனார்மொழியாள் கதவைத் தாளிடாமல் வந்துவிட்ட பிசகை அப்பொழுதுதான் உணர்ந்தாள். பரங்கிப் பழம் போன்ற சிவந்த குட்டையான உருவம்; மொட்டைத் தலை; இடையில் துல்லியமான ஒரே வெள்ளை வஸ்திரம்; கழுத்தில் பருத்த உத்திராட்ச மாலை; நெற்றியையும் உடம்பையும் பூரணமாக மறைத்திருந்த விபூதிப் பூச்சு. அவருடைய வயதை ஐம்பதுக்கு மதிப்பிடலாம். முதுமை காரணமாகச் சிறிது ஒளி மழுங்கியிருந்த அவர் கண்களில் அப்பொழுது ஏதோ கோபக் கனல் வீசியது போலத்தான் இருந்தது. அந்த மனிதர் தேனார்மொழியாளிடம் நெருங்கிப் பழகினவராகத்தான் தோன்றினார். தேனார்மொழியாள் அவர் கண்களில் தெரிந்த கோபத்தைப் பார்க்கப் பயந்தவள் போல் தலைகுனிந்து கரங் குவித்துத் தன்னுடைய வணக்கத்தை அவருக்குத் தெரியப்படுத்தினாள். அந்த மனிதர் தேனார்மொழியாளுக்குச் சமீபமாக நின்ற பூதுகனை ஏற இறங்க ஒரு தடவை பார்த்தார். பூதுகன் அவருடைய எதிர்பாராத வரவைக் கண்டு மிகுந்த ஆச்சரியமடைந்தவனாகவோ லட்சியம் செய்தவனாகவோ தோன்றவில்லை. பார்ப்பதற்குப் பெரிய சிவ பக்தராகத் தோன்றும் அவருக்கு மரியாதையோ வணக்கமோ செலுத்த விருப்பமில்லாதவன் போல், தான் உட்கார்ந்திருந்த ஆசனத்தை விட்டு எழுந்திருக்காமல் வேறு ஏதோ யோசனையில் ஆழ்ந்தவன் போல் இருந்தான். சிவ பக்தி மிகுந்த நந்திவர்மன் ஆட்சியில் இத்தகைய சிவபக்தர்களுக்கெல்லாம் பேராதரவும் மதிப்புமிருக்குமென்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அதிலும் அங்கு வந்துள்ள மனிதர் அரசனோடு நெருங்கிய உறவு கொண்டவராகத்தான் இருப்பார் என்றும் அவன் எண்ணினான். அரசரோடு மிக நெருங்கிய தொடர்பும், அரசாங்கத்தில் பெருமதிப்பும் கொண்ட சிவபக்தருக்குத் தேனார்மொழியாள் போன்ற ஒரு இசைக் கணிகையிடம் அதிகாரம் செலுத்தக் கூடிய உரிமை ஏற்பட்டிருந்தால், அது அதிசயமானதல்லவா? ஏதோ அவர் தம் அதிகாரத்தைக் காட்டுவதற்குத்தான் தேனார்மொழியாளின் வீட்டை அடைந்திருக்கிறாரென்று அவன் தீர்மானித்தான். திடீரென்று "தேனார்மொழி" என்று உரத்த குரலில் கூப்பிட்ட வண்ணம் தோன்றிய அந்த மனிதர் எதிர்பாராத வண்ணம் அங்கு ஏதோ காட்சியைக் கண்டவர் போல் பிரமிப்படைந்து நின்று விட்டார். அவர் மறுபடியும் "நமச்சிவாய" என்ற தொடக்கத்தோடு பேச ஆரம்பித்தார். "தேனார்மொழி! பிறை சூடிய பெருமானையே தன் குலதெய்வமாகக் கொண்ட மன்னர் பிரானது இசைக் கணிகையாகிய நீ தகாத செய்கைகளில் ஈடுபட்டுள்ளாய் என்று கேள்விப்பட்டு நான் வந்தேன்." பூதுகன் அந்தச் சிவனடியாரின் பேச்சை மிகக் கவனத்தோடும் ஆர்வத்தோடும் கேட்டவனாகவோ, கேட்காதவனாகவோ தோன்றவில்லை. அவன் இன்னும் ஏதோ ஆழ்ந்த யோசனையில் உட்கார்ந்திருப்பவன் போலத் தோன்றினான். தேனார்மொழியாள் குவித்த கரத்தோடு தலை குனிந்த வண்ணமே நின்று கொண்டிருந்தாள். இந்தச் சமயத்தில் அவன் எப்படி அந்தச் சிவபக்தரின் வரவை எதிர்பார்க்க வில்லையோ, அப்படியே அவர்களின் வார்த்தையையும் எதிர்பார்க்கவில்லை. வேறொரு சந்தர்ப்பமாக இருந்தால் தேனார்மொழி குற்றஞ் செய்தவளாக இருந்தாலும் அந்தக் குற்றத்தை மறுத்துப் பேசும் துணிவு அவளுக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால் இந்தச் சந்தர்ப்பம் அவளாக எந்தக் குற்றத்திலும் படாதவளாக இருந்தாலும் ஏதோ குற்றம் செய்து விட்டவள் போன்ற உணர்ச்சிதான் அவளை அழுத்தியது. பயம் நிறைந்த குரலில், "சுவாமி! அன்பே சிவம் என்ற கொள்கையுடைய நாம் யாரை உலகத்தில் வெறுக்க முடியும்? அதிலும் நான் பெண் - அடிமை, எனக்கு அரசாங்க சம்பந்தமாக நடக்கும் சூழ்ச்சிகளோ அதற்குக் காரணங்களோ தெரியாது. அரசாங்கத்தில் ஆதரவும் பெருமதிப்பும் பெற்றவர்களுக்கு நானும் மதிப்புச் செலுத்தத்தானே வேண்டியிருக்கிறது? ஆனால் அவர்களுடைய காரியங்களும் சூழ்ச்சிகளும் எனக்குத் தெரியாது. அதில் நான் கலந்து கொள்ளவுமில்லை" என்றாள். அப்பொழுது அங்கு சிவனடியார் கோலத்தில் வந்த மனிதர் வேறு யாருமில்லை. பல்லவ மன்னனும் சிறந்த சிவ பக்தனுமான நந்திவர்மனின் அந்தரங்க நண்பரும் மதாச்சார்யன் போலவும் விளங்கிய அகத்தீசனடியார் தான். சிவபெருமானிடம் பெரும் பக்தி கொண்ட அவர் அரசனிடமும் பேரன்பு கொண்டிருந்தார். எப்பொழுதும் சிவனையே நினைத்திருக்கும் அவருள்ளத்தில் எதிராளிகளின் நடத்தைகளையும் சூழ்ச்சிகளையும் பற்றிய கவலையும் சிறிது உண்டு. சிவனை நினைந்து வாழ்நாளைக் கழித்து விட வேண்டுமென்ற ஆசை கொண்ட அவருக்கு மன்னனைப் பற்றிய கவலையே உலகில் ஒட்டிய பந்தமாக இருந்தது. அவர் தன்னிடமும் அரசாங்கத்தினிடமும் எத்தகைய கவலை கொண்டிருக்கிறார் என்பதை மன்னன் அறிந்து கொள்ளாவிட்டாலும் அவன் அறியாத வண்ணமே மன்னனுக்கும் ஈசனுக்கும் தான் கடமைப்பட்டவரென்று எண்ணி அரசாங்க நடவடிக்கைகளின் போக்கைக் கவனித்து வந்தார். அன்று மாலை பூதுகன் அந் நகருக்கு வந்ததும் அவன் தேனார்மொழியாளின் வீட்டையடைந்ததும் அவனுக்குப் பின்னர் சிம்மவர்மன் தேனார்மொழியாளின் வீட்டுக்கு வந்து போன விஷயமும் அவர் காதில் எப்படியோ எட்டியிருக்க வேண்டும். சிம்மவர்மனின் சூழ்ச்சிகளில் அவருக்குக் கவனம் உண்டு. பூதுகனின் கொள்கைகள் பற்றியும் அவர் ஓரளவு அறிந்துதானிருக்க வேண்டும். இந் நிலையில் சிறந்த சிவபக்தை போல் விளங்கும் இசைக் கணிகையாகிய தேனார்மொழியாள் இத்தகையோரிடம் நட்பு கொண்டிருப்பது பற்றி அவருக்குக் கவலை ஏற்படாதா? வரும்போது அவர் சிறிது கோபத்தோடு வந்தார். அதுவும் பூதுகனும் தேனார்மொழியாளும் இருந்த நிலைகண்டு அவருடைய கோபம் இன்னும் அதிகரித்தது. ஆனால் அவருடைய கோபம் படிப்படியாக எவ்வளவு அதிகரித்ததோ அப்படியே படிப்படியாகத் தணிந்தது. அதற்குக் காரணம் அங்கு அமர்ந்திருந்த பூதுகன் நிலையை அவர் பார்த்ததினால் தான் என்று சொல்லி விடலாம். பூதுகன் இருந்த நிலையிலிருந்து அவன் கொஞ்சங் கூட நெஞ்சை இளகவிடாத பக்குவ நிலையில் உள்ளவன் என்பதையும் கணப் பொழுதில் உணர்ந்து கொண்டார். "தேனார்மொழி! பூம்புகாரிலிருந்து பூதுகனென்ற நாஸ்திகவாதி யொருவன் காஞ்சிக்கு வந்திருக்கிறான் என்று அறிந்தேன். அதிலும் அவன் உன் வீட்டில் தங்கியிருக்கிறான் என்பதை அறிந்ததும் எனக்கு மிகவும் சங்கடம் ஏற்பட்டது" என்று சொல்லி அங்கு ஆசனத்தில் கம்பீரமாக வீற்றிருந்த பூதுகனைச் சந்தேகக் கண்களோடு பார்த்தார். அவர் சொல்லிய வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன் போல் வேறெங்கோ பார்த்த வண்ணம் அசையாமல் உட்கார்ந்திருந்தான் பூதுகன். தேனார்மொழியாள் சிறிது அச்சம் நிறைந்த குரலில், "தாங்கள் சொல்லும் பூதுகன் இவர்தான். எங்கள் ஊராகிய குடந்தைக்குச் சமீபமுள்ள திருப்புறம்பியத்தைச் சேர்ந்தவர். எனக்கு ஒரு முறையில் அத்தை மகனாக வேண்டும். இசையில் மிகவும் பற்றுதல் உள்ளவர்..." என்று சொல்லிக் கொண்டு வரும் போதே பூதுகன் சட்டென்று எழுந்தான். "ஆம், எனக்கு இசையில் மிகப் பற்றுதல் உண்டு. பாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும் சிறிது பயிற்சி உண்டு" என்று சொல்லிக் கொண்டே அவருடைய பதிலை எதிர்பார்க்காமல் சட்டென்று அங்கு தேனார்மொழியாள் வைத்திருந்த வீணையை எடுத்து வைத்துக் கொண்டு மீட்டிய வண்ணமே "அன்பே சிவம், அருளே சிவம், என் போல் ஈனர்க்கு இரங்கும் சிவமே" என்று பாடத் தொடங்கினான். பூதுகனின் பொருளும் சுவையும் நிறைந்த இசையைக் கேட்டதும் அகத்தீசனடிகள் அப்படியே திகைப்படைந்து நின்று விட்டார். |