மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம் - காலச் சக்கரம்

அத்தியாயம் 18 - எனக்கு ஆபத்தா?

     பரம நாஸ்திகவாதம் பேசும் பூதுகன் பரமேசுவரனைக் குறித்து இவ்வளவு பக்தி பரவசமாகப் பாடுவானென்று அவர் நினைக்கவேயில்லை. எத்தகைய இனிய குரல்! அவன் கைகள் எவ்வளவு லாகவமாக விணையை மீட்டுகின்றன. அவர் உள்ளம் உருகி ரோமாஞ்சனம் ஏற்பட்டது. கரங்களைக் குவித்துக் கண்களை மூடிக் கொண்டு நின்றார். தேனார்மொழியாளுக்குக் கூடச் சிறிது ஆச்சரியமாகத் தானிருந்தது. ஆம்! அவளுக்கு இரண்டு விதத்தில் ஆச்சரியம். நாஸ்திகவாதம் பேசும் அவன் பரமேசுவரனைக் குறித்து உருகிப் பாடுவது மட்டும் ஆச்சர்யமல்ல; அதை விட ஆச்சர்யம் அவன் இவ்வளவு இனிய குரலும் உயர்ந்த இசை ஞானமும் பெற்றவன் என்பதை அறிந்து கொண்டது தான் ஆச்சரியம். அதிலும் அவன் மகேந்திர பல்லவன் கண்டு பிடித்த பரிவாதினி என்னும் வீணையை மீட்டுவதிலும் தேர்ச்சி பெற்றவனாக இருப்பது அவளுக்கு மிகவும் வியப்பைக் கொடுத்தது. மகேந்திர வர்மனுக்குப் பின் அத்தகைய யாழைக் கரங்களால் தொடத் தேனார்மொழியாள் ஒருத்திக்குத்தான் யோக்கியதை உண்டு என்பதை உலகம் அறியும். அப்படியிருக்கப் பரிவாதினி யென்னும் யாழை வாசிப்பதில் இன்னொருவரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பதை அவள் அறிந்த போது அவளுக்குச் சிறிது பொறாமையும் கலக்கமும் தான் ஏற்பட்டன. நிச்சயம் அந்த யாழை வாசிப்பவள் ஒரு பெண்ணாக இருந்தால் அப்பொழுது அந்த இடத்திலேயே அந்தப் பெண்ணை அடித்துக் கொன்றிருப்பாள். ஆனால் அவன் ஒரு ஆண்மகன். அதோடு அவள் யாரிடம் உள்ளத்தைப் பறிகொடுத்து மயங்கி நின்றாளோ அந்த மனிதரல்லவா யாழையெடுத்து மீட்டுகிறார்? அவளுக்கு ஏற்பட்ட பொறாமையை விட ஆனந்தந்தான் அப்பொழுது அதிகமாக இருந்தது. யாழ் மீட்டிக் கொண்டே பாடும் பூதுகனின் அழகுருவில் மயங்கி அவனையே ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டு தன்னை மறந்து நின்றாள் தேனார்மொழியாள்.

     அவன் பாட்டை முடித்து விட்டான். யாழை மெதுவாகக் கீழே வைத்து விட்டு அகத்தீசனடிகளின் முகத்தையும், தேனார்மொழியாளின் முகத்தையும் பார்த்தான்.

     பூதுகன் தன் பாட்டை முடித்துக் கொண்டாலும் அகத்தீசனடியார் காதில் 'அன்பே சிவம், அருளே சிவம்' என்ற இசையோடு குழைந்த சொற்கள் சில வினாடிகள் அப்படியே ரீங்காரம் செய்து கொண்டு தானிருந்திருக்க வேண்டும். அவர் குவித்த கரத்துடனேயே கண்களை மூடிய வண்ணம் சில வினாடிகள் இருந்து விட்டுச் சட்டென்று ஏதோ கனவு உலகத்திலிருந்து விழித்தவர் போல் கண்களைத் திறந்து பூதுகனை ஆவலோடு பார்த்தார். பிறகு "அபசாரம், அபசாரம், எம்பெருமானின் பெருமையை இவ்வளவு பரவசத்தோடு பாடும் ஒரு மகா புருஷரை நான் பரம நாஸ்திகன் என்று நினைத்து விட்டது பெரிய அபசாரம்" என்றார்.

     பூதுகன் சிரித்துக் கொண்டே எழுந்து அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்து, "என்னை நாஸ்திகனென்று நினைத்ததில் அபசாரம் எதுவும் இல்லை. நான் நாஸ்திகன் தான். நான் பாடியது சிவபெருமானிடம் எனக்கேற்பட்ட பரம பக்தியினாலல்ல. எனக்கும் இசை ஞானமுண்டு என்பதைக் காட்டுவதற்காகத்தான். இசைக்கே இயற்கையான மனத்தை உருக்கும் வன்மையுண்டு. அதிலும் சில மனிதர்களுக்குப் பிடித்த பாட்டைப் பாடிவிட்டால் நிச்சயம் அந்த மனிதர்களின் மனம் இளகும். சிவனைப் பற்றிப் பாடினால் உங்கள் மனம் உருகுமென்று எண்ணிப் பாடினேன். என்னுடைய பாட்டைக் கேட்டு நீங்கள் பக்தி பரவசராகி விட்டீர்கள். நீங்கள் நினைப்பது போல் நான் பக்திச் சுழலில் சிக்கித் தடுமாறவில்லை. இசைச் சுழலில் தான் சுற்றிக் கொண்டிருந்தேன்" என்றான்.

     "உங்கள் கொள்கை எப்படிப்பட்டதாயினும் இருக்கலாம். ஆனால் சிவ சிவ என்ற இனிய வாய்ச் சொல் மனத்தை பக்தி பரவசத்துள் ஆழ்த்திவிட்டது" என்றார் அகத்தீசனடிகள்.

     பூதுகன் ஏளனமாகச் சிரித்தான். "என் கொள்கை இதுதான். எல்லா சமயமும் அன்பை வளர்க்கப் பாடுபடுகிறது. நானும் அந்த அன்பைத் தான் வளர்க்கப் பாடுபடுகிறேன். எப்படியிருந்தாலென்ன? அன்பே சிவமானால் என்னிடம் நீங்கள் அன்பு செலுத்த முயற்சி செய்யுங்கள். துவேஷத்தைக் களையப் பாடுபடுங்கள். துவேஷத்தைக் களைந்தெறிந்து அன்பை உலகில் நிலை நிறுத்திவிட்டால் இவ்வுலகமே சுவர்க்கமாகிவிடும்..." என்றான்.

     "அன்பு வழியையே கைக்கொள்ள வேண்டும் என்பதுதான் சிறந்தது என்று நான் உணர்கிறேன். நீங்கள் நாஸ்திகவாதியா யிருங்கள். உங்கள் கொள்கைகளைப் பரப்பப் பாடுபடுங்கள். ஆனால் குழப்பத்தை உண்டாக்கி அரசைக் கவிழ்க்க முயற்சி செய்யாதீர்கள். இதுதான் மனத்துக்குப் பிடிக்காமலிருக்கிறது" என்றார் அவர்.

     "தாங்கள் இத்தகைய பல்லவ சாம்ராஜ்யத்தை அழிக்கச் சதி செய்யும் கூட்டத்தில் ஒருவனாக என்னையும் நினைத்து விட்டதுதான் பரிதாபம். எங்கள் நாட்டை ஆண்ட சோழ மன்னர்கள் யாவரும் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள். பிற மதத்தினரிடம் துவேஷ மனப்பான்மை யில்லாதவர்கள். இதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டாம். கடந்த கால வரலாறுகள் உங்களுக்குச் சொல்லும். அத்தகைய பெரிய வம்சம் இன்று சிலருடைய சாம்ராஜ்ய ஆசையால் உருக்குலைந்து போயிருப்பதைச் சோழ நாட்டில் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்ளும் யாராலும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. சாம்ராஜ்ய ஆசையின் காரணமாகத் தெற்கிலிருந்து படையெடுத்து வரும் பாண்டியர்களும், வடக்கிலிருந்து படையெடுத்து வரும் பல்லவர்களும் ஒருவரோடு ஒருவர் மோதிப் போர் புரியும் குருக்ஷேத்திரம் போலாகி விட்டது, சோழவள நாடு. பெரிய பண்டாரமும், சிறைக் கோட்டமும் இருக்கும் குடந்தைப் பதியில் சிறைக் கோட்டம் தான் நிறைந்திருக்கிறது. பொக்கிஷம் துடைத்திருக்கிறது. பஞ்சம் 'இதோ வந்துவிட்டேன்; இதோ வந்துவிட்டேன்' என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. பல்லவர்க்கு அடங்கித் தஞ்சையை ஆளும் முத்தரையர்களுக்குப் பதவியைக் காத்துக் கொள்ளப் போதிருக்கிறதே தவிர மக்கள் துயரைப் போக்க மனத்தைச் செலுத்த முடியாமல் இருக்கிறது. இந்தச் சிற்றரசர்களுக்குள்ளும் எவ்வளவோ பேதம். ஒருவர் பௌத்தர், ஒருவர் சமணர், ஒருவர் சைவர் - இப்படி. இந்த அரசர்களைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டு மதக் கொள்கைகளைப் பிரபலமாக்க மதவாதிகள் விரும்புகின்றனரே தவிர மக்களை நேரடியாக வந்து தாக்கும் வறுமையையும், பிணியையும் சிந்திப்பவர்களாக இல்லை. இந்த நிலையில் இங்கு ஒரு ஸ்திரமான அரசு இல்லையே என்று மக்கள் ஏங்குவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது?" என்றான் பூதுகன்.

     "நீங்கள் சொல்வது யாவும் எனக்குப் புரிந்தது. ஆனால் மறுபடியும் சோழ வம்ச அரசத்தினர் ஆட்சி புரிய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள், இல்லையா?" என்றார் அகத்தீசனடிகள்.

     "நான் விரும்புவது மட்டுமில்லை, மக்களின் விருப்பமும் அப்படித்தான். பழையாறை நகரையாண்ட சோழ வம்சத்தினனாகிய சிற்றரசன் குமாராங்குஜனைத் தஞ்சையை ஆளும் முத்தரையரின் ஏவலாட்கள் வஞ்சனையாகக் கொன்றிருக்கின்றனர். வீரத்திலும், தர்மத்திலும், ஒழுக்கத்திலும் சிறந்த அம்மன்னன் மக்களின் மதிப்பைப் பெற்றிருக்கிறான் என்ற பொறாமையின் காரணமாகத்தான் தஞ்சை முத்தரையரும் மற்றும் சில சிற்றரசர்களும் வஞ்சனையாகக் கொன்றிருக்கிறார்கள் என்பது உறுதி. இப்பொழுது பழையாறை நகரில் அவனுடைய விதவைக் கோலம் பூண்ட மனைவி கங்கமாதேவி சோழர் குலமணியாக விளங்கும் தன் ஒரே புதல்வனை வளர்த்துக் கொண்டிருக்கிறாள். தங்கள் அரசராகிய குமாராங்குஜரிடம் வைத்த பெரு மதிப்பாலும் பக்தியாலும் பழையாறை மக்களும் அரசாங்கப் பிரதானிகளும் அக்குழந்தையைப் பத்திரமாகக் காப்பாற்றி வருகின்றனர். பெருநற்கிள்ளி, கரிகாலன், செங்கணன், நல்லடி போன்ற சோழ அரசர்களின் குலத்தில் உதித்த அவ்வீரக் குழந்தையையும் வஞ்சனையால் மாய்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கின்றனர், சில துரோகிகள். இந்நிலையில் சோழ நாட்டின் சாதாரணப் பிரஜையாக என்னை நீங்கள் கருதிக் கொண்டு என் விருப்பம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் நீங்கள் சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். நீங்கள் ஆழ்ந்த சிவபக்தி யுள்ளவர்கள். சமயப் பூசலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உங்களிடம் நான் இதைச் சொல்லவில்லை. உங்கள் சமயப் பெரியாராகிய திருநாவுக்கரசு அடிகள் பழையாறை வடதளியில் எழுந்தருளியிருக்கும் இறைவனைத் தரிசிக்கச் சென்ற சமயம் தஞ்சைப் பேரரசன் முத்தரையரின் ஆதரவு பெற்ற சமண சமயத்தினர் சிலர் பழையாறை நகரில் அத்து மீறிப் பிரவேசித்து அத்திருக்கோயிலிலிருந்த சிவலிங்கத்தைப் பெயர்த்துக் கொண்டு மறைத்து விட்டனர். வலிமையுடைய தஞ்சை மன்னரின் ஆதரவு இருக்கிறதென்று அச்சமயம் இக்கொடுமையை அறிந்த திருநாவுக்கரசர் பழையாறையை ஆண்ட குமாராங்குஜனிடம் முறையிடவே, அம்மன்னன் சமணர்களைத் துரத்திச் சிவலிங்கத்தை மீட்டுத் திருநாவுக்கரசு அடிகள் மனத்தையும் மகிழ்வித்தான். இத்தகைய சைவப் பேரன்பு கொண்ட அரச பரம்பரையினரின் ஆட்சி நிலவ வேண்டுமென்று என்னைப் போன்ற நாஸ்திகன் கூட விரும்பினால் நீங்கள் மகிழ்ச்சியல்லவா கொள்ள வேண்டும்? அத்துமீறித் தன் நாட்டில் நுழைந்து கோவிலில் இருந்த லிங்கத்தை ஒளித்த சமணர்களைத் துரத்தியதின் காரணமாக அன்றிலிருந்து சமண சமயத்தின் ஆதரவாளராக இருக்கும் முத்தரையருக்கும் சோழ மன்னர்களுக்கும் பகைமை ஏற்பட்டது. எப்படியாவது பழையாறை நகரையாளும் சோழ மன்னரின் குலத்தையே பூண்டோடு அழித்துவிட வேண்டுமென்று முத்தரையர்கள் முயன்று வருகின்றனர். இது பேரரசாகிய பல்லவ மன்னருக்குத் தங்களைப் போன்றவர்கள் எடுத்துச் சொன்னால் தானே விளங்கப் போகிறது...? அப்படியே சமயப் பூசலின் காரணமாக அரசினருள் குழப்பங்கள் ஏற்பட்டு மக்கள் அல்லல்படுவதை நீங்கள் வரவேற்கிறீர்களா?" என்றான்.

     அகத்தீசனடிகள் சிறிது நேரம் யோசித்தார். "நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையே. சோழ மரபினர்கள் தீயவர்கள் என்ற உணர்ச்சி என்றும் மக்களின் மனத்தில் ஏற்படக் காரணமில்லை. சோழர்களின் பெருமையையும் அவர்களின் சீலத்தையும் நான் நன்கு உணர்ந்தவன். அவர்களை ஆதரிக்க வேண்டியதுதான். ஆயினும் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தை அடியோடு அழித்து ஒழித்துவிடாத வண்ணம் காப்பாற்ற வேண்டிய கடமையும் என்னைப் போன்றவர்களுக்கு உண்டு. சோழ மரபினர் நல்லவரென்பதற்காக அரசனைக் கொண்டு அவர்களைப் பாதுகாக்க ஏற்பாடு செய்யலாமே தவிர வேறு எதற்கும் வழியில்லை. சமயம் நேர்ந்த போதெல்லாம் சோழ மரபினருக்கு உதவியைச் செய்ய நான் எப்பொழுதும் காத்திருக்கிறேன். அதற்காக இந்தப் பேரரசைக் கவிழ்க்கும் வேலைகளில் யார் ஈடுபட்டாலும் நான் பொறுக்க மாட்டேன்" என்றார்.

     "இவ்வளவு தூரம் தங்கள் மனம் இரங்கியது பற்றி மிக்க வந்தனம். என்னைப் போன்றவர்கள் சோழ பரம்பரைக்கு நலம் செய்ய வேண்டுமென்பதற்காகச் சதி வேலைகளில் சம்பந்தப்பட்டு ஏதேனும் செய்வேனென்று தாங்கள் நினைக்க வேண்டாம். குலத்தில் பிறந்த கோடரிக் காம்பு போல பல்லவ அரசினருக்கு அழிவைத் தேடப் பல்லவ மன்னரைச் சேர்ந்தவர்களே சித்தமாக இருக்கின்றனர் என்பதைத் தாங்கள் மறந்துவிட வேண்டாம். அவர்களுக்கு உதவியாகக் காஞ்சியிலிருந்து மதுரை வரையில் சதிகாரர்கள் திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மறக்க வேண்டாம். நீங்கள் உங்கள் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டுவதெல்லாம் ஒன்று தான். 'மகாதேவா, என்றாவது இந்தப் பல்லவ சாம்ராஜ்யம் சிதைந்து போகுமானால் அந்த இடத்திலேயே சோழர்களின் அரசு உதயமாக வேண்டும்' என்பதுதான் அது" என்றான்.

     அகத்தீசனடிகள் அந்தச் சமயத்தில் எதுவும் பேசவில்லை. அவர் ஆழ்ந்த யோசனையிலிருந்து விட்டு, "சரி, பார்ப்போம். எல்லாவற்றுக்கும் இந்த ஊரில் நீங்கள் அதிக நாட்கள் தங்குவது உங்களுக்கு மிகுந்த அபாயத்தை உண்டாக்கும். சிம்மவர்மனின் சூழ்ச்சிகள் தான் உங்களுக்கு அபாயத்தை உண்டாக்குமென்பதல்ல. நீங்கள் இந்த நகருக்கு வந்தது அரசாங்கத்தினரின் கவனத்துக்கும் வந்திருக்கிறது. அவர்களாலும் உங்களுக்கு அபாய முண்டு. அரசாங்கத்து உளவாளிகள் நீங்கள் அரசாங்கத்துக்கெதிரிடையாகச் சூழ்ச்சிகள் செய்வதாகத்தான் உணர்ந்திருக்கின்றனர். இதனால் நீங்கள் அரசாங்கத்தின் தண்டனைக்கும் உள்ளாக நேரும். ஆகையால் அதி சீக்கிரமே நீங்கள் இந்நகரை விட்டுப் போய்விடுவது நலம்..." என்றார்.

     "நானும் அதையெல்லாம் உணர்ந்துதானிருக்கிறேன். ஆனால் என்னுடைய நட்பை விரும்பும் சிம்மவர்மர் எனக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தாலும் அதிலிருந்து காப்பாற்றி விடுவாரென்று நினைக்கிறேன்" என்றான் பூதுகன்.

     இதைக் கேட்ட அகத்தீசனடியார் சிறிது கலக்கமும் திகைப்பும் அடைந்தார். "சிம்மவர்மன் உங்கள் நட்பை விரும்பலாம். ஆனால் உங்களுக்கு அவனுடைய நட்பு தகாது. இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தை யார் சீர்குலைக்க நினைக்கிறார்களோ, அவர்களிடமே நீங்கள் நட்பு பாராட்ட விரும்புவது நீங்களும் தகாத செயல்களில் ஈடுபட்டவர் என்பதைத்தான் காட்டுகிறது" என்று கூறினார் அகத்தீசனடிகள்.

     "நான் இவ்வளவு சொல்லியும் நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்று தான் வருந்துகிறேன். நான் நெடு நாட்கள் இந்த ஊரில் தங்கியிருக்க விரும்பவில்லை. ஆனால் நான் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளாத வரையில் இங்கிருந்து போய்விடுவதும் சரியாகாது. என்னைப் போலொரு காரியத்தில் இறங்கியவன் எதற்கும் பயப்படுவதில் அர்த்தமில்லை" என்றான் பூதுகன்.

     அதற்கு மேல் அவனிடம் அதிகமாகப் பேச விரும்பவில்லை அகத்தீசனடிகள். எப்படியோ அவருக்கு அவன் மீது அன்பும் அனுதாபமும் ஏற்பட்டன. அவன் செயல் குறித்து, பச்சாத்தாபப்பட்டார். அதே சமயத்தில் அவருக்கு அவனிடம் சிறிது வெறுப்புணர்ச்சியும் ஏற்பட்டது. "உங்கள் சாமர்த்தியத்தில் உங்களுக்கு நம்பிக்கையிருப்பது நல்லதே" என்று சொல்லிவிட்டுத் தேனார்மொழியாளைப் பார்த்து, "உன் அத்தை மகன் என்று சொல்லிக் கொள்ளும் இவரைக் காப்பாற்ற வேண்டியது உன்னுடைய பொறுப்பும் கடமையும் ஆகும், அம்மா. நான் சென்று வருகிறேன், நமச்சிவாய" என்று சொல்லிவிட்டு மெதுவாக நடந்தார்.

     தேனார்மொழியாள் அவரை வாசல் வரையில் கொண்டு போய் விட்டுவிட்டுக் கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே வந்தாள். அவளுக்கு ஏதோ பெரிய பந்தத்திலிருந்து நீங்கியது போல் இருந்தது. பூசை சமயத்தில் கரடி புகுந்தாற் போல் அகத்தீசனடிகள் திடீரென்று தோன்றியது அவளுக்கு மிகவும் தரும சங்கடத்தைத் தான் விளைவித்தது. அவர் வந்த வேகத்தில் என்ன நடைபெறுமோ என்று அஞ்சியே நடுங்கினாள் அவள். ஆனால் பூதுகன் மிகவும் சாமர்த்தியமாக நடந்து கொண்டது அவளுக்கு மிகுந்த ஆறுதலை அளித்ததோடு, அவன் மீது அவளுக்கு ஏற்பட்டிருந்த மதிப்பையும் காதலையும் அதிகமாக்கி விட்டது. அகத்தீசனடிகள் எப்பொழுது செல்வார் என்று துடிப்போடு காத்திருந்த அவள் ஒரு மோகனப் புன்னகை புரிந்த வண்ணம் ஆர்வத்தோடு பூதுகனை நெருங்கி மெதுவாக அவன் தோளில் தன் மெல்லிய கரத்தை வைத்தாள். "நீங்கள் இவ்வளவு அழகாகப் பாடுவீர்களென்று நான் நினைக்கவில்லை. அதிலும் மகேந்திர பல்லவர் சிருஷ்டித்த யாழாகிய இந்தப் 'பரிவாதினி'யை என்னைத் தவிர வேறு யாராலும் தொடக் கூட முடியாதென்ற கருத்தோடு நான் இருந்தேன். எதிர்பாராத வண்ணம் கணப் பொழுதில் கற்கோட்டை போல் எழும்பி இருந்த என்னுடைய கர்வத்தை இடித்துத் தூள் தூளாக்கி விட்டீர்கள். அதனால் எனக்கு ஆத்திரமோ பொறாமையோ இல்லை. ஆனந்தம் தான். நான் மனதார விரும்பும் ஒரு மனிதர் என்னைப் போலவே நாத வித்தைகளில் தேர்ந்தவராய் இருப்பது எனது பாக்கியம் தானே!" என்று சொல்லி அவன் முகத்தைப் பார்த்தாள்.

     பூதுகன் தன் தோள் மீதிருந்த அவள் கரங்களை எடுத்து அப்பால் விட்டு, "தேனார்மொழி! உனக்காக நான் இரக்கப்படுகிறேன். ஆனால் உலகில் எதையும் சிந்திக்காமல் யாரும் உணர்ச்சிகளுக்குப் பலியாகி விடக்கூடாது. அதுவும் பெண்கள் உணர்ச்சி வசப்பட்டுத் தடுமாறி விட்டால் மிகுந்த அபாயமாக முடியும். வைகைமாலை என்னிடம் அளவில்லாத பற்றுதலுள்ளவள். நான் அவளிடம் எல்லையற்ற பற்றுதலுடையவன். என்னுடைய இலட்சியமும் அவளுடைய இலட்சியமும் ஒன்று. அவள் அந்த இலட்சியத்துக்காகத் தன்னைத் தியாகம் செய்யச் சித்தமாய் இருக்கிறாள். நானும் அப்படியே. இத்தகைய உன்னத நோக்கத்திலுள்ள நாங்கள் மனத்தை ஒரு கணம் கூட வேறு எதிலும் சிதற விடச் சித்தமாயில்லை. தேனார்மொழி! இதை நீ உணர்ந்து கொள். உன்னுடைய மன ஆவலை அடக்கிக் கொள்வதுதான் உத்தமமான காரியமாகும்" என்றான்.

     தேனார்மொழிக்குப் பூதுகனின் வார்த்தைகள் பெருத்த ஏமாற்றத்தையளித்தன. உன்னத எழில் கொண்ட அவள் எந்த ஆண்பிள்ளையிடமும் இதுவரை காதற் பிச்சை ஏந்திச் சென்றதில்லை. மன்னாதி மன்னர்களெல்லாம் அவளிடம் காதற் பிச்சைக்குக் கையேந்தி நின்றிருக்கிறார்கள். இந்த ஏமாற்றம் அவளுக்குப் பெருத்த அவமானத்தை உண்டாக்கியதில் அதிசயமென்ன? மோக லாகிரி வீசும் அழகான விழிகள் கோபத்தால் சிவந்து விகாரமடைந்தன. சிவந்த உதடுகள் துடிக்க மார்பு பொருமியெழ, "நான் நேசத்தோடும் ஆர்வத்தோடும் உங்களிடம் சமர்ப்பிக்க வந்த அன்பு மலரை நீங்கள் காலால் தேய்த்து நாசமாக்கி விட்டீர்கள். நீங்கள் மிகவும் சுயநலக்காரர். உங்களுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக என்னை நாடி வந்திருக்கிறீர்கள். உங்களுக்காக எதையும் செய்யச் சித்தமாயிருக்கும் என் அன்பை நீங்கள் நிராகரித்தது பெரிய பாதகம்; போகட்டும் - இனிமேல் உங்களிடம் அன்புப் பிச்சை கேட்க மாட்டேன். எனக்குப் புத்தி வந்தது. நீங்கள் பல்லவ சாம்ராஜ்யத்தின் கோட்டையாகிய இந்தக் காஞ்சிமா நகரில் வந்து ஆபத்திடையே சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம். நிச்சயம் இதை மாத்திரம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தத் தேனார்மொழியாளை அலட்சியம் செய்து விட்டு இந்தக் காஞ்சிமா நகரில் ஒரு கணம் கூடப் பத்திரமாக வாழ முடியாதென்பதை..." என்று படபடப்போடு சொல்லிப் பூதுகனின் முகத்தைப் பார்த்தாள்.

     பூதுகன் அதிர்ச்சியோ பயமோ அடைந்து விடவில்லை. "தேனார்மொழி! ஆத்திரமோ கோபமோ நன்மையளிக்காது. ஆத்திரமும் கோபமும் அடைவதை விடச் சிந்தித்து உணர்ந்து கொள்வது எவ்வளவோ நல்லது. நீ எனக்கு விரோதியாகி விட்டதனால் பெரிய ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. என் மனம் அசைந்து விடாது. எனக்கு மதத் துறையிலும் எத்தனையோ விரோதிகள் உண்டு. பத்தோடு பதினொன்று என்பது போல் நீயும் ஒருத்தி என்று தான் நான் கருதுவேன். நம்முடைய பகைமை உச்ச நிலை அடைவதற்கு முன்னால் உன்னிடமிருந்து நான் விடைபெற்றுக் கொள்ள விரும்புகிறேன்" என்று சொல்லிச் சட்டென்று ஆசனத்திலிருந்து எழுந்தான்.

     அவனுடைய அமைதி நிறைந்த வார்த்தைகள் தேனார்மொழியாளின் உள்ளத்தை உருக்கிவிட்டன. தான் சிறிதும் பொறுமை காட்டாமல் உணர்ச்சிப் பெருக்கினால் ஏதேதோ வார்த்தைகளைக் கொட்டி விட்டோம் என்பதை அப்பொழுதுதான் அவள் உணர்ந்தாள். தன்னுடைய தவறுதலுக்காக மன்னிப்புக் கேட்டு அவனைச் சமாதானம் செய்ய வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது.

     "என்னை மன்னித்து விடுங்கள். உணர்ச்சி வேகத்தில் ஏதேதோ சொல்லிவிட்டேன். இந்த இரவு வேளையில் எங்கே கிளம்பினீர்கள்? நீங்கள் எங்கும் போக வேண்டாம். இங்கேயே தங்கியிருங்கள். என்னுடைய நாட்டிலிருந்து வந்த ஒரு அதிதியை இந்த வேளையில் நான் வேறெங்கும் அனுப்பமாட்டேன். அதுவும் உங்களுக்கு ஆபத்து சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் உங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் என்னுடையது" என்று சொல்லிக் கொஞ்சும் முகத்தோடு அவன் இருகரங்களையும் பிடித்துக் கொண்டாள்.

     அவன் சட்டென்று அவளுடைய கரங்களை உதறித் தள்ளிவிட்டு வெளியில் வேகமாக நடந்தான். தேனார்மொழி அவனுக்கு முன்னதாக ஓடி வாசற் கதவின் தாளை அவன் திறந்து வெளியேறாத வண்ணம் கதவில் சாய்ந்து கொண்டு, "போகாதீர்கள், ஆபத்து. வெளியே சென்றால் வஞ்சகர்கள் கையில் சிக்கிக் கொள்வீர்கள். நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன். இங்கிருந்து போக வேண்டாம்...! என்னைத் தவறாக நினைக்காதீர்கள்...!" என்றாள்.

     "ஆபத்தா? இங்கு இருப்பதுதான் எனக்குப் பேராபத்தாக இருக்கும் போலிருக்கிறது! வீண் பிடிவாதம் காட்டாதே. உன் ஆசை அனலில் வீழ்ந்து சாகும் வீட்டில் பூச்சியல்ல நான்" என்று சொல்லிச் சட்டென்று அவள் தோள்களைப் பிடித்து அப்பால் தள்ளி, தாளை நீக்கிக் கதவைத் திறந்து கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினான் பூதுகன்.