மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம் - காலச் சக்கரம்

அத்தியாயம் 19 - பூமி சுழன்றது

     தேனார்மொழியாளின் வீட்டை விட்டு வெளியேறிய பூதுகன் வீதியில் அதி வேகமாக நடந்தான். அப்பொழுது அவன் எங்கே கிளம்பினான், எங்கே போகிறான் என்பது அவனுக்கே தெரியாதிருந்தது. தேனார்மொழியாளின் மனநிலையை அறிந்த பூதுகன் எப்படியாவது அவளுடைய வீட்டை விட்டு வெளியேறுவதுதான் நலம் என்று கருதினான். அவன் தன்னுடைய வாலிபத்தைப் பற்றியோ கட்டுத் தளராத உடல் அழகைப் பற்றியோ இதுவரை சிந்திக்கவில்லை. அதிலும் அபாயம் இருக்கிறது என்பதை இப்பொழுதுதான் உணர்ந்து கொண்டான். சில நிமிஷ நேரங்கள் பழகுவதற்குள் தேனார்மொழியாளுக்குத் தன் மீது தவறான இச்சை ஏற்பட்டு விடும் என்று அவன் நினைக்கவேயில்லை. ஆரம்பத்தில் அவளுடைய இனிய வார்த்தைகள் அவனுக்கு மிகவும் அனுகூலமுள்ளவை போலத் தென்பட்டன. ஆனால் அவள் கோபங் கொண்டபோது சொல்லிய வார்த்தைகள் அவளால் எப்பொழுதேனும் துன்பம் நேருவதற்குக் காரணமுண்டு என்பதைத்தான் அவனுக்கு எடுத்துக் காட்டின. தேனார்மொழியாள் மிகவும் அழகுடையவள் தான். சொல்லப் போனால் வைகைமாலையை விட வயதில் மூத்தவளாக இருப்பினும் அவளை விட மிகவும் அழகு உடையவள் என்பதை உணர்ந்து கொண்டான். அது மட்டுமல்ல, அவளுடைய இசை மிகவும் சிறந்ததாகத்தான் இருந்தது. ஆனால் அவைகளெல்லாம் அவன் மனத்தைக் கவர்ந்து விடவில்லை. அவன் தன்னுடைய மனத்தைத் திடத்தோடு வைத்துக் கொள்ள நினைத்தான். தன்னை நம்பியிருக்கும் வைகைமாலைக்குத் துரோகம் செய்ய விரும்பவில்லை. நாட்டுப் பற்றுள்ள அவளுடைய லட்சியம் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்துவதாக இருந்தாலும் அதற்காக உள் அந்தரங்கமான துரோகம் செய்ய விரும்பவில்லை. மறுபடியும் தேனார்மொழியாளின் வீட்டைப் பற்றியே நினைக்கக் கூடாது என்ற திட சங்கற்பத்துடன் அவன் வேகமாக நடந்தான்.

     அன்று மாலை அவன் வந்ததிலிருந்து மாலவல்லியைப் பற்றி அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. பூம்புகார் புத்தவிஹாரத்தில் ரவிதாசனைக் கொன்றவர்கள் யார் என்ற விவரமும் அவனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. மாலவல்லி எங்கே சென்றிருப்பாள்? அவளாகச் சென்றிருப்பாளா? அல்லது அவளை யாரேனும் கடத்திக் கொண்டு போயிருப்பார்களா? வீரவிடங்கன் என்று தன் பெயரை மாற்றி வைத்துக் கொண்ட கங்க நாட்டு இளவரசன் பிரதிவீபதி திடீரென்று எங்கே மறைந்தான்? இவைகளையெல்லாம் தெரிந்து கொள்ளத்தானே அவன் காஞ்சிமா நகர் வந்தான்? இவைகளை யெல்லாம் தெரிந்து கொள்வதற்கு அனுகூலமாகத்தானே தேனார்மொழியாளின் வீட்டைத் தேடியலைந்தான்? அவளும் அவனுக்கு அனுகூலமாகத் தானே இருந்தாள்? திடீரென ஏன் துரதிர்ஷ்டவசமாக அவளுடைய விரோதம் அவனுக்கேற்பட வேண்டும்? இனிமேல் அவள் வீட்டுக்கே போவதில்லை என்று சங்கற்பம் செய்து கொண்ட அவன், இனிமேல் எப்படி யார் மூலமாகத் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் போகிறான்? இத்தகைய பிரச்னைகளெல்லாம் அவன் மனத்தில் அப்பொழுது எழுந்து ஒரு முடிவுக்கும் வர முடியாத வண்ணம் குழப்பத்துக்குள்ளாக்கியது.

     குழப்பமான நிலையிலிருந்த அவன் மனம் திடீர் என்று ஒரு முடிவுக்கு வந்தது. காஞ்சி மாநகரில் புத்ததேரித் தெரு என்றொரு தெரு உண்டு. அந்தத் தெருவில் காலநங்கை என்னும் புத்த பிக்ஷுணி ஒரு புத்தப் பள்ளி ஏற்படுத்தியிருந்தாள். தேரிகள் என்று சொல்லப்படும் பிக்ஷுணிகளுக்குள்ளேயே குணத்தாலும், கொள்கையாலும், நடத்தையாலும் சிறந்தவளாக அவள் விளங்கினாள். அவள் மிகவும் படித்தவள். தமிழ் நாட்டிலேயே புத்த சமயத்தினரின் பெரு மதிப்புக்குப் பாத்திரமானவள். அடக்கமும் சீலமும் கொண்ட அவளிடம் புத்த பிக்ஷுணியாக விளங்க நினைக்கும் அனேக பெண்கள் தர்ம விதிகளைக் கற்றுக் கொண்டிருந்தனர். பூம்புகாரிலிருந்து திடீரென்று மறைந்த மால்வல்லி காலநங்கையிடம் வந்து அடைக்கலம் புகுந்திருக்கலாமோ என்று எண்ணினான் பூதுகன். அதனால் இரவு வேளையாயினும் புத்த தேரித் தெருவிலுள்ள புத்தப் பள்ளியில் போய்ப் பார்க்கலாமென்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று. உடனே எதிரில் வந்த மனிதரை நெருங்கிப் புத்த தேரித் தெரு எங்கே இருக்கிறதென்று விசாரித்துக் கொண்டு அந்தத் தெருவை நோக்கி வேகமாக நடந்தான்.

     பாவம்! அந்த இரவில் அவனைப் பின் தொடர்ந்து ஒளிந்து ஒளிந்து ஒரு உருவம் வருவதை அவன் கவனிக்கவில்லை. பல வீதிகளைக் கடந்து புத்த தேரித் தெருவையடைந்தான். அந்தத் தெருவில் சுமார் பத்து பதினைந்து வீடுகள் இருந்தன. அந்த வீடுகளெல்லாம் ஒரே மாதிரி காட்சியளித்தன. தெருக் கோடியில் ஒரு பெரிய கட்டடம் இருந்தது. அதைப் பார்த்ததுமே அதுதான் புத்தப் பள்ளியாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் அவனுக்கு ஏற்பட்டது. அவன் அந்தக் கட்டடத்தை நெருங்கிய போது அந்தக் கட்டடம் மிகுந்த அமைதி நிறைந்த நிலையில் இருந்தது. சிறிது நேரம் நின்று யோசித்தான். அந்தக் கட்டடத்தின் வாசற் கதவு தாளிடப்பட்டிருந்தது. முற்றிலும் பெண்களே இருக்கும் அந்த புத்தப் பள்ளியில் அந்த வேளையில் கதவை இடிப்பது உசிதமா என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. அவன் எதையோ எண்ணி அங்கு வந்து விட்டான். அங்கிருந்து எதையும் அறிந்து கொள்ளாது திரும்புவது உசிதமாகப் படவில்லை. மெதுவாகப் படிகளிலேறி, கதவைத் தட்டினான். உள்ளிருந்து யாரோ பேசும் குரல் அவனுக்குக் கேட்டது. அது யாரோ ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் பேசும் குரல் தான் என்பதையும் தெரிந்து கொண்டான். சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. வாசற்படியருகே ஒரு வயதான பிக்ஷுணி நின்று கொண்டிருந்தாள். இரவு நேரத்தில் தாங்கள் இருக்கும் ஆசிரமம் போன்ற அந்த இடத்துக்கு ஒரு ஆண்பிள்ளை வந்தது அந்த பிக்ஷுணிக்குச் சிறிது ஆச்சர்யத்தை யளித்தது போலிருக்கிறது. அவள் வியப்போடு பார்த்து, "தாங்கள் யார்? இங்கு வந்த காரணம் என்ன?" என்று கேட்டாள்.

     அவன் மிக்க மரியாதையோடும் வணக்கத்தோடும், "நான் சோழ நாட்டைச் சேர்ந்தவன். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வருகிறேன்" என்றான்.

     அந்த வயதான பிக்ஷுணி "அப்படியா? தாங்கள் இங்கு வந்த காரணம்...?" என்று வினவினாள்.

     "சமீபத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள புத்த சேதியத்தில் ஒரு பிக்ஷு கொலை செய்யப்பட்ட விஷயம் தங்களுக்குத் தெரிந்திருக்கலாம்" என்று தயங்கியபடியே சொல்லி நிறுத்தினான்.

     இதைக் கேட்டதும் அந்த பிக்ஷுணி கலக்கமடைந்தவள் போல், "எனக்கு அவ்விவரங்கள் தெரியாது. நீங்கள் சொல்வதிலிருந்து தான் தெரிகிறது. புத்த சேதியத்தில் கொலையா? என்ன அநியாயம்? இத்தகைய தீய காரியம் ஒரு புத்த சேதியத்தில் நடந்ததென்பதைக் கேட்கத்தான் மனம் பொறுக்கவில்லை. அதன் விவரத்தையறிய நான் ஆசைப்படுகிறேன்" என்றாள்.

     "அதன் விவரத்தைத் தங்களுக்குச் சொல்ல வேண்டுமென்பதுதான் என் விருப்பம். அதோடு தங்களிடமும் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலில் தான் இரவு வேளையில் இந்த இடத்துக்கு வரலாமா கூடாதா என்பதையும் ஆலோசிக்காமல் வந்தேன், மன்னிக்கவும். இதைப் பற்றி இங்கு நின்று பேசுவது சிலாக்கியமில்லை யென்று நினைக்கிறேன். நான் உள்ளே வர அனுமதியுண்டா?" என்று கேட்டான் மெதுவாக.

     "தாராளமாக வாருங்கள்" என்றாள் அந்தக் காலநங்கை யென்னும் புத்த பிக்ஷுணி. பூதுகன் அவளைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றான். உள்ளே அகன்ற சதுரமான கூடம். சுற்றிலும் தீபங்கள் எரிந்து கொண்டிருந்தன. புத்த பெருமானின் பூர்வ பிறவிக் கதைகளைச் சித்தரிக்கும் அழகான ஓவியங்கள் சுற்றிலும் உள்ள சுவர்களில் எழுதப்பட்டிருந்தன. கூடத்தின் நடுவே ஒரு உயர்ந்த ஆசனம் போடப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த கோரைத் தடுக்குகளில் கையில் ஓலைச்சுவடிகளை ஏந்தியவண்ணம் பல புத்த பிக்ஷுணிகள் அமர்ந்திருந்தனர். பூதுகனோடு உள்ளே வந்த காலநங்கை அவர்களுக்கு ஏதோ சமிக்ஞை காட்ட அவர்களெல்லாம் வணக்கம் செலுத்திவிட்டு மெதுவாக எழுந்து சென்றனர். அந்த இடத்தில் தூய அமைதியும் தெய்வீக மணமும் கமழ்ந்து கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

     கண நேரத்தில் பூதுகன் யாவற்றையும் உணர்ந்து கொண்டான். அந்தப் புத்த பிக்ஷுணிகளுக்குள் வயதிலும் அனுபவத்திலும் சிறந்தவளாக விளங்கும் அந்தக் காலநங்கை மகா தேரியாக இருந்து புத்த தரும உபதேசங்களைக் கற்பித்துக் கொண்டிருந்தாள் என்பதை எளிதாக உணர்ந்து கொண்டான். அதோடு அவனது பார்வை அங்கிருந்து சென்ற புத்த பிக்ஷுணிகளின் முகத்தை ஒரு கணத்தில் பார்த்துத் தெரிந்து கொண்டது. அவனுடைய கவலையெல்லாம் மாலவல்லி அங்கு இருக்கிறாளா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதுதானே? ஆனால் அவள் இங்கு இல்லையென்பதைச் சில வினாடிகளுக்குள்ளேயே உணர்ந்து கொண்டு விட்டான். அவள் அங்கு இருந்தால் அவளும் தருமோபதேசங்களைக் கேட்க அங்கு வந்திருக்க மாட்டாளா? அவள் அங்கு இல்லை என்பதை யூகித்துக் கொண்டதும் அவன் தன் காரியம் முடிந்து விட்டதாகக் கருதி விடவில்லை. புத்த பிக்ஷுணியாகிய காலநங்கையோடு பேசி அவளுடைய மன நிலையையும் அறிந்து கொள்ள விரும்பினான். காலநங்கை அங்கு போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்து அவனையும் பக்கத்தில் அமரும்படி கை காட்டினாள். பூதுகன் மிகவும் அடக்கத்தோடு அவள் எதிரில் உட்கார்ந்தான்.

     காலநங்கை ஆழ்ந்த மன வருத்தத்தோடு, "சிறந்த ஞானியாகிய அக்க மகாதேரர் எழுந்தருளியிருக்கும் பூம்புகார் புத்த சேதியத்தில் இப்படியொரு காரியம் நடந்தேறியதைக் கேட்டதும் மிகுந்த மன வருத்தம் ஏற்படுகிறது. இந்தச் சமயத்தில் மிகுந்த சீலரான அவருடைய மனம் எப்பாடு பட்டிருக்கும் என்பதை நினைத்தால் மனத்தில் சங்கடம் ஏற்படுகிறது. ஒன்று மாத்திரம் உண்மை. ஒரு துறவி தன்னைத் தானே காத்துக் கொள்வதைத் தவிர வெளியார்களின் தூயமையையும் காக்க முற்பட்டானானால் அவன் உலகச் சுழலில் சிக்கித் தடுமாறத்தான் வேண்டியிருக்கிறது. ஆயினும் இந்தக் கொலையைப் பற்றிச் சிறிது விவரம் அறிந்து கொள்ள விரும்புகிறேன்" என்றாள்.

     "பூம்புகார் புத்த சேதியத்தில், இந்தக் காஞ்சிமா நகரிலிருந்து வந்த புத்த பிக்ஷுவான ரவிதாசர் என்பவர்தான் கொல்லப்பட்டார். அவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்" என்றான் பூதுகன்.

     புத்த பிக்ஷுணி ஒரு பெருமூச்சு விட்டாள். "ரவிதாசரா...? சீவர ஆடையணிந்து புத்த சங்கத்தில் சேருவது மகா கடினமானதென்று சொல்லுவார்கள். ஆனால் அதுவே சில சமயத்தில் மனிதர்களை உத்தேசித்தும் அதிகாரச் சலுகையினாலும் மிகச் சுலபமாக நிறைவேறி விடுகிறது. ரவிதாசர் ஜைன மதத்தில் இருந்தவர். அவர் புத்த தருமத்தை எவ்வளவு தூரம் கற்றுத் தெரிந்தவர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் திடீரென்று புத்த சங்கத்தில் சேர்ந்ததும், சேர்த்துக் கொள்ளப்பட்டதும் ஏதோ அதிகாரச் சலுகையால் தான் என்பதை நான் உணர்ந்தேன். அரசாங்க அதிகாரம் உள்ளவர்களெல்லாம் சில சமயம் சமய நிர்வாகங்களுக்குள்ளும் வந்து புகுந்து ஊழலை ஏற்படுத்துகிறார்கள்..." என்றாள் காலநங்கை.

     பூதுகன் அடக்கமான குரலிலேயே "உண்மை. அதைப் போல சமயப் பணி செய்பவர்களும் அரசியல் அதிகார ஆசைக்குட்பட்டு அதில் புகுந்து அரசியலையும் குழப்புகிறார்கள்" என்றான்.

     "எப்படியோ அரசியல் செல்வாக்கின் காரணமாக மதத்தைப் பரப்ப வேண்டுமென்று நான் சொல்லவில்லை. அதனால் மதத்தின் பெருமைக்குத்தான் இழுக்கு ஏற்படும்..." என்றாள்.

     பூதுகன் சிரித்தான். "ஒரு உண்மையை நீங்கள் மறுக்க முடியாது. அரசின் தயவை எதிர்பார்க்காமல் இந்த நாட்டில் எந்த மதமும் முன்னேறியதில்லை. புத்த பெருமான் பரிநிர்வாணம் அடைந்த பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் அசோகன் தோன்றிப் பௌத்த தரும சங்கங்களை ஒழுங்குபடுத்தி இம் மதத்தை உலகமெங்கும் பரப்பலானான். போகட்டும். உங்களுக்கு புத்த பிக்ஷுணியாகிய மாலவல்லியைப் பற்றி ஏதேனும் தெரியுமா?" என்று கேட்டான்.

     இதைக் கேட்டதும் காலநங்கை பூதுகனை வியப்போடு பார்த்துக் கொண்டே, "மாலவல்லியா?... நல்ல பெண். ஆனால் புத்த சங்கத்தில் சேரும் அருகதை அவளுக்கு இல்லை. அவள் மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொண்டதன் பேரில் அவளை நான் சங்கத்தில் ஒரு பிக்ஷுணியாகச் சேர்த்துக் கொண்டேன். ஆனால் அவள் பௌத்த தருமத்தை மீறிச் சில காரியங்களில் ஈடுபடுகிறாளென்பதை யறிந்ததும் மனம் வருந்தினேன். அவள் இங்கு இந்தக் காஞ்சியில் இருந்தால் அவளுடைய புனிதமான வாழ்க்கை பாதிக்கப்படும் என்று நான் தான் அவளைப் பூம்புகாருக்கு அனுப்பினேன். அவளைப் பற்றி நீங்கள் கேட்கும் போது எனக்கு அனேக சந்தேகங்கள் எழுகின்றன. அவளைப் பற்றி ஏதேனும் விவரமுண்டா?" என்றாள்.

     "அவளுடைய அந்தரங்கமான வாழ்க்கை விவரங்களைத் தெரிந்து கொண்ட உங்களுக்கு நான் என்ன சொல்வது? காஞ்சியிலிருந்து காவிரிப்பூம்பட்டினம் வந்து விட்டால் ஆசை அகன்று விடுமா? இளம் பெண்ணின் வாழ்க்கையில் இது எதிர்பார்க்கக் கூடியதா? இயற்கையாக விளைந்த பேரழகைச் சீவர ஆடையைக் கொண்டு போர்த்தி விட்டால் மறைந்து விடுமா? மன்னித்துக் கொள்ளுங்கள். அழகிய சிறந்த இளம் பெண்கள் சீவர ஆடையை அணிந்து கொண்டால் அதுவும் ஒரு அழகாய்த்தான் இருக்கிறது. மாலவல்லியின் காதலனுக்கு அவள் காஞ்சியிலிருந்தாலும் ஒன்றுதான், காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தாலும் ஒன்றுதான். கங்கபாடியிலிருந்து குதிரை ஏறிக் காஞ்சிக்கு வந்து கொண்டிருந்த அவன், காவிரிப்பூம்பட்டினம் வந்து கொண்டிருந்தான். அவ்வளவுதான் வித்தியாசம். வாழ்க்கையில் எதைத் தவிர்த்தாலும் இந்த மோகத்தைத் தவிர்ப்பது என்பது சிறிது கடினம் தான்..." என்றான் பூதுகன்.

     பிக்ஷுணி காலநங்கை ஒரு பெருமூச்சு விட்டு, மிகவும் வருத்தம் நிறைந்த குரலில், "உண்மையாகவே இந்த உலகத்தில் பெண்களாய்ப் பிறந்தவர்கள் துறவறத்துக்கு அருகதையற்றவர்கள் என்று தான் தோன்றுகிறது. ஏனென்றால் அவர்களை ஆபத்து எப்பொழுதும் சூழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ததாகதர் பெண்களைச் சங்கத்தில் சேர்ப்பதை முதலில் விரும்பவில்லை. பகவர் நியக்குரோதி வனத்தில் தங்கியிருந்த போது அவருடைய சிற்றன்னை கௌதமி அவரை யணுகித் தான் தரும விதியை முறைப்படி யறிந்து, வீட்டைத் துறந்து, பிக்ஷுணியாக வேண்டுமென்று அனுக்கிரகிக்க வேண்டினாள். 'துறவு மார்க்கத்தில் பெண்கள் ஆசை வைக்க வேண்டாம்' என்று பகவர் சொல்லி மறுத்து விட்டார். இரண்டு மூன்று முறைகள் கௌதமி மன்றாடிப் பார்த்தும் பயனில்லாமல் போயிற்று. அவள் சோகத்தோடு அழுது கொண்டே சென்று விட்டாள். பெண்கள் பிக்ஷுணியாவதற்குப் பெருமாள் நெடுநாள் வரையில் இசையவில்லை. ஆனால் அவருடைய சிற்றன்னை கௌதமி மனங் கலங்காது உறுதியோடு பல விரதங்களைக் கைக்கொண்டு எப்படியேனும் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற உறுதி பூண்டு வாழ்ந்து வந்தாள். புத்தர் வைசாலியில் இருப்பதையறிந்து அன்னை கௌதமி தன் கூந்தலை யகற்றிக் காவி உடை யணிந்து தன்னைப் பின்பற்றித் துறவு வாழ்க்கையை உறுதி பூண்ட அனேகம் பெண்களுடன் பகவரின் சன்னிதானத்தை யடைந்தாள். தீவிர விரதம் பூண்டு அங்கு வந்திருக்கும் கோலத்தைக் கண்டதும் தான் பெருமானின் மனம் சிறிது இளகியது. அவர் பெண்கள் பிக்ஷுணிகளாவதற்கு வேண்டிய எட்டு விதிகளை ஏற்படுத்தி அவர்களையும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள அனுமதியளித்தார். அன்னை கௌதமியும் அவளைப் போன்ற இன்னும் சில பெண்களும் ததாகதரின் வழியைப் பின்பற்றி நடந்திருக்கலாம். ஆனால் எல்லாப் பெண்களும் அப்படியிருக்க முடியுமா? இதை உத்தேசித்துத்தான் பகவர் பெண்களைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளும் விசயத்தில் நெடு நாட்கள் வரையில் யோசித்தாரென்று தெரிகிறது. மாலவல்லி போன்ற பெண்களால் புத்த தரும சங்கத்துக்கு இழுக்கு ஏற்படுவதை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன். நீங்கள் சொல்வதிலிருந்து மாலவல்லிக்கும் புத்தசேதியத்தில் நடந்த கொலைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போலல்லவா தோன்றுகிறது?" என்றாள்.

     "அவளுக்கும் அந்தக் கொலைக்கும் சம்பந்தமிருக்குமென்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவள் கொலை நடந்த அன்றே அந்தப் புத்தசேதியத்திலிருந்து மறைந்து விட்டாள். அதனால் அவளுக்கும் அக்கொலைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ என்ற வதந்தி தான் ஏற்பட்டிருக்கிறது. அவள் எங்கிருக்கிறாள் என்பதை அறியத்தான் நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை இங்கிருப்பாளோ என்று அறிந்து கொள்ளத்தான் இங்கு வந்தேன்."

     "எனக்கொன்றும் அதுபற்றித் தெரியாது. இவ்விஷயம் என் மனத்தை மிகவும் கலக்கத்துக்குள்ளாக்கி யிருக்கிறது. இதைப் பற்றிய பேச்சை இதோடு நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன். இதைப் பற்றி நினைப்பது கூட என்னுடைய துறவு வாழ்க்கைக்கு இழுக்கை ஏற்படுத்துமென்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட விஷயங்களையெல்லாம் மறந்து, என் மனத்தைத் ததாகதரின் திருவடி நிழலில் ஒதுக்கிக் கொள்ள விரும்புகிறேன். தாங்கள் தயவு செய்து சென்று வருகிறீர்களா?" என்றாள்.

     பூதுகன் அதற்கு மேலும் பேசப் பிரியப்படாதவன் போல எழுந்தான். எழுந்து அவளுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு வெளியே வந்தான். அது பின் நிலவுக் காலம். அங்கங்கு தீப ஒளி இருந்தாலும் அந்த வீதிகளில் திட்டுத் திட்டாக இருளும் சூழ்ந்திருந்தது. ஜன நடமாட்டமும் அதிகமாக இல்லை. அப்பொழுது அவன் தான் பகலில் தங்கியிருந்த தரும சாலைக்குச் சென்று சிறிது ஆகாரம் செய்து விட்டுப் படுக்கவேண்டுமென்று நினைத்தான். அவன் வேகமாக நடந்து கொண்டிருந்த போது அவனுக்குப் பின்புறத்திலிருந்து யாரோ பாய்ந்து தாக்குவதை உணர்ந்தான். அவன் சட்டென்று திரும்பிய போது எதிரில் நின்ற உருவத்தை யார் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. அது வேறு யாருமல்ல, கலங்கமாலரையர்தான். அந்த மகா பாதகன் பழைய பிக்ஷுக் கோலத்திலேயே இருந்தான். ஆனால் அவன் கைகளில் பிக்ஷா பாத்திரம் இருப்பதற்குப் பதிலாக நீண்ட தடியொன்று இருந்தது. பூதுகன் தன்னைத் தாக்கிய கலங்கமாலரையனைத் தாக்க நினைக்கும் சமயம், கலங்கமாலரையன் தன் கைத் தடியினால் பூதுகனின் மண்டையில் ஓங்கி அடித்தான். அடுத்த கணம் பூதுகன் மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்தான். அவன் கண்ணெதிரே பூமி சுழன்றது!