மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம் - காலச் சக்கரம்

அத்தியாயம் 2 - கடற்கரையிலே!

     அறிமுகம் இல்லாத ஒரு வாலிபன் மற்றொரு வாலிபனுடைய இளம் மனைவிக்குத் தன் கையிலிருந்து இரண்டு கழஞ்சு பொன் கொடுத்து முத்துச்சரம் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லுவது சுயமதிப்பைக் குலைப்பது போல் இல்லையா? அதோடு மட்டுமல்ல, ஒரு வாலிபனாக இருப்பவன் இன்னொருவனுடைய மனைவிக்காகத் தன் கையிலிருந்து இரண்டு கழஞ்சு பொன் கொடுத்து முத்துச் சரம் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லுவது சந்தேகம் அளிக்கக் கூடியதாகவும் வெட்கக் கேடானதாகவும் அவமானப்படக் கூடியதாகவும் இல்லையா...? அவனுக்கு ஆத்திரமும் கோபமும் வந்ததில் ஆச்சர்யமென்ன? கண நேரத்தில் தீப்போல் புகைந்து எழுந்த ஆத்திரத்திலும், கோபத்திலும் "என்ன வார்த்தை சொன்னாய்...?" என்று பளீரென்று அவன் கன்னத்தில் அடித்தான். இவைகளையெல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற அவனுடைய மனைவி நடுக்கமும் பயமும் கொண்டவளாக, "எனக்கு முத்துச்சரம் வேண்டாம் - வாருங்கள் நாம் போவோம்" என்று பதறிய வண்ணம் கூறித் தன் கணவன் கையைப் பிடித்து அழைத்தாள்.

     அடிபட்ட வாலிபன் தன் கன்னத்தைத் துடைத்துக் கொண்டே, "என்னை அடித்து விட்டாய், பாதகமில்லை. என்னுடைய அடியை நீ தாங்க மாட்டாய். என்னைப் பற்றி உனக்குத் தெரியாது. பிறருக்கு நான் துக்கம் விளைவிக்க விரும்ப மாட்டேன்" என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நடந்தான்.

     அந்த முத்துக் கடைக்குப் பக்கத்துக் கடை வியாபாரி சொன்னான்: "நாஸ்திக வாதம் பேசுகிறவனெல்லாம் இப்படித்தான் அடி வாங்கிச் சாக வேண்டும். அவன் யார் தெரியுமா? அவன் பெயர் பூதுகன் - பெரிய நாஸ்திகவாதி."

     சிங்களத்தைச் சேர்ந்த முத்து வியாபாரி இதைக் கேட்டதும் ஆச்சர்யம் அடைந்தவனாக, "இவன் தானா அவன்? புத்தர் பெருமான் அவனைக் காப்பாற்றட்டும். நாஸ்திகனென்றாலும் அவன் முகத்தில் தெய்விகக் களை சொட்டுகிறதே? நாஸ்திகனாக இருந்தாலும் இந்த உலகத்தில் அன்பை வளர்க்கப் பிரியப்படுகிறவர்கள் எல்லம் தெய்விக புருஷர்கள் தான்" என்றான்.

     "புத்த சமயத்தைச் சேர்ந்தவர்களே இப்படித்தான். அன்பு, அஹிம்சை யென்று கடவுளையே மறந்து விடுகிறார்கள்" என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய கடை வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினான் மற்றவன்.

     "இதெல்லாம் அறியாதவர்கள் சொல்லும் வார்த்தைகள்! அன்பு, அஹிம்சை, சத்தியம் இவைகளையே கடவுளாக மதிப்பவர்களுக்குத் தனியாகக் கடவுள் எதற்கு?" என்று சொல்லி விட்டு முத்து வியாபாரியும் தன் வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினான்.

     முத்துச்சரம் வாங்குவதற்காக வந்த அந்த வாலிபனும் அவன் காதலியும் எதுவும் வாங்குவதற்கு மனம் இல்லாதவர்கள் போல் அங்கிருந்து நடந்து கொண்டிருந்தனர்.

*****
     சிறிது நேரத்துக்கு முன்னால் ஒரு வாலிபனால் தாக்கப்பட்ட பூதுகன் ஒவ்வொரு கடையாக வேடிக்கை பார்த்துக் கொண்டே, முத்துக்கடை, பட்டுக்கடை முதலிய பகுதிகளைத் தாண்டி நடந்து கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக ஒருவனிடம் அடிபட்டதற்காக அவன் முகத்தில் சஞ்சலமோ கோபமோ ஏற்பட்டதாகத் தெரியவில்லை! எப்பொழுதும் போல அவன் கண்களில் பிரகாசமும் இயற்கையான புன்சிரிப்புடன் கூடிய ஒளியும் இருந்தன. புயல் வீசும் கடலில் கூட அமைதி குலையாது மிதக்கும் கப்பல் போல, மனத்தில் எவ்வித அதிர்ச்சியும் இல்லாதவன் போல் நடந்து கொண்டிருந்தான் பூதுகன்.

     அங்கொரு இடத்தில் யவன தேசத்து வியாபாரி ஒருவன் இரண்டு யவன தேசத்து அழகிகளை ஒரு பிரபுவிடம் விற்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். அது அவன் கவனத்தைக் கவரக் கூடியதாக இருந்தது.

     அந்த யவன நாட்டு அழகிகளை விலை பேசி வாங்க நினைத்த அந்தப் பிரபு பூதுகனைக் கண்டதும் சிறிது வெட்கம் அடைந்தவராக, "பார்த்தீர்களா! இப்படி அழகான பெண்களை யெல்லாம் கொண்டு வந்து இங்கே விலை கூறுகிறார்கள்!" என்றார்.

     "உலகத்தில் எதையும் விலைக்கு வாங்குகிறவர்கள் இருக்கிறபோது ஏன் இந்த அழகிகளைக் கொண்டு வந்து விலை கூறுகிறவர்கள் இருக்க மாட்டார்கள்?" என்றான் பூதுகன்.

     "இந்தப் பெண்கள் மிகவும் அழகாகத் தானிருக்கிறார்கள். விலைக்கு வாங்கி வைத்தால் எதற்காவது உபயோகப்படுவார்கள். எவ்வளவு கேவலம்? பெண்களை விலை என்று பேசி வாங்கத்தான் மனம் கூசுகிறது" என்றார் பிரபு.

     பூதுகன் சிரித்தான். "ஏன் மனம் கூச வேண்டும்? மனிதன் தன்னுடைய சந்தோஷத்துக்காகவும் இன்பத்துக்காகவும் எவ்வளவு பொருள்களை விலை கொடுத்து வாங்கவில்லை? அதைப் போலத்தான் இதுவும். உங்களிடம் பொருள் இருக்கிறது. கூசாமல் வாங்குங்கள். இந்த உலகில் இன்பம் அனுபவிக்கத்தானே நாம் பிறந்திருக்கிறோம்" என்று சொன்னான் பூதுகன்.

     "பெண்களைக் கேவலம் ஆடுமாடுகளைப் போல் விலை பேசி வாங்குவதென்றால்!..." என்று இழுத்தார் பிரபு.

     பூதுகன் கலகலவென்று சிரித்தான். "ஆடுமாடுகள் மாத்திரம் ஜீவன்கள் இல்லையா? அவைகளையும் விலைக்கு வாங்காமல் இருக்கலாம் அல்லவா? இந்த உலகமே விநோதமான உலகம்! வீண் தத்துவங்களெல்லாம் பேசி மனிதர்கள் தங்கள் சுகத்தைத் தாங்களே பலியிட்டுக் கொள்கிறார்கள். இதோ பாருங்கள்! இந்த யவனன் பொருளை விரும்பி இந்த நங்கையரை விற்க நினைக்கிறான். அந்த அழகிகளோ தங்கள் வாழ்வை எப்படியேனும் நடத்த எந்தத் தேசத்தவர்களுக்காவது சந்தோஷத்துடன் அடிமையாகலாம் என்று அவனோடு வந்திருக்கிறார்கள். நீங்களோ சுகத்தை விரும்பி அவர்களை விலை கொடுத்து வாங்க நினைக்கிறீர்கள். இதில் தரும விரோதமோ, பாவமோ எப்படி வந்து புகுந்தது என்று தான் எனக்குத் தெரியவில்லை. வீண் கற்பனை இருளில் இறங்கி இன்பத்தைக் குலைத்துக் கொள்ளுகிறவன் மனிதன் அல்ல. உயிருள்ள வரையில் இந்த உலகத்தை இன்பத்தையும், சுகத்ததயும் அனுபவிக்கிறவன் தான் மனிதன். இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் சுகம் தான் சொர்க்கம். நான் அனுபவிக்கும் துக்கம் தான் நரகம். மனம் கூசாமல் இந்த அழகிகளை விலைக்கு வாங்குங்கள்..." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடந்தான் பூதுகன்.

     பூதுகன் அந்த வியாபார ஸ்தலங்களையெல்லாம் தாண்டிக் கடற்கரையை அடைந்தான். இருள் சேரும் நேரம். மழை வருவதற்கு அறிகுறியாக வானில் கருமேகக் கூட்டம் குமைந்து நின்றது. பேரிரைச்சலுடன் பொங்கி அலை எழும்பிக் கரையில் மோதும் பெருங்கடல் கண்ணுக் கெட்டிய நெடுந்தூரத்துக்கு அப்பால் வானத்தை அளவெடுத்துக் கோடிட்டது போல் அமைதியாக நின்றது. தெற்குக் கடற்கரையில் முத்துக் குளிக்கச் சென்று திரும்பும் திடமிக்க பரதவர்களின் கட்டு மரங்களும் சமீப தூரத்திலேயே மீன் பிடிக்கச் சென்ற பரதவர்களின் கட்டுமரங்களும் பரந்த நெடுங்கடலில் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. கடல் நோக்கிச் சென்ற நாயகரின் வரவை எதிர்பார்த்துக் கடற்கரையில் நின்று கொண்டிருந்தனர் பரதவர்களின் காதலிகள்.

     அவர்களுடைய குழந்தைகள் மணற் பரப்பில் ஓடிக் குதித்தும், கரைக்குச் சமீபமாகக் கடலில் மூழ்கி நீந்தியும் விளையாடிக் கொண்டிருந்தனர். பரதவர்களின் பெண் குழந்தைகள் எல்லாம், கடல் உந்திக் கொண்டு வந்து கரை சேர்க்கும் சோழி, சிப்பி, பளபளக்கும் வர்ணக் கற்கள் இவைகளை ஓடோடிப் பொறுக்கிச் சேர்த்துக் கொண்டிருந்தனர். இந்த மனோரம்யமான காட்சிகளையெல்லாம் அனுபவித்த வண்ணம் கரையோரமாகத் தென் திசை நோக்கி நடந்து கொண்டிருந்தான் பூதுகன்.

     கண நேரத்தில் இவ்வுலகில் எத்தகைய மாறுதல்கள் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதற்கு அறிகுறியாக ஒரு பெரிய காற்று வீசியது. அதைத் தொடர்ந்து சரசரவென்று பேரிரைச்சலோடு கூடிய மழையும் பொழியத் தொடங்கியது. வெட்டி வெட்டிப் பாய்ந்தது மின்னல். கடலின் அலைகள் விண்ணையே போய் முட்டுவது போல ஓங்கி ஓங்கிப் புரண்டு விழுந்தன. 'கூ கூ' என்று கூவிக் கூவி வீசியது பேய்க் காற்று. மழை எப்படி வந்தது? இயற்கையின் திருவிளையாடலை, அதிசய சக்தியை யாரே அறிவார்? கடலோரமாக நடந்து வந்து கொண்டிருந்த பூதுகன் எதிர்பாராத வண்ணம் ஏற்பட்ட அந்தப் பெரு மழையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கடற்கரை யோரமாக இருந்த சோலையை நோக்கி விரைந்து ஓடினான்.