மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம் - காலச் சக்கரம்

அத்தியாயம் 20 - திருபுவனியின் துறவு

     பழையாறை நகருக்குச் சமீபமாக உள்ள நந்திபுர விண்ணகரில், இடங்காக்கப் பிறந்தார் என்ற பட்டப் பெயருள்ளவர்களின் வம்சம் மிகப் பெருமை பொருந்தியது. பூர்வீக சோழ அரசர்களின் ஆதரவில் சிறு சிறு ஊர்களைக் காக்கும் நிர்வாகிகளாக இருந்த அவ்வம்சத்தினரின் பெருமை பல்லவர்களின் ஆட்சி காலத்திலும் உன்னத நிலை குறையாதிருந்தது. அப்பொழுது அந்நந்திபுர நகரம் பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாரின் நிர்வாகத்தில் இருந்தது. அவர் அப்பொழுது பல்லவப் பேரரசின் அபிமானத்துக்கும் தஞ்சையை ஆண்ட முத்தரையரின் அபிமானத்துக்கும் பாத்திரமானவராக இருந்தார். அவர் சைவ மதத்தைச் சேர்ந்தவர். தரும சிந்தையுள்ளவர். பழையாறை நகரை ஆண்ட குமாராங்குஜ சோழருக்கும் உற்ற தோழராய் இருந்து பணியாற்றியிருக்கிறார்.

     உன்னத நிலையில் பெருமையோடு வாழ்ந்து வந்த அவருக்கு அவருடைய குடும்பத்தில் சோகத்தை விளைவிக்கக் கூடிய சம்பவம் ஒன்று ஏற்பட்டிருந்தது. நெடுநாட்களுக்கு முன் குழந்தைப் பருவத்திலிருந்த அவருடைய ஒரே குமாரியாகிய திருபுவனி என்பவளைக் கொள்ளைக் கூட்டத்தார் கடத்திக் கொண்டு போய் விட்டனர். அருமையாக வளர்த்த பெண் குழந்தையாகையால் அவளைக் கண்டு பிடிப்பதற்காக அவர் எவ்வளவோ முயற்சிகளெல்லாம் செய்தார். ஒன்றும் பலிக்கவில்லை. அவருடைய துயரமும் தணிவதாயில்லை. நாளுக்கு நாள் இதே நினைவாகப் பித்துக் கொண்டவர் போலாகி விட்டார். அவருடைய குமாரனாகிய பொற்கோம இடங்காக்கப் பிறந்தார் தன் தகப்பனார் மனத்தைச் சாந்தியுறச் செய்வதற்காக எவ்வளவோ முயற்சிகள் எடுத்துக் கொண்டும் பயனில்லாமல் போயிற்று.

     பதினைந்து வருடங்கள் கழிந்த பின்பும் திருபுவனியைப் பல இடங்களிலும் தேடிப் பார்க்கும் முயற்சியை அவர்கள் நிறுத்தவில்லை. அவருடைய குமாரன் எப்படியாவது திருபுவனியைத் தேடிக்கண்டு பிடித்து விட்டால் தன் தகப்பனாரின் மனம் நேராகி மனச் சாந்தியோடு இறப்பார் என்றெண்ணித் திருபுவனியைத் தேடுவதில் தீவிரமாகவே முயன்றான். அதிர்ஷ்டவசமாக, காவிரிப்பூம்பட்டணத்தில் அவள் இருப்பதாகப் பொற்கோம இடங்காக்கப் பிறந்தார்க்குத் தகவல் கிடைத்தது. உடனே அவனது ஏவலாட்கள் தாமதிக்காமல் சென்று ஒரே இரவோடு இரவாகத் திருபுவனியை நந்திபுர நகருக்குக் கொண்டு வந்து விட்டனர்.

     நெடுநாட்களுக்குப் பின்னால் தன் சகோதரியைக் கண்ட பொற்கோமன் பேரானந்தம் அடைந்து குதித்தான். பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாரும் பெருமகிழ்ச்சியில் மூழ்கினார். அன்று இடங்காக்கப் பிறந்தாரின் மாளிகை மாத்திரம் குதூகலத்தில் மூழ்கவில்லை. அந்த ஊரே அந்த அதிசயத்தைப் பேசி வியப்பும் குதூகலமும் அடைந்திருந்தது. பழையாறையிலிருந்தும் தஞ்சையிலிருந்தும் பலர் இந்த மகிழ்ச்சிச் செய்தியைக் கேட்டு இடங்காக்கப் பிறந்தாரைப் பார்க்க வந்தனர்.

     மாளிகையில் எப்பொழுதும் குதூகலமும் விருந்தும் தான். தம் ஒரே குமாரி அகப்பட்ட பின் அவளுடைய கலியாணத்தைப் பற்றிய பேச்சுக்கள் எழும் அல்லவா? பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாரும் அவருடைய மகனும் திருபுவனி இவ்வளவு அழகோடு விளங்குவாள் என்று நினைக்கவே இல்லை. அவளுடைய அழகு அவளை ஒரு சாதாரண மனிதனுக்கு மனைவியாக்கக் கூடிய நிலையில் இருப்பதாக அவர்கள் நினைக்கவில்லை. அவளுக்கு ஏதேனும் பெரிய ராஜவம்சத்தில் தான் கணவனைத் தேட வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தனர். அவளுடைய அழகில் எந்த அரச குமாரனும் மயங்கி விழுவான் என்று அவர்கள் பூரணமாக நம்பினர் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும், நெடுநாட்களுக்குப் பிறகு தன் வீட்டையடைந்த திருபுவனியின் நிலைமையையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

     அந்தப் பெரிய மாளிகையில் உல்லாசமான, ஆடம்பரமான அந்தப்புரத்தில் தான் அவள் இருந்தாள். ஆனால் அந்த அறை எவ்வளவு அலங்கார சாதனைகளோடு விளங்கியதோ அதற்குத் தக்கபடி அவள் இல்லை. துறவற நிலையிலிருந்த பெண்ணை ஒரு அழகான மாளிகையின் அந்தப்புரத்தில் கொண்டு போய் விட்டால்? துவராடையோடும், பிரிபிரியாக இருந்த தலைக் கேசத்தை கொண்டையிட்ட வண்ணமும் தான் அவள் விளங்கினாள். அவள் மனம் எவ்வித ஆடம்பரக் காட்சியிலும் லயிக்கவில்லை. அவளை வந்து பலர் பார்த்தபோது அவள் ஒருவரோடும் பேசவில்லை. பேசாமடந்தை போல் தான் இருந்தாள்.

     அந்த மாளிகையிலுள்ள பலர் அவளோடு பேசிய போதும் அவள் அவர்களோடு பேசவில்லை. அவளுக்காக - அவள் அணிந்து கொள்வதற்காகக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்த ஆடைகளும் ஆபரணங்களும் அப்படியப்படியே வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே இருந்தன. இந்த ஆடை ஆபரணங்களை அணிந்து கொள்ளும்படி அவளை எவரும் வற்புறுத்தவில்லை. தீவிர துறவறத்திலேயே நிலைத்து நின்ற அவள் புத்தி அந்த மாளிகையில் உள்ள பழக்க வழக்கத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும் என்றும் அவளிடம் பிடிவாதமாக எதையும் சொல்ல வேண்டாமென்றும், பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாரும் அவருடைய மகனும் யாவருக்கும் கட்டளை இட்டிருந்தனர். அதோடு அவள் அந்த மாளிகையிலிருந்து வெளியேறாத வண்ணம் பலமான கட்டுக் காவலை அதிகப்படுத்தியிருந்தனர். திருபுவனி சகல வசதிகளும் நிறைந்த அலங்காரமான வீட்டில் இருந்தாலும் ஏதோ சிறையிலிருப்பவள் போல் தான் கட்டுக் காவலோடு இருந்தாள். எப்படி இருந்தால் என்ன? அவளைப் பிறர் ஏதேனும் கேட்டுத் தொந்தரவு செய்யாது இருந்தால் சரிதான் என்று நினைத்தாள். அவளுக்காக வரும் ஆகாரத்தில் பிடித்ததைக் கொஞ்சமாக உண்டு, மற்ற நேரங்களில் ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலும், குழப்பத்திலும் இருப்பவள் போல் தான் காணப்பட்டாள். அடிக்கடி பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாரும் அவருடைய மகனும், மனைவியும் வந்து அன்பாக, 'சாப்பிட்டாயா? தூங்கினாயா? உனக்கென்ன வேண்டும்? ஏது வேண்டும்?' என்று விசாரித்து விட்டுப் போவார்கள். திருபுவனியும் அவர்களுக்குச் சுருக்கமாக அன்போடு பதில் சொல்லுவாள். அவளுக்குப் பிடிக்காதவைகளை வேண்டாம் என்று கூறி விடுவாள். அதற்கு மேல் யாரும் அவளைக் கிளறிக் கேட்பதுமில்லை.

     அன்றைய தினம் தஞ்சை நகரிலிருந்து முத்தரையரின் அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார் விஜயம் செய்திருந்தார். அமைச்சருக்கு உரிய உபசாரங்களெல்லாம் இடங்காக்கப் பிறந்தாரின் மாளிகையில் மிகச் சிறப்பாகத்தான் நடைபெற்றன. புலிப்பள்ளி கொண்டாருக்கு நெடு நாட்கள் வரையில் காணாமல் கிடைத்த இடங்காக்கப் பிறந்தாரின் அருமை மகளைக் காண வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருந்தது. இடங்காக்கப் பிறந்தாரும் விருந்துக்குப் பின் அவரைத் திருபுவனியின் அறைக்கு அழைத்துச் சென்று காட்ட நினைத்தார்.

     திருபுவனி தஞ்சையிலிருந்து அமைச்சர் அந்த மாளிகைக்கு விஜயம் செய்திருப்பதையும் தன்னைப் பார்க்க நினைப்பதையும் அறிந்து கொண்டாள். அவள் ஏதோ சட்டென்று முடிவுக்கு வந்தவள் போல் தன் சீவர ஆடைகளைக் களைந்து பட்டாடையையும், ஆபரணங்களையும் அழகுற அணிந்து கொண்டாள். அப்பொழுது அவளுடைய அழகும் உருவமுமே வேறு விதமாக மாறின. அவள் திடீரென்று இப்படி மனம் மாறி அலங்காரங்கள் செய்து கொண்டதைப் பார்த்து அம் மாளிகையிலுள்ள எல்லோரும் பெரு மகிழ்ச்சியடைந்தனர். சீவர ஆடை அணிந்திருந்த போதே அவள் அழகியாக விளங்கினாள். அதிலும் இப்பொழுது பொன்னாடையும் பூஷணமும் அணிந்து கொண்ட பின் அவள் அழகைப் பற்றி விவரித்துச் சொல்ல வேண்டுமா?

     விருந்துக்குப் பின் திருபுவனியைப் பார்க்க வந்த தஞ்சை அமைச்சர், புலிப் பள்ளியார் அப்படியே மதிமயங்கி நின்று விட்டாரென்று தான் சொல்ல வேண்டும். கண நேரத்தில் அவர் மனத்தில் ஏதோ ஆசை எழுந்தது. எல்லோரும் அவ்வறையை விட்டு வெளியே வந்து ஆசனத்தில் அமர்ந்ததும், புலிப்பள்ளி கொண்டார், கனைத்துக் கொண்டே, "இடங்காக்கப் பிறந்தாரே! நீங்கள் மிகவும் பாக்கியசாலி. நான் கூட நினைத்தேன், ஒரு பெண்ணை இழந்த துயரத்தை நெடுநாள் வரையில் இம் மனிதர் பாராட்டிக் கொண்டிருக்கிறாரே என்று. உண்மையில் இவ்வளவு லட்சணமான ஒரு பெண்ணை இழந்த ஒரு மனிதரின் மனம் என்ன பாடுபடும் என்பதை இப்பொழுதுதான் உணர முடிந்தது. உம்முடைய மகள் உமக்குத் திரும்பக் கிடைத்த வரையில் நீங்கள் பெரிய பாக்கியசாலி தான். தக்க பருவத்தில் இருக்கும் இவளுடைய விவாகத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு ஏற்படாமல் இருக்காது. இது விஷயமாக இனித் தாமதிக்கக் கூடாது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இவளுக்குத் தகுந்த கணவனை நீங்கள் எங்காவது பார்த்து வைத்திருப்பீர்கள்?" என்றார்.

     "பார்த்துக் கொண்டிருக்கிறேன். எல்லாம் நம்முடைய நிலைக்குத் தகுந்தாற் போல் அகப்பட வேண்டாமா? அதோடு அவளுடைய அழகுக்குத் தகுந்த கணவனாகவும் இருக்க வேண்டும் அல்லவா?" என்றார் இடங்காக்கப் பிறந்தார்.

     "என்னுடைய யோசனையை நீங்கள் அங்கீகரிப்பதாயிருந்தால் சொல்லுகிறேன்" என்றார் புலிப்பள்ளி கொண்டார், சிறிது தயக்கத்தோடு.

     "இவ்விஷயத்தில் உங்களைப் போன்றவர்களின் யோசனையைக் கேட்கத்தானே நான் விரும்புகிறேன். தஞ்சையர் கோனுக்கு அமைச்சராகத் திகழும் தங்களுடைய யோசனைப்படி நான் இக்காரியத்தைச் செய்து முடித்தால் அது சிறந்ததாகத்தானே யிருக்கும்?" என்றார் இடங்காக்கப் பிறந்தார்.

     "நான் மனத்தை விட்டுப் பேசுகிறேன். என் மகன் கோளாந்தகனைத் தங்களுக்குத் தெரியாமல் இருக்காது. அவன் மிகவும் புத்திசாலி. அதோடு அவன் அழகைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டாம். இப்பொழுது கலங்கமாலரையர் சேனாபதி பதவியை விட்டு விலகி புத்த பிக்ஷுவான பின் என் மகன் தான் சேனாநாயகன். அவன் சேனாநாயகனாகிய பின் தஞ்சை மன்னரை அலட்சியமாக நினைத்து வந்த கொடும்பாளூரார்களும் நடுங்குகின்றனர். இதையெல்லாம் நான் பெருமையாகச் சொல்லிக் கொள்ளக் கூடாது. நானும் அவனுடைய அழகுக்கும் மதிப்புக்கும் தக்கபடி ஒரு பெண்ணை நெடுநாட்களாகப் பார்க்கிறேன் - கிடைக்கவில்லை - நல்ல வேளையாக இங்கு வந்து உமது பெண்ணைப் பார்த்த பிறகு என் மனக் கவலை ஒரு விதமாகத் தீர்ந்தது. இதற்கு மேல் நான் உங்களுக்கு அதிகமாகச் சொல்ல வேண்டாம். உங்களுக்குத் தெரியாத விஷயமல்ல..." என்றார்.

     அதைக் கேட்டதும் இடங்காக்கப் பிறந்தார் பேரானந்தம் மேலிட்டவராய், "இதைப் பற்றி இனி யோசிப்பதற்கு இடமே இல்லை. உங்கள் சம்பந்தம் எனக்குக் கிடைப்பது பெரும் பாக்கியம் அல்லவா? தங்கள் புதல்வனைப் பற்றி நான் மிகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். நானே இதுபற்றித் தங்களிடம் பேசலாமா என்று யோசித்து மனம் குழம்பி இருந்த போது தாங்களே தங்கள் விருப்பத்தைக் காட்டியது ஈசன் அருள் தான். அதோடு இச் சுப காரியம் சீக்கிரமே முடிவதற்கு அநுகூலமாக என் மகளும் தன் சீவர ஆடைகளை யெல்லாம் களைந்து பொன்னாடை அணிந்து கொண்டாள் போலிருக்கிறது" என்றார் மிகுந்த மகிழ்ச்சியோடு.

     "ஒரு பெரிய சுப காரியம் நடக்க வேண்டுமானால் அதற்கு முன்னால் நடப்பவைகள் எல்லாம் சுபமாகத்தான் முடியும். இனிமேல் தாங்கள் இது விஷயமாக ஒரு நல்ல நாளைப் பார்த்து மங்களரமாக இக்காரியத்தை முடித்து விட வேண்டியதுதான்" என்றார் தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார்.

     இடங்காக்கப் பிறந்தாரும் இதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் சீக்கிரமாகவே செய்வதாகச் சொன்னார்.

     புலிப்பள்ளி கொண்டார் இடங்காக்கப் பிறந்தாரிடம் விடைபெற்றுக் கொண்டு தஞ்சைக்குப் பயணமானார்.

     தஞ்சையமைச்சர் புலிப்பள்ளி கொண்டார் தன் மகன் கோளாந்தகனுக்குத் திருபுவனியைத் திருமணம் செய்து வைக்க விரும்பியது பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தார்க்கும், அவர் மகனுக்கும் பெருத்த ஆனந்தத்தைக் கொடுத்தது. அவர்கள் எண்ணியபடி தங்கள் தகுதிக்கேற்ற சம்பந்தம் கிடைத்ததில் பெருமை அடைந்தனர். சோதிடரைக் கூப்பிட்டு வந்து திருமண நாளைக் கணிக்க ஏற்பாடு செய்தனர்.

     சில நிமிட நேரத்துக்குள் இவ்விதமாக விஷயம் இடங்காக்கப் பிறந்தாரின் மாளிகை முழுவதும் பரவியது. இச் செய்தி திருபுவனியின் செவிகளில் மட்டும் விழாமலிருக்குமா? இதைக் கேட்டதும் ஆச்சர்யமோ திகிலோ அவள் அடைந்து விடவில்லை. அவள் சட்டென்று எழுந்து தன் பட்டாடைகளையும் ஆபரணங்களையும் மூலைக் கொன்றாகப் போட்டு விட்டுச் சீவர ஆடையை எடுத்து உடுத்திக் கொண்டாள் என்று அறிந்ததும் குதூகலத்தில் திளைத்துக் கொண்டிருந்த பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாருடைய மனமும் அவருடைய மகனின் உள்ளமும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கின. யாவரும் திகிலும் குழப்பமும் அடைந்தவர்களாயினர். திடீரென்று அவள் பட்டாடைகளை அணிந்து கொள்ள விரும்புவானேன்? அவைகளைக் களைந்தெறிந்து விட்டு மறுபடியும் சீவர ஆடைகளைப் புனைந்து கொள்வானேன்? அவளுக்கு ஏதேனும் பயித்தியமா? அல்லது வேண்டுமென்றே அப்படிச் செய்திருப்பாளோ? பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தார் இனிமேலும் பொறுமையாக இருக்க விரும்பவில்லை. அவர் தஞ்சை மந்திரியின் மகனுக்குத் திருபுவனியை மணம் செய்து கொடுப்பதாக வாக்குறுதியளித்து விட்டார். இந்நிலையில் அவள் மறுபடியும் பிக்ஷுணிக் கோலம் பூண்டு நின்றால் அதை என்னென்று சொல்வது? 'என் மகள் மறுபடியும் பிக்ஷுணியாகி விட்டாள். உங்கள் மகனைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டாள்' என்று சொல்வதா? இடங்காக்கப் பிறந்தார் சொன்ன வாக்குறுதி தவறி விட்டரென்று அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார் நினைக்க மாட்டாரா? இதனால் பெரிய மனிதரின் விரோதத்தையல்லவா சம்பாதித்துக் கொள்ள நேரும்? இப்படியே அவர் தம் மகளையும் அவள் அபிப்பிராயத்துக்கே விட்டுக் கொடுத்துக் கொண்டே போனால் அதற்கொரு முடிவு வேண்டாமா?

     இனிமேல் திருபுவனியின் விருப்பத்துக்கேற்றபடி நடந்து கொண்டே போனால் எல்லாம் விபரீதமாகவே தான் முடியும் என்று அவருக்குத் தோன்றியது. உள்ளபடி அவள் மன நிலையை யறிந்து அதை மாற்றுவதற்குப் பல வ்ழிகளிலும் தீவிர முயற்சி யெடுத்துக் கொள்ள வேண்டுமென்ற முடிவுதான் செய்தார். அவர் பலவிதமாக எண்ணமிட்டு மனம் குழம்பி உட்கார்ந்திருந்த போது ராஜ பரிவாரங்கள் சூழ அவர் வீட்டுக்கெதிரே ஒரு பல்லக்கு வந்து நின்றது. அந்தப் பரிவாரங்களின் உடை அலங்காரங்களிலிருந்து அந்தப் பல்லக்கு பழையாறை நகரிலிருந்துதான் வந்துள்ள தென்பதை அறிந்து கொண்ட அவர் பரபரப்போடு எழுந்து சென்றார்.

     பல்லக்கிலிருந்து அரச குமாரிக்குரிய ஆடையாபரணங்கள் அணிந்த யுவதி ஒருத்தி இறங்கிப் புன்முறுவலோடு இடங்காக்கப் பிறந்தாருக்கு வணக்கஞ் செலுத்தினாள். பழையாறை நகர அரசகுமாரி அருந்திகைப் பிராட்டி என்றோ ஒரு நாள் தம் மாளிகைக்கு வருவாள் என்று இடங்காக்க பிறந்தார் எதிர்பார்த்ததுதான். ஆனால் முன்னறிவிப்பேதுமின்றி அன்று அவள் வந்தது அவருக்குச் சிறிது ஆச்சரியத்தைத்தான் அளித்தது. அவர் மிக்க பணிவோடு சோழ அரசகுமாரி அருந்திகையை உபசரித்து அழைத்துச் சென்றார். அருந்திகை அந்த மாளிகையின் அழகான சபைக் கூடத்திலிருந்த ஆசன மொன்றில் கம்பீரமாக அமர்ந்து, "தங்கள் புதல்வியாரைத் தாங்கள் மறுபடியும் அடைந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் அவள் இன்னும் புத்த பிக்ஷுணிக் கோலத்திலேயே இருக்கிறாள் என்று கேள்விப்பட்டதும் என் மனத்துக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. நெடுநாள் வரையில் அனாதை போல் எங்கோ இருந்த அவள் புத்த பிக்ஷுணியாகி விட்டதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இங்கு இம் மாளிகைக்கு வந்ததும் அவள் தன் கொள்கைகளை மாற்றிக் கொண்டிருந்தால் மிக நன்மையாக இருக்கும். தாங்கள் அவள் மனத்தை மாற்ற முயற்சி எடுத்துக் கொள்வது நல்லதுதான். இளம் பெண்களுக்குத் துறவறம் ஏற்றதில்லை. வயதான உங்களுடைய மனம் சாந்தியடைவதற்காயினும் அவள் தன் கோலத்தை மாற்றிக் கொள்வது தான் சிறந்தது" என்றாள்.

     இடங்காக்கப் பிறந்தார் மிகவும் துயரம் நிறைந்த குரலில் பேசினார்: "என்ன செய்வது? என்னால் இயன்ற வரையில் முயற்சி செய்கிறேன். இன்று தஞ்சை மன்னரின் அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார் இங்கு விஜயம் செய்திருந்தார். அந்தச் சமயத்தில் அவள் திடீரென்று மனம் மாறி நல்லாடை ஆபரணங்களெல்லாம் அணிந்து கொண்டாள். அவளுடைய எல்லையற்ற பேரழகைக் கண்டு அவரே வியந்து விட்டார். அவராகவே தம் மகனுக்கு அவளை மணம் முடித்து வைக்க வேண்டுமென்று என்னை வேண்டிக் கொண்டார். எனக்கும் அது மகிழ்ச்சியாகவும் சம்மதமாகவும் பட்டதால் நானும் அவருடைய விருப்பத்துக்கிணங்கி விவாகத்துக்குரிய நன்னாளை பார்க்கும்படி சோதிடருக்குக் கட்டளையிட்டு விட்டேன்.

     "ஆனால் துரதிர்ஷ்டவசமாக மந்திரியார் சென்றவுடனே திருபுவனி தன் ஆடை அலங்காரங்களைக் களைந்து எறிந்து விட்டு மறுபடியும் சீவர ஆடையைப் புனைந்து கொண்டிருக்கிறாள். எல்லாம் எனக்குத் தரும சங்கடமான நிலையாகத் தான் முடிந்திருக்கிறது. அவளுடைய மனோதருமம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை அவள் சித்த சுவாதீனமற்றவளோ என்று நினைக்கும்படியாகத் தான் இருக்கிறது. எப்படியும் அவள் மனத்தை மாற்ற நான் தீவிர முயற்சி யெடுத்துக் கொள்வதாகத் தீர்மானித்து விட்டேன். அதிலும் தாங்கள் நல்ல சமயத்தில் தான் வந்தீர்கள். எப்பொழுதுமே பெண்கள் பெண்களின் வார்த்தைகளுக்குத் தான் அதிக மதிப்புக் கொடுப்பார்கள். நீங்கள் அவளோடு பழகி அவளுக்கு நல் உபதேசங்கள் செய்து அவள் மனத்தை மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்" என்று வேண்டிக் கொண்டார்.

     பழையாறை அரசகுமாரி அருந்திகை, "நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கு விநோதமாக இருக்கிறது. நீங்கள் ஒன்று செய்திருக்கலாம். துறவறத்தில் பற்றுள்ள அவள் மனம் சட்டென்று திரும்புவது சிறிது கடினம். நீங்கள் அதற்குள் அவள் சம்மதத்தைப் பெறாமல் விவாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்ததினால்தான் அவள் மனம் வருத்தம் கொண்டு மறுபடியும் துறவற ஆடையை அணிந்து கொள்ள முற்பட்டிருக்க வேண்டும். போகட்டும். இப்பொழுது நான் அவளைப் பார்க்கப் போகிறேனல்லவா? இந்தச் சமயத்தில் அவள் மனத்தை மாற்ற என்னால் முடிந்ததை யெல்லாம் செய்கிறேன்" என்றாள். இதைக் கேட்டதும் இடங்காக்கப் பிறந்தார் சிறிது மன அமைதியடைந்தவராய் அவளை அழைத்துக் கொண்டு திருபுவனி இருந்த அறைக்குச் சென்றார்.

     அந்த அறையிலிருந்த திருபுவனி சாளரத்தின் ஓரமாக நின்று வெளியே பார்த்த வண்ணம் ஆழ்ந்த சிந்தனையோடு நின்று கொண்டிருந்தாள். இடங்காக்கப் பிறந்தாரோடு அவ்வறையில் நுழைந்த அருந்திகைப் பிராட்டி பிக்ஷுணிக் கோலத்திலிருந்த திருபுவனியின் முகத்தைப் பார்த்ததும் அப்படியே திகைப்படைந்து நின்று விட்டாள். திருபுவனியும் அருந்திகையைப் பார்த்தவுடன் மிகத் திகைப்படைந்தவள் போல் அப்படியே நின்று விட்டாள்.