உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) முதல் பாகம் - காலச் சக்கரம் அத்தியாயம் 21 - இதென்ன விரதம்? சோழ இளவரசி அருந்திகைப் பிராட்டி பிக்ஷுணிக் கோலத்திலிருந்த திருபுவனியைக் கண்டு திகைப்படைந்ததையும், திருபுவனியும் அருந்திகையைக் கண்டு திகைப்படைந்தவள் போல் காணப்பட்டதையும் இடங்காக்கப் பிறந்தார் ஒரு விதமாகப் புரிந்து கொண்டார். அருந்திகையின் முகத்தைப் பார்த்த போது அவரை அவ்விடத்திலிருந்து வெளியே செல்லும்படி அவள் சமிக்ஞை காட்டினாள். இடங்காக்கப் பிறந்தாரும் அதை அறிந்து கொண்டவராக, "நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருங்கள். எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது. உத்தரவு கொடுங்கள்" என்று அருந்திகையை நோக்கிக் கேட்கவும், அவளும் தலையசைத்தாள். இடங்காக்கப் பிறந்தார் அந்த இடத்தை விட்டு அகன்றார். அவர் சென்ற பின் அருந்திகைப் பிராட்டி சாளரத்துக்குச் சமீபமாக நின்று கொண்டிருந்த திருபுவனியை நெருங்கி அவளுடைய மெல்லிய தோள் மீது அன்போடு தொட்டு, "உன்னை எங்கோ பார்த்த நினைவாக இருக்கிறது. ஆனால் எங்கே பார்த்தோம் என்று தான் தெரியவில்லை" என்றாள். "எனக்கும் உங்களை எங்கோ பார்த்த நினைவாகத்தான் இருக்கிறது. உங்களைப் போல் எனக்கும் உங்களை எங்கு பார்த்தோம் என்பதுதான் புரியாமலிருந்தது. அப்புறம் புரிந்து விட்டது!" என்றாள் திருபுவனி அன்போடு. அருந்திகை சிரித்திக் கொண்டே, "நாம் ஏதாவது கனவில் சந்தித்திருப் போமோ?" என்று கேட்டாள். "இருக்கலாம். நான் வேண்டுமானால் உங்களைக் கனவில் சந்தித்திருக்கலாம். ஆனால் நீங்கள் என்னைச் சந்தித்திருக்க நியாயமில்லையே?" என்றாள் திருபுவனி. "ஏன் அப்படிச் சொல்கிறாய்?" என்று கேட்டாள். "ஏன் அப்படிச் சொல்கிறேனா? நான் ஒரு சாதாரணப் பெண். என்னைப் பற்றி உங்களைப் போன்றவர்கள் நினைப்பதற்கு நியாயமில்லை. ஆனால் நீங்கள் ஒரு அரசகுமாரி. அதிலும் புகழ்பெற்ற சோழ பரம்பரையைச் சேர்ந்தவர்கள். உங்களைப் பற்றி இந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் நினைப்பது சகஜம்தானே? உங்களைப் பற்றியும், பெருமை மிகுந்த உங்கள் குலத்தைப் பற்றியும் எத்தனையோ தடவைகள் நான் நினைத்திருக்கிறேன். அந்த நினைவின் காரணமாக எவ்வளவோ தடவைகள் கனவு கண்டிருக்கிறேன். அந்தக் கனவுகளில் நீங்கள் வந்திருக்கலாமல்லவா?" அருந்திகை ஒரு பெருமூச்சு விட்டாள். பிரகாசம் நிறைந்த அவளுடைய முகம் சிறிது வாட்டமடைந்தது. "எங்கள் குலத்தைப் பற்றியும் எங்களைப் பற்றியும் நினைப்பவர்களும் இன்னும் உலகத்தில் இருக்கிறார்களா? இமயம் போல் தலை நிமிர்ந்து நின்ற சாம்ராஜ்யமே அழிந்து அந்த இடத்தில் சிறிய மணற் குன்று போல் பழையாறை நகர்ச் சோழர்களென்று பெயர் சொல்லிக் கொண்டு நாங்கள் இருந்து வருகிறோம். இந்தச் சிறு மணற்குவியலையும் நாற்புறமும் வெள்ளம் போல் வந்து அழித்துவிட எத்தனையோ பேர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய தினம் தஞ்சையிலிருந்து வந்த புலிப்பள்ளி கொண்டார் உங்கள் குலத்தின் சம்பந்தத்தை விரும்புவதும் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் சிறு சந்ததியையும் அழித்து விடச் செய்யும் முயற்சியாகத்தான் நான் நினைக்கிறேன்" என்றாள். இதைக் கேட்டதும் திருபுவனியின் முகத்திலும் ஒரு வாட்டம் ஏற்பட்டது. அவள் அருந்திகையைச் சமாதானம் செய்கிறவள் போல் அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டு, "உங்களைச் சூழந்த ஆபத்துக்களை நீங்கள் சொல்வதிலிருந்து நான் ஒருவாறு உணர்ந்து கொண்டேன். ஆனால் உங்களை நாடு துறந்து விட்டதாக நீங்கள் நினைத்து ஆயாசம் அடைய வேண்டாம். உங்களுக்கு எதிரிடையாக யார் யார் சூழ்ச்சி செய்கிறார்களோ, அதைப் போல உங்களுக்கு ஆதரவாக எதிரிகளின் சூழ்ச்சிகளைக் கவிழ்க்கவும் சிலர் சூழ்ச்சி செய்து கொண்டு தான் இருப்பார்கள் என்பதைத் தாங்கள் மறக்க வேண்டாம். இன்று இச்சோழ நாடு எப்படி இருக்கிறதென்று நினைத்துப் பாருங்கள். மிகுந்த கலக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறது. சரியான அரசர்கள் இல்லை. சிறு சிறு அரசர்களாக இருப்பவர்களும் பெருத்த படட பலம் கொண்ட பல்லவர்களுக்கும், பாண்டியர்களுக்கும் அடங்கியவர்களாக இருக்கிறார்கள். பாண்டியர்களும் பல்லவர்களும் பகை கொண்டு ஒருவருக்கொருவர் ஈடு இணையின்றி உலகெங்குமே தங்களுடைய அரசாட்சியை நிலை நிறுத்திவிட மாட்டோமா என்ற ஆணவத்தில் இருக்கிறார்கள். இதனால் எந்த நேரத்திலும் போர் முழக்க எச்சரிக்கையாகவே இருக்கிறது. பாண்டிய நாட்டுக்கும் பல்லவ நாட்டுக்கும் இடையே உள்ள பொன் கொழிக்கும் இந்தப் பூமியில் தான் பிணங்களைக் குவிக்கிறார்கள். சோழ வள நாடு ஆக்கிரமிப்பு வெறி கொண்ட மன்னர்கள் மோதிக் கொள்வதற்குரிய சரியான போர்க்களமாகி விட்டது. ஊருக்கு ஊர் தனித்தனியாக இருந்து ஆளும் மன்னர்கள் எல்லாம் சமயம் பார்த்து வலுத்த கையோடு சேர்ந்து போராடித் தங்கள் சிறு நலனைப் பாதுகாத்துக் கொள்ள நினைக்கிறார்களே தவிர, மக்களைப் பற்றி நினைப்பதில்லை. இந்த நிலையில் மக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் நினைத்துப் பார்க்கத்தானே வேண்டும்? வறுமையும் துயரும் ஏற்படும் போது தான் சீரும் சிறப்புமாக இருந்த அக்காலத்தை எண்ணிப் பார்க்கத் தோன்றும். மகோன்னத நிலையில் இச்சோழ மண்டலத்தை ஆண்ட கரிகாலன் மரபினரைப் பற்றி இவர்கள் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது. ஒவ்வொருவரும் தம் உள்ளத்தில் மறுபடியும் இந்நாட்டில் சோழ சாம்ராஜ்யம் ஏற்பட்டுச் செல்வமும் சிறப்பும் கொண்டதாகாதா என்று தான் நினைக்கின்றனர். இதை எண்ணித்தான் மன ஆறுதல் அடைய வேண்டும். தஞ்சை அமைச்சர் உங்களுக்குச் சிறு ஆதரவாக இருக்கும் குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொண்டால் உங்களுக்குள்ள சிறு ஆதரவை அழித்து விடலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அவருடைய குமாரனை நான் விவாகம் செய்து கொள்ளச் சம்மதித்தால் அல்லவா அம்மாதிரி நிகழும் என்று எண்ணுவதற்கு? துறவறத்தில் நாட்டம் கொண்ட என்னை அவர் மகனுக்கு மணவாட்டியாக்க நினைப்பது வீண் பிரயாசையாகத்தான் முடியும்!" என்றாள். "திரிபுவனி! உனக்குத் துறவறத்தில் தீவிரமாகப் பற்றுதல் இல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். உன்னைப் போன்ற இளம் வயதுடைய பெண்கள் உலக இன்ப சுக, மாயைகளிடமிருந்து விலகி துறவறம் கொள்வது என்பது முடியாத காரியம். அப்படித் துறவறம் பூணுவது நியாயமாகாது. உன்னுடைய மனம் தீவிரமாகத் துறவறத்தைப் பற்றிக் கொண்டு நிற்கவில்லை என்பதை இன்று சீவர ஆடைகளையெல்லாம் களைந்து பட்டாடை ஆபரணங்களை அணிந்து கொண்டதிலிருந்து பிறர் அறிந்து கொண்டிருக்க மாட்டார்களா?" என்றாள் அருந்திகை. திருபுவனி ஏளனமாகச் சிரித்தாள். "சீவர ஆடையை விட்டுச் சில நிமிட நேரங்கள் பட்டாடையும் பூஷணங்களும் அணிந்து கொண்டதினால் என் மனசை மாற்றி விட்டதாகச் சொல்ல முடியுமா? அவைகளை ஏதோ காரணத்துக்காக அணிந்து கொண்டேன். தஞ்சை அமைச்சர் தன் மகன் கோளாந்தகனுக்கு மணம் முடிக்க ஆசை வைத்ததும், மறுபடியும் சீவர ஆடையை அணிந்து கொள்வதுதான் நல்லதென்று பட்டது. அவைகளை அணிந்து கொண்டேன். உடலை மறைக்கும் ஆடைகளைக் கொண்டு உள்ளத்தின் நிலையைத் தீர்மானம் செய்வது மடமையாகும்" என்றாள் உறுதியான குரலில். அருந்திகை சிரித்துக் கொண்டே, "உண்மை. நீ இப்பொழுது சீவர ஆடையைச் சுற்றிக் கொண்டிருக்கிறாய். இதை வைத்துக் கொண்டு உன் உள்ளத்தின் நிலையை நான் நிர்ணயித்து விட மாட்டேன். இந்த வேஷத்துக்கும் உன் உள்ளத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு என்று நான் கருதி விட மாட்டேன்" என்றாள். "நீங்கள் என்னை எப்படிக் கருதினாலும் சரியே. ஒவ்வொருவரும் நடந்து கொள்வது அவரவர்கள் மனத்தில் கொண்ட லட்சியத்தைப் பொறுத்ததுதான். என்னுடைய நிலையைப் பற்றி அதிகமாக என்னைக் கிளறிக் கேட்காதீர்கள். நீங்கள் எனக்கு ஏதேனும் உபகாரம் செய்ய நினைத்தால் என் தகப்பனாரிடம் சென்று, 'உங்களுடைய குமாரிக்குத் தஞ்சை அமைச்சரின் மகன் கோளாந்தகனை விவாகம் செய்து வைக்க முயலாதீர்கள்' என்று உறுதியாகச் சொல்லிவிட்டுப் போங்கள்!" என்றாள். அருந்திகை சிரித்துக் கொண்டே, "நிச்சயம் செய்கிறேன். ஆனால் உன்னை வேறு யாருக்குக் கல்யாணம் செய்து வைப்பது என்று கேட்டால் அதற்கும் நான் யோசனை சொல்லத்தானே வேண்டும்?" என்றாள். "சொல்லுகிறேன். 'உங்கள் மகள் புத்த பெருமானின் அறவழிகளில் சென்று கொண்டிருக்கிறாள். அவளை அவ்வழியிலிருந்து தாங்கள் திருப்ப முடியாது. ததாகதரின் பேரொளியில் கலந்து விட்ட அவளை மறுபடியும் வாழ்க்கையின் மாய இருளில் சிக்க வைப்பது மிகவும் கடினம்' என்று சொல்லுங்கள்" என்றாள் திருபுவனி. விளையாட்டாகப் பேசிக் கொண்டு வந்த அருந்திகை அப்பொழுது திருபுவனி சொன்ன வார்த்தைகளை விளையாட்டாகவே எடுத்துக் கொள்ள முற்படவில்லை. உண்மையாகவே அவளுக்கு துறவறத்தில் தீவிரப் பற்று தான் இருந்தது என்பது நன்கு விளங்கியது. அவளுக்குத் துறவறத்தில் இத்தகைய பக்குவம் எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி நினைக்க அருந்திகைக்குச் சிறிது ஆச்சரியம்தான் ஏற்பட்டது. "உன் வார்த்தைகள் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. துறவறத்தை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு உனக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. உன்னைப் போன்ற இவ்வளவு அழகான இளம் வயதுடைய பெண்களை யெல்லாம் துறவு மார்க்கத்தில் இழுக்கும் பௌத்த சங்கத்தைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை. இது என்ன ஆடை? இது என்ன வேஷம்? இவ்வித ஆடைகளை அணிந்து கொண்டு தலையைச் சடையாக்கிக் கொண்டை போட்டுக் கொண்டால் உன் யௌவன அழகு குறைந்து விடுமா? உன்னைப் பார்த்தவர்கள் பக்தியும் அடக்கமும் காட்டுவதை விட உன்னிடம் மோகமும் தாபமும் தான் அதிகமாகக் காட்டுவார்கள். எவரும் இந்தப் பருவத்தில் உன் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டதாகக் கருதுவார்களே தவிர, நேராக்கிக் கொண்டதாகக் கருத மாட்டார்கள். உள்ளம் தூய்மையாக இருந்தாலும் உடலழகு உள்ளத் தூய்மையையும் பாழாக்க வழி வகுத்து விடும் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். திருபுவனி! உனக்கு நான் உற்ற தோழியாகி விட்டேன். உனக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய நான் என்றும் சித்தமாக இருக்கிறேன். என்னிடம் உன் அந்தரங்கத்தைச் சொல்வதில் பிசகு ஒன்றும் இல்லை. உன்னிடமிருந்து விவரமாக எல்லாம் அறிந்து கொள்ளப் பிரியப் படுகிறேன். உனக்கு விருப்பம் இருந்தால் சொல்லு!" என்றாள். திருபுவனி அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே ஒரு பெருமூச்சு விட்டாள். "என்னுடைய கதையை அறிந்து கொள்ளுவதினால் உங்களுக்கு எவ்விதமான பலனுமில்லை. அவைகளை யெல்லாம் உங்களிடம் சொல்ல நான் பிரியப்படவில்லை. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் எனக்கு உற்ற தோழியாகி விட்டதாக உங்கள் திருவாக்கிலிருந்தே வெளியாகி விட்டது. அப்படியே எனக்கு உற்ற தோழியாகத் தாங்கள் இருப்பதை நான் விரும்புகிறேன். என் தகப்பனார் இடங்காக்கப் பிறந்தார் என்பதைத் தவிர வேறு அதிக விவரம் உங்களுக்கு வேண்டாம். பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நான் குழந்தையாக இருந்த போது கள்வர்களால் அபகரிக்கப்பட்டேன். பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நான் இந்தக் குடும்பத்துக்கு வந்திருக்கிறேன். இதற்குள் எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டன? எப்படி எப்படி மாறின என்பவையெல்லாம் விவரிக்க எனக்கு விருப்பமில்லை. நீங்கள் எனக்காக ஏதேனும் இப்பொழுது உதவி செய்ய நினைத்தால், அது என் தகப்பனாரிடம் எனக்கு மணம் முடிக்காமலிருக்கும்படி செய்வதுதான். அதைத்தான் எனக்கு நீங்கள் செய்த பேருதவியாக நினைப்பேன். அத்துடன் துறவு வாழ்க்கையில் உள்ள நான் குடும்பச் சூழ்நிலையில் இருக்கப் பிரியப்படவில்லை. எப்பொழுது நினைக்கிறேனோ அப்பொழுது இங்கிருந்து போய் விடுவேன் என்பதையும் தெளிவாகச் சொல்லுங்கள். என்னைச் சிறையில் அடைப்பது போல் இந்த மாளிகையில் அடைத்திருக்கிறார்கள். அவ்வளவுதானே தவிர, நான் குடும்பத்தாரோடு எவ்வித ஒட்டுதலும் கொள்ளவில்லை. தன்னிச்சையாகப் பறக்கும் என் மனம் எந்தக் கூண்டிலும் அடைபட்டு விடவில்லை. அவர்கள் என் வாழ்க்கை நலனுக்காக ஏதேதோ திட்டம் வகுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் நானும் எனக்காக ஏதேதோ திட்டம் வகுக்கத் தொடங்கியிருக்கிறேன் என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாது..." என்றாள். அருந்திகை சில நிமிட நேரம் பேசாமல் இருந்துவிட்டு, "உன் மனத்தை என்னால் திருப்ப முடியாது. ஒரு நாள் என் வார்த்தையைக் கேட்டு நடப்பாய் என்றே நம்புகிறேன். இப்பொழுது நான் உன்னிடம் சொல்லியபடியே உன் தகப்பனாரிடம் சொல்லி விட்டுப் போகிறேன். ஆனால் அவருடைய அபிப்பிராயம் எப்படியோ? எனக்கும் தஞ்சை அமைச்சரின் மகனுக்கு நீ வாழ்க்கைப் படுவதில் சம்மதமில்லை. ஆனால் விவாகமே செய்து கொள்ளாமல் இப்படி பிக்ஷுணியாகவே இருப்பதிலும் பிரியமில்லை. இதை நன்றாக யோசித்து ஒரு முடிவு செய்ய வேண்டியது உன்னுடைய பொறுப்பு" என்றாள். திருபுவனி சிரித்தாள். "ஆகட்டும்! நான் கடைசியாக உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறேன். இந்த நாட்டில் என்னுடைய விவாகப் பருவம் கடப்பதற்கு முன் சோழ சாம்ராஜ்யம் ஏற்படுமானால் ஒரு வேளை நான் விவாகம் செய்து கொள்ளலாம்!" என்றாள். அருந்திகைப் பிராட்டி திகைப்பும் வியப்பும் அடைந்தாள். பிறகு, "நீ அதற்காகத்தான் இந்த பிக்ஷுணிக் கோலம் பூண்டிருக்கிறாயா? இது என்ன கனவு? இது என்ன விரதம்? வேடிக்கையாக இருக்கிறது. இன்று உள்ள நிலையில் உன் விருப்பம் நிறைவேறுமா? இதற்காக நீ ஏன் வாழ்க்கையைப் பாழ்பண்ணிக் கொள்கிறாய்?" என்றாள். "என்னைப் போன்ற இரண்டொருவருடைய வாழ்வு பாழானால் பாதகமில்லை. அதன் மூலமாக இந்தச் சோழ வள நாடு நன்மையடையுமானால் அதை விட உயர்ந்தது வேறு எதுவுமில்லை!" என்றாள் திருபுவனி. அருந்திகை திருபுவனியின் லட்சியத்தையும் தியாக உணர்ச்சியையும் எண்ணி வியந்தாள். தங்கள் குலத்தினர் நாட்டைப் பெருமையுற ஆட்சி செய்ய வேண்டுமென்பதற்காகத் திருபுவனி போன்ற இளம் பெண்கள் வாழ்வைத் துச்சமாக மதிப்பதையெண்ணி அவள் மனம் நெகிழ்ந்தது. திருபுவனி போன்றவர்களின் தியாகத்துக்காக எப்படி நன்றி செலுத்துவது என்று தான் அவளுக்குத் தெரியவில்லை. அவள் திருபுவனிக்கு எவ்வித பதிலும் சொல்லாமல் அவளை ஆர்வத்தோடு அணைத்து கொண்டு, "உன்னைப் போன்ற தோழி எனக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம் தான். இருளடைந்த சோழ பாரம்பரியத்தை மறுபடியும் பிரகாசிக்க வைக்க முயலும் உன்னைப் போன்றவர்களுக்கு நான் எந்த வகையில் நன்றி தெரிவித்தாலும் போதாது. சரி, நான் வருகிறேன். எப்பொழுதும் உன்னுடைய நலனனப் பாதுகாப்பதற்காக நான் எதையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன் என்பதை நீ நிச்சயம் நம்பலாம். நான் அடிக்கடி உன்னை வந்து சந்திக்காமல் இருக்க மாட்டேன். என்னால் உனக்கு ஏதேனும் காரியமாக வேண்டுமானால் தாராளமாகக் கேட்கலாம். நான் சென்று வருகிறேன்!" என்று விடைபெற்று வெளியே வந்தாள். தம் மகள் திருபுவனியோடு பேசிக் கொண்டிருந்த அருந்திகைப் பிராட்டியின் வரவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்தார் பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தார். அவருடைய மகன் பொற்கோமனும் அங்கே நின்றான். அருந்திகை முகத்தில் வருத்தக் குறியுடன் வந்து, "திருபுவனியுடன் இவ்வளவு நேரம் பேசியும் எவ்விதப் பலனும் ஏற்படவில்லை. அவளைப் புரிந்து கொள்வதே கடினமாக இருக்கிறது. அவளுக்கு ஏன் துறவறத்தில் இவ்வளவு பற்றுதல் ஏற்பட்டதோ தெரியவில்லை. இவ்வளவு காலமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்ததால் அவள் மிகவும் அல்லல்பட்டிருக்க வேண்டும். இல்லாவிடில் இந்த வயதில் துறவறத்தில் இவ்வளவு பற்றுதல் ஏற்படக் காரணமில்லை. அவளுக்கு விவாகத்தில் பிரியமே இல்லை. குடும்ப மார்க்கத்தில் பற்றுதலே இல்லை. ஓரளவு உங்களுக்காக - உங்கள் மனச் சாந்திக்காகச் சீவர ஆடைகளைக் களைந்து நல்லாடைகளையும் ஆபரணங்களையும் பூட்டிக் கொண்டாள். தஞ்சை அமைச்சரின் புதல்வருக்கு அவளைக் கலியாணம் செய்து கொடுத்துவிடப் போவதாகத் தாங்கள் தீர்மானித்திருப்பதை யறிந்ததும், மறுபடியும் துவராடையை யணிந்து கொண்டு விட்டாள். உங்களுடைய பிரயாசை யெல்லாம் வீணானதென்றே நினைக்கிறேன். அவள் நெடு நாட்கள் வரையில் இந்தக் குடும்பத்தில் தரித்திருக்க மாட்டாளென்று தான் தோன்றுகிறது" என்றாள். இதைக் கேட்டதும் பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாரின் முகம் சுருங்கியது. அவர் மனம் மிகவும் இடிந்தவராக ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே, "இவ்வளவு நாட்களுக்குப் பின்னும் எவ்வளவோ சிரமத்தின் பேரில் என் அருமை மகளைத் தேடிக் கண்டு பிடித்தேன். ஆனால் அவள் சித்தம் இப்படி இருக்குமென்று நான் நினைக்கவில்லை. இதுவும் என் துரதிர்ஷ்டம்தான். அவள் மனநிலையை மாற்ற என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றி இனி தீவிரமாக யோசிக்க வேண்டியது தான். நான் புலிப்பள்ளி கொண்டாருக்குக் கொடுத்த வாக்குறுதி என்ன ஆவது? அவர் எவ்வளவு ஆவலாக இருக்கிறார் தெரியுமா? அவருடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாமா? அது எவ்வளவு ஆபத்தானது?..." என்றார். "அவள் அபிப்பிராயப்படியே நடந்தால் விபரீதமாகத்தான் முடியும். எப்படியாவது நாம் இந்தக் கலியாணத்தை முடித்து விட வேண்டியதுதான். அவள் பிக்ஷுணிக் கோலத்துடனேயே இருந்தாலும் பாதகமில்லை. பலாத்காரமாகவாவது அவளுக்கு மணம் முடித்து விட வேண்டும். கலியாணத்தைச் செய்து விட்டால் அப்புறம் அவள் மன நிலை தானே திரும்பி விடும். அவளைப் புலிப்பள்ளியாரின் மகன் கோளாந்தகனுக்குத்தான் மணம் செய்து வைக்க வேண்டும்" என்றான் பொற்கோமன். "இவ்வளவு பிடிவாதத்தோடு அவளுக்கு மணம் முடிப்பது பிசகு. பொதுவாக அவள் தஞ்சை அமைச்சரின் புத்திரரை விவாகம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதை முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டும். ஒருவேளை அவளுக்கு வேறு யாரையேனும் கலியாணம் செய்து வைக்க நீங்கள் முயன்று பார்த்தால் அவள் மனம் மாறினாலும் மாறலாம்" என்றாள் அருந்திகை. பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தார் மௌனமாக நின்று கொண்டிருந்தார். "இவ் விவாக விஷயத்தில் இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல முடியாதவளாக இருக்கிறேன். அவளுக்கு விருப்பம் இல்லாத ஒருவருக்கு அவசர விவாகம் செய்து வைப்பது முறையாகாது என்பது தான் என் அபிப்பிராயம். அப்புறம் உங்கள் விருப்பம்" என்று சொல்லி விட்டு விடைபெற்றுக் கொண்டு பல்லக்கில் சென்று அமர்ந்தாள் அருந்திகை. பரிவாரங்கள் சூழப் பல்லக்கும் புறப்பட்டது. அருந்திகையின் பல்லக்கும் பரிவாரங்களும் கண் மறையும் வரையில் பார்த்துக் கொண்டிருந்து விட்டுப் பொற்கோம இடங்காக்கப் பிறந்தார் சிறிது ஆத்திரமும் கோபமும் கொண்டவனாகத் தன் தகப்பனாரைப் பார்த்து, "அருந்திகைப் பிராட்டிக்கு நாம் தஞ்சை அமைச்சரோடு பெண் கொடுத்து உறவு கொள்வதில் பொறாமை. இவளே திருபுவனியின் மனத்தைக் கலைத்திருப்பாள்" என்று கூறினான். |