மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம் - காலச் சக்கரம்

அத்தியாயம் 22 - சந்தகரின் குழப்பம்

     காவிரிப்பூம்பட்டினத்தில் வைகைமாலை இருந்த வீதியில் ஒரு மனிதர் ஒவ்வொரு மாளிகையையும் பார்த்த வண்ணமே வந்து வைகைமாலையின் வீட்டு வாசலில் தயங்கி நின்றார். துல்லியமான வெள்ளை வஸ்திரம்; நெற்றியில் பளீரென்று துலங்கும் விபூதிப் பட்டை; அதனிடையே அகன்ற குங்குமப் பொட்டு; ஏதோ போதையில் ஆழ்ந்தவை போன்ற கண்கள்; குட்டையான தாடி; திரி திரியாகத் தோளில் விழுந்திருக்கும் கேசத்தோடு கூடிய பரட்டைத் தலை; இவைதான் அந்த மனிதரின் அங்க லட்சணங்கள். அவருடைய முகமும் கண்களும் ஒருபுறம் அவரை முரட்டு மனிதராகவும், இன்னொரு புறம் அடக்கமான புத்திசாலி போன்றும் எடுத்துக் காட்டின. பொதுவாகப் பார்க்கப் போனால் அவரைப் பார்ப்பவர்களில் ஒரு சாரார் அவரிடம் மதிப்பும் மரியாதையும் வைக்கலாம், அல்லது வெறுப்பும் பயமும் கொள்ளலாம் என்று நினைக்கக் கூடிய வண்ணம் தானிருந்தது, அவருடைய உருவம். அந்த வீட்டு வாசலில் சிறிது நேரம் நின்ற அந்த மனிதர் சட்டென்று அந்த வீட்டுக்குள் சென்று இடைகழியில் நின்று கொண்டே 'அம்மா' என்று குரல் கொடுத்தார். உள்ளே இருந்து 'யார்?' என்று கேட்டுக் கொண்டே சுதமதி வெளியே வந்தாள்.

     அந்த மனிதர் சுதமதியைப் பார்த்ததும் தயங்கியபடியே, "இதுதானே வைகைமாலையின் வீடு..." என்று கேட்டார்.

     "ஆம்" என்றாள் சுதமதி.

     அவர் சிறிது தயக்கத்தோடு, "தாங்கள் தான் வைகைமாலையோ?" என்றார்.

     "இல்லை, அவள் என் தங்கை, தாங்கள் யாரோ?" என்று வினவினாள்.

     "நான் குடந்தைக்குச் சமீபமாக உள்ள கோடீச்சுவரத்தைச் சேர்ந்தவன்..." என்றார்.

     "கோடீச்சுவரத்தைச் சேர்ந்தவரா? அப்படியென்றால் தங்களுக்கு அவ்வூரிலுள்ள சோதிடர் சந்தகரைத் தெரிந்திருக்க வேண்டுமே?" என்றாள்.

     "அந்தச் சந்தகன் தான் நான்" என்றார் அந்த மனிதர் அமைதியாக.

     "ரொம்ப சந்தோஷம். தங்களைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். தங்களை நெடுநாட்களாகச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு. தாங்கள் பூதுகருக்கு நெருங்கிய நண்பரல்ல்வா?" என்றாள் சுதமதி.

     "நெருங்கிய நண்பர் தான். அவரைப் பார்க்கத்தான் இங்கு வந்தேன்..." என்றார் அவர்.

     "அவர் இங்கு இல்லை. நான்கு நாட்களுக்கு முன்பு தான் எங்கோ போனார். தங்களைப் பார்த்தால் மிகவும் தெய்வ பக்தியுள்ளவர் போல் தோன்றுகிறது. தங்களுடைய நண்பரான அவர் ஏன் இப்படி இருக்கிறாரோ, தெரியவில்லை!" என்றாள் சுதமதி ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே.

     "அவருடைய கொள்கையெல்லாம் எனக்கும் தான் பிடிக்கவில்லை. ஏனோ அந்த மனிதரிடம் எனக்கு ஒரு பற்றுதல். அவர் எங்கே போயிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்றார்.

     "அவர் எங்கே போயிருக்கிறாரோ, எனக்குத் தெரியாது. ஒரு வேளை வைகைமாலையிடம் சொல்லிவிட்டு போயிருக்கலாம்" என்று அவள் சொல்லிவிட்டு உள்ளே செல்லத் திரும்பும் போது வைகைமாலை உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்தாள்.

     வைகைமாலையைக் கண்டதும் சுதமதி, "உன்னைக் கூப்பிடலாமென்று தான் நினைத்தேன், நீயே வந்து விட்டாய். இவர் கோடீச்சுவரத்திலிருந்து வந்திருக்கிறார். அடிக்கடி அவர் தான் சொல்லியிருக்கிறாரே, சோதிடர் சந்தகர் என்று, அவர் இவர் தான். பூதுகனைத் தேடிக் கொண்டு தான் வந்திருக்கிறார். அவர் எங்கே போயிருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா?" என்றாள்.

     வைகைமாலை மிகப் பணிவோடு சந்தகரை வணங்கிவிட்டு, "அவர் எங்கே போயிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. எங்கோ வெளியூர் செல்ல வேண்டிய அவசர வேலை இருப்பதாகச் சொல்லிச் சென்றார்" என்றாள்.

     "எந்த ஊருக்குப் போயிருக்கிறாரென்பது தெரியாது போலிருக்கிறது. அந்த மனிதர் தான் போகிற இடத்தைச் சொல்லாமலேயே மனத்துக்குத் திகிலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி விடுகிறார். பத்து நாட்களுக்கு முன் எங்கோ வெளியூர் சென்று விட்டு வருவதாக என்னிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியவர் தான். இரண்டு நாட்களுக்கு முன் தான் அவர் இங்கு காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்திருக்கிறார் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. நான் இங்கே வந்து பார்க்கும் போது இங்கும் அந்த மனிதர் இல்லையென்றால்..."

     "நீங்கள் தான் பெரிய சோதிடராயிற்றே. அந்த மனிதர் எங்கே இருப்பார் என்பதை உங்கள் சோதிட சாஸ்திரம் சொல்லி விடாதா?"

     "சோதிடர்கள் என்றால் வாழ்க்கையில் எல்லாவற்றையுமே சோதிடத்தின் மூலமாக அறிந்து கொண்டு விடுவார்கள் என்று நினைப்பது பிசகு. அப்படி யெல்லாவற்றையுமே தெரிந்து கொண்டு விடுவதானால் அவன் மனிதப் பிறவியே இல்லை; தெய்வ அம்சம்தான். நான் சோதிடன் தான். ஆனால் சொந்த விஷயங்களுக்காகச் சோதிடம் பார்ப்பதில்லை. அதிலும் பூதுகருக்கு இவ்விஷயங்களிலெல்லாம் நம்பிக்கையில்லை. நம்பிக்கை இல்லாத ஒரு மனிதர் விஷயமாக நான் சோதிடக் கலையைப் பயன்படுத்துவதும் இல்லை" என்றார் சந்தகர்.

     "அதுதான் சரியான வழி" என்றாள் சுதமதி. "ஊருக்கெல்லாம் வைத்தியம் செய்யும் வைத்தியன் தன் உடல் நலத்துக்காகத் தன் மருந்தையே உபயோகப்படுத்துவதில்லை. அதிருக்கட்டும்; தங்களுக்குச் சிறிது நேரம் இங்கே இருந்து பேச அவகாசமுண்டா?" என்று கேட்டாள்.

     "ஏன்?"

     "உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து தங்களிடம் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆவல்" என்றாள் சுதமதி.

     "சோதிடம் சம்பந்தமாகவா?" என்றார் சந்தகர்.

     "ஆமாம்" என்றாள் சுதமதி.

     உடனே சந்தகர் தம் எக்கில் செருகியிருந்த ஒரு சிறு துணிப் பையை எடுத்துக் கொண்டே கீழே தரையில் அமர்ந்து துணிப் பையைப் பிரித்து அதிலிருந்த சோழிகளைக் கீழே கொட்டினார்.

     சுதமதி அவருக்கு எதிரே உட்கார்ந்து கொண்டு, "முக்கியமாக உங்களை நான் கேட்க நினைப்பது..." என்று சொல்லிக் கொண்டு வரும்போதே சந்தகர் இடைமறித்து, "அதையெல்லாம் நீங்கள் சொல்ல வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், என்ன உங்களுக்கு நடக்க வேண்டும், அதற்கென்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் நானே சொல்லுகிறேன். பாருங்கள்" என்று சொல்லிப் பையிலிருந்து கொட்டிய சோழிகளைக் கைகொண்ட வரையில் எடுத்துக் குலுக்கி வைத்து, நிமிர்ந்திருக்கும் சோழிகளை ஒருபுறமாகவும், கவிழ்ந்திருக்கும் சோழிகளை ஒருபுறமாகவும் பிரித்து எண்ணி வைத்தார். பிறகு, "நீங்கள் நினனப்பது வெளியூர் சென்றிருக்கும் ஒரு மனிதரைப் பற்றி. அதுவும் கடல் கடந்து சென்ற ஒரு மனிதரைப் பற்றி நினைத்திருக்கிறீர்கள். அவர் எங்கே இருக்கிறார், எப்பொழுது வருவார் என்ற கவலைதான் உங்களுக்கு இல்லையா?" என்றார்.

     சுதமதி மிகவும் ஆர்வமும் சந்தோஷமும் கொண்டவளாய், "ஆமாம். அந்தக் கவலைதான் எனக்கு. அவர் சிங்களம் சென்று மூன்று வருஷங்களாகி விட்டன. குதிரை வியாபாரம் செய்பவர். வியாபாரத்துக்காக முந்நூறு குதிரைகளைக் கொண்டு சென்றார். சீக்கிரம் திரும்பி வருவதாகத்தான் போனார். வருடங்கள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவரை எதிர்பார்த்து எதிர்பார்த்து மனம் ஒடிந்து விட்டது. வாழ்க்கையே வெறுத்து விட்டது. சிங்களத்திலிருந்து அடிக்கடி வரும் முத்து வியாபாரியை நான் விசாரித்ததில் அவர் கொண்டு சென்ற குதிரைகள் எல்லாவற்றையும் அங்குள்ள சிங்கள அரசரிடமே விற்று விட்டுப் பெருத்த செல்வந்தரானதோடு அந்த அரசருக்கே உற்ற நண்பராகிப் பௌத்த சமயத்திலும் சேர்ந்து விட்டார் என்று சொல்லுகிறார்கள். அவர் தம்முடைய செல்வத்தினால் சிங்களத் தீவில் அனுராதபுரத்துக்குச் சமீபமாக உள்ள மகாமேகத் தோட்டத்தில் புத்தருக்கு ஆலயம் ஒன்று கட்டியிருப்பதாகவும் சொன்னார். அவர் புத்த சமயத்தில் சேர்ந்தது பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் என்னை இப்படி அடியோடு மறந்திருக்க வேண்டாம்; நான் கூட அந்த முத்து வியாபாரியின் மூலமாக அவருக்கு ஒரு ஓலை எழுதி அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை. நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டியதெல்லாம், அவர் திரும்பி வருவாரா? எப்பொழுது? அல்லது அவர் திரும்பி வரவே மாட்டாரா? எனக்குள்ள சிறிது நம்பிக்கையையும் விட்டு விடலாமா என்பது தான்" என்றாள்.

     சந்தகர் சிரித்துக் கொண்டே, "தாங்கள் பேச வேண்டாம், எல்லாவற்றையும் நானே சொல்லுகிறேன் என்று சொன்னேனே? விவரங்களை யெல்லாம் நீங்களே சொல்லி விட்டால் பிறகு நான் என்ன சோதிடன்? போகட்டும். ஏதோ தெரியாமல் சொல்லி விட்டீர்கள். இதோ அவரைப் பற்றி மற்ற விவரங்களைச் சொல்லுகிறேன்" என்று சொல்லி மறுபடியும் சோழியைக் குவித்து அதிலிருந்து இரண்டு பிடி சோழியை எடுத்துக் குலுக்கித் தனித் தனியாக வைத்துப் பிரித்து எண்ணினார். பிறகு, "அந்த மனிதர் சௌக்கியமாகத்தான் இருக்கிறார். அவர் புத்தமதத்தில் சேர்ந்து விட்டாரே தவிர இன்னும் துறவியாகி விடவில்லை. துறவியாகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அவர் துறவியாக முடியாது. ஏனென்றால் இதோ பாருங்கள். இதோ இந்தச் சோழியை எண்ணுங்கள், ஏழு. அதாவது சப்தம் கேந்திரம், ஒன்று-சூரியன்; இரண்டு-சந்திரன்; மூன்று-செவ்வாய்; நான்கு-புதன்; ஐந்து-குரு; ஆறு-சுக்கிரன். சுக்கிரன் பலமாக நிற்கிறான். இப்படி சுக்கிரன் பலமாக நின்றால் அவன் காதல் கொண்ட பெண்ணை மறப்பது துர்லபம். ஆமாம், துறவி உடைக்குள் புகுந்தாலும் அந்த நெஞ்சு மங்கையை மறந்து விடாது..."

     "மங்கையை மறக்காது என்றால் என்னைத்தானே? அல்லது வேறு யாரையாவது...?" என்று சுதமதி மிகுந்த கவலையோடு கேட்டாள்.

     "வேறு யாராவதா? வேறு யார் இருக்கப் போகிறார்கள்? இதோ அதையும் பார்த்துச் சொல்கிறேன்" என்று சொல்லி மறுபடியும் சோழியை அள்ளி வைத்து எண்ணிப் பார்த்து விட்டு, "கவலையே பட வேண்டாம். அது நீங்களேதான். கொஞ்ச நாட்களில் அந்த மனிதர் தாமே திரும்புவார் பாருங்கள். எல்லாம் பராசக்தியின் அருள் இருக்கிறது" என்றார் சந்தகர் ஒரே முடிவாக.

     சுதமதி ஆறுதல் அடைந்தவளாக, "சிறிது நாட்களில் என்றால் எத்தனை நாட்களில்?" என்று கேட்டாள்.

     சந்தகர் சிறிது அலுப்பு அடைந்தவர் போல், "எவ்வளவு நாட்களா? அதையும் பார்த்துச் சொல்லுகிறேன்" என்று கூறி, சோழியைக் குலுக்கிப் போட்டு எண்ணினார். "மூன்று மாதத்துக்குள் திரும்பி விட வேண்டிய அறிகுறிகள் தென்படும். ஆனால் ஐந்து மாதத்துக்குள் திரும்பி வந்து விடுவார்" என்றார்.

     சுதமதி மன நிம்மதி அடைந்தவளாக, "அப்படியாவது உங்கள் வாக்குப் பலிக்கட்டும்" என்றாள்.

     இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த வைகைமாலை, "அக்காளின் மணவாளர் எங்கிருக்கிறார், எப்பொழுது வருவார் என்று சொன்னீர்கள். நான் கேட்டால் கூட 'அவர்' எங்கே இருக்க்றார் எப்பொழுது வருவார் என்று உங்களால் சொல்ல முடியாதா?" என்றாள்.

     சந்தகர் சிறிது யோசனை செய்து விட்டு, "சரி! பூதுகன் விஷயமாக நான் சோதிடம் பார்ப்பதில்லை யென்று வைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் வேண்டிக் கொள்வதனால் உங்களுக்காக வேண்டுமானால் பார்க்கிறேன்" என்று சொல்லிச் சோழியைக் குலுக்கிப் போட்டு எண்ணிப் பார்த்து விட்டு ஏதோ திகைப்படைந்தவர் போல் யோசனையில் ஆழ்ந்தார்.

     அவர் முகத்தில் ஏற்பட்ட கலவரக் குறியை அறிந்த வைகைமாலை பயம் அடைந்தவளாய், "என்ன யோசிக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.

     சந்தகர் தம்மைச் சமாளித்துக் கொண்டவராக, "ஜெகன்மாதா கொஞ்சம் யோசிப்பதற்கு இடம் வைத்து விட்டாள். சில சமயங்களில் சோழிகள் சிக்கலாக வரும். அப்பொழுது கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். பூதுகன் வடதிசை போயிருக்கிறார். சௌக்கியமாகத்தான் இருக்கிறார். கூடிய சீக்கிரம் திரும்பி வந்து விடுவார்" என்று சொல்லி விட்டுச் சோழிகளை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார். பிறகு, "நான் கொஞ்சம் அவசரமாகச் செல்ல வேண்டும். பிறகு வருகிறேன்" என்று கூறி எழுந்தார்.

     "திடீரென்று நீங்கள் இப்படிக் கிளம்பியது விநோதமா யிருக்கிறது. இந்த வீட்டிலேயே நீங்கள் இன்று விருந்து சாப்பிட வேண்டும் என்று எங்கள் ஆவல்" என்றாள் சுதமதி.

     "விருந்தா? அதற்கு இது நேரமில்லை. நல்ல சமயத்தில் விருந்து வைக்கச் சொல்லி நான் சாப்பிடுகிறேன். இப்பொழுது நான் அவசரமாகச் செல்ல வேண்டும். அதிருக்கட்டும், சிங்களத்திலிருந்து ஒரு முத்து வியாபாரி வருவதாகச் சொன்னீர்களே, அவன் யார்? அவன் பெயர் என்ன?" என்று கேட்டார் சந்தகர்.

     "அவர் மரூர்ப்பாக்கத்தில் கடை வைத்திருக்கிறார். குணசிங்கர் என்பது அவருடைய பெயர்" என்றாள்.

     "சரி, உங்களுடைய மணவாளரைச் சீக்கிரம் இங்கு வந்து சேருவதற்குரிய சில விஷயங்களை அவரிடம் சொல்லி அனுப்பினால் நலமாக இருக்கும் என்று தான் கேட்டேன். சரி! நான் போய் வருகிறேன்" என்று சொல்லி எழுந்தார்.

     சுதமதி அவருக்குச் சந்தோஷத்தோடு விடை கொடுத்து அனுப்பினாள். ஆனால் வைகைமாலையின் முகத்தில் மட்டும் ஏதோ சிறிது கலக்கம் நிறைந்திருந்தது. அவள் தயக்கத்தோடும் குழப்பத்தோடும் அவருக்கு விடையளிப்பவள் போல் கைகுவித்து வணக்கம் செய்தாள்.

     அவசரமாகப் புறப்பட்ட சந்தகர் வைகைமாலையின் முகத்தில் தோன்றியிருந்த கலவரத்தைக் கண்டதும் சிறிது தயங்கி, "கவலைப்பட வேண்டாம். பூதுகன் வட திசையில் காஞ்சீபுரத்துக்குச் சமீபமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் அத்திசையில் இருக்கிறார் என்று தெரிந்ததும் அவரைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு விட்டது. ஆகையால் தான் இவ்வளவு அவசரமாகப் புறப்பட்டேன்" என்று கூறினார்.

     வைகைமாலையின் முகத்தில் சிறிது தெளிவு ஏற்பட்டது. அவள், "சந்தோஷம்! அவர் எங்கேனும் சுகமாக இருக்க வேண்டுமென்றுதான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்றாள்.

     "எல்லாவற்றுக்கும் பராசக்தியின் பேரருள் இருக்கிறது" என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டார் சந்தகர்.

     அவர் விசையால் உந்தப்பட்ட பொம்மைபோல் எங்கு செல்கிறோம் என்று அறியாமல் மரூர்ப்பாக்கத்துக்கு வந்த போது சுதமதி சொல்லிய குணசிங்கன் என்னும் சிங்கள தேசத்து முத்து வியாபாரியைப் பற்றிய நினைவு அவருக்கு வந்தது. அவர் ஏதோ தீர்மானத்துக்கு வந்தவர் போல் அந்த முத்து வியாபாரியின் கடையை நோக்கி வேகமாக நடந்தார்.

     கடைவீதியில் அதிகக் கூட்டம் இல்லை. இந்திர விழா நடந்து மூன்று நாட்களாகி விட்டன. வியாபாரத்தின் விருவிருப்பு கொஞ்சம் தளர்ந்திருந்தது. கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டிருந்த வியாபாரிகள் தங்களுக்குப் பக்கத்திலுள்ள வியாபாரிகளோடு விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் பேசிப் பொழுதைக் கழிக்க நேரம் கிடைத்தது. குணசிங்கனின் கடையை அடைந்த போது அவன் பக்கத்துக் கடைக்காரனோடு ஏதோ தர்க்கம் செய்து கொண்டிருந்தான். அவனுடைய சம்பாஷணை சந்தகரின் கவனத்தைக் கவர்ந்து விடவே அங்கிருக்கும் முத்துக் குவியல்களைக் கவனிப்பவர் போல் சம்பாஷணையில் கவனம் செலுத்தலானார்.

     சிங்களத்திலிருந்து வந்திருக்கும் குணசிங்கன் புத்த மதத்தில் மிகுந்த பற்றுள்ளவன். புத்த மதத்தைப் பற்றி யாரேனும் தாழ்மையாகப் பேசினால் அவனுக்குப் பொறுக்காது. அதிலும் காவிரிப்பூம்பட்டின புத்த விஹாரத்தில் நடந்த கொலையின் காரணமாக, புத்த மதத்துக்கு விரோதமாக இருந்த பிற மதவாதிகள், அம்மதத்தையே மிகவும் ஏளனமாகப் பேசத் தலைப்பட்டனர். "புத்த பிக்ஷுணிகளும் புத்த பிக்குகளும் வேலியே பயிரே மேய்வது போல் தகாத மார்க்கங்களில் இறங்கலாமா?" என்று கேட்டார் பக்கத்துக் கடை வியாபாரி.

     "ததாகதர் ஒரு பிக்ஷு கூட இல்லாத இடத்தில் பிக்ஷுணிகள் வசிக்கக்கூடாது என்று சொன்னதற்குக் காரணம் வேறு. பெண்களாகிய பிக்ஷுணிகளின் சீலம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் பிக்ஷுக்களின் பார்வையில் இருப்பது நல்லது என்ற நோக்கத்தில் அவர் சொன்னார்..." என்றான் குணசிங்கன்.

     இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சந்தகர் திடீரென்று அவர்கள் சம்பாஷணையில் கலந்து கொள்கிறவர் போல், "இப்படிப்பட்ட ஊழல்கள் எல்லா மதத்திலும் தான் உள்ளன. போலி வேடம் தரித்தவர்கள் எங்குதான் இல்லை? அவர்களால் ஏற்படும் ஊழல்களை ஒரு உன்னதமான மதத்தின் பேரிலேயோ அந்த மதத்தை ஸ்தாபித்த மகா புருஷர்கள் பேரிலேயோ சாட்டுவது அழகாகாது. இனி இத்தகைய ஊழல்கள் நடைபெறாத வண்னம் அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பளிப்பது தான் நல்லது" என்றார்.

     தங்கள் சம்பாஷணைக்கு இடையே புகுந்த மனிதரை முத்து வியாபாரியும் அவன் கடைக்குப் பக்கத்துக் கடையிலுள்ளவனும் வியப்போடு பார்த்தனர். முத்து வியாபாரி குணசிங்கனுக்குச் சந்தகரின் வார்த்தைகள் ஆறுதலளித்தன. விபூதிப் பட்டையும், குங்குமப் பொட்டும் தீர்க்கமாக அணிந்து வந்திருக்கும் சந்தகரின் வார்த்தைகள் அந்தப் பக்கத்துக் கடை வியாபாரிக்கு மிகுந்த ஆச்சர்யத்தை யளித்தன. இப்படிப்பட்ட கோலத்தில் இருப்பவர் புத்த மதத்துக்கு ஆதரவாகப் பேசுவது அவனுக்குச் சிறிது ஆச்சர்யத்தை யளித்தது. இருப்பினும் சந்தகரின் தாடியும் அவர் அணிந்து கொண்டிருக்கும் விபூதி முதலான சின்னங்களும் அவரிடம் சிறிது மரியாதை காட்டும் வண்ணமாகத் தானிருந்தன.

     அவன் சந்தகரைப் பார்த்து, "நான் ஒரு மதத்தைச் சேர்ந்தவனாயினும் சரி, பிற மதத்தை வெறுக்க வேண்டுமென்ற நோக்கம் கொண்டவனல்ல. ஆனால் இந்த புத்த மதத்தினரின் போக்கு எனக்கு வரவரப் பிடிக்கவில்லை. உங்களைப் பார்த்தால் வெளியூர் மனிதர் போலத் தோன்றுகிறது. அதிலும் சைவ சமயத்தைச் சேர்ந்தவராகவும் காணப்படுகிறீர்கள். உங்களுக்கு இந்த ஊரில் அதிலும் புத்த விஹாரத்தில் நடந்த கொலையைப் பற்றி அதிகம் தெரிந்திருக்காது" என்றான்.

     "ஏதோ கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த விஹாரத்தில் பிக்ஷுணிக் கோலத்திலிருந்த பெண் தான் இந்தக் கொலைக்குக் காரணமாக இருப்பாளோ என்று பலர் சந்தேகிப்பதாகவும் அறிந்தேன். ஒரு பெண்ணைக் காணோம் என்றவுடனேயே அவள் மீது பழி சுமத்துவது அவ்வளவு நீதி ஆகாது. ஒரு அழகான பெண் மீது எத்தனையோ பேர்களுக்குக் கண்ணிருக்கும். அந்தப் பெண்ணைக் கடத்திக் கொண்டு போவதற்காக யாரேனும் முயற்சித்திருக்கலாம். அந்தப் பிக்ஷுணியைக் கடத்திச் செல்ல நினைத்தவர்கள் அந்த பிக்ஷுவைக் கொலை செய்திருக்கலாம்..." என்றார் சந்தகர்.

     "நீங்கள் சொல்வதும் சரிதான். அப்படித்தான் நடந்திருக்க வேண்டும்" என்றான் முத்துக் கடை வியாபாரி.

     "பிக்ஷுணி மாத்திரம் காணாமல் போயிருந்தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஒரு பிக்ஷுவும் கண்மறைவாகி விட்டாரென்றால் அதைப் பற்றி நாம் என்ன சொல்வது?" என்றான் பக்கத்துக் கடைக்காரன்.

     "ஓகோ! புத்த பிக்ஷுவையும் காணோமா? அப்பொழுது இதில் ஏதோ ரகசியம் இருக்கத்தான் வேண்டும். அந்தப் புத்த பிக்ஷு யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது ஏதாவது தெரியுமா?" என்று கேட்டார் சந்தகர்.

     "கொலையுண்ட பிக்ஷு காஞ்சீபுரத்தைச் சேர்ந்தவராம். காணாமல் போன பிக்ஷு தஞ்சையைச் சேர்ந்தவராம். அவர் தஞ்சை மன்னர் சேனாபதியாக இருந்து திடீரென்று துறவறத்தில் புகுந்தவராம்" என்றான் முத்து வியாபாரி.

     "ஓகோ! கலங்கமாலரையரா! அவர் ஒரு புத்த துறவியாகி விட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பாவம்! இப்படிப்பட்ட மனிதர்கள் துறவறத்தை ஏற்பதென்றால் ஏன் அம்மதத்தில் ஊழல் ஏற்படாது?" என்றார் சந்தகர்.

     பக்கத்துக் கடை வியாபாரி சந்தகர் தமக்கு அநுகூலமாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டே, "அப்படிச் சொல்லுங்கள். அரசாங்க அதிகார வர்க்கத்திலுள்ளவர்கள் பயிற்சியில்லாமல் கூட தர்ம விதிகளை அறிந்தவர்கள் போல் துறவறம் மேற்கொண்டு விடலாம். அதைப் பற்றித்தான் அந்த நாஸ்திகவாதம் பேசும் பூதுகன் கூட அடித்துப் பேசி வாதம் செய்தான்" என்றான்.

     பூதுகன் என்ற பெயரைக் கேட்டதும் சந்தகர் சிறிது திகைப்படைந்தவராகப் பரபரப்போடு அந்த வியாபாரியின் முகத்தைப் பார்த்தார். அந்தச் சமயம் அந்தக் கடை வாசல் அருகே கம்பீரமாக வந்து நின்ற குதிரையிலிருந்து ஒரு வாலிபன் இறங்கிக் குதிரை கடிவாள வாரை அதன் முதுகின் மேலேயே போட்டு விட்டுக் கடையை நோக்கி வந்தான்.