உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) முதல் பாகம் - காலச் சக்கரம் அத்தியாயம் 24 - சாந்தியிடையே சலசலப்பு சந்தகர் கதை சொல்ல ஆரம்பித்தார். "கலியுக ஆரம்பத்தில் சோமசர்மா என்று ஒரு அந்தணன் இருந்தான். அவன் சோதிட சாஸ்திரத்தில் மிகவும் தேர்ந்தவன். அவன் வாக்கு பலித்ததினால் நல்ல வருமானம் இருந்தும் நெடுநாள் வரையில் குழந்தை பாக்கியமே இல்லாமல் இருந்தது. அவன் பல வருஷங்கள் தவம் இருந்த பிறகு அவனுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஒன்றுமில்லாதவனுக்கு ஒரு பெண் குழந்தையாவது பிறந்ததே யென்று அந்தக் குழந்தையைச் செல்லமாக வளர்த்து வந்தான். அந்தப் பெண்ணுக்கு விவாகம் செய்து வைத்தான். ஆனால் அவள் மங்கைப் பருவம் பெற்ற நேரம் கெட்ட நேரமாக இருந்ததால் அவள் புருஷனோடு ஓர் இரவு தான் வாழ்க்கை நடத்த முடியுமென்றும், அன்றே அவள் புருஷன் இறந்து, அவள் விதவையாகி விடுவாளென்றும் சோதிட சாஸ்திரத்தின் மூலம் அறிந்தான். அன்று அந்தப் பெண்ணின் கணவன் மனைவியோடு இன்பமாகக் காலங் கழிக்க மாமனார் வீட்டுக்கு வந்திருந்தான். சோதிடனாகிய அந்த அந்தணனுக்கு மனத்தில் திகில் ஏற்பட்டது. அவன் தன் பெண்ணைக் கூப்பிட்டு அன்று அவளுக்கு ஏற்பட இருக்கும் விதியைப் பற்றிச் சொல்லி அழுதான். அந்தப் பெண் மிகவும் மன வருத்தம் அடைந்தவளாக எப்படியாவது தன் கணவனை எமன் வாயிலிருந்து காப்பாற்றிவிட முடியாதா என்று எண்ணினாள். அன்று இரவு நடுநிசியில் அவள் கணவன் ஏரிக் கரைக்குச் சென்று உலவி விட்டு வருவதாகச் சொல்லிக் கிளம்பினான். அந்தப் பெண் மனத்தில் பயங்கொண்டவளாக ஏரிக்கரைக்குப் போக வேண்டாமென்று தடுத்தாள். ஆனால் அவள் சொல்லைக் கேளாது அவன் புறப்பட்டு விட்டான். கணவனின் உயிரைப் பாதுகாக்க நினைத்த அந்தப் பெண்ணும் அவனுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து போய் ஏரிக்கரையின் ஒரு மரத்தின் பின்னால் நின்று என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கத் தொடங்கினாள். அந்த வாலிபன் தாகத்தினால் தண்ணீர் அருந்த ஏரியில் இறங்கிய சமயம் முதலை ஒன்று வந்து அவன் கால்களைக் கவ்விக் கொண்டது. அதைப் பார்த்த அந்த வாலிபன் மிகவும் நயமான மொழியில், 'முதலையே! உன்னுடைய வயிற்றுக்கு ஆகாரமாக்கிக் கொள்ள வேண்டுமென்று என்னைப் பிடித்தால் அதில் பிசகொன்றுமில்லை. தருமப்படி உனக்கு நான் ஆகாரமாக வேண்டியவன் தான். ஆனால் உனக்குச் சிறிது இரக்கமிருக்குமானால் என்னுடைய வேண்டுகோளை மட்டும் சற்றுக் கேளு. நான் புதிதாக மணமானவன். என்னுடைய மனைவியோடு ஒரு சில மணி நேரம் கூட நான் இன்பமாக கழிக்கவில்லை. அவளிடம் ஏரிக்கரை வரையில் போய் வருகிறேன் என்று சொல்லி வந்தேன். இங்கு உன் பிடியில் அகப்பட்டுக் கொண்டு விட்டேன். ஆதலால் நீ என்னைக் கொஞ்சம் விட்டால் நான் போய் என் மனைவியிடம் சொல்லி அவளுக்கும் சிறிது ஆறுதல் சொல்லிவிட்டு உன்னிடம் திரும்பி வந்து விடுகிறேன். மறுபடியும் நீ என்னை ஆகாரமாக்கிக் கொள்ளலாம்' என்று கூறினான். முதலை சிரித்தது. 'அடேடே! இப்படிப்பட்ட தரும குணம் உள்ளவனா நீ. முதலை வாயில் சிக்கிய எந்த மனிதனும் தப்பித்துக் கொள்ள நினைப்பானே தவிர அதற்கு ஆகாரமாக நினைக்க மாட்டான்' என்றது முதலை. 'என்னை நீ தவறாக நினைக்கிறாய். நான் வாக்கு தவற மாட்டேன். நான் அப்படி வாக்குத் தவறினால் நீ எத்தகைய கொடூரமான பாவத்தை அனுபவிக்க வேண்டுமென்று சொல்கிறாயோ, நான் அத்தகைய பாபத்தை அனுபவிக்கக் கடவேன்' என்றான் அவ்வாலிபன். அந்த முதலை யோசித்துச் சிறிது மன இரக்கம் கொண்டு, 'சரி! உன் வார்த்தைகளை நம்பி உன்னை விட்டு விடுகிறேன். நீ சொல்லியபடி திரும்பி வராவிட்டாள் எவன் ஒருவன் சாப்பிடும் போதே எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை அணைக்கிறானோ, அவன் அடைய வேண்டிய பாபத்தை நீ அடைவாய்' என்று கூறியது. அந்த வாலிபனும் முதலையின் வார்த்தையை அங்கீகரித்துச் சீக்கிரமே திரும்புவதாகச் சொன்னதால் அதுவும் அவனை விட்டு விட்டது. மரத்தடியில் ஒளிந்து கொண்டிருந்த அவன் மனைவி அங்கு நடந்த விஷயங்களை அறிந்து அவனுக்கு முன்னதாகவே வீடு சென்று அவன் வருகைக்காகக் காத்திருந்தாள். அந்த அந்தண வாலிபன் நேராகத் தன் மனைவியிடம் சென்று அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு முதலைக்குக் கொடுத்த வாக்குறுதியைச் சொல்லி அதை நிறைவேற்ற ஏரிக்கரைக்குக் கிளம்பினான். அவன் மனைவி அவன் செல்வதைத் தடுக்கவில்லை. ஆனால் தனது வேண்டுகோளுக்கு இணங்கி, இருண்ட இந்த நேரத்தில் ஒரு விளக்கையும் எடுத்துச் செல்லும்படி வேண்டினாள். அவனும் அதற்கு இணங்கி ஒரு விளக்கையும் எடுத்துக் கொண்டு ஏரிக்கரைக்குச் சென்றான். அவன் மனைவி ஒரு சிறு கூடையை எடுத்துக் கொண்டு அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து முன்பு ஒளிந்திருந்த மரத்துக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டாள். அந்த வாலிபன் மறுபடியும் ஏரியில் இறங்கித் தன்னைப் பிடித்து உண்ணும்படி முதலையை வேண்டிக் கொண்டான். அந்த முதலையும் அவன் வாக்குறுதி தவறாமல் வந்ததை யெண்ணி வியந்து அவனுடைய கால்களைக் கௌவி மெதுவாக விழுங்கத் தொடங்கியது. அந்த வாலிபன் கரையில் வைத்திருந்த தீபம் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. முதலை அந்த வாலிபனை விழுங்க நினைக்கும் தருணம் அந்தப் பெண் தன் கையில் வைத்திருந்த கூடையைத் தீபத்தின் மீது கவிழ்த்தாள். கரையிலிருந்த விளக்கு அணையவும் வாலிபனின் காலைப் பிடித்திருந்த முதலை சட்டென்று அவன் கால்களை விட்டு விட்டது. இதைக் கண்டதும் அந்த வாலிபன் ஆச்சரியமடைந்தவனாய், 'முதலையே! ஏன் என் காலை விட்டு விட்டாய்?' என்று கேட்டான். 'அப்பா! உனக்கொரு தருமம் எனக்கொரு தருமம் இல்லை. நான் உன்னை ஆகாரமாகச் சாப்பிடும் போது திடீரென்று இந்த விளக்கு அணைந்தது. அதனால் ஏற்படும் பாவத்தை நான் அனுபவித்துத்தானே ஆக வேண்டும்? அதனால் தான் உன்னைப் புசிக்க விரும்பவில்லை. விட்டு விட்டேன். நீ போகலாம்' என்றது. வாலிபன் எவ்வளவோ வேண்டிக் கொண்டும் முதலை அவனை ஆகாரமாக்கிக் கொள்ள மறுத்தது. வாலிபன் என்ன செய்வான்? மறுபடியும் வீட்டை அடைந்தான். ஏரிக்கரையிலிருந்து முன்னதாகவே வந்திருந்த மனைவி அவனைச் சந்தோஷத்தோடு வரவேற்றாள். அவன் நடந்த விவரங்களை யெல்லாம் மனைவியிடம் சொன்னான். அவன் மனைவியும் அவன் உயிரை மீட்ட தந்திரத்தை அவனிடம் சொன்னாள். இருவரும் சந்தோஷமாக இரவைக் கழித்தனர். தன்னுடைய மாப்பிள்ளை சோதிட சாஸ்திரப்படி இரவு இறந்திருப்பான் என்று முடிவு கட்டிய அந்தணன் பிரேதத்தை எடுக்க வேண்டிய சாமக்கிரியைகளையெல்லாம் செய்து வைத்திருந்தான். ஆனால் அவன் எதிர்பாராத வண்ணம் அவனுடைய மகளும் மருமகனும் சந்தோஷத்தோடு வந்து அவனை வணங்கவே அவன் வியப்பு அடைந்தான். அவனுடைய மகள் விதியை எப்படி வென்றாள் என்பதைச் சொன்னாள். உடனே அவன் தன் தவறுதலை உணர்ந்து இந்தக் கலிகாலத்தில் சோதிடம் பலிக்காது என்று முடிவு கட்டிச் சோதிட சம்பந்தமான சுவடி முதலியவைகளையெல்லாம் மருமகனுக்காகக் கட்டி வைத்திருந்த பாடையில் வைத்துக் கட்டிக் கொண்டு போய்க் கொளுத்தினான்" என்று சந்தகர் சொல்லி, "ஆகையால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சோதிடம் கேட்டுக் காலத்தை வீணாக்குவதை விட முயற்சியின் மூலம் உங்கள் மனத்துக்கு ஆறுதல் தேடிக் கொள்ளும் வழியை கவனிக்க வேண்டியதுதான். நீங்கள் என்ன உதவி வேண்டினாலும் அதைச் செய்வதற்குச் சித்தமாயிருக்கிறேன்" என்றார். பிருதிவீபதி சிரித்துக் கொண்டே, "நீங்கள் இவ்வளவு கெட்டிக்காரராக இருப்பீர்கள் என்று நினைக்கவேயில்லை. நான் முதலில் மாலவல்லி எங்கே இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு அவள் குற்றமற்றவள் என்பதை உலகத்துக்கு நிரூபிக்க வேண்டும்" என்றான். "ஓகோ! உங்கள் காதலியின் பெயர் மாலவல்லியோ? மிகவும் அழகான பெயர். நீங்கள் கொஞ்சம் கூடக் கவலைப் பட வேண்டாம். நான் கூப்பிட்ட இடத்துக்கு என்னோடு வாருங்கள், போதும். உங்கள் மாலவல்லியைத் தேடித் தருகிறேன்" என்றார் சந்தகர். "நான் உங்களோடு எங்கு வேண்டுமானாலும் வருகிறேன். ஆனால் நான் தான் கங்க தேசத்து இளவரசன் பிருதிவீபதி என்று ஒருவருக்கும் தெரியக் கூடாது. உங்கள் நண்பர் பூதுகரைச் சந்திக்க நேர்ந்தால் கூட அவரிடம் நீங்கள் சொல்லிவிடக் கூடாது" என்றான். "நான் சொல்ல மாட்டேன். ஆனால் பிறர் சொல்லாமலேயே எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் சாமர்த்தியம் பூதுகனுக்கு உண்டு என்பதை மாத்திரம் நீங்கள் மறந்து போய்விட வேண்டாம்" என்றார் சந்தகர். பூம்புகாரிலிருந்து காஞ்சியை நோக்கிக் கங்கதேசத்து இளவரசன் பிருதிவீபதியும் கோடீச்சுவரத்துச் சோதிடர் சந்தகரும் இரண்டு குதிரைகளின் மீது ஏறி அமர்ந்து பிரயாணம் செய்தனர். வழியில் இருவரும் ஏதோ பேசிக் கொண்டே சென்றனர். பேச்சு வாக்கில் பிருதிவீபதி, சந்தகரிடம், "உங்களுடைய அழைப்பின் பேரில் நான் காஞ்சிக்குப் புறப்பட்டேனே தவிர அங்கு போவதில் எவ்வளவோ சங்கடங்கள் இருக்கின்றன. காஞ்சியில் எல்லோரையும் எனக்குத் தெரியும். கங்க தேசத்து அரசகுமாரனாகிய நான் அரண்மனையில் விருந்தாளியாக இருக்க நேரும். நம்முடைய இஷ்டம் போல் பல இடங்களையும் சென்று பார்ப்பதில் சிறிது கஷ்டம் ஏற்படும் என்று நினைக்கிறேன்" என்றான். "நீங்கள் அரண்மனை விருந்தினராக இருப்பதாலும் சில சாதகங்கள் இருக்கின்றன. அரசாங்கத்தில் பூதுகனைப் பற்றிய உண்மைகள் தெளிவானாலும் ஆகலாம். நாம் இருவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதாக வைத்துக் கொண்டால் நான் வெளியே ஊரில் சுற்றுவேன். நீங்கள் அரண்மனையிலிருந்தே உளவு தெரிந்து கொள்ளலாம். இப்படிச் செய்வதினால் காஞ்சியில் பூதுகன் இருக்குமிடம், அவன் இருக்கும் நிலை, உங்கள் காதலி மாலவல்லி இருக்கும் இடம் பற்றிய விவரங்களெல்லாம் தெரியலாம்" என்றார். "நீங்கள் சொல்வதும் சரிதான். முக்கியமாக மாலவல்லியைப் பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் காஞ்சிக்குச் செல்ல வேண்டுமென்று எனக்குத் தோன்றியதுண்டு. ஏனென்றால் சம்பாதி வனத்துப் புத்த விஹாரத்தில் கொல்லப்பட்ட ரவிதாசன் என்பவன் காஞ்சியைச் சேர்ந்தவன். மாலவல்லியும் காஞ்சியைச் சேர்ந்தவள். அவள் அரண்மனையில் முக்கியமான பாடகியாக இருந்தாள்." "அப்படியா! பாவம்! அப்படிப்பட்டவள் ஏன் பிக்ஷுணிக் கோலம் பூண வேண்டும்? ஏன் காஞ்சியை விட்டுக் காவிரிப்பூம்பட்டினம் வரவேண்டும்?" என்று கேட்டார் சந்தகர். "அதற்கு எவ்வளவோ காரணங்கள் உண்டு. முக்கியமாக அவளுடைய பேரழகும் குணமும் தான் அவள் வாழ்க்கைக்கு இடையூறாக முளைத்தன. எந்நேரத்திலும் அவளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆடம்பர வாழ்க்கையிலிருந்து அவள் விடுதலை பெற நினைத்துத்தான் துறவற வாழ்க்கையை ஏற்றுக் கொண்டாள். இன்று வரையில் அவளுடைய மனம் இன்ப சுகங்களைக் கருதாமல் துறவற மார்க்கத்தில் தான் மிகவும் பற்றுதல் உள்ளதாக இருக்கிறது" என்றான். "அவள் மனம் துறவற மார்க்கத்தில் பற்றுள்ளதாக இருக்கிறதென்றால் ஏன் உங்களோடு மாத்திரம் ரகசியத் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்?" என்று கேட்டார் சந்தகர். சந்தகர் இப்படியொரு கேள்வி கேட்பாரென்று பிருதிவீபதி எதிர்பார்த்ததுதான். அதற்குப் பதில் சொல்லவும் அவன் சித்தமாக இருந்தான். "எனக்கும் அவளுக்கும் ரகசியத் தொடர்பு உண்டு என்பது உண்மையே. அவள் துறவு மார்க்கத்தில் புகுவதற்கு முன்னால் அவள் என் மீது அளவற்ற ஆசை வைத்திருந்தாள். அவள் ஒரு புத்த பிக்ஷுணியான பின் என் மீது வைத்துள்ள ஆசையையும் தியாகம் செய்யச் சித்தமாயிருக்கிறாள் என்ற ரகசியம் எனக்குத் தான் தெரியும். அவள் தன் ஆசையை எப்படியோ துறந்து விட்டாள். நான் அவள் மீது வைத்திருந்த மோகத்தைத் தான் என்னால் துறக்க முடியவில்லை" என்று கூறினான். சந்தகர் சிரித்துக் கொண்டே, "வேடிக்கையாயிருக்கிறதே? முதலில் உங்களிடம் ஆசை வைத்த பெண்ணுக்கு ஏன் திடீரென்று உலக வாழ்வில் ஒரு வெறுப்பு ஏற்பட்டு உங்களுடைய அன்பையும் நிராகரிக்கும் விபரீத நிலை வரவேண்டும்?" என்று கேட்டார். "இந்த உலகத்தில் அன்பு, அழகு இவைகளுக்கு எதிரிடையாக இருக்கிறது, குலம், அந்தஸ்து, மதம் இவைகள். அவள் ஒரு சாதாரண அரண்மனைக் கணிகை. நான் ஒரு அரச குமாரன். அவள் ஒரு மதத்தைச் சேர்ந்தவள். நான் ஒரு மதத்தைச் சேர்ந்தவன். அவளிடம் நான் ஒரு அரசகுமாரன் என்ற அதிகாரத்தில் அவளை என் மோக விளையாட்டுக் கருவி போல் உபயோகித்துக் கொள்ளலாமே தவிர அவளை என்னுடைய மனைவி என்ற நிலையில் உயர்த்தி விட முடியாது. அவளை என்னுடைய மனைவி என்ற நிலையில் உயர்த்தி விட நான் நினைத்தாலும் என்னுடைய அரச பரம்பரைச் சட்ட திட்டங்கள் அதற்கு இடம் அளிக்கவில்லை. இதை உணர்ந்து கொண்ட அவள் மனைவியாகும் அருகதையற்ற நிலையில் என்னோடு தொடர்பு வைத்துக் கொள்வதை அறுத்துக் கொள்ள நினைத்தாள். ஆனால் என் மனம் அவளை எளிதாக விட்டு விடுவதாகத் துணியவில்லை. என்னுடைய தகப்பனார் இருக்கும் வரையில் என்னுடைய மனைவியின் அந்தஸ்தில் அவளை வைப்பது கடினம் தான். ஆனால் அவர் இறந்த பிறகு என் செய்கை யாருக்குப் பிடிக்கா விட்டாலும், நான் துணிந்து அவளை மனைவியாக்கிக் கொண்டு விடலாம் என்று தான் நான் நினைக்கிறேன். இதை உத்தேசித்து அவளுக்கு ஆறுதலான வார்த்தைகள் சொல்லி அவள் மனத்தைத் திருப்பலாமென்று நினைத்தேன். அவள் புத்த சேதியத்திலிருந்து திடீரென்று காணாமல் போனதிலிருந்து அவளுக்கும் அங்கு நடந்த படுகொலைக்கும் சம்பந்தமிருப்பது போலக் காட்டினாலும் அவள் முக்கியமாக என்னுடைய அன்புப் பிணைப்பிலிருந்து விடுபட்டு எங்கேனும் தலை மறைவாக வாழ எண்ணியே போய் விட்டாள் என்று தான் நான் நினைக்கிறேன். இதில் சில சங்கடங்கள் இருக்கின்றன. பல்லவ சக்கரவர்த்தி நந்திவர்மன் நட்பும் உறவும் எங்களுக்கு இருந்து கொண்டு வருகிறது. அவருடைய ஒன்றுவிட்ட சகோதரனான சிம்மவர்மன் தன்னுடைய ஒரே சகோதரியாகிய அமுதவல்லி என்பவளை எனக்கு மனைவியாக்கி விட வேண்டுமென நினைக்கிறான். பல்லவ மன்னரும் அவ் விஷயத்தில் ஆர்வம் காட்டி என் தந்தையாரின் சம்மதத்தைப் பெற்றிருக்கிறார். இந் நிலையில் நான் வேறொரு பெண்ணிடம் அதிலும் அரண்மனை ஊழியம் செய்யும் ஒரு கணிகையிடம் காதல் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்தால் என் தகப்பனார் மிகவும் விபரீதமாகக் கோபப்படுவார். அதோடு பல்லவ சக்கரவர்த்தியின் கோபத்தையும் நாங்கள் சம்பாதித்துக் கொள்ள நேரும். இதையெல்லாம் அறிந்த மாலவல்லி என்னுடைய நலனைக் கருதி என் மீது வைத்த அன்பைத் துறக்கச் சித்தமாகி விட்டாள். அதோடு சாதாரண அரண்மனைக் கணிகையாயிருந்த அவளைத் தன்னுடைய காம வலையில் சிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தான் சிம்மவர்மன். இத்தகைய பேராபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கத்தினாலும் அவள் துறவறத்தை ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. அதற்கு புத்த சமயம் தான் இடம் அளித்தது" என்று சொல்லி நிறுத்தினான் பிருதிவீபதி. "நீங்கள் ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்த உன்னதமான மதத்தை உலகில் நிறுவக் காரணமாயிருந்த மகாவீரரின் முக்கியமான நோக்கம், இவ்வுலகில் சாதி மதங்களை அகற்றி ஜீவன்களை யெல்லாம் சமம் என்று கருத வேண்டும் என்பது தான். அந்த மகா புருஷரின் சித்தாந்தங்களைக் கைக் கொண்டவர்கள் என்று சொல்லும் உம் தந்தையைப் போன்றவர்கள் இவ் விஷயத்தில் சாதி, சமய அந்தஸ்துகளைப் பார்ப்பதுதான் மிகவும் விநோதமாயிருக்கிறது" என்றார் சந்தகர். "அதை எண்ணித்தான் நானும் வருந்துகிறேன். பொதுவாக நினைக்கப் போனால் சமயம் என்ற பிரிவுகளே இல்லாமல் எல்லாச் சமயப் பெரியோர்களின் நல்ல உபதேசங்களையும் பின்பற்றி உலகில் மனிதனாக வாழ வேண்டுமென்ற நோக்கத்தில் வாழ்ந்தால் இவ்வுலகமே சுவர்க்கமாகி விடும் என்று நான் நினைக்கிறேன்" என்றான் பிருதிவீபதி. "இதையெல்லாம் கண்டு தெளிந்து தான் பூதுகன் ஒரு நாஸ்திகனாகி விட்டானோ என்னவோ?" என்றார் சந்தகர். "போகட்டும். நான் இப்படியே மெதுவாகச் சென்றால் இன்றைக்குள் காஞ்சியை அடைவது சிரமமாக இருக்கும். குதிரையைச் சிறிது துரிதமாகவே விட வேண்டியது தான்" என்றான் பிருதிவீபதி. "ஆம்! இரவு நெருங்குவதற்கு முன் காஞ்சியை அடைந்து விடுவதுதான் நல்லது" என்று கூறிக் குதிரையைத் தட்டி விட்டார் சந்தகர். குதிரைகள் அதிவேகமாகத்தான் வந்து கொண்டிருந்தன. ஆனால் மாலைப் பொழுது கழிந்து எங்கும் இருள் நிறைந்து விட்டது. அவர்கள் இருவரும் இரவுக்குள் காஞ்சியை அடைந்து விடலாம் என்று நினைத்தது நிறைவேறாது என்று கண்டு கொண்டனர். அப்பொழுது அவர்கள் வந்து கொண்டிருந்த இடம் மலைப் பிரதேசம். எங்கும் இருள் கவிந்திருந்தது. ஆங்காங்கு சிறு சிறு குன்றுகளைக் கடந்து அவர்கள் செல்ல வேண்டியதாயிற்று. இந்தச் சமயம் பிருதிவீபதியை விடச் சந்தகர் மிகவும் களைப்படைந்திருந்தார். அவர் அதிகம் குதிரையேறிப் பழகாதவர். அவர் மெதுவாகப் பிருதிவீபதியைப் பார்த்து, "இன்னும் பத்து கல் தூரமாவது இருக்கும் காஞ்சி. இந்த இரவில் நாம் இங்கு எங்கேயாவது தங்கிச் சிரம பரிகாரம் செய்து கொண்டு விடியற் காலையில் புறபப்டுவதுதான் நல்லதாயிருக்கும் என்று நினைக்கிறேன். நான் மிகக் களைப்படைந்திருக்கிறேன். என் குதிரையும் மிகக் களைப்படைந்திருக்கிறது. உங்களைப் போலல்ல நான். உங்கள் குதிரையைப் போலல்ல என் குதிரை. இன்னும் சிறிது தூரம் பிரயாணம் செய்தால் அது நம்முடைய வார்த்தைகளைக் கேட்காமல் படுத்துக் கொண்டாலும் படுத்துக் கொண்டு விடும். அதிகமாக ஜீவ ஹிம்சை செய்ய எனக்கு விருப்பமில்லை என்பதை ஜைன சமயத்தைச் சேர்ந்த உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ளுகிறேன்" என்றார். பிருதிவீபதி 'களுக்'கென்று சிரித்தான். "குத்தலாகப் பேசுவதில் நீங்கள் ரொம்ப சாமர்த்தியசாலி. நானும் ஜீவஹிம்சை செய்வதில் விருப்பமில்லாதவன் தான். அதோ சிறிது தூரத்தில் விளக்கு வெளிச்சம் தெரிவது போலிருக்கிறது. அங்கு போனால் நாம் தங்குவதற்குக் கொஞ்சம் சௌகரியம் இருக்கலாம்" என்று சொல்லிச் சிறிது தூரத்தில் விளக்கின் ஒளி தெரிந்த இடத்தை நோக்கிக் குதிரையைச் செலுத்தினான். அவர்கள் அவ்விடத்தை அடைந்த போது சிறு சிறு குன்றுகளில் குடையப் பட்ட குகைக் குள்ளிருந்துதான் அந்த வெளிச்சம் வருகிறது என்பதை உணர்ந்து கொண்டனர். இப்படிப்பட்ட இடங்களில் துறவிகள் தான் வசிக்கக் கூடும் என்பதையும் அவர்கள் உணர்ந்தனர். எப்படியோ அந்த இரவுப் பொழுதை அங்கே கழிப்பதற்கு அது மிகவும் சௌகரியமான இடமாகத்தான் அவர்களுக்குப் பட்டது. அவர்கள் குதிரைகளிலிருந்து கீழே இறங்கி அங்கிருந்த மரத்தில் அவைகளைக் கட்டிவிட்டுச் சமீபத்திலிருந்த மலைக் குகையை நெருங்கினர். அக் குகையின் உள்ளிருந்து வந்த விளக்கின் ஒளி அவர்கள் அந்த மலைக் குகைக்குள் போக அனுகூலமாக இருந்தது. அவர்கள் குகைக்குள் நுழைந்ததும் நேர் எதிராகக் குடை நிழற் கீழ் அமர்ந்திருக்கும் மகாவீரரின் உருவமும் அவ்வுருவத்துக்கு இருபுறங்களிலும் ஜைன மதாச்சாரியார்கள் இருவர் நிஷ்டையில் அமர்ந்திருப்பது போன்ற உருவமும் செதுக்கப்பட்டிருந்தன. அவ்வுருவங்களுக்கெதிராக அக்குகையின் மேல் தளத்தில் வட்டமான கமலம் போன்ற சக்கரம் ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. பக்கத்துச் சுவர்களிலே சாந்துகள் பூசப்பட்டு சமண சமய கதைகளைச் சித்தரிக்கும் வர்ண ஓவியங்கள் கண் கவரும் வண்ணம் வரையப்பட்டிருந்தன. அங்கிருந்த சிலா உருவங்களுக்குச் சமீபமாகக் கருங்கல் ஸ்தம்பத்தில் அமைக்கப்பட்ட தீபங்கள் எரிந்து கொண்டிருந்தன. இதைத் தவிர அங்கு மனிதர்கள் இருப்பதற்குரிய அடையாளமே இல்லை. பிருதிவீபதி அங்கிருந்த சிலா உருவங்களுக்குத் தன் வணக்கத்தைச் செலுத்தி விட்டு, "நல்ல பாதுகாப்பான இடத்துக்குத் தான் வந்து சேர்ந்திருக்கிறோம்" என்றான் சந்தகரைப் பார்த்து. "ஆமாம்! இந்த உடலை மாத்திரமல்ல, இந்த உள்ளத்தையும் பாதுகாக்கும் இடத்துக்குத்தான் வந்து சேர்ந்திருக்கிறோம்" என்றார் சந்தகர். "இந்த பரமேஷ்டிகளின் உருவம் நம் மனத்தை உருக்கவில்லையா?" என்று கேட்டான் பிருதிவீபதி. "ஆம். மனத்தை உருக்கத்தான் செய்கிறது. நாம் இந்த இடத்தில் இருக்கும் போது இந்த நிலை. வேறொரு இடத்தில் சௌந்தர்யம் உள்ள ஆரணங்குகளைக் கண்டு விட்டாலும் மனம் இப்படித்தான் உருகுகிறது. இதுதான் மனிதனுடைய மன நிலை" என்றார் சந்தகர். பிருதிவீபதி சிரித்துக் கொண்டே, "நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே" என்றான். "சரி - இந்தக் குகைக்குள் எவ்வித மனித சஞ்சாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் இத் தீபங்கள் பிரகாசிப்பதிலிருந்து இங்கு யாரோ வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது நன்றாய்த் தெரிகிறது. இங்கு யார் இருக்கப் போகிறார்கள்? யாரேனும் ஜைன சன்னியாசிகள் தான் இப்படிப்பட்ட இடங்களில் வசிப்பார்கள். எல்லாவற்றுக்கும் நாம் இங்கேயே படுத்துறங்கி விட்டு விடியற்காலையில் எழுந்து செல்வது நலமென்று நினைக்கிறேன்" என்றார். "அதுதான் நல்லது" என்று சொல்லிய வண்ணம் தன் உடலில் போர்த்தப்பட்டிருந்த பட்டு உத்தரீயத்தை எடுத்துத் தரையில் விரித்தான் பிருதிவீபதி. சந்தகர் தம் வெள்ளை வஸ்திரத்தை ஒரு புறம் விரித்துப் படுத்துக் கொண்டார். அந்தச் சமயம் இவர்களிருவருக்கும் இரவு போஜனத்தைப் பற்றிய கவலையே இல்லை. சந்தகருக்குப் பிரயாணத்தினால் ஏற்பட்ட அலுப்பினால் படுத்த உடனேயே தூக்கம் வந்து விட்டது. பிருதிவீபதிக்கோ தூக்கம் வரவில்லை. அவன் மனம் பலவிதமாகச் சுழன்றது. அன்று காலை அவன் சந்தகரைச் சந்தித்ததிலிருந்து சந்தகரின் குண விசேஷங்களையெண்ணி எண்ணி வியப்படைந்தான். எல்லா வகையிலும் சந்தகர் பூதுகனுக்கு ஏற்ற தோழர் என்று தான் கருதினான். சந்தகரைப் போலவும் பூதுகனைப் போலவும் இரண்டு புத்திசாலியான நண்பர்கள் சேர்ந்தால் இந்த உலகத்தையே ஆக்கவும் அழிக்கவும் முடியும் என்று எண்ணினான். அவன் தூங்காமல் புரண்டு புரண்டு படுக்கும் போது, வெளியே சிறிது தூரத்திலிருந்து ஏதோ சத்தம் வருவதைக் கேட்டு எழுந்து உட்கார்ந்து கவனித்தான். யாரோ நான்கைந்து பேர்கள் கசமுச என்று பேசிக் கூச்சல் போடுவது போல் அவனுக்குத் தெரிந்தது. அந்தக் கூச்சலிடையே பெண்ணொருத்தி அழுவது போன்றும், அலறுவது போன்றும் சத்தம் கேட்டது. அதற்கு மேலும் அவன் தாமதிக்க விரும்பவில்லை. 'என்ன கலவரமோ? யாருக்கு என்ன ஆபத்தோ?' என்றெண்ணியவனாகப் பரபரப்போடு சமீபத்தில் படுத்துக் கொண்டிருந்த சந்தகரைத் தட்டி எழுப்பினான். சந்தகர் திகைப்புற்று எழுந்து, "என்ன?" என்று கேட்டார். பிருதிவிபதி சிறிது தூரத்தில் ஏதோ கலவரம் நடப்பதை அவருக்குச் சொல்லி அரைகுறை தூக்கத்திலிருந்த அவரையும் அழைத்துக் கொண்டு அக்குகையிலிருந்து வெளியே வந்தான். அவன் வெளியே வந்த போது சற்றுத் தூரத்தில் கையில் தீப்பந்தங்களுடன் ஐந்தாறு பேர்கள் கூட்டமாக நின்று கொண்டு ஏதோ கலவரம் செய்வதை அறிந்தான். அவர்களிடையே ஒரு பெண் இருப்பதும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. தூக்கக் கலக்கத்திலிருந்த சந்தகரும் கண்களைத் துடைத்துக் கொண்டு அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து சிறிது விருவிருப்புடையவரானார். சந்தகரும் பிருதிவீபதியும் கலவரம் நடந்த இடத்தை நோக்கிச் செல்ல நினைக்கையில் அக்கூட்டத்திலிருந்த ஒருவன், 'ஐயோ! ஐயோ!' என்று அலறிக் கொண்டே நின்ற பெண்ணின் கைகளைப் பிடித்து இழுத்து அவளைப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போவதையும், அவனிடமிருந்து அவளை மீட்க நினைத்த ஒருவரை மற்றுமுள்ள இருவர் அடித்துத் தள்ளிவிட்டுப் போனதையும் பார்த்தனர். பிருதிவீபதி அவசரமாகப் போய் மரத்தில் கட்டியிருந்த குதிரையை அவிழ்த்து அதன்மேல் ஏறி உட்கார்ந்து துரிதமாகச் செலுத்தத் தொடங்கினான். |