உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) முதல் பாகம் - காலச் சக்கரம் அத்தியாயம் 26 - சுகேசியின் கதை "நான் கூட அப்படித்தான் நினைத்தேன். துறவி நிலையிலுள்ள தங்களைப் போன்றவர்களின் வாழ்க்கையில் இம்மாதிரி சிறு பந்தங்களும் ஏற்படுவதற்குக் காரணம் இருக்குமானால் அது ஏதோ கருணையின் காரணமாகத்தானே இருக்க வேணும்?" என்று கேட்டார் சந்தகர். "அப்படித்தான். எங்கு ஜீவ ஹிம்சை ஏற்படுகிறதோ அங்கு அதைத் தன் உயிரைக் கொடுத்தேனும் தடுப்பதுதான் அர்ஹதர்களின் முக்கியமான கொள்கையாகிறது. ஜீவன்களிடம் பேரன்பு காட்டிக் காப்பாற்றுவதை விடத் தவம் வேறில்லை என்பதைத் தான் ஜைன சமயமும் வற்புறுத்துகிறது. நான் சோழ நாட்டில் திருப்புறம்பயத்துக்குச் சமீபமாக இருந்த சமயத்தில் அங்கு சுடுகாட்டில் காபாலிகன் ஒருவன் காளிக்குத் தினந்தோறும் உயிர்களைப் பலியிடுவதாக அறிந்தேன். அதைத் தடுத்து அந்த ஜீவனைக் காப்பாற்ற முயற்சி எடுத்துக் கொள்ள என்னால் முடியாது போயிற்று. எப்படியாவது அவனிடமிருந்து ஒரு ஜீவனையாவது காப்பாற்றினால் தான் மனம் ஆறுதலடையும் எனத் தோன்றியது. ஒருநாள் இரவு ஐந்தாறு வயதுடைய ஒரு சிறுமியைக் கொண்டு வந்து காளிக்குப் பலியிட அவன் முயற்சி செய்தான். அங்கு ஒளிந்து கொண்டிருந்த நான் அவனுடைய முயற்சியைத் தடுத்துச் சிறுமியைக் காப்பாற்றலாம் என்றெண்ணி இருந்தேன். அவன் அச்சிறுமியை அங்கிருந்த ஒரு மரத்தில் பிணைத்துக் கட்டிவிட்டுப் பூசைக்குரிய சாமான்களைச் சேகரிப்பதற்காகச் சென்றான். அந்தச் சமயத்தில் மரத்தோடு பிணைக்கப்பட்டிருந்த அந்தச் சிறுமியை விடுவித்து அவளைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்து விட்டேன். அந்தக் குழந்தையை விசாரித்து அவள் பெற்றோர்களைப் பற்றி அறிந்து கொண்டு அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்து விடலாம் என்று நினைத்து அவளை விசாரித்ததில், 'அப்பா, அம்மா' என்பதைத் தவிர வேறு விபரம் எதுவும் சொல்லத் தெரியவில்லை. அதிலிருந்து அந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு எனக்கு வந்து விட்டது. அவளுக்கு உரிய கல்வியைப் போதித்து அவளை ஒரு சிறந்த பெண்ணாக இன்று வரையில் வளர்த்து விட்டேன். உலகத்தில் எந்த பந்தத்திலும் கட்டுப்படாத எனக்கு இச் சிறிய பந்தம் மிகுந்த மன வியாகூலத்தை அளிக்கிறது. உலகத்தில் ஒரு ஜீவனைக் காப்பாற்றுவதே ஒரு பெரும் பொறுப்பாக இருக்கிறது. சிறு குழந்தைப் பருவத்தில் அவளுக்குச் சிறு இன்னல் சூழ்ந்தது போல் கன்னிப் பருவத்தில் வளர்ந்து நிற்கும் அவள் உயிருக்கு நேற்றும் ஒரு இன்னல் சூழ்ந்தது. இவ்வளவு நாட்களும் கவலையோடு பல சிரமங்களிடையே அவளைக் காப்பாற்றியும் மறுபடியும் அவளுடைய ஜீவனுக்கு ஆபத்து நேர்ந்திருப்பதைக் கண்டு என் மனம் பொறுக்கவில்லை. மூர்க்கர்கள் கையிலிருந்து அவளைப் பாதுகாக்க எவ்வளவோ பாடுபட்டேன், முடியவில்லை. நல்ல சமயத்தில் நீங்கள் இருவரும் அவளைக் காப்பாற்றவும் என் மனத்துக்கு நிம்மதி ஏற்படுத்தவும் தெய்வம் போல வந்தீர்கள். நீங்கள் வந்திராவிட்டால் அவள் இறந்திருப்பாள். என் ஜீவனை நானும் போக்கிக் கொண்டிருப்பேன். இனிமேல் என்னுடைய கவலையெல்லாம் அவளை ஒரு நல்ல இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான். நல்ல சுபாவம் உள்ளவர்களாகத் தோன்றும் நீங்கள் இவ்விஷயத்தில் ஏதேனும் உபகாரம் செய்யக் கூடுமானால் மிக்க சந்தோஷமுடையவனாக இருப்பேன்" என்றார். சந்தகர் பிரதிவீபதியின் முகத்தைப் பார்த்தார். பிரதிவீபதி சந்தகரின் முகத்தைப் பார்த்தான். "இப்படிப்பட்ட அழகும் குணமும் நிறைந்த பெண்ணை ஏற்றுக் கொள்ள உலகில் நல்ல மனிதர்கள் இல்லாமல் போய்விட மாட்டார்கள். தாங்கள் இந்தப் பொறுப்பை இந்த வாலிபரிடம் ஒப்படைப்பதை விடச் சிறந்த மார்க்கம் வேறொன்றுமில்லை" என்றார் சந்தகர் பிரதிவீபதியைச் சுட்டிக் காட்டி. பிரதிவீபதி சந்தகர் எதை மனத்தில் வைத்துக் கொண்டு இப்படிப் பேசுகிறார் என்பதை உணர்ந்து கொண்டான். இருப்பினும் அழகும் குணமும் நிறைந்த அந்தப் பெண்ணின் வாழ்க்கையை மலரச் செய்யும் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொள்வதில் பிசகில்லை என்று அவனுக்குப் பட்டது. அரசகுமாரனாகிய அவன் மனம் வைத்தால் அப்பெண்ணைச் சீரும் சிறப்புமாக ஒரு நல்ல வாலிபர் ஒருவருக்கு மணம் செய்து வைத்துவிட முடியாதா? அவன் ஜைன முனிவருக்கு ஆறுதல் சொல்லும் தோரணையாக, "நீங்கள் கவலைப் படாதீர்கள். அப்பெண்ணைப் பற்றிய கவலையை எனக்கு விட்டுவிடுங்கள். நாங்கள் இப்பொழுது காஞ்சீபுரம் செல்கிறோம். அங்கே எங்களுக்கு உள்ள காரியங்களை முடித்துக் கொண்டு திரும்பும் போது இந்தப் பெண்ணை நான் அழைத்துப் போகிறேன். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்றான். "இவ்வளவு தயாள குணம் பொருந்திய உனக்கு என் ஆசீர்வாதம். உன்னைப் பற்றிய விருத்தாந்தங்கள் எனக்கொன்றும் தெரியாது. இருப்பினும் நான் அருமையாக வளர்த்த சுகேசியை ஒரு நல்ல மனிதர் கையில் தான் ஒப்படைத்தோம் என்ற தைரியம் என் மனத்தில் ஏற்பட்டு விட்டது. அதிலும் ஒரு ஜைன சம்பிரதாயக்காரன் கையில்தான் ஒப்படைத்தோம் என்பது மன ஆறுதலை அளிக்கிறது. உன்னோடு பழகியதிலிருந்து நீ வாக்குறுதி தவற மாட்டாய் என்றே நம்புகிறேன். நீ யார்? உன் பெயரென்ன என்பதை இனிமேலாவது தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்..." என்றார் அரிஷ்டநேமி. பிரதிவீபதி தான் யார் என்ற உண்மையைச் சொல்லி முனிவரைத் திகைப்படையச் செய்ய விரும்பவில்லை. அந்த மகானிடம் பொய் சொல்வது பெரிய அபசாரம் தான். இருப்பினும் அந்தச் சமயத்தில் அவன் தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பவில்லை யாதலால் பொய் சொல்லத்தான் வேண்டியிருந்தது. அவன் பணிவான குரலில், "நான் கங்கபாடியைச் சேர்ந்தவன். என் பெயர் வீரவிடங்கன், ஒரு போர்வீரன்" என்று கூறினான். "போர்வீரன் தான், ஆனால் சாதாரணப் போர் வீரனில்லை, ஒரு காலத்தில் தேசத்தையே கட்டியாளும் யோக்கியதை நிறைந்த போர் வீரன். அவனைப் பற்றியல்லவா கேட்டீர்கள்? நான் என்னைப் பற்றியும் உங்களிடம் சொல்லிக் கொள்ளுகிறேன். சோழ மண்டலத்தைச் சேர்ந்த கோடீச்சுவரத்திலுள்ள சோதிடன். சந்தகன் என்று என்னைச் சொல்லுவார்கள். நான் சாந்தன் சக்தி பூஜை செய்பவன். பராசக்தியே முழுமுதல் தெய்வமாகக் கொண்டு எல்லா மதத்தின் நல்ல கொள்கைகளையும் ஆதரிக்கக் கூடியவன். இந்தப் போர் வீரனின் ஜாதகம் என்னுடைய கையிலிருக்கிறது. நல்ல ராஜயோக ஜாதகம். ஒரு காலத்தில் இவன் அரியணை ஏறி ஒரு நாட்டை ஆளும் யோக்கியதை யடையப் போகிறான். இவனிடம் உங்கள் புத்திரியின் வாழ்வை ஒப்படைப்பது ஒரு பெரிய பாக்கியம்தான்" என்று சொன்னார் சந்தகர். மிகுந்த மன ஆறுதலைப் பிரதிபலிக்கும் மகிழ்ச்சி அந்த ஜைன முனிவரின் முகத்தில் தோன்றியது. "எல்லாம் அர்ஹத்பரமேஷ்டியின் பேரருள் தான்!" என்று கூறினார். அவர்கள் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்ததால் இரவு நேரம் நகர்ந்து பொழுது விடியும் நேரத்துக்கு அறிகுறியாகக் கீழ் வானில் வெள்ளி எழுந்து மின்னியது. "எங்களால் உங்களது நித்திரையும் குலைந்து விட்டது. பொழுது விடியும் நேரம் நெருங்கி விட்டது. நீங்கள் இருவரும் இன்னும் சிறிது நேரம் தூங்கினால் காலைப் பிரயாணத்தின் போது களைப்பு தட்டாமல் இருக்கும்" என்றார் ஜைன முனிவர். "இன்னும் சிறிது நேரத்தில் பொழுது விடியப் போகிறது. பொழுது விடிந்தவுடன் நாங்கள் புறப்படப் போகிறோம். அதற்குள் தூக்கம் போடுவதினால் பலன் என்ன? காஞ்சிக்கு இங்கிருந்து பத்து கல் தூரம் தானே இருக்கும்? அதனால் எங்களுக்குச் சிரமம் ஏதும் ஏற்படப்போவதில்லை" என்றான் பிரதிவீபதி. அவன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே கீழ் வானில் சூரிய கிரணங்களின் ஒளி எழுந்தது. "உங்களை வெறும் வயிற்றோடு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. சமீபத்தில் உள்ள சுனையில் பல் தேய்த்துக் கைகால்களைக் கழுவிக் கொண்டு வாருங்கள். நான் கொஞ்சம் பழங்கள் தருகிறேன். அவைகளைச் சாப்பிட்டு விட்டுப் போகலாம்" என்றார் அந்த ஜைன முனிவர். அவ்விருவரும், அவருடைய வார்த்தையைத் தட்ட முடியாதவர்களாய்ச் சமீபத்திலுள்ள சுனைக்குச் சென்றனர். அவர்கள் சென்றதும் அம்முனிவர் குகைக்குள்ளிருந்த சுகேசியைக் கூப்பிட்டு "உன்னைப் பற்றிய கவலை எனக்கு அனேகமாகத் தீர்ந்து விட்டது. நீ செய்த அதிர்ஷ்டம் தான், ஒரு நல்ல் வாலிபன் உனக்குக் கிடைத்து விட்டான். இங்கு வந்த இருவர்களில் யௌவனமாகவும் அழகாகவும் ஒரு வாலிபன் இருக்கிறானே, அவன் தான் உன் வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்திருக்கிறான். உனக்கு நான் அதிகம் சொல்ல வேண்டாம். அவனுடைய அன்புக்குப் பாத்திரமாகி அவனுக்குப் பணிவிடை செய்வதில் பற்றுதலும் பக்தியும் கொண்டவளாகத் திகழ வேண்டும். அவன் கங்கபாடியைச் சேர்ந்தவனாம். ஜைன மதப் பற்றுதல் உள்ளவனாம். நீ மிகவும் புத்திசாலி, மனைவிக்குரிய தரும விதிகளை நான் உனக்கு உபதேசிக்க வேண்டாம். இருப்பினும் நீ கணவனுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று உனக்கு நான் சொல்லி இருக்கிறேன். உன் மனத்துக்கு அவனைப் பிடித்திருக்குமென்று நினைக்கிறேன். உன் மனத்துக்குப் பிடிக்காவிடில் அதையும் சொல்லிவிடு" என்றார். "தங்கள் ஆசீர்வாதம், எனக்குப் பூரண சம்மதம் தான்" என்றாள் சுகேசி சிறிது வெட்கத்தோடு. அந்தச் சமயத்தில் சுனைக்குச் சென்றிருந்த பிரதிவீபதியும் சந்தகரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டதும் முனிவர் சுகேசியைப் பார்த்து, "இருவரையும் சிறிது ஆகாரம் செய்து கொண்டு போகும்படி வேண்டிக் கொண்டிருக்கிறேன். நீ அவர்களுக்காகக் கொஞ்சம் பழங்கள் கொண்டு வா!" என்று கட்டளையிட்டார். பிரதிவீபதியும் சந்தகரும் அவ்விடத்துக்கு வந்ததும் அம்முனிவர் அவர்களை 'வாருங்கள்' என்று உபசரித்து அம்மலைக் குகைக்குள் அழைத்துச் சென்றார். வெளியே பார்த்தால் அது சிறிய மலையில் குடையப்பட்ட குகை போலத் தோன்றினாலும் உட்புறத்தே ஒரு சிறு கட்டடம் போல் காட்சியளித்த்து. அந்த மலைப் பிரதேசத்திலுள்ள குன்றில் குடையப்பட்ட ஜைன ஆலயமும் அதையொட்டி ஜைன முனிவர்கள் வசிப்பதற்காகக் குடையப்பட்ட குகை போன்ற ஆசிரமங்களும் ஜைன மதத்தில் மிகவும் பற்றுள்ளவனாயிருந்த மகேந்திர பல்லவனால் நிர்மாணிக்கப்பட்டவை. அக்காலத்தில் சிறு சிறு குகைகளில் நூற்றுக்கணக்கான ஜைன சன்னியாசிகள் வசித்து வந்தார்கள். ஆனால் மகேந்திர பல்லவன் ஜைன மதத்திலிருந்து சைவ மதத்தைத் தழுவியதும் ஜைன மதத்தின் பலம் குன்றியது. அந்த மலைப் பிரதேசத்திலிருந்து முனிவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றனர். பல வருடங்களுக்குப் பின் அங்குள்ள ஜைன ஆலயத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு அரிஷ்டநேமி என்ற அந்த ஜைன முனிவர் மாத்திரம் அங்குள்ள குகையைத் தம்முடைய ஆசிரமமாக அமைத்துக் கொண்டு அங்குள்ள ஜைனாலயத்தையும் கவனித்து வரலாயினர். அவருக்கு உதவியாக அவருடைய வளர்ப்புப் பெண் சுகேசி இருந்தாள். அவர் அங்கு வசிக்க ஆரம்பித்த பின் அந்த இடத்துக்கும் ஒரு மகிமை ஏற்பட்டது. ஜைன சமயத்தைச் சேர்ந்த பலர் அவ்விடத்தை ஒரு புண்ணிய க்ஷேத்திரம் போல் எண்ணி அந்த முனிவரையும் அந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள மூர்த்தியையும் தரிசித்து விட்டுப் போகலாயினர். வயதான அம் முனிவரும் அழகும் யௌவனமும் பொருந்திய அப் பெண்ணும் மனித சஞ்சாரமேயற்ற மலைப் பிரதேசத்தில் வசிப்பது பிரதிவீபதிக்குச் சிறிது ஆச்சர்யத்தைத் தான் அளித்தது. ஒரு முனிவர் இங்கு இருப்பது தகுதியே. ஆனால் அழகு நிறைந்த ஒரு யௌவன நங்கை அப்படிப்பட்ட இடத்தில் எப்படி இருக்கிறாள்? வாழ்க்கையில் உலக இன்ப சுகங்களில் ஆசை கொள்ளாமல் துறவு மார்க்கத்திலுள்ளவர்களுக்குச் சிச்ரூஷை செய்து வாழ்வை அடக்கமாக நடத்திக் கொண்டு போகும் பெண்ணைப் பற்றி என்ன சொல்வது? இப்படிப்பட்ட பெண்களும் உலகில் இருக்கிறார்களே யென்று எண்ணி அவன் மனம் சிறிது இளகியது. "நீங்கள் மனித சஞ்சாரமே இல்லாத இந்த இடத்தில் எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டான். "எங்களுக்குத் தகுதியான இடம் என்று கருதும் இடங்களில் இருப்பதில் எங்களுக்கு என்ன துன்பம் இருக்கப் போகிறது? நேற்று இரவு சில வஞ்சக நெஞ்சமுள்ள மனிதர்களால் ஏற்பட்ட துன்பத்தைத் தவிர இங்கு புலிகளும் பாம்புகளும் கூட எங்களுக்குத் தீமை நினைப்பதில்லை" என்றார் அரிஷ்டநேமி. "அப்படியென்றால் இங்கு புலிகளும் பாம்புகளும் அதிகமென்று சொல்லுங்கள்" என்றார் சந்தகர். "அதிகம் தான். இவைகள் இன்னும் அதிகமானால் கூட அவைகளினால் கெடுதல் ஏதுமில்லை. ஒரு சில கொடூர புத்தியுள்ள மனிதர்கள் வாழும் ஜன சமூகத்தினிடையே வாழ்வதை விட இங்கு வாழ்வது எவ்வளவோ மேலானது" என்றார். "அது உண்மை" என்ற சந்தகர் அவருடைய வார்த்தையை ஆமோதிப்பவர் போல் சொல்லிவிட்டு, "தங்களுடைய பூர்வீக ஸ்தலம் எதுவோ?" என்று கேட்டார் பணிவாக. "நானும் சோழ நாட்டைச் சேர்ந்த உறையூர் வாசிதான். சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கிய அவ்வூரின் பெருமை குறைந்தவுடன் இங்கு வந்தேன் நான். இன்று பாண்டியர் வசத்தில் இருக்கிறது அந்த நகரம்" என்றார். அம் முனிவர் பூர்வாசிரமத்தில் சோழ நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அதிலும் மிகச் சிறந்த ஊராகிய உறையூரில் இருந்தவர் என்பதை அறிந்ததும் சந்தகருக்கு உள்ளத்தில் ஒரு உவகையும் அவரிடம் முன்னிலும் அதிகப் பற்றும் ஏற்பட்டன. "நீங்கள் சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டதும் என் மனம் பூரிப்பு அடைகிறது. தங்களைப் போன்றவர்களை ஈன்ற அந்நாடு மிகச் சிறப்புடையதுதான். என்றோ உலகெலாம் புகழ் பிரகாசித்த சோழ வள நாடு இன்றுள்ள நிலையைப் பற்றி நினைத்துப் பார்த்தால் மிகவும் சங்கடத்துக்கு உள்ளாகத்தான் நேருகிறது. என் மனம் விட்டு இந்தத் துயரத்தை உங்களிடம் ஏன் சொல்லுகிறேனென்றால் நீங்களும் அப் பொன்னான பூமியில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதால் தான். இன்று தெற்கிலும் வடக்கிலும் வெற்றிக் கொடி நாட்டி அரசாண்டு வரும் பாண்டியர்களும் பல்லவர்களும் தாழ்ந்தோர்கள் என்ற அர்த்தத்தில் நான் இதைச் சொல்லவில்லை. என்ன இருப்பினும் ஒரு வீட்டைச் சொந்தக்காரனே இருந்து பாதுகாப்பதிலும் மற்றவர்களிலிருந்து பாதுகாப்பதிலும் வித்தியாசமில்லையா? உலகெங்கும் காணமுடியாத பொன் விதைத்தால் பொன் விளையும் பூமியின் சிறப்பையும் அங்கு வசிக்கும் மக்களின் பூரண நலத்தையும் பாண்டியர்களோ, பல்லவர்களோ பரிவோடு நின்று கவனிக்க முடியவில்லை என்பதுதான் என் குறை. ஆதிபத்தியத்தைப் பெருக்கும் நோக்கத்திலேயே எப்பொழுதும் கவலை செலுத்தும் பாண்டியர்களும் பல்லவர்களும் சோழநாட்டு மக்களைப் பற்றி நினைக்கவே சந்தர்ப்பமில்லை. அதோடு மட்டுமில்லை, இவ்விரு நாட்டினரும் தங்கள் 'பலாபலங்களைக் காட்டிக் கொள்ளத் தகுந்த போர்க்களமாகத்தான் சோழ நாட்டைக் கருதுகின்றனர். பயிர் வளமும் கலைவளமும் செறிந்த அப்புண்ணிய பூமி இன்று இரத்த ஆறுகளையும் பிணக்குவியல்களையும் தாங்கும் இரணபூமியாகி விட்டது. இந்நாட்டில் பஞ்சமும் நோயும் 'இன்று வருகிறேன், நாளை வந்து விடுவேன்' என்று எச்சரிக்கை செய்வது போல் காத்திருக்கின்றன..." என்றார் சந்தகர். இதைக் கேட்டதும் அந்த ஜைன முனிவர் மிகத் துக்கமும் ஆத்திரமும் நிறைந்த குரலில், "இதையெல்லாம் நான் உணர்கிறேன். உணர்ந்து என்ன பயன்? காலம் சுழல்கிறது. அதன் ஓட்டத்தில் எவ்வளவோ மாறுதல்கள். என்னைப் போலத் துறவற நோக்கம் கொண்டவர்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டவர்கள்; மறுபடியும் உலகச் சுழல்களைப் பற்றியும் நினைக்க அருகதை அற்றவர்கள். சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றி நினைத்தால் மனத்தில் ஒரு ஆதங்கம் ஏற்படுகிறது. ஆனால் என்னைப் போன்றவன் நினைக்க வேண்டிய சாம்ராஜ்யமே வேறு. உங்களைப் போன்ற வாலிபர்கள் தியாக புத்தியுள்ளவர்கள், வீர நெஞ்சு உள்ளவர்கள், மன உத்வேகத்துடன் நாட்டுக்காக ஏதேனும் உங்கள் கடமை என்றெண்ணிச் செய்தால் அதை எண்ணித்தான் நான் சந்தோஷப்பட முடியும். அதற்கு என் ஆசீர்வாதம்" என்றார். அவர்கள் இப்படியே பேசிக் கொண்டிருக்கும் போது, சுகேசி சில பழ வகைகளைக் கொண்டு வந்து பிரதிவீபதியின் எதிரிலும் சந்தகரின் எதிரிலும் வைத்துவிட்டுச் சற்று மறைவான இடத்தில் போய் ஒதுங்கி நின்றாள். பிரதிவீபதியும் சந்தகரும் தங்கள் எதிரே வைக்கப்பட்டிருந்த பழங்களை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார்கள். முனிவர் ஆவலோடு அவர்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். மறைவான இடத்தில் நின்ற சுகேசி ஆர்வமும் ஆவலும் நிறைந்தவளாய்ப் பிரதிவீபதியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். பாவம்! நேற்று இரவு போராட்டத்தில் சிக்கித் துடித்த அந்த உள்ளம், இன்று ஏதோ ஆனந்த சாகர அலைகளிடையே துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது. அவள் வாழ்க்கையில் ஒரு புது எண்ணம், ஒரு புதிய கனவு, அதன் மீது எத்தனையெத்தனையோ கற்பனைக் கோட்டைகள் எழுந்தன. வாழ்நாள் முழுவதும் ஒரு துறவியின் பாதுகாப்பில் வளர்ந்த அவள் மனம் ஏதோ பெரிய கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை அடைந்து இன்ப வாழ்வில் சிறகடித்துப் பறக்கப் போகிறோம் என்ற நினைவில் திளைத்தது. அவள் உள்ளத்தில் ஆனந்தம் கரை புரண்டோடியது. சந்தகர் பழங்களைச் சுவைத்துக் கொண்டே, "நீங்கள் சொல்வது போல் என்னைப் போன்ற வாலிபர்கள் இந்நாட்டில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அதற்காக ஏதேனும் செய்ய முயல்கிறோம். ஏதோ ஒரு கனவு - கரிகாலனும் செங்கணானும் வாழ்ந்த பொன் நாட்களை நாங்கள் காணாவிட்டாலும் அவர்கள் சிறப்பும், அவர்கள் செய்த விந்தைகளும் எங்கள் மனத்தை விட்டு அகலாமல் இருக்கின்றன. கடந்து போன அப்புனித நாட்களைப் போல் எங்கள் வாழ்நாளில் நாங்கள் முன்னாலோ பின்னாலோ காணாவிட்டாலும் எங்கள் சந்ததியாராவது கண்டு மகிழ வேண்டுமென்ற அடிப்படையில் தான் நாங்கள் இருக்கிறோம். இதோ இருக்கும் என் நண்பர் கங்க நாட்டைச் சேர்ந்தவர். பல்லவ மன்னருக்கு உற்ற துணையாளராக இருக்கும் இவருக்கு எங்களுடைய முயற்சிகள் பிடிக்காமல் இருக்கலாம். எங்கள் முயற்சியை பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எதிராகச் செய்யும் முயற்சியாகக் கூடக் கருதலாம். ஆனால் எங்கள் நாட்டுப்பற்று, எங்கள் நாட்டு மக்கள் உன்னதமான நிலையில் வாழ வேண்டுமென்ற ஆவல் இவைகள் எங்கள் மனத்தில் ஏற்படுவது சகஜம் தான் என்பதை அவர் உணர்ந்து கொள்ளாமலிருக்க மாட்டார்" என்றார். பிரதிவீபதியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இவ்வாறு சந்தகர் பேசினார். பிரதிவீபதி சிரித்தான். "உங்கள் நாட்டுப் பற்றையோ உங்கள் மக்கள் உன்னத நிலையை யடைய வேண்டும் என்பதற்காக நீங்கள் செய்யும் காரியங்களையோ தகாது என்று நான் கருத மாட்டேன். அது ஒவ்வொரு நாட்டு மக்களிடமும் இயற்கையாக உள்ளது. இன்று சிதைந்து போய்க் கிடக்கும் சோழ நாட்டை ஒன்றுபடுத்தி அதை ஒரு மன்னனின் ஆட்சிக் குள்ளாக்குவதை நான் என்றும் விரும்புகிறேன். எனக்கும் சோழ நாட்டின் பெருமை எத்தகையதென்று தெரியும். அதையாண்ட மன்னர்களின் பெருமையும் சாமர்த்தியமும் எத்தகையது என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். நான் ஒரு சாதாரணப் போர்வீரன். ராஜ விசுவாச முள்ளவன். என்னைப் போன்றவன், எங்கள் மன்னருக்கும், பல்லவ மன்னருக்கும் உள்ள நட்பையும் சம்பந்தத்தையும் அறியாமலிருக்க முடியாது. நாங்கள் பல்லவ சாம்ராஜ்யத்துக்குப் பாதகம் ஏற்படும் எவ்வழியிலும் நாட்டம் செலுத்தினோமானால் அது பெரிய நட்புத் துரோகமாகிவிடும்" என்றான். "நான் பல்லவ மன்னருக்கு எப்பொழுதுமே தீங்கிழைக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டதில்லை. ஆனால் எங்கள் நாட்டில் இன்றைய நிலைமையையும் மக்களின் மனோ நிலையையும் நான் எடுத்துக் கூறத்தான் வேண்டியிருக்கிறது. எப்பொழுதாவது சமயம் நேர்ந்தால், நீங்கள் உண்மை நிலையை உணர்ந்தவர்களா யிருந்தால் எங்களுக்காகக் கொஞ்சம் பரிந்து பேசும் நிலைமை ஏற்படுமல்லவா? அதற்காகச் சொன்னேன்" என்றார் சந்தகர். "சந்தர்ப்பம் நேர்ந்தால் நிச்சயமாக நான் அதைச் செய்வேன்" என்றான் பிரதிவீபதி. "நண்பரே! உங்கள் சமூக ஆசார சீலராக விளங்கும் இம் மகா முனிவர் எதிரே எனக்குக் கொடுத்த வாக்குறுதி யொன்றே போதும். அதற்கு என் நன்றி! உங்களைப் போன்றவர்கள் அதை நிச்சயம் மறக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்!" என்று கூறினார் சந்தகர். "என்னுடைய வாக்குறிதியை ஒரு நாளும் நான் மறக்க மாட்டேன். உங்களோடு நான் நண்பரானதிலிருந்து உங்களுடைய உன்னத இலட்சியங்களையும் உயர்வான குணங்களையும் நான் அறிந்திருக்கிறேன். சோழ நாட்டு மக்களின் குணமும் இதயமும் எப்படிப்பட்டதாக இருக்குமென்பதை உங்களோடும் பூதுகரோடும் பழகியதிலிருந்து என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. இதனால் உங்கள் நாட்டு மக்களின் நலனைக் கருதி எதையும் செய்ய நான் சித்தமாயிருக்கிறேன்" என்றான் பிரதிவீபதி. இவ்விருவருடைய சம்பாஷணையிலும் தம் கவனத்தைச் செலுத்தி வந்த அரிஷ்டநேமி மிகவும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தவராக, "நண்பர்களென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்? மனமொத்த நண்பர்கள் வாழும் இடம் தெய்வீகம் நிறைந்த இடமாகும். அவர்கள் உள்ளத்தில் உருவாகும் சிந்தனைகள் உலகில் நல்லெண்ணங்களைப் பரப்பப் பெரிதும் உதவியாயிருக்கும். தனி மனிதனின் சாதனை யெல்லாம் ஓரளவுக்குள் நிற்பதாகவே முடியும். ஆனால் ஆப்த நண்பனின் உறுதுணையோடு நிற்கும் மனிதன் எதையும் இயக்கும் இணையற்ற சக்தியைப் பெற்று விடுகிறான். நீங்கள் இருவரும் அறிவிலும் அநுபவத்திலும் சிறந்து விளங்குகிறீர்கள். எப்படியோ அர்ஹத்பரமேஷ்டியின் அருளால் உங்கள் எண்ணங்களெல்லாம் சித்தியாகட்டும்" என்றார். அவர் மனத்திலே தோன்றிய ஆனந்தம் சொற்களில் பரிணமித்தது. ***** கிழக்கே வானில் எழுந்த சூரியனின் சுடரொளி அம்மலைக் குகை வாசலில் வீசியது. இருள் பிரிவதற்கு முன்பு அந்தப் பிரதேசம் புதிதாக வருபவர்களுக்கு மிகவும் பயங்கரமான தோற்றத்தை யளித்திருந்தால் வியப்பில்லை. இப்பொழுது காலைக் கதிரவனின் ஒளி பட்டு அந்தப் பிரதேசமே ஒரு புது உலகமாக விளங்கியது. மனித சஞ்சாரமற்ற அவ்வனப் பகுதியில் காலை நேரத்து இளம் வெய்யில் பிரவேசித்துப் புத்துயிர் ஊட்டியது. குன்றின் குகையில் குடைந்தெடுத்து வடிக்கப்பட்டிருந்த தெய்வ வடிவங்கள் கூட இருளிலிருந்து வெளிப்பட்டு, உயிர்ச் சிற்பங்களாகத் தோற்றமளித்தன. கதிரவனின் வரவுக்காகக் காத்திருந்தவை போல், செடி கொடிகளும், மரங்களும் காலைக் காற்றில் இலேசாக ஆடித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டன. பூரணமாகப் பொழுது விடிந்து விட்டதற்கு அறிகுறியாகப் பட்சி ஜாலங்கள் பலவித இனிய குரலில் கூவின. பிரதிவீபதியும், சந்தகரும் தங்கள் ஆகாரத்தை முடித்துக் கொண்டதும் பிரயாணத்துக்குச் சித்தமானார்கள். அவர்களை வழியனுப்புவதற்காக அம் முனிவரும் பின் தொடர்ந்தார். பிரதிவீபதியும் சந்தகரும் ஒரு மரத்தில் கட்டியிருந்த குதிரைகளை அவிழ்த்து, அவைகளைப் பிரயாணத்துக்குத் தயார் செய்வது போல் அவைகளின் முதுகில் தட்டினர்; அவ்வளவுதான்! அடுத்த கணம் அந்தக் குதிரைகள் கம்பீரமாகக் கனைத்துக் கொண்டு எழுந்து நின்றன. அவைகளின் மீது அவர்கள் ஏறி உட்கார்ந்தனர். குதிரைகளும் கம்பீரமாகப் புறப்படத் தொடங்கின. அரிஷ்டநேமி முனிவர் தம் இரு கரங்களையும் தூக்கிக் குதிரைகளில் அமர்ந்துள்ள அவ்விருவரையும் ஆசீர்வதித்தார். குதிரைகள் கம்பீரமாகப் புறப்பட்டன. குதிரைகள் மீது கம்பீரமாக வீற்றிருந்த பிரதிவீபதி அக்குகை வாசலைப் பார்த்தபோது அங்கே சுகேசி நின்று கொண்டிருந்தாள். அழகே உருப்பெற்று வந்ததைப் போல் தெய்வமங்கையாகக் காட்சியளித்தாள். காலைக் கதிரவனின் பொன் ஒளியில் அவள் சௌந்தரியம் பூரணப் பொலிவோடு ஒளிர்ந்தது. பிரதிவீபதியைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அவள், தன்னை அவன் நோக்கியதைக் கண்டதும் சிறிது வெட்கித் தலை குனிந்த வண்ணமே ஒரு புன்முறுவல் பூத்தாள். பாவம், அவள் சிரிப்பிலும் பார்வையிலும் பிரதிவீபதி எதைக் கண்டானோ? அவன் இதயத்தில் அந்தச் சமயத்தில் 'சுரீ'ரென்று ஏதோ தைப்பதைப் போன்ற உணர்ச்சிதான் ஏற்பட்டது. |