மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம் - காலச் சக்கரம்

அத்தியாயம் 27 - 'இந்தப் புத்தி எதற்கு?'

     சந்தகர் அமர்ந்திருந்த குதிரையும் பிரதிவீபதி ஏறியிருந்த குதிரையும் ஓர் இரவு ஏற்பட்ட பழக்கத்தினால் மிகவும் ஒற்றுமை அடைந்து விட்டது போல் ஒன்றோடொன்று போட்டி போடாமல் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்கும் பாவனையாக முன்னும் பின்னுமாக ஓடிக் கொண்டிருந்தன. திருப்பான்மலையை விட்டுப் புறப்பட்டதிலிருந்து சந்தகரும் பிரதிவீபதியும் ஒருவரோடு ஒருவர் பேசாமலேயே வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவருமே ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பவர் போல் தோன்றினர். எவ்வளவு நேரம் தான் அவர்கள் பேசாமலேயே வர முடியும்? கரடுமுரடான மலைப் பிரதேசங்களைத் தாண்டி இரண்டு புறமும் மரங்கள் அடர்ந்த பாதைக்கு அவர்கள் குதிரைகள் வந்து சேர்ந்தது, காஞ்சி நகருக்குச் சமீபமாக வந்து விட்டதைத்தான் குறிப்பிட்டது.

     இவ்வளவு நேரம் குதிரையில் வந்தபடியே யோசனையில் ஆழ்ந்திருந்த பிரதிவீபதி அப்பொழுதுதான் ஏதோ யோசித்து முடிவு செய்தவன்போல், "நண்பரே! வரும்போது நாம் திருப்பான்மலையில் சிறிது நேரம் தங்க நேர்ந்தது ஒருவிதத்தில் தருமசங்கடமான பொறுப்பை நம் தலையில் சுமத்திக் கொண்டது போல் முடிந்தது" என்றான்.

     பிரதிவீபதி எதைக் குறித்து அப்படிச் சொல்கிறான் என்பதைப் புரிந்து கொண்டும், புரிந்து கொள்ளாதவர் போல் சிரித்துக் கொண்டே, "நாம் அப்படிப்பட்ட பெரும் பொறுப்பு எதையும் ஏற்றுக் கொண்டதாக நான் நினைக்கவில்லை" என்றார் சந்தகர்.

     "ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதைப் பெரும் பொறுப்பாக நீங்கள் கருதாதது ஆச்சரியம் தான்" என்றான் பிரதிவீபதி.

     சந்தகர் சிரித்தார். "இந்த உலகத்தில் இன்பத்தை நிரப்புகிறவர்கள் பெண்களேதான். ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் ஒரு ஆண் என்றும் அதைத் துன்பமாகவோ பாராமுகமாகவோ கருதியதில்லை. வாழ்வின் இன்பத்தைச் சுமந்து செல்வதாகவே கருதுகிறார்கள்" என்றார்.

     "அதுதான் மாயை. அதில் நாம் சிக்கி உழல்கிறோம். நீங்கள் அந்தப் பெண்ணின் வாழ்க்கைப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டதை மிகத் தவறாகக் கருதியிருக்கிறீர்கள்" என்றான் பிரதிவீபதி.

     "நான் ஒன்றும் தவறாகக் கருதவில்லை. சாதாரணமாக அப்படிப்பட்ட யௌவனமும் பேரழகும் பொருந்திய ஒரு பெண்ணின் வாழ்வை மலர்விக்க ஒரு ஆண் பிள்ளை முயன்றானானால் அதைத் தவறாகக் கருதுகிறவன் பெரிய முட்டாளாகத்தான் கருதப்படுவான்" என்றார் சந்தகர்.

     "இப்பொழுது நீங்கள் பேசுவதிலிருந்து என்னைப் பற்றித் தவறாகப் பேசுகிறீர்கள் என்று தான் நான் கருத வேண்டியிருக்கிறது" என்றான் பிரதிவீபதி.

     "ஒவ்வொரு மனிதனின் இதயமும் எதை இயற்கையாகக் கருதுமோ அந்நிலையில் தான் என் இதயமும் கருதியது. உலகம் ஒப்புக் கொள்ளாத அளவுக்கு இதயத்தில் எழும் கருத்துக்கள் தான் இயற்கைக்கு மாறானதாகும். அதைத்தான் வித்தியாசமாகவோ தவறாகவோ கருத முடியும். வயது முதிர்ந்தவரும் அனுபவ ஞானியுமான ஜைன முனிவர் இயற்கையாகத் தம் மனத்தில் எத்தகைய கருத்தைக் கொண்டிருக்கிறாரோ அத்தகைய கருத்தைத்தான் நானும் கொண்டிருக்கிறேன். அவர் தம் வளர்ப்புப் பெண்ணின் வாழ்வை ஒரு தகுந்த யௌவன புருஷரிடம் ஒப்படைத்ததாகக் கருதுகிறார். நானும் அப்படித்தான் கருதுகிறேன். இதில் என்ன தவறு இருக்கப் போகிறது?" என்றார் சந்தகர் பரிகாசமாகச் சிரித்துக் கொண்டே.

     "மறுபடியும் நீங்கள் இருதய பூர்வமாகத் தவறு செய்கிறீர்கள். என்னுடைய மன நிலையை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை..." என்றான் பிரதிவீபதி.

     "உங்கள் மன நிலையைப் பற்றித் தாங்கள் ஆயிரம் சொல்லலாம். உங்கள் மன நிலையைப் பற்றித் தாங்கள் சொன்னால் தான் நான் அறிந்து கொள்ள முடியும். ஆனால் இயற்கையாக மனம் எதை நினைக்குமோ, அதைத் தான் நானும் நினைக்கிறேன், அந்த முனிவரும் நினைக்கிறார்" என்றார் சந்தகர்.

     "நான் அந்தப் பெண்ணின் வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதைப் பற்றி நீங்கள் இருவருமே ஏதோ தவறாகத்தான் கருதுகிறீர்கள்" என்றான் பிரதிவீபதி.

     "உங்கள் மன நிலை எனக்குத் தெரியாத வரையில் எங்கள் கருத்து தவறானது என நாங்கள் கருதவே மாட்டோம். தங்கள் மனத்தை அறிந்த பின்னும் தாங்கள் ஏதோ தவறாகக் கருதுகிறீர்கள் என்று தங்களிடம் அனுதாபம் காட்ட நேருமே தவிர, எங்கள் கருத்து தவறானது என நாங்கள் ஒப்புக் கொள்ள முடியாது" என்றார் சந்தகர்.

     "அப்படியென்றால் நான் அந்தப் பெண்ணிடம் காதல் கொண்டுள்ளேன். அப்பெண்ணின் வாழ்வை அம்முறையிலேயே ஏற்றுக் கொள்ளச் சம்மதித்துள்ளேன் என்று தானே கருதுகிறீர்கள்?"

     "ஆமாம்! அக்கருத்துத் தான் மனதில் எழுகிறது."

     "இயற்கையாக எழுந்தாலும் அது மிகவும் தவறு."

     "தவறு என்று சொல்லிவிட்டதினால் ஒப்புக் கொண்டு விட முடியாது. நீங்கள் தான் இந்தக் காரியத்தில் தவறாக நடந்து கொள்ளுகிறீர்கள் என்று தான் நான் சொல்லுவேன்."

     "நான் அந்தப் பெண்ணின் வாழ்க்கை நலனைப் பாதுகாப்பதற்காக ஒப்புக் கொண்டது அவளை ஒரு நல்ல வாலிபனுக்கு மணம் செய்து வைக்கலாம் என்ற கருத்தில் தான்."

     "நல்ல கருத்துத்தான். ஆனால் அதை விளக்காமல் விட்டு விட்டதுதான் தாங்கள் செய்த பெரும் தவறு. உங்களைப் போன்ற வாலிபர் கையில் ஒரு பெண்ணை ஒப்படைப்பவர் இயற்கையாக எக்கருத்தில் ஒப்படைப்பார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளாமல் போனதுதான் ஒரு விபரீதம். எந்த நோக்கத்தில் அந்தப் பெண்ணை ஏற்றுக் கொள்ளுகிறோம் என்று விளங்காமல் போனதுதான் அதை விடப் பெரிய விபரீதம்" என்றார் சந்தகர்.

     "என் குற்றத்தை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அந்தப் பெண் நான் புறப்படும் போது என்னைப் பார்த்த பார்வை என் மனசைத் தொட்டுக் கிளறிவிட்டது. அப்பொழுதுதான் ஏற்பட்டுள்ள பிழையை நான் உணர்ந்தேன். அவள் என்னைப் பற்றி ஏதோ தவறாகக் கருதுகிறாள் என்றே நினைக்கிறேன்" என்றான் பிரதிவீபதி.

     "பாவம்! அவள் உங்கள் மீது காதல் கொண்டு விட்டாள் என்பதை உங்கள் பார்வையின் மூலமாகவே அறிந்து கொண்டு விட்டீர்கள் போலிருக்கிறது. அந்த இடத்தில் அவள் மீது தவறு சொல்வதில் பயனில்லை. இயற்கையாக ஒவ்வொரு பெண்ணுக்கும் தங்களைப் போன்ற யௌவனமும் அழகும் பொருந்திய வாலிபரைக் கண்டால் இத்தகைய மனக் கிளர்ச்சி ஏற்படுவது சகஜம். அதிலும் தாங்கள் அவளுடைய வாழ்க்கை நலனைக் கவனிப்பதாக ஏற்றுக் கொண்ட பின் அவளுடைய கனவுக் கோட்டை உயர்ந்ததில் தவறு ஒன்றுமில்லை. தவிர, தங்களைப் போன்ற இளவரசர்கள் அவளைப் போன்ற யௌவனமும் அழகும் கொண்ட பெண்ணின் பொறுப்பை ஏற்றுக் கொண்டது பெரும் பாரமாகாது. ஒவ்வொரு அரசர்கள் எவ்வளவோ பெண்களைத் தங்கள் காதல் கிழத்திகளாக அமைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் தாங்கள் மறந்து விடக் கூடாது" என்றார் சந்தகர்.

     "தங்கள் கருத்து தவறு. என் மனம் மாலவல்லியைத் தவிர எந்தப் பெண்ணையும் கருதாது" என்றான் பிரதிவீபதி.

     "நீங்கள் அவ்வளவு பிடிவாதம் காட்டக் கூடாது. இந்த மனசைக் கொஞ்சம் விரிவு படுத்திக் கொண்டால் அதில் பல பெண்களுக்கு இடமளிக்கக் கூடிய வசதியை ஏற்படுத்திக் கொள்ளலாம். மாலவல்லி வேண்டுமானால் உங்கள் மனசிலுள்ள உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்ளட்டும். மற்றவர்களைக் கீழே உள்ள ஆசனங்களில் அமர்த்துங்கள். வாழ்க்கைக்காகப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாம். உபகார சிந்தையோடு ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளலாம். உறவு முறையில் ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளலாம். அதுவும் தங்களைப் போன்ற ராஜகுமாரர்கள் பல காரணங்களுக்காகப் பல பெண்களைக் கலியாணம் செய்து கொள்ளலாம்" என்றார் சந்தகர்.

     "நீங்கள் ஏதோ என்னைப் பரிகாசம் செய்கிறீர்கள் என்று தான் நினைக்கிறேன். நீங்கள் என் நிலையில் இருந்தால் தெரியும்..." என்றான் பிரதிவீபதி.

     "உங்கள் நிலையில் இல்லாததுதானே துரதிர்ஷ்டம். இப்படித் தாடியும் மீசையும் வைத்துக் கொண்டு பைத்தியக்காரனைப் போல் திரியும் சோதிடனாகிய என்னை எந்தப் பெண் காதலிக்கப் போகிறாள்...?" என்றார் சந்தகர் இலேசாகச் சிரித்துக் கொண்டே.

     "ஏன் இந்தப் பெண்ணையே நீங்கள் கலியாணம் செய்து கொண்டால் என்ன?" என்றான் பிரதிவீபதி.

     "கலியாணம் செய்து கொள்ளலாம். ஆனால் அவள் என்னை மனத்தால் கருதவில்லையல்லவா? அவள் உங்களிடம் தானே மயங்கியிருக்கிறாள் என்பதை அறிந்து கொண்ட பின் அவளை எப்படி நான் மனத்தால் நினைக்க முடியும்?" என்றார் சந்தகர்.

     "எனக்கு எல்லாவற்றையும் விட அப்பெண்ணின் தவறான அபிப்பிராயத்தை எப்படி மாற்றப் போகிறோம் என்பது தான் விளங்கவில்லை. உண்மையாகவே நான் மாலவல்லியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மனத்தால் நினைக்க முடியாத நிலையில் தான் இருக்கிறேன்."

     "அதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் தங்களைப் போன்றவர்கள் உபகார சிந்தையோடாவது வேறொரு பெண்ணை அங்கீகரிக்கக் கூடாதா?" என்று கேட்டார்.

     "உபகாரச் சிந்தை இருக்குமானால் அப்பெண்ணை எனது வாழ்க்கையோடு பிணைத்துக் கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை. அவளுடைய நல்வாழ்க்கைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலாமல்லவா?" என்றான் பிரதிவீபதி.

     "உங்களுக்கு வாழ்க்கைத் துணையாவது தான் அவளுக்கு நல்வாழ்வு அளிக்குமென்று அந்தப் பெண் கருதியிருந்தால் நீங்கள் நல்வாழ்வு என்று கருதுவது வெறும் போலித்தனமாகத்தானே இருக்கும்? இதைப் பற்றி அதிகம் வளர்த்துவதில் பயனில்லை. அம்முனிவரிடம் தாங்கள் அப் பெண்ணின் வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லியதும், அம் முனிவர் அதை இயற்கையாகத் தாங்கள் மணவாளனாகப் போகிறீர்கள் என்று கருதித்தான் மகிழ்ச்சியடைந்தார். இதை அறிந்ததும் அப்பெண் தங்களிடம் மனத்தை விட்டுத் தடுமாறியதையும் நான் அறிந்து கொண்டேன். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் தவறாக எடுத்துக் கொண்டு விட்டதாக நினைத்தால் அது விபரீதமாக முடியும். தாங்கள் தான் அந்த வாக்குறுதியிலிருந்து தவறியதாக உலகம் கருதும். இதைப் பற்றிய கவலையைப் பின்னால் யோசித்துக் கொள்வோம். இந்தப் பேச்சுப் போக்கிலேயே நாம் காஞ்சி நகரை அடைந்து விட்டோம் எனக் கருதுகிறேன். இனிமேல் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று திட்டம் வகுப்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும்" என்றார் சந்தகர்.

     "ஆம்! முதலில் பூதுகர் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும். நான் அரண்மனை விருந்தினராக இருந்து கொண்டு கூடிய வரையில் அங்குள்ளவர்களோடு பழகி உளவு தெரிந்து கொள்கிறேன். நீங்கள் வெளியிலிருந்து உளவு தெரிந்து கொள்ளுங்கள். நாம் இருவரும் அடிக்கடி சந்திக்க வேண்டிய இடத்தை நிர்ணயம் செய்து கொள்வோம்" என்றான் பிரதிவீபதி.

     "சரி! எனக்குக் காஞ்சி நகரில் அதிகப் பழக்கம் இல்லாததால் நீங்கள் தான் நாம் சந்திக்கும் இடத்தைக் குறிப்பிட வேண்டும்" என்றார் சந்தகர்.

     "இந்நகரில் வெளியூரிலிருந்து வந்த யாத்திரீகர்கள் தங்குவதற்காகப் பெரிய விடுதி ஒன்று உள்ளது. அங்கே நீங்கள் இருங்கள். அங்கு நடு மத்தியான வேளையில் நாம் சந்திப்போம். ஏனென்றால் காலையிலும் மாலையிலும் நாம் பல இடங்களைச் சுற்றிப் பார்த்துத் தெரிந்து கொள்ள வசதி இருக்கும்" என்றான்.

     அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே காஞ்சி நகரின் வீதிகளை அடைந்தனர்.

     அழகான மாளிகைகள் நிறைந்த அகன்ற வீதியில் குதிரையேறி வரும் அவ்விருவரும் பிறருடைய கண்களைக் கவரக் கூடியவர்களாகத் தான் இருந்தனர். அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த அரண்மனை ஊழியர்கள் கம்பீரமான குதிரை மீது அமர்ந்து வரும் பிரதிவீபதிக்குத் தங்கள் வணக்கத்தைச் செலுத்தினர். இதிலிருந்து அவனை அரண்மனை ஊழியர்கள் நன்கு அறிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சந்தகர் உணர்ந்தார். பிரதிவீபதி தன் குதிரையை நகரில் யாத்திரீகர்கள் தங்கும் விடுதிக்குச் செலுத்தினான். அவ்விடுதியின் பாதுகாப்பாளர் பிரதிவீபதியைக் கண்டதும் எழுந்து ஓடிவந்து வணங்கி நின்றார்.

     பிரதிவீபதி கம்பீரமான குரலில், "இவர் என்னுடைய நண்பர். குடந்தைக் கோடீச்சுவரத்தைச் சேர்ந்தவர். சோதிட சாஸ்திரத்தில் வல்லவர். இவரைச் சந்தகர் என்று சொல்லுவார்கள். இவர் சில நாட்கள் இந்த விடுதியில் தங்கி இருக்க ஆசைப்படுகிறார். விடுதியில் அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுங்கள்" என்றான்.

     விடுதியின் பாதுகாப்பாளர், "தங்கள் உத்தரவுப்படி ஒரு குறைவும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளுகிறேன்" என்று கூறினார்.

     உடனே பிரதிவீபதி சந்தகரைப் பார்த்து, "நான் சென்று வருகிறேன். நீங்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினால் இவ் விடுதியிலுள்ளவர்கள் மூலமே அரண்மனைக்குச் சொல்லி அனுப்பினால் போதும். அல்லது அவர்கள் மூலமாக அரண்மனைக்கு வந்து நீங்கள் என்னைச் சந்திக்கலாம்" என்று சொன்னான். பிறகு அந்த விடுதிக் காப்பாளரைப் பார்த்து, "இவர் என்னை எந்த சமயத்தில் அரண்மனையில் வந்து பார்க்க நினைத்தாலும் தக்க மனிதர் மூலம் அவருக்கு வேண்டிய சௌகர்யங்களை உடனடியாகச் செய்யத் தவறாதீர்கள்" என்றான். உடனே பிரதிவீபதி சந்தகரிடம் விடைபெற்றுக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

     சந்தகர் குதிரையிலிருந்து இறங்கியதும் விடுதிப் பாதுகாப்பாளர் அங்கிருந்த வேலைக்காரன் ஒருவனிடம் குதிரையைப் பத்திரமாக லாயத்தில் கட்டும்படி உத்தரவிட்டார். பிறகு சந்தகருக்கு உபசார வார்த்தைகள் சொல்லி விடுதிக்குள் அழைத்துக் கொண்டு போனார்.

     சந்தகர் அவ் விடுதியில் குளித்து விட்டுக் காலை உணவும் அருந்திவிட்டு வந்தார். நகரில் எங்கே செல்லலாம் என்பதைப் பற்றிக் கவலை உள்ளவராக, விடுதிப் பாதுகாப்பாளரிடம் பேசிச் சில விவரங்கள் அறிந்து கொள்ள நினைத்தார்.

     "இப்படிப்பட்ட பெரிய நகரங்களில் வெளியூரிலிருந்து வரும் யாத்திரீகர்கள் தங்குவதற்கான வசதியான விடுதிகள் இருப்பது பெரிதல்ல. ஆனால் அதை ஒழுங்காக நிர்வகிப்பவர்களின் சாமர்த்தியத்தில் தான் எல்லாமிருக்கிறது. நானும் எவ்வளவோ நகரங்களுக்குச் சென்றிருக்கிறேன், எவ்வளவோ விடுதிகளில் தங்கி இருக்கிறேன். ஆனால் இவ்வளவு சௌகரியங்கள் உள்ள விடுதியொன்றை இப்பொழுதுதான் என் வாழ்நாளிலேயே பார்க்கிறேன். இதெல்லாம் உங்களுடைய நிர்வாகத் திறமையினால் ஏற்பட்டதுதான் என்று கருதுகிறேன்" என்றார் முகஸ்துதியாக.

     விடுதிப் பாதுகாப்பாளருக்கு இதைக் கேட்டதும் பேரானந்தத்தால் உடல் சிலிர்த்தது! பாவம்! அவர் தம்மை இவ்வளவு புகழ்ச்சியாகக் கூறும் எவரையும் பார்த்ததில்லை போலிருக்கிறது.

     "ஆமாம்! வஞ்சனை இல்லாமல் உழைக்கிறேன், வந்தவர்களை உபசரிக்கிறேன். என்னைப் போல் பொறுப்போடு யாரும் காரியம் செய்ய மாட்டார்கள். ஆனால் இங்கு வந்து தங்கும் யாத்திரீகர்களும் இந்த விடுதியை நடத்தும் நிர்வாகியின் பொறுப்பை உணர்ந்திருக்க வேண்டும். கிடைத்த சௌகர்யங்களைப் பெற்றுத் திருப்தி அடையாமல் தூற்றிக் கொண்டு போகிறவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் தெரியுமா? எனக்குத் தெரிந்த வரையில் உங்கள் சோழ நாட்டிலிருந்து வந்தவர்கள் தான் எல்லாவற்றையும் உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் உங்கள் நாட்டிலிருந்து தான் வந்தார் ஒரு வாலிபர். அவர் கொஞ்சம் நாஸ்திக குணம் கொண்டவர் போல் பேசினாரே தவிர, மற்றப்படி அவர் மிகவும் குணமுள்ளவராக நடந்து கொண்டார்" என்று கூறினார்.

     "அப்படியா? அப்படி யார் எங்கள் நாட்டிலிருந்து நாஸ்திக வாதம் பேசுகிறவர்கள் வந்திருப்பார்கள்? அவர் பெயர் என்னவென்று சொன்னார்?"

     "அவர் தம் பெயர் பூதுகர் என்று சொன்னார். குடந்தைக்குச் சமீபமுள்ள திருப்புறம்பயத்தைச் சேர்ந்தவரென்றும் சொன்னார்" என்றார் விடுதிப் பாதுகாப்பாளர்.

     "அந்தப் பாவி இங்கேயும் வந்து விட்டானா? அவன் எத்தகைய நற்குணம் படைத்தவனாக இருந்தாலும் இருக்கட்டும். அவன் பேசும் நாஸ்திக வாதம் மாத்திரம் எனக்குப் பிடிப்பதில்லை. இந்த உலகத்திலே கடவுளே இல்லையென்றும், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று சொல்லுகிறவர்களையும் அடைத்து வைக்க ஒரு விநோதமான சிறைச்சாலை ஏற்படுத்த வேண்டும். அவர்களால் இந்த நாட்டுக்கு எவ்வளவு தீங்கு தெரியுமா? அவன் இங்கு எதற்காக வந்தானாம்? யாரையாவது பார்க்க வேண்டுமென்று உங்களை விசாரித்திருப்பானே?" என்றார் சந்தகர்.

     "ஆமாம், விசாரித்தார். இங்கு குடந்தையிலிருந்து வந்திருக்கும் இசைக் கணிகை தேனார்மொழியாளின் மாளிகை எது என்று கேட்டார். நான் சொன்னேன். அவள் அவருக்கு ஏதாவது தெரிந்தவளாய் இருப்பாளோ?" என்றார் விடுதிப் பாதுகாப்பாளர்.

     "அவன் மிகவும் பெண் மோகம் பிடித்தவன். அவன் எந்த ஊர் வந்தாலும் பெண்களைப் பற்றி விசாரிப்பதில் தான் கவன்ம் செலுத்துவான்..."

     "அடடே! இப்படிப்பட்ட கெட்ட சுபாவம் கொண்டவரா அவர்? இப்படிப்பட்டவர்கள் தான் மிகவும் நல்லவர்கள் போல வேஷம் போடுகிறார்கள். அதிருக்கட்டும்! நீங்கள் பிரபல சோதிடர் என்று தெரிந்து கொண்டேன். நான் கூட உங்களிடம் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல். என் ஜாதகப்படி சனி பகவான் அஷ்டமத்தில் இருக்கிறார்" என்றார். சந்தகர் இடைமறித்து, "இருக்கட்டும். இருந்துவிட்டுப் போகட்டும். நான் இப்பொழுது அவசரமாக வெளியே செல்ல வேண்டும். கவலைப் படாதீர்கள். போய்விட்டு வந்து உங்கள் ஜாதகத்தையும் பார்த்து விடுகிறேன்" என்று சொல்லிக் கிளம்பினார்.

     அந்த விடுதி நிர்வாகியும் சந்தோஷமாக விடை கொடுத்து அனுப்பினார்.

     அங்கிருந்து கிளம்பிய சந்தகர் தேனார்மொழியாளின் வீட்டை விசாரித்துக் கொண்டு போக நினைத்தார். ராஜசபையில் பிரசித்தமான பாடகியாக இருக்கும் அவள் மாளிகையைக் கண்டு பிடிப்பதா கடினம்? இரண்டொருவரிடம் விசாரித்துக் கொண்டு சீக்கிரத்திலேயே அவர் தேனார்மொழியாளின் மாளிகையை அடைந்தார்.

     அந்த அழகான மாளிகையின் முற்றத்தோடு கூடிய தாழ்வாரத்துக்கு அவர் வந்த போது அங்கு ஒரு ஆசனத்தில் தனியாகத் தேனார்மொழியாள் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பவள் போல் உட்கார்ந்திருந்தாள். கீழே அழகான வீணையொன்று வைக்கப்பட்டிருந்தது. தீவிரமாகச் சிந்தனையிலிருந்த தேனார்மொழியாள் யாரோ வந்திருக்கும் அரவம் கேட்டதும் சட்டென்று திரும்பிப் பார்த்த போது, சந்தகர் நிற்பதைக் கண்டு சிறிது பதற்றம் அடைந்தவளாக எழுந்து நின்றாள்.

     சந்தகர் அவளிடம் எப்படிப் பேசுவது என்று நினைப்பதற்குள், "நீங்கள் யார்? எங்கே வந்தீர்கள்?" என்றாள் தேனார்மொழியாள், அதிகாரமும், கோபமும் நிறைந்த குரலில்.

     "நான் சோழ நாட்டைச் சேர்ந்தவன். காஞ்சீபுரத்துக்குத் தான் வந்தேன்..." என்றார் சந்தகர்.

     சந்தகர் பதில் அவளுக்குச் சிறிது அடக்க உணர்ச்சியை ஏற்படுத்தியது. தான் விறைப்பாகக் கேட்ட கேள்விக்கு அவர் தணிவாகப் பதில் சொன்னாலும் அந்தப் பதில் ஏதோ விஷமத் தன்மை கொண்டது போலிருந்ததால் அவரிடம் கொஞ்சம் அமைதியாகவே பேச வேண்டும் என்ற அபிப்பிராயத்துக்கு வந்தாள்.

     "தாங்கள் இங்கு வந்த காரணம் என்னவோ?" என்றாள் அவள் மெதுவாக.

     "நான் ஒரு சோதிடன். கோடீச்சுவரத்துச் சோதிடன் சந்தகன் என்று கேள்விப்பட்டிருக்கலாம். நான் தொழில் விஷயமாக காஞ்சீபுரம் வந்தேன். சோழநாட்டில் இப்பொழுது ரொம்பவும் பஞ்சம். தொழில் துறையில் வருமானம் கெட்டு விட்டது. செல்வம் கொழிக்கும் பல்லவ சாம்ராஜ்யத் தலைநகருக்கு வந்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று எண்ணி வந்தேன். பல சீமான்களைப் பார்த்துக் கொண்டு வருகிறேன். அப்படியே தங்களையும்..." என்று சொல்லி நிறுத்தினார் சந்தகர்.

     கோடீச்சுவரத்துச் சோதிடர் சந்தகர் என்பதைக் கேட்டதும் தேனார்மொழியாள் முன்னிலும் அதிக பயமும் பக்தியும் கொண்டவளாக, "நீங்கள் தானா அந்தக் கோடீச்சுவரத்துச் சந்தகர்? மிகவும் சந்தோஷம், உட்காருங்கள்" என்று அவரை உபசரித்து அங்கிருந்த ஆசனமொன்றில் உட்காரச் சொன்னாள்.

     அவர் அந்த ஆசனத்தில் கம்பீரமாகக் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து அவள் முகத்தை உற்றுப் பார்த்தார். அந்த முகக் குறியிலேயே அவளுடைய உள் அந்தரங்கத்தைத் தெரிந்து கொண்டவர் போல், "இந்த உலகத்தில் பதவி, செல்வம், புகழ் எல்லாம் உள்ளவர்களுக்கு ஒரு குறை இல்லாமல் இருப்பதில்லை. அவர்கள் விரும்பும் எல்லாவற்றையுமே சர்வேசுவரன் அவர்களுக்குக் கொடுத்து விடுவதில்லை. அதற்குத்தான் இந்த ஒன்பது கிரகங்களை வைத்திருக்கிறான். இந்த ஒன்பது கிரகங்களில் எட்டு கிரகங்கள் அவர்கள் வாழ்க்கைக்குச் சாதகமாக இருந்து ஒன்று மட்டும் சிறிது கெடுதலை உண்டாக்கினால் கூடப் போதும். அவர்கள் வாழ்க்கையில் பாக்கியமாகக் கிடைத்த எல்லாச் சாதனங்களும் பாழாகிவிடும். மனித வாழ்வில் ஒரு கிரகம் உயர்ந்த பதவியைக் கொடுக்கிறது. இன்னொரு கிரகம் வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் எல்லாவற்றையும் கொடுக்கிறது. மற்றொரு கிரகம் நோயற்ற திட வாழ்வைக் கொடுக்கிறது. பிரிதொரு கிரகம் புத்தியை வளர்க்கிறது. இப்படிப் பல கிரகங்கள் பல நன்மைகளைச் செய்தாலும் ஒரு கிரகம் அவர்கள் மனோ இச்சையைக் குலைத்து விட்டால் போதும், இத்தனையும் வீணாகி விடும். உதாரணமாக, வாழ்வில் பொன், பொருள், பூஷணம் எல்லாமிருக்கலாம். ஆனால் ஒரு ஆண் தான் விரும்பிய பெண்ணையோ அல்லது ஒரு பெண் தான் விரும்பிய ஆணையோ அடையாவிட்டால் வாழ்வில் கிடைத்த இத்தனை சாதனங்களும் வீணாகி விடுகின்றன. ஒரு காதலனை விரும்பி அவனை அடையக் கொடுத்து வைக்காத பெண்ணுக்கு ஏராளமான ஆடை ஆபரணங்கள் இருந்தாலும் அவைகளை அணிந்து கொள்ளப் பிரியப் பட மாட்டாள். என்னவோ உங்களுக்கு உள்ள மனோ விசாரம் எதுவாக இருக்கும் என்று நான் ஆராய்ச்சி செய்து கவனிக்கவில்லை. இருப்பினும் தங்களைப் பார்த்தவுடனேயே இப்படிச் சொல்லும்படி எனக்குத் தோன்றியது."

     தேனார்மொழியாள் அப்படியே அயர்ந்து விட்டாள். ஒரு மனிதரைப் பார்த்தவுடனே அவருடைய மனச் சஞ்சலங்களை எடுத்துச் சொல்லும் சோதிடரை இப்பொழுதுதான் தன் வாழ்நாளில் அவள் பார்த்தாள்.

     அவள் மிகவும் பணிவான குரலில், "சுவாமி, தாங்கள் சொல்லியது முற்றிலும் உண்மை. நான் இப்பொழுது அந்நிலையில் தான் இருக்கிறேன். வாழ்க்கையில் எது இருந்தாலென்ன? சுகம் இல்லை. இந்த மனத்தில் அந்தரங்கமான உண்மைகள் எவ்வளவோ உண்டு. அரச சமூகத்தில் பழக்கம் இருந்ததால் பல உண்மைகள் தெரிந்து கொண்டிருக்கிறேன். முக்கியமாக, பத்து நாட்களுக்கு முன் ஒருவர் வந்தார். சோழ நாட்டைச் சேர்ந்தவர் தான் - வாலிபர். இவ்வளவு நாளும் இல்லாமல் எப்படியோ என் மனம் அவரிடம் லயித்து விட்டது. வெட்கத்தை விட்டு, என் அபிப்பிராயத்தை அவரிடம் சொன்னேன். அந்த உத்தம புருஷர் என் வார்த்தைகளுக்கு இணங்கவில்லை. அவரை எப்படியேனும் என் வசமாக்கிக் கொள்ள வேண்டுமென்று என் மனம் துடித்தது. அதற்கு ஏதேனும் முயற்சி செய்யலாம் என்று யோசிக்கும் தருவாயில் அவர் பல்லவ சேனாதிபதி உதய சந்திரனால் பிடிக்கப்பட்டு எங்கோ சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்து கொண்டேன்..." என்று சொல்லிக் கொண்டே வரும் போது சந்தகர் திகைப்படைந்தார்.

     ஆனால் அதை வெளியிட்டுக் கொள்ளாது, "நிறுத்துங்கள். உங்களுக்கு நான் அல்லவா சோதிடம் சொல்ல வந்திருக்கிறேன்? நடந்த கதையை யெல்லாம் நீங்களே சொல்லிவிட்டால் நான் என்ன சொல்வது? போகட்டும் - உங்கள் உணர்ச்சி அப்படி இருக்கிறது. நான் வரும்போதே, உங்கள் உள் அந்தரங்கத்தையும் மன போராட்டத்தையும் அறிந்து கொண்டு விட்டேன். உங்களுக்கு 'அவர் விடுதலையாவாரா? அவர் விடுதலையான பின் உங்கள் ஆசை நாயகராவாரா' என்பது தானே கேள்வி?" என்று சொல்லிச் சட்டென்று தரையில் உட்கார்ந்து தம்முடைய சோதிடப் பையை எடுத்து ஒரு பிடி சோழியை வைத்துப் பிரித்து எண்ணத் தொடங்கினார்.

     "ஆமாம் - முதலில் அவர் விடுதலை ஆனால் போதும், அப்புறம் அவரை அடைவது என்னுடைய சாமர்த்தியம்" என்றாள் தேனார்மொழியாள்.

     சந்தகர் அவள் வார்த்தையைக் காதில் வாங்கிக் கொண்டே சோழிகளை எண்ணி முடித்துவிட்டு, "தங்கள் மனத்தைக் கொள்ளை கொண்ட அந்த மகா புருஷர் ஒரு பெரிய அரசாங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதன் காரணமாகவே குற்றவாளியாகி யிருக்க வேண்டும். இல்லையா?" என்றார்.

     "ஆமாம்! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அவர் இந்நகருக்கு வந்தது அரசாங்க அதிகாரிகளுக் கெல்லாம் தெரிந்திருக்கிறது" என்றாள் தேனார்மொழி.

     "அவர் பகிரங்கமாக வந்ததினால் அரசாங்க அதிகாரிகளெல்லாம் தெரிந்து கொள்ளும்படி நேரிட்டது. அவர் எதற்கும் அஞ்சாத மகாபுருஷர், இல்லையா? சரி! மற்ற விஷயங்களையும் சொல்லுகிறேன், பாருங்கள்" என்று சொல்லிவிட்டு, மறுபடியும் சோழிகளைப் போட்டு எண்ணிப் பார்த்து விட்டு, "அந்த மனிதர் மிகவும் படித்தவராகவும் இருக்க வேண்டும். அதோடு கடவுளைப் பற்றிய உண்மைகளில் பற்று இல்லாதவராகவும் இருக்க வேண்டும். இதெல்லாம் சரிதானே?" என்றார்.

     "சரிதான். அத்தனையும் உண்மை" என்றாள் அவள் ஆர்வத்தோடு.

     "சரி! அப்படியென்றால் அவருடைய பெயரையும் சொல்லி விடுங்கள். அதைச் சொன்னால் பெயர் ராசியைக் கொண்டு சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்" என்றார் சந்தகர்.

     "அவர் பெயரா? பூதுகர்" என்றாள் தேனார்மொழியாள் வெட்கத்துடன்.

     சந்தகர் கலகலவென்று ஒரு ஏளனச் சிரிப்பு சிரித்துவிட்டு, "அவன் பிரசித்தி பெற்ற நாஸ்திகனாயிற்றே? கடவுளை எதிரே கொண்டு வந்து காட்டினாலும் கூட இவர் கடவுள் இல்லையென்று சத்தியம் செய்து சொல்கிறவனாச்சே. மகா பாபம்! இத்தகைய மனிதரிடமா மனத்தைப் பறிகொடுத்து விட்டு இப்படித் தவியாய்த் தவிக்கிறீர்கள்? இந்தப் புத்தி உங்களுக்கு ஏன் அம்மா?" என்றார்.

முதல் பாகம் முற்றிற்று.