உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) முதல் பாகம் - காலச் சக்கரம் அத்தியாயம் 4 - கலங்கமாலரையர் பூதுகன் சிறிது அலட்சியமாகச் சிரித்த வண்ணம் "ஆம். நான் பூதுகனேதான். கலங்கமாலரையர் என்ற தங்களுடைய நாமதேயம் இந்த ஆசிரமத்தில் புகுந்ததும் எப்படி மாறியிருக்கிறதென்று அடிகள் கருணை கூர்ந்து அருள வேண்டும்!" என்றான் கேலி செய்கிறவன் போல். "நான் எப்பொழுதும் எங்கிருந்தாலும் கலங்கமாலரையரேதான்" என்றார் அவர். "உடை, உருவம், இடம், வாழ்க்கைநிலை, மதம் எல்லாம் மாறி விட்டனவே. ஒரு சமயம் நாமதேயமும் மாறியிருக்கிறதோ என்ற சந்தேகம்? அதனால் கேட்டேன். தூய எண்ணங்கள் நிறைந்த புத்த சங்கத்தில் திருடர்கள், கொலைகாரர்கள், தேசத்துரோகிகள், சமூகபிரஷ்டம் செய்யப்பட்டவர்கள் இவர்களுக்கு எல்லாம் இடம் கிடைத்து விடுவதுதான் மனத்தை மிகவும் வருத்துகிறது. தலையை முண்டிதம் செய்து கொண்டு சீவர ஆடை உடுத்திக் கொண்டு விட்டால் இத்தகைய வஞ்சகர்கள் எல்லாம் உலகில் நல்லவர்கள் போல் வாழவும் வழி ஏற்பட்டு விடுகிறதே என்ற மனக் கொதிப்புத்தான் எனக்கு" என்றான் பூதுகன் சிறிது ஆத்திரத்தோடு. "பூர்வாசிரமத்தில் எப்படி இருந்தாலும் துறவு நிலையை அடைந்தவனை அந்த அழுக்குகள் எல்லாம் ஒட்டாது என்ற உண்மையை நீ தெரிந்து கொள்ளவில்லை" என்றார் அவர். "இப்படி ஏதாவது வேண்டுமானால் சொல்லிக் கொண்டு திரியலாம். அந்த அழுக்குகள் துறவு நிலையிலும் அவனை ஒட்டுவதோடல்லாமல் சங்கத்தையே வந்து பற்றிக் கொள்கின்றன. இதுதான் உண்மை நிலை. புத்தர் என்னும் மகாபுருஷர் உலகில் உள்ள மக்கள் படும் பலவிதமான இன்னல்களைப் போக்கக் கருதி ஒரு மார்க்கத்தைக் கண்டு பிடித்தார். அவருடைய மார்க்கத்தில் பலருக்குப் பற்றுதல் ஏற்பட்டு அதைப் பின்பற்றினார்கள். தம் கொள்கைகளைப் பின்பற்றுகிறவர்கள் ஒரு முகமான அபிப்பிராயத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே சில வரைமுறைகளோடு சங்கம் என்பதை ஏற்படுத்தினார். இதையொரு மதமாக்க வேண்டுமென அவர் கருதியதாகத் தெரியவில்லை. ஆனால் அவருக்குப் பின்னால் வந்த அவருடைய சீடர்கள் எப்படியோ அதை மதமாக்க முயற்சித்தார்கள். மதம் என்று சொல்லிவிட்டாலே, அதற்கு ஒரு கடவுள் வேண்டாமா? பகவரையே கடவுளாக்கி விட்டனர். கௌதமர் கடவுளானவுடனே அவருக்கு ஒரு சிலை; அந்தச் சிலையை வைக்க ஒரு கோயில் - விஹாரம். கோயிலும் சிலையும் ஏற்பட்ட உடனே பூசை வேண்டாமா? பூசை நடக்கும் வேளையில் மணி, நகரா இவையெல்லாம் வேண்டாமா? இந்த மதத்தை வளர்ப்பதற்கு மற்ற மதங்களில் உள்ளது போல் புராணங்கள், கதைகள், கட்டுக்கதைகள், அதற்குப் பிரசாரகர்கள், வாதம்-பிரதிவாதம் எவ்வளவு? சைவ மதாச்சாரியார்களும் வைஷ்ணவ ஆழ்வார்களும் பொது மக்களை வசீகரிக்க மனத்தை மயக்கும் பாடல்களும், நாட்டியம், நாடகம் இவைகளையும் ஏற்படுத்தினார்கள் என்றால் உடனே புத்த சமயத்தினரும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டு விடுகின்றனர். இப்படியெல்லாம் செய்யச் சொல்லிப் பகவர் கட்டளையிட்டாரா? கலங்கமாலரையரே? போதி மாதவர் உலகில் பிறந்த ஒவ்வொருவரும் மனப் பக்குவம் அடைந்து சன்மார்க்க நெறியில் நிற்க வேண்டுமென்று விரும்பினாரே தவிர மத சம்பந்தமான போட்டிகளில் இறங்கித் துவேஷத்தை வளர்க்க அவர் விரும்பவில்லை. சங்கத்தில் சேரும் ஒவ்வொரு பிக்ஷுக்களும் அனுசரிக்க வேண்டிய முறைகளை வகுத்து வைத்தார். உலக நலனுக்காக அனைவரும் சன்மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக, பொதுப் பணி புரியச் சங்கத்தில் சேருபவர்கள் ஆசை, அவா முதலியவைகளை விட்டு, எல்லாவற்றையும் சர்வபரித்தியாகம் செய்து விட்டுத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்குத் துறவிக்குரிய கடுமையான விதிகளை விதித்தார். துறவிக்குரிய இந்த விதிகள் பொது மக்கள் யாவராலும் பின்பற்ற முடியாதவை. பொதுமக்கள் புத்தபிரானின் உத்தமமான மார்க்கங்களை அனுசரித்துக் கூடுமான வரையில் தங்கள் வாழ்க்கையில் சீர்திருந்தலாமே தவிர எல்லோருமே துறவற மார்க்கத்தை ஏற்றுக் கொள்வது கடினம். இத்தகைய நிலையில் புத்த மதத்தில் பற்றுள்ள கிருகஸ்தர்களையும் உபாசகர்கள் என்று கூறி அவர்களையும் சேர்த்துக் கொள்ளுகின்றனர். புத்தரின் நிரீசுவர வாதமும், அனாத்ம வாதமும் மறைந்து கடவுள் பக்திதான் அதிகமாகி விட்டது. நான் இப்படியெல்லாம் சொல்கிறேன் என்று வருத்தப்படாதீர்கள். இந்தப் பாரதத்தில் புத்தரென்னும் மகா புருஷரால் ஒரு உன்னதமான கொள்கை எடுத்துக் காட்டப்பட்டது. ஆனால் அந்த உத்தமமான கொள்கையை அது பிறந்த இந்தப் புனிதமான பாரதத்திலேயே புதைத்து விடுவோமா என்ற அச்சம் தான் எனக்கு. இந்த உன்னத மார்க்கம் நமது நாட்டுக்குப் பயனாகாத வண்ணம் வெளி நாட்டுக்கெல்லாம் பயனுள்ளதாகி விடுமோ என்ற பயம் தான் எனக்கு. தன் கொள்கைகளை வேத சமயங்களின் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு அச்சமயத்தோடு புத்த சமயமும் கடலில் கலந்த சிறு நதி போலக் கலந்து ஐக்கியமாகி விடுமோ என்று தான் நான் நினைத்து மன வருத்தம் அடைகிறேன்" என்றான் பூதுகன். பௌத்த பிக்ஷுவாகிய கலங்கமாலரையர் பூதுகனின் நீண்ட பிரசங்கத்தைக் கேட்டுச் சிறிது ஆத்திரம் அடைந்தாலும் அடக்கமான குரலில், "பூதுகா! நீ நன்றாகப் பேசுவாய் என்று எனக்குத் தெரியும். அழகாகத்தான் பேசி விட்டாய். உனக்கு இப்படிப் பேசிப் பேசி பழக்கம். புத்தர் பெருமான் ஒரு மதத்தை ஏற்படுத்த விரும்பினாரா இல்லையா என்பது வேறு விஷயம். அவர் வழியைப் பின்பற்றுகிறவர்கள் உலகில் அதிகமாகி விட்டபடியால் அது ஒரு மதமாகி விட்டது. புத்தர் கடவுளைப் பற்றியும் ஆத்மாவைப் பற்றியும் அதிகம் பேசாததால் அவர் அனாத்மவாதி, நிரீசுவரவாதி என்று நீ உன்னுடைய நாஸ்திகக் கூட்டத்தோடு அவரையும் சேர்த்துக் கொள்ளப் பார்க்கிறாய். ததாகதர் உலகில் கண்ணெதிரே காணும் இன்னல்களையெல்லாம் அழிக்க நினைத்தார். ஒவ்வொரு மனித இதயத்திலும் அன்பு, அஹிம்சை, ஈகை, இரக்கம், பொறுமை முதலிய நற்குணங்களே குடி கொள்ள வகை செய்தார். உலகைப் பற்றி இருக்கும் துயர அழுக்குகள் எல்லாம் நீங்கிவிடும் என்று நம்பினார். ஆத்மா, கடவுள், சுவர்க்கம் என்பவைகளைப் பற்றி மக்களுக்குப் போதனை செய்தால் தங்களுக்கு எட்டாத விஷயங்களைப் பற்றிச் சர்ச்சை செய்து உலகில் கண்ணெதிரில் நடக்கும் தீமைகளை மறந்து வீண் பொழுது போக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று கருதியே எளிய மார்க்கங்களை உபதேசித்து அருளினார். அவர் கடவுள் இல்லையென்று எங்கும் சொல்லவில்லை. கடவுளைப் போற்றும் மதங்களையும் அவர் வெறுக்கவில்லை. 'இந்த ஆத்மா என்பது என்ன? அது ஒன்றா, இரண்டா?' என்பதைப் பற்றியும் விவாதம் செய்யவில்லை. இந்த வாழ்விலேயே நிர்வாண நிலை அடையும் போதனைகளைச் செய்தாரே தவிர தனியாகச் சுவர்க்கம், நரகம் என்று எதையும் பேசவில்லை. மனிதர்கள் சிறந்த பண்பாடுகளுடன் வாழ்ந்தால் பிறப்பு இறப்பற்ற நிர்வாண நிலையை அடையலாம் என்பது தான் அவருடைய தத்துவம்" என்று சொல்லி நிறுத்தினார். பூதுகன் சிரித்தான்! "சரிதான்! அத்தகைய நிர்வாண நிலையை அடையச் சிலா உருவங்களும், அவைகளுக்கு பேரிகை மணியோசைகளும் முழங்கி, மலர் தூவிப் பூசைகள் எல்லாம் செய்ய வேண்டுமென்று அவர் சொல்லவில்லையென்று நினைக்கிறேன்" என்றான். "ததாகதர் அப்படிச் சொல்லவில்லை தான். ஆனால் பகவர் மகாபரி நிர்வாணம் அடைவதற்கு முன்பே யாவரும் அவரைத் தெய்வமாகவே கொண்டாடினர். பகவர் மகாபரி நிர்வாணம் அடைந்த பிறகு அவரை ஒவ்வொருவரும் தெய்வமாகக் கொண்டாடுவதில் வியப்பில்லை அல்லவா? அவருடைய சன்மார்க்கப் போதனைகளில் மனம் வைத்தவர்கள் அவருக்கு உரு அமைத்துத் தொழுவதில் பிசகு என்ன இருக்கிறது? மகத நாட்டை ஆண்டவனும் ததாகதரிடம் பேரன்பும் பக்தியும் கொண்டவனுமாகிய பிம்பிசாரன் ராஜக்கிருகத்தில் பகவரை அழைத்து உபசரிக்கும் பொழுது பகவர் திரியஸ் திரம்ஸ லோகத்துக்குச் சென்ற போது அவருடைய பிரிவாற்றாமை தாங்காது அவருடைய அழகான உருவம் போல் சிறந்த சிற்பி ஒருவனைக் கொண்டு சிருஷ்டிக்கச் செய்து அதை கிருத்ரகூட விஹாரத்தில் எழுந்தருளச் செய்து வணங்கியதாக வரலாறு சொல்கிறது. பகவர் தேவலோகத்திலிருந்து திரும்பிய பின் பிம்பிசாரன் தம்மீது வைத்துள்ள அன்பையும் பக்தியையும் அறிந்து மிகவும் மன மகிழ்ச்சியுற்றார் என்று தெரிகிறது! இவ் வரலாறுகளை அறிந்த பகவரின் அடியார்களுக்குப் பிம்பிசாரனைப் போல் தாங்களும் ஐயனுக்குத் திருவுருவம் அமைத்து வணங்க வேண்டுமென்று தோன்றாதா?" என்றார் கலங்கமாலரையர். பூதுகன் ஏளனமாகச் சிரித்துக் கொண்டே, "அழகு! அப்புறம்...?" என்றான். "இதைப் போலவே பௌத்த பிக்ஷுக்களின் கையில் ஜெப மாலைகள் வைத்துக் கொண்டிருப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. ததாகதரின் சீடரில் ஒருவனான வைடூர்யன் என்பவன் இந்தச் சித்தத்தை அடக்குவதற்கு என்ன செய்யலாம் என்று ஐயனைக் கேட்கவும், ஐயன், அரசமரத்திலிருந்து கடைந்து எடுத்த நூற்றெட்டு மணிகளாலாகிய மாலையைக் கொண்டு ஜபிக்கும்படி உபதேசித்தார். அவன் அவருடைய உபதேசத்தைக் கேட்டு ஐயனின் உபதேசப்படியே செய்து நிர்வாண நிலையை அடைந்தான். வைடூர்யனுக்கு உபதேசித்த வழியைப் பின்பற்றி அவருடைய பக்தர்களாகிய மற்றவர்களும் ஜபமாலையை வைத்துக் கொண்டு தியானம் செய்து கடைத்தேற வேண்டுமென்று நினைத்து வரலாகாதா?" என்றார் கலங்கமாலரையர். "தாராளமாக..." என்றான் பூதுகன் பரிகாசமாக. "பெருமானின் திருவடித் தாமரைகளை மலர்களைக் கொண்டு அர்ச்சிப்பதற்குரிய காரணத்தையும் சொல்லுகிறேன். பகவர் தம் தாயாகிய மாயாதேவி தேவலோகத்தில் தேவனுக்கு மகளாய் இருப்பதை யறிந்து அவருக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்ற கருத்தில் தேவலோகம் சென்ற போது அங்கிருந்த அவருடைய தாயாகிய மாயாதேவி அவரிடம் உபதேசம் பெற்றுத் தன் காணிக்கையாக அவருக்கு ஒரு மந்தார மலரை அளித்தாளாம். அவரும் அன்போடு அம்மலரைப் பெற்றுக் கொண்டாராம். இதிலிருந்து பகவரின் திருவடிகளில் மலர்களை அர்ப்பணிப்பது பகவனுக்குச் சந்தோஷத்தை ஏற்படுத்தும் என்று ஒவ்வொருவரும் நினைக்கலாமல்லவா? புத்த விஹாரங்களில் கொடிகள் படருவதும், பேரிகைகள் முழங்குவதும், மணியோசைக் கேட்பதும் ஏனென்று கேட்கிறாய்? அதற்கும் ஒரு காரணம் உண்டு. போதி மாதவருக்கு விரோதியாய் இருந்த தேவதத்தன் என்பவன் பகவரைக் கொல்ல நினைத்து ஒரு மந்திரவாதியைக் கொண்டு பல பேய்களை ஏவி விட்டான். அந்தச் சமயத்தில் பகவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தெய்வலோகத்திலிருந்து தெய்வகணங்கள் படையெடுத்து வந்து அப் பேய்களை விரட்டியடித்தன. அந்தச் சமயத்தில் தேவகணங்கள் கைகளில் கொடிகள் ஏந்தியும், மணியோசை எழுப்பியும், பேரிகை முதலிய வாத்தியங்களை அடித்துக் கொண்டும் வந்தனர். தேவகணங்கள் மந்திரவாதியால் ஏவி விடப்பட்ட பேய்களைத் துரத்திய பின் அந்த மந்திரவாதியையும் கொல்ல நினைத்துத் துரத்தின. அச்சமயம் மந்திரவாதி உயிர் தப்ப ஒரு காளையுருவம் எடுத்து ஓடினான். அவன் காளையுருவம் எடுத்து ஓடுவதை அறிந்த தேவகணங்கள் அந்தக் காளையையும் துரத்தின. அச்சமயம் அந்த மந்திரவாதி ததாகதரின் பாத கமலங்களில் வந்து விழுந்து அடைக்கலம் வேண்டினான். ததாகதர் அவரை மன்னிக்கவும் தேவகணங்கள் அவனை உயிரோடு விட்டன. தனக்கு அடைக்கலம் அளித்த ததாகதரின் கருணை உள்ளத்தை அறிந்த மந்திரவாதி தானும் மனம் திருந்தியவனாய், பகவரைப் புகழ்ந்து வணங்கி மறுபடியும் மனித உரு எடுத்தால் தனக்கும் கேவலமான குணங்கள் ஏற்பட்டு விடுமோ என அஞ்சித் தான் காளை உருவிலேயே இருப்பதாகவும் தான் இறந்த பிறகு தன்னுடைய உடற் தோலால் பேரிகைகள் கட்டுவித்துப் புத்த விஹாரங்களில் அந்தப் பேரிகைகள் முழங்க வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டான். அதன் காரணமாகத்தான் புத்த விஹாரங்களில் பூசை நேரத்தில் பேரிகைகள் முழங்குகின்றன. தேவகணங்கள் கையில் கொடி ஏந்தி, மணியோசை அடித்து, பல வாத்தியங்களை இசைத்து வந்ததால் தான் புத்த விஹாரங்களில் பல வாத்தியங்களின் ஒலியும் மணியோசையும் கேட்கின்றன" என்றார். பூதுகன் எதிரொலி செய்யும்படியாகக் கலகலவென்று சிரித்தான். "கலங்கமாலரையரே! இதெல்லாம் என்ன கதை? நான் சொல்லியவைகளையெல்லாம் மறந்து விட்டு என்னையும் பாமரன் போல் நினைத்து உங்கள் புராண வரிசைகளை யெல்லாம் காட்டுகிறீர்களே? போகட்டும். தலையை மொட்டையடித்துச் சீவர ஆடையை உடுத்திக் கொண்டதும் நன்றாகத் தேறி விட்டீர்கள் என்று தான் தெரிகிறது. இப்பொழுதுதான் நீங்கள் தேரராகி விட்டீர்களே? இன்னும் கொஞ்ச நாளில் கொட்டியளப்பதற்கு இன்னும் பல கட்டுக் கதைகளை யெல்லாம் தெரிந்து கொண்ட பின் மகாதேரர் ஆகிவிடுவீர்கள். இருக்கட்டும். இனிமேல் உங்களுடைய சொந்தக் கதைக்கு வருகிறேன். திடீரென்று ஏன் இந்த வேஷம்? தஞ்சையில் அனுபவித்த உல்லாச போகங்களை யெல்லாம் விட்டு விட்டு இப்படிப் பூம்புகாரிலுள்ள புத்த விஹாரத்தில் வந்து அடைந்து கிடப்பானேன்? இதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். இப்பொழுது நீர் போடும் இந்த வேஷம் சாதாரண காரியத்துக்காக என்று நினைக்கவில்லை. யாரைக் கொலை செய்து எந்த ராஜ்யத்தை நிலை நிறுத்துவதற்காகவோ?" என்றான். கலங்கமாலரையர் அவனுடைய வார்த்தையைக் கேட்டுக் கோபமோ ஆத்திரமோ அடையவில்லை. அவர் முகம் சிறிது சுருங்கியது, அவர் மனத்திலிருந்த சோகத்தைத் தான் எடுத்துக் காட்டுவது போல இருந்தது. "பூதுகா! அரசியல் என்னும் பகடையாட்டம் ஆடிக் களைத்திருக்கும் தருணம் இது. எனக்கு இனி எந்த சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்த வேண்டுமென்றோ, எந்த சாம்ராஜ்யத்தைக் குலைக்க வேண்டுமென்றோ எண்ணம் ஏற்படாது. என் மனம் எல்லாவற்றையும் துறந்து ஓர் நிலையை அடைந்து விட்டது. இன்று நான் ததாதகரின் சேவகன். என் வாழ்நாளில் இந்த மனத்துக்குச் சிறிது அமைதி கொடுக்க எண்ணி எஞ்சி நிற்கும் சில நாட்களையும் அவன் திருவடி நிழலிலிருந்தே அன்புப் பணி புரிந்து கடத்தி விட நினைக்கிறேன். இது உண்மை" என்றார். "உண்மைதான்! இன்னும் சில நாட்களாவது உயிர் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்காதா? கொடும்பாளூர் வீரர்களிடம் யாரேனும் தலையைக் கொடுப்பார்களா? இப்படித் தலையை மொட்டையடித்துக் காஷாயம் தரித்துக் கொண்டு கையில் ஓடு எடுத்துப் பிச்சை எடுத்து உண்பதும், உறங்குவதுமாய் இந்தப் புத்த விஹாரத்திலிருந்து காலத்தைக் கழித்து விடுவதும் நல்லதுதான். இருந்தாலும் அந்தக் கொடும்பாளூர் வீரர்களின் கண்களில் படாமல் இருக்க வேண்டுமென்று நீங்கள் எப்பொழுதும் புத்தர் பெருமானை வேண்டிக் கொண்டிருக்கவும் வேண்டியதுதான். கலங்கமாலரையரே, நான் பூதுகன் - உங்களைப் போன்ற யாரையுமே நான் எப்பொழுதுமே எளிதில் நம்புவதில்லை. இருக்கட்டும். உங்களிடம் நான் தனிமையில் ஒரு விஷயம் பேச வேண்டும். கொஞ்சம் வெளியே வந்தால் பேசலாம்" என்று சொன்னான். கலங்கமாலரையரும் அவனைப் பின் தொடர்ந்தார். |