உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) முதல் பாகம் - காலச் சக்கரம் அத்தியாயம் 5 - முகம் கறுத்தது! பூதுகனும் கலங்கமாலரையரும் அந்தப் புத்த விஹாரத்தை விட்டு வெளியே வந்த போது எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. சம்பாதி வனம் என்னும் அவ்வழகிய மலர்ச் சோலையே இருளில் அழுந்திக் கிடப்பது போல் இருந்தது. சிறிது நேரத்துக்கு முன் அடித்த பெரு மழை ஓய்ந்துவிட்டாலும் வானத்தில் இருள் மேகங்கள் முட்டி மோதிக் கொண்டு தானிருந்தன. கடலில் எழும் அலையோசையின் பேரிரைச்சல் அடங்குவதும் பிறகு அவை எழுவதும் போல் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தன. கலங்கரை விளக்கின் ஒளி கெட்ட எண்ணங்கள் சூழ்ந்த மனத்திலும் சிறிது நல்ல ஒளியை எடுத்துக் காட்டுவது போல் ஒரே நிலையில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் அந்த இருளில் ஒரு பெரிய மரத்தடியை அடைந்தனர். பரவியிருந்த பெருங் கிளைகளின் அடர்ந்தியினால் அவ்விடம் மாத்திரம் மழை ஈரம் படாமல் இருந்தது. "இப்படி உட்கார்ந்து பேசலாமே?" என்றான் பூதுகன். "சரி" என்று சொல்லி அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்தார் கலங்கமாலரையர். காற்று சிலுசிலுவென்று அடித்துத் துணியால் போர்த்தியிருக்கும் தேகத்தையும் தொட்டுச் சிலிர்க்க வைத்தது. பூதுகன் மெதுவாகப் பேசினான்: "உண்மையாகவே அரசியல் நோக்கம் கொண்டவர்களுக்கு மாறுவேடம் பூண்டு தங்கள் காரியத்தில் வெற்றி காண்பது தர்ம விரோதமாகாது. நான் ஒரு நாஸ்திகவாதி. நான் பெருத்த மத வைரியைப் போலக் காணப்பட்டாலும் அரசியலில் எப்பொழுதும் ஒரு கண் உடையவன். நான் உங்கள் கொள்கைக்கு விரோதமானவன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் உங்களைத் தனியாக அழைத்தேன். சிதைந்து அழிந்து போன சோழ சாம்ராஜ்யத்தத மறுபடியும் நிலைநிறுத்தி இந்த நாட்டை ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள் சிலர். அது உங்களுக்குப் பிடிக்காத விஷயம் - இல்லையா?" என்றான். இந்த இருளில் கலங்கமாலரையரின் முகம் தெளிவாகத் தெரியாவிட்டாலும் அவர் விடும் பெருமூச்சு அவருடைய மனக்கொதிப்பை எடுத்துக் காட்டுவது போல் இருந்தது. அவர் மெதுவான குரலில், "எனக்கு இந்த எண்ணம் எல்லாம் இப்பொழுது இல்லை. கருணைக் கடலான புத்தரின் திருவடிகளை நம்பி வந்த எனக்கு மறுபடியும் அத்தககய எண்ணங்களெல்லாம் எழாமலிருக்க வேண்டுமென்றுதான் பிரார்த்திக்கிறேன். பாண்டியர்களின் கையும், பல்லவர்களின் கையும் ஓங்கி நிற்கும் இந்தத் தருணத்தில், 'இந்த நாட்டை யார் ஆண்டால் என்ன?' என்ற எண்ணம் தான் எனக்கு இப்பொழுது ஏற்பட்டுள்ளது. நான் தஞ்சையில் முத்தரையர்களுக்காகப் பட்டபாடுகள் போதும். சோழர்கள் ஆண்டாலென்ன? முத்தரையர்கள் ஆண்டால் என்ன? யாராய் இருப்பினும் பாண்டியர்களுக்கோ, பல்லவர்களுக்கோ அடிமையாக இருக்க வேண்டியவர்கள் தானே? இதை மாபெரும் சாம்ராஜ்யமாக்கி விடலாம் என்று யார் நினைத்தாலும், அது வெறும் கனவாகத்தான் முடியும். பூதுகா! என்னை விட்டு விடு. இதைப் பற்றிப் பேசி என் மனத்தைக் குழப்பாதே. நான் இன்று அடைந்துள்ள நிலையைப் பார்த்து என்னை ஏமாற்றிப் பயமுறுத்துவதற்கு முயலாதே. நீ இன்று சோழ வம்சத்தினருக்கு எதிரி என்று அறிந்ததினால் சந்தோஷம் அடைந்து விடமாட்டேன். அன்பையும் அஹிம்ஸையும் கடைப்பிடித்து ஒழுகும் துறவு மார்க்கத்தில் ஈடுபட்டுள்ள என்னுடைய பாதைகள் எல்லாம் இப்பொழுது வேறாகத்தானே இருக்கும்?" என்றார் கலங்கமாலரையர். "மாலரையரே! நீங்கள் இன்று புத்த சங்கத்தில் சேர்ந்து துறவு மார்க்கத்தில் ஈடுபட்டு விட்டீர் என்பதை நான் அறியாமலில்லை. ஆனால் ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட தோல்வி நெஞ்சில் ஆழப் பதிந்த வடுப்போல் என்றும் மறையாது இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எனக்கு உங்கள் வார்த்தையில் நம்பிக்கை இல்லை என்று அர்த்தமில்லை. அரசியல் நோக்கம் கொண்டவர்கள் பளிச்சென்று தங்கள் உள்ள நிலையை எவரிடமும் சொல்லி விடமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். அதுவும் உங்களைப் போன்ற ஒரு சாம்ராஜ்யத்தையே ஆக்கவும் அழிக்கவும் திறனுடையவர்களின் மனப்போக்கு எப்படிப் பட்டதாய் இருக்கும் என்று எனக்குத் தெரியாதா? தாங்கள் என்னிடம் எதையும் மறுப்பதால் பலன் ஏதுமில்லை. நீங்கள் செய்த சதிச் செயலுக்காக உங்களைப் பழி வாங்கக் கொடும்பாளூர் இருக்கு வேளிர்கள் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதும் எனக்குத் தெரியும். அவர்களிடமிருந்து நீங்கள் தப்புவதற்கு இந்த மார்க்கம் தான் சரியானது என்பதைக் கண்டு பிடித்ததுதான் உங்கள் புத்திசாலித்தனத்துக்குச் சிகரம் வைத்தாற் போலிருக்கிறது. ஆனால் மற்ற நகரங்களைக் காட்டிலும் இந்தப் பூம்புகார் நகரத்தில் தான் பழைய சாம்ராஜ்யப் பித்துக் கொண்ட உளவாளிகள் அதிகமாகத் திரிந்து வருகிறார்கள் என்பதை மாத்திரம் நீங்கள் மறந்து விடக் கூடாது" என்றான் பூதுகன். இதைக் கேட்டதும் கலங்கமாலரையர் ஒரு கணம் திகைத்து நின்றார். அடுத்த கணம் அவருடைய கம்பீரமான முகம் கலங்கிக் கறுத்தது. |