மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம் - காலச் சக்கரம்

அத்தியாயம் 6 - அவள் யார்?

     பூதுகன் கலங்கமாலரையரை ஆறுதல் செய்வது போல் "இந்த மாறன் முத்தரையனுக்காக நீங்கள் பட்டபாட்டுக்கு அவர்கள் கொஞ்சம் கூட நன்றி செலுத்தாமல் உங்களை இந்த நிலையில் கொண்டு வந்து விட்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? கொடும்பாளூர் இருக்கு வேளிர் என்றால் அவர்களுக்கு அவ்வளவு பயமாக இருக்கிறது. சாம்ராஜ்யத்தைக் கட்டியாள்வது மாத்திரம் போதாது. பிரயத்தனமும் வேண்டித்தான் இருக்கிறது. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற் போல், பல்லவர்கள் வலுத்தால் பல்லவர் பக்கத்திலும், பாண்டியர்கள் வலுத்தால் பாண்டியர்கள் பக்கத்திலும் இருந்து எவ்வளவு நாட்களுக்கு இந்தப் பேரரசைக் காப்பாற்ற முடியும்? முத்தரையர் குடும்பத்தில் எனக்கு மிகப் பற்றுதல் உண்டு. ஆனால் அவர்கள் இத்தகைய சந்தர்ப்பத்தில் உங்களைப் போன்ற சுத்த வீரர்களைக் கூட மறந்து விடுகிறார்களே என்ற வருத்தம் தான் எனக்கு" என்றான்.

     கலங்கமாலரையர் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, "அவர்களைச் சொல்லுவதினால் பயன் இல்லை. கொடும்பாளூர் அரசர்கள் முத்தரையர் மீது நேராகப் படையெடுத்தால் அவர்கள் என்றும் யுத்தம் செய்யத் தயாராய் இருக்கிறார்கள். ஆனால் தனிப்பட்ட ஒருவனைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னைக் கொலை செய்துவிட வேண்டும் என்பதற்காக அங்கங்கே உளவாளிகளை வைத்துக் காரியம் செய்பவர்களை என்ன செய்ய முடியும்? ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவதற்காகப் பெரிய யுத்தத்தில் இறங்க முடியுமா? நான் செய்த உதவிக்காக மாறன் முத்தரையன் எனக்கு நன்றி செலுத்த வேண்டுமென்று நான் விரும்பவில்லை, பூதுகா! இப்படியெல்லாம் ஏதாவது பேசி என் மனத்தைக் கிளறாதே! என்னுடைய துறவு நிலையில் இவையெல்லாம் பேசக் கூடிய வார்த்தைகளில்லை" என்றார்.

     "நீங்கள் இப்பொழுது இருக்கும் நிலையில் இதெல்லாம் பேசக் கூடிய வார்த்தைகளில்லை தான். ஆனால் அரசியல் இருக்கட்டும். மதத்துக்கு ஆபத்து ஏற்படுமானால் அதிலிருந்து மதத்தைக் காப்பாற்றுவதுதானே உங்களைப் போன்ற துறவிகளின் கடமையாகும். 'இன்று மதத்துக்காக அரசியலா? அல்லது அரசியலுக்காக மதமா?' என்பதைத் தெளிவாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. உங்களுக்கு மாத்திரம் இல்லை. எனக்கும் அத்தகைய கவலை ஏற்பட்டுள்ளது. இந்த நாடு இருண்டு கிடக்கும் இந்த நிலையிலும் வேறு மதத்தினர் ஆங்காங்கு புற்றீசல் போல் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் மதம் உயர்வடைவதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. குடந்தையில் சைவ மதத்தினரான அப்பரின் சிஷ்யர்களும், வைஷ்ணவ மதத்தினரான திருமழிசை ஆழ்வாரின் சீடர்களும் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவேயில்லை. அவர்களுடைய அபிப்பிராயம் எல்லாம் மறுபடியும் சோழ வம்சத்தினர் பதவிக்கு வந்தால் தங்கள் மதத்துக்கு ஒரு உன்னத நிலை ஏற்படும் என்பதுதான். சோழ சாம்ராஜ்யம் நிலைபெற்றால் வைஷ்ணவமும், சைவமும் தழைத்தோங்கும். கரிகாலனின் குலத்தில் உதித்த ஒருவன் அரசைக் கைப்பற்றுவானேயானால் தம் முன்னோர்கள் செய்தது போல் எண்தோள் ஈசர்க்கு நூற்றுக்கணக்கான மாடக் கோயில்களும் கூட கோபுரங்களும் கட்டுவிப்பான் என்று கனவு காணுகிறார்கள், சிவனடியார்களும் வைஷ்ணவ பக்தர்களும். மாலரையரே! அவர்களுடைய கனவு பலிக்குமானால் உம்மைப் போன்ற சர்வம் சூன்யம் என்ற புத்தமதக் கொள்கைகளைப் பின்பற்றியவர்களும், என்னைப் போன்ற சார்வாகரின் நாஸ்திகக் கொள்கைகளைப் பின்பற்றியவர்களும் என்ன கதியை அடைவார்கள் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! நீங்கள் பௌத்த பிக்ஷு ஆவதற்கு முன்னால் எத்தகைய சூழ்ச்சி நிறைந்த காரியங்கள் எல்லாம் செய்து சோழ பாரம்பரியம் மறுபடியும் தலையெடுக்கா வண்ணம் செய்ய முயற்சித்தீர்களோ, அதை விட இந்தக் காரியத்தில் அதிகப் பொறுப்பு இப்பொழுது நீங்கள் பௌத்த மதத்தில் சேர்ந்த பிறகு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்" என்றான்.

     வானத்தில் குமைந்திருந்த கருமேகக் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து அங்கு மிங்கும் நட்சத்திரங்கள் ஒளி வீசத் தொடங்கின. கீழ் வானத்தே சந்திரனும் மெதுவாக எழுந்தான். கலங்கமாலரையர் சிறிது நேரம் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவர் போல் இருந்து விட்டு, "பூதுகா! இவ்வளவு நாட்களும் அமைதி நிலையிலிருந்த என் மனத்தை நீ வந்து குழப்பிவிட்டாய். நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் அரசியலின் செல்வாக்கு பெற்றுத் தங்களுடைய மதத்தைப் பரப்ப வேண்டுமென்று பௌத்த பிக்ஷுக்கள் நினைப்பது பெரும் தவறு. அது ததாகதருக்கு உவப்பான காரியம் என்று எனக்குப் படவில்லை. சாம்ராஜ்ய நிகழ்ச்சிகளில் கவனம் வைத்துத் துறவு வாழ்க்கையின் புனிதத் தன்மையை நான் குலைத்துக் கொள்ள விரும்பவில்லை..." என்றார்.

     பூதுகன் அலட்சியமாகச் சிரித்தான். "கலங்கமாலரையரே! துறவு வாழ்க்கையை மேற்கொண்ட பின் இவ்வளவு கோழைத்தனம் உங்கள் மனத்தில் வந்து சூழ்ந்து கொள்ளும் என நான் நினைக்கவில்லை. பாவம், மனிதன் வாழ்க்கையில் சிறிது தோல்வியுற்றாலேயே தன்னுடைய திடமான நம்பிக்கை, வீரம், மேதாவிலாசம் இவைகளை இழந்து விடுவான் போலிருக்கிறது. கருகருவென்று வளர்ந்திருந்த உங்கள் மீசையை அகற்றியதோடு உங்களுடைய ஆண் தன்மையையும் அல்லவா சுரண்டி எறிந்து விட்டீர்கள் போலிருக்கிறது. சேனைத் தலைவராக அகன்ற மார்பிலே கவசம் தரித்து, கையில் வாளேந்திக் கடல் போல எதிர்த்து வரும் படைகளோடு வீரப் போர் புரியும் உங்கள் மார்பகத்தைச் சீவர ஆடையால் மூடிய பின் நெஞ்சில் எழும் வீர உணர்ச்சிகளையும் வேறு ஏதோ மூடி மறைத்து விட்டது போலிருக்கிறது. நீங்கள் ஒன்றை உணர வேண்டும். ததாகதர் கூறிய படியே இந்த மதம் இந் நாட்டில் ஸ்தாபிக்கப் பட்டுள்ளதா என்பதை வரலாற்றின் மூலமாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ததாகதர் பரிநிர்வாணம் அடைந்த பல ஆண்டுகளுக்குப் பின் அசோகன் என்னும் பேரரசன், பௌத்த உபாசகனாகி இந்த உலகெங்கும் பரவச் செய்யா விட்டால் இந்த மதத்துக்கு இன்று உலகில் இவ்வளவு பெருமை ஏற்பட்டிருக்கும் என்று கனவு கூடக் காண முடியாதே! இந்த உலகத்தில் எந்த நாட்டிலுமே மதவாதிகள் அரசியலாரின் பேராதரவைப் பெறாமல் ஒரு உன்னத நிலையை அடைந்ததில்லை. இந்தத் தமிழகத்தில் பௌத்த மதமும், ஜைன மதமும் காலூன்றியதற்கு அரசர்களின் ஆதரவே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. மதத்தின் காரணமாகப் பேரரசுகள் அழிவதுண்டு; எழுவதும் உண்டு. 'மன்னன் வழி மக்கள்' என்பது போல் மன்னன் எதை விரும்புகிறானோ அந்த வழியை மக்கள் தாங்களாகவோ அல்லது பலாத்காரமாகவோ கடைப்பிடித்து நடக்க வேண்டியிருக்கிறது. இப்படி இருக்க மதவாதிகளின் கடமை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைத் தாங்கள் உணராமல் இருக்க முடியாது" என்றான்.

     கலங்கமாலரையர் ஒரு நீண்ட பெருமூச்சுக்கிடையே, "பூதுகா! நீ என் மனத்தை மிகவும் குழப்ப நிலைக்கு உள்ளாக்குகிறாய். நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் நான் எத்தகைய நிலையில் இந்தக் கோலம் பூண்டு இங்கு இருக்கிறேன் என்ற ரகசியம் உனக்குத் தெரியாது" என்றார்.

     அந்த நிலவின் ஒளியில் அவருடைய முகத்தில் வாட்டத்தின் கோடுகள் வீழ்ந்திருந்ததைப் பூதுகன் கண்டான். "மாலரையரே! அந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது என் விருப்பம். உங்கள் நிலையைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. உலகில் இந்த உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வாழ்வதற்கு வேறு வழியில்லாமல் தான் நீங்கள் இப்படித் தலையை முண்டிதம் செய்து கொண்டு சீவராடையைப் போர்த்திக் கொள்ளும்படி நேர்ந்திருக்கிறது என்று நான் ஊகிக்கிறேன். புத்தர் பெருமானின் ஐராவக்கத்தில் 'எலும்புகளைக் கொண்டு ஒரு வீடு கட்டப்பட்டிருக்கிறது. அதில் ஊனையும் உதிரத்தையும் குழைத்துச் சாந்தாகப் பூசப்பட்டிருக்கிறது. முதுமையும், மரணமும், கர்வமும் கபடமும்தான் அதில் குடிபுகுந்திருக்கின்றன. மனித வாழ்வு நிலையானதில்லை' என்று சொல்லியிருந்தாலும் எந்த மனிதனுக்கும் இந்த உயிரின் மேலுள்ள ஆசை நீங்குவதில்லை. எந்த மனிதனும் தன் கடமையைச் செய்து முடிக்கும் வரை இந்த உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறான். மாலரையரே! உங்கள் ரகசியத்தைத் தாராளமாக என்னிடம் சொல்லலாம். நாஸ்திகம் பேசுகிறவர்கள் எல்லாம் நம்பிக்கைத் துரோகம் செய்து விடுவார்கள் என்று நினைத்து விடாதீர்கள்" என்றான் பூதுகன்.

     கலங்கமாலரையர் அந்தச் சமயத்தில் மனத்தில் திகைப்பும் குழப்பமும் அடைந்தவராயிருக்கிறார் என்பது அவர் முகக் குறியிலிருந்து நன்கு தெரிந்தது. அவர் மெதுவான குரலில், "பூதுகா! பல போராட்டங்களில் உயிருக்கு அஞ்சாமல் நின்று போராடிய நான் இன்று உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த மார்க்கத்தில் பிரவேசிக்கவில்லை. இன்று என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். நான் நினைத்த கடமை நிறைவேறும் வரையில் இந்த வேடத்தில் இருக்க வேண்டுமென்ற எண்ணம்தான் எனக்கு. என்னுடைய வீர உணர்ச்சியோ ஆண்மையோ குலைந்து விடவில்லை. நான் கோழையாகி விடவில்லை. இன்றுள்ள நிலையை உணர்ந்து பிறருடைய இடையூறு இல்லாமல் என்னுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்ள இதுதான் எனக்குச் சரியான மார்க்கமாகப் படுகிறது. எனக்கு எந்த மதத்தைப் பற்றியும் கவலை இல்லை. இதுதான் எப்பொழுதும் என்னுடைய தியானம். தஞ்சையர்கோன் மாறன் முத்தரையனின் உப்பைத் தின்றதற்காக என்னுடைய கடமையைச் செலுத்த நினைக்கிறேன். அவர்களுடைய நலனுக்காகச் சோழ வம்சத்தைச் சேர்ந்த பூண்டு ஒன்று எங்கேனும் முளைத்திருந்தாலும் அதைக் கிள்ளி எறிந்து விடத்தான் இத்தனை நாட்களும் பாடுபட்டேன். இப்பொழுதும் அத்தகைய நோக்கம் தான் எனக்கு. நான் என் நன்றியைச் செலுத்தும் வகையில் முத்தரையர்களுக்காக எத்தகைய சூழ்ச்சிகளைச் செய்தாலும், வீரத்தனமான காரியத்தைச் செய்திருந்தாலும் அவர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையிலோ தங்களுடைய சாம்ராஜ்யத்தைப் பெருக்கிக் கொள்ளும் வகையிலோ என்னோடு ஒத்துழைப்பவர்களாகத் தெரியவில்லை. இது அவர்களுடைய அறியாமை என்று தான் நினைக்கிறேனே தவிர அவர்களுக்கு என்னிடம் அன்பில்லை யென்று நினைக்கவில்லை. இன்றைய நிலையில் அவர்கள் பாண்டியர்களுக்கு உட்பட்டோ, பல்லவர்களுக்கு உட்பட்டோ அடிமைப்பட்டுக் கிடந்து தங்களுடைய சிறு ராஜ்யத்தைக் காப்பாற்றிக் கொண்டு உயிர் வாழ நினைக்கிறார்களே தவிர, சோழ பாரம்பர்யத்தில் வந்த கரிகாலனைப் போலவோ, நலங்கிள்ளியைப் போலவோ வீர உணர்ச்சியோடு தங்கள் சாம்ராஜ்யத்தைப் பெருக்கிக் கொண்டு சார்வ பௌமர்களாய் வாழும் ஆசையில்லை. கொடும்பாளூர் இருக்கு வேளிர்களுக்குச் சோழ வம்சத்தின் ரத்த சம்பந்தம் இருப்பதனாலோ என்னவோ, வீர உணர்ச்சியில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தங்கள் சாம்ராஜ்யத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமில்லா விட்டாலும் மறுபடியும் இங்கே சோழ சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டு மென்பதில் கண்ணும் கருத்துமா யிருக்கிறார்கள். அவர்களைப் பூண்டோடு ஒழித்துக் கட்டிவிட நினைக்கும் என்னை ஒழித்து விட வேண்டும் என்று அவர்கள் நினைப்பதும் சகஜம் தானே? பூதி விக்கிரம கேசரியின் புதல்வர்களான ஆதித்திய இருக்கு வேளானும் பராந்தக இருக்கு வேளானும் என்னைப் பழி வாங்க உளவு பார்த்துத் திரிகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். பழையாறையை ஆண்ட குமாராங்குஜனுடைய மகனைத் தஞ்சை அரியணையில் ஏற்றப் பார்க்கிறார்கள் கொடும்பை இருக்கு வேளிர்கள். அதற்கு அனுகூலமாக அவருடைய சகோதரி அனுபமாவையும் சோழ வம்சத்தில் யாருக்கேனும் மணம் முடிக்க வேண்டும் என்ற ஆசையும் அவர்களுக்கு இருக்கிறது. இதை அறிந்து கொண்டு, பழையாறையிலுள்ள சங்கமாதேவியையும் அவளுடைய குமாரனையும் ஒழித்துவிட முயற்சி செய்தேன். ஆனால் இந்த ரகசியத்தை எப்படியோ அறிந்து கொண்ட கொடும்பாளூரார்கள் என்னை ஒழித்து விடத் திட்டமிட்டு விட்டார்கள். தஞ்சையர்கோன் மாறன் முத்தரையனின் குமாரன் இளங்கோதரையன் கொடும்பாளூர் அரசகுமாரியான அனுபமாவின் அழகில் மயங்கி அவளை மணம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசையில் உழன்று கொண்டிருக்கிறான். இது நடக்குமா? அவனுடைய சபல புத்தியை அறிந்த கொடும்பாளூர் மன்னர்களின் குமாரர்களாகிய ஆதித்தனும், பராந்தகனும் இளங்கோதரையனிடம் நட்புரிமை பாராட்டி, ஆசை வார்த்தைகள் காட்டிப் பேசி வருகின்றனர். இந்த நிலையில் என்னுடைய அந்தரங்கமான காரியங்களை யெல்லாம் கூட அவர்கள் தெரிந்து கொண்டு விட முடிகிறது. அரச குடும்பத்தினர் இருக்கும் நிலையில் நான் ஏதேனும் ஆபத்தான நிலையைச் சுட்டிக் காட்டினாலும் கூட அவர்கள் மனத்தில் ஏறுவதில்லை. இளங்கோதரையன் கொடும்பாளூர் இளவரசி அனுபமாவின் மோகத்தில் சிக்கித் தவிக்கிறான். இந்த நிலையில் நான் என்ன செய்ய முடியும்? என்னுடைய காரியங்களெல்லாம் கொடும்பாளூர் இருக்கு வேளிர்களுக்குப் புரிந்து விட்டதனால் நட்புரிமை கொண்டே என்னைக் கவிழ்க்கச் சதித் திட்டம் போட்டு விட்டார்கள். இத்தருணத்தில் நான் தஞ்சைமாநகரிலிருந்து ஆபத்துக்கிடையே என்னுடைய காரியங்களைக் கவனிப்பதை விட இத்தகைய துறவு வேடத்தில் பல காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் இந்தப் பூம்புகாருக்கு வந்து விட்டேன். நான் ஒவ்வொன்றையும் விவரமாகச் சொல்லுவதற்கு இது சமயமில்லை. எல்லாம் உனக்குப் பின்னால் ஒரு சமயம் தெரிவிக்கிறேன்."

     "இவ்வளவு தூரம் நீங்களும் நானும் மனம் விட்டுப் பேசி ஒரு காரியத்தில் இறங்கிய பின் நீங்கள் என்னிடம் எதையும் சொல்லாமலா இருக்கப் போகிறீர்கள்? இப்பொழுது நீங்கள் சொன்ன வரையிலேயே அநேக விஷயங்கள் விளங்கி விட்டன. கவலைப் படாதீர்கள்! பழையாறையிலிருக்கும் சோழன் மனைவி கங்கமா தேவியையும் அவள் மகனையும் ஒழிக்க எவ்வளவு நேரமாகும்? கோடீச்சுவரத்தில் சந்தகன் என்னும் சோதிடன் இருக்கிறான். அவன் சாக்த மதத்தைச் சேர்ந்தவன். மந்திர தந்திரங்களில் நிபுணன். பக்ஷத்திற்கு பக்ஷம் மாகாளிக்கு நரபலி கொடுப்பதென்று விரதம் எடுத்திருக்கிறான். அவனிடம் சொன்னால் போதும். ஒரு பக்ஷத்தில் கங்கமா தேவியின் புத்திரனையும், ஒரு பக்ஷத்தில் அவள் புத்திரியையும் மாகாளி தேவிக்கு நிவேதனம் செய்து விடுவான். நினைத்தால் அம்மூவரையும் ஒரே பக்ஷத்தில் பலி இட்டாலும் இட்டு விடுவான். மாய தந்திரங்களில் மிகவும் வல்லவனாகிய அவன் எனக்கு ஆருயிர் நண்பன். நான் சொன்னால் எதையும் தட்டமாட்டான்" என்றான்.

     "கோடீச்சுவரத்துச் சந்தகனா? அவனைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்க்றேன். சார்வாக சமயத்தைச் சேர்ந்த நாஸ்திகனான உனக்கு இந்த மந்திர தந்திரங்களில் எல்லாம் நம்பிக்கை உண்டா?" என்றார்.

     பூதுகன் சிரித்தான். "எனக்கு மந்திரத்தில் நம்பிக்கை இல்லை. தந்திரத்தில் எனக்கு எப்பொழுதுமே அழியாத நம்பிக்கை யுண்டு. எப்படி இருந்தால் என்ன? இப்பொழுது நம்முடைய நோக்கம்தானே நமக்குப் பெரிது. போகட்டும், இன்று இந்த விஹாரத்தில் பூசை நடக்கும் போது ஒரு சிறு கலவரம் ஏற்பட்டதல்லவா? யாரோ ஒரு பிக்ஷுணி மீது ஒரு பிக்ஷு ஏதோ குற்றம் இருப்பதாகச் சொல்லிப் பழி சுமத்த முற்பட்டாரல்லவா? அதன் ரகசியம் உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? அந்தப் பிக்ஷுணியைப் பார்த்தால் எனக்குச் சிறிது சந்தேகமாகவே இருக்கிறது. நல்ல அழகி, இளம் வயது, இப்படிப்பட்ட பெண் ஏன் பிக்ஷுணிக் கோலம் தாங்க வேண்டும் என்று தான் எனக்குத் தெரியவில்லை. அந்தப் பிக்ஷு அவள் மீது ஏதோ குற்றம் இருப்பதை உண்மையாகவே உணர்ந்திருக்க வேண்டும்; அவர் மிகவும் ஆத்திரம் அடைந்திருக்க வேண்டும் என்பதை அவருடைய முகபாவனையிலிருந்து நான் தெரிந்து கொண்டேன். மாலரையரே! இந்த ரகசியம் இந்தப் பிக்ஷுக்களின் கூட்டத்தில் ஊடாடும் உங்களுக்குக் கொஞ்சமாவது தெரிந்திருக்கலாம். அதன் விவரத்தைக் கேட்க வேண்டும் என்ற துடிப்பு எனக்கு" என்றான்.

     "அதன் விவரம் எனக்கு ஒன்றும் தெரியாது. இனிமேல் தான் அதைப் பற்றி நானும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. பூதுகா! புத்தபெருமானிடமும் அவருடைய உபதேச மொழிகளிலும் எனக்கு அளவற்ற பிரேமை உண்டு. நான் ஒரு புத்த பிக்ஷுவாக வேண்டும் என்று கனவில் கூட ஆசைப்பட்டதில்லை. அரச சேவையில் ஈடுபட்டு ராஜ தந்திர நோக்கங்களிலேயே எப்பொழுதும் சிந்தனையைச் செலுத்திக் கொண்டு வரும் எனக்கும் இந்தத் துறவு வாழ்க்கைக்கும் எவ்வளவு தூரம் இருக்க வேண்டும்? எப்படியோ மனப் பக்குவம் வராவிட்டாலும் நான் ஒரு பௌத்த பிக்ஷு ஆக வேண்டிய விதி ஏற்பட்டு விட்டது. நான் உண்மையாகவே மனப் பக்குவத்தோடு பிக்ஷுவாகிச் சங்கத்தில் சேர்ந்திருந்தாலும் இங்கு இருக்கும் நிலையில் நான் வெறுப்படைந்து வேறு வழியில் செல்லும் உத்தேசம் தான் ஏற்பட்டிருக்கும். பூதுகா! புத்த பெருமானின் வாழ்க்கை அவருடைய கனவு, அவருடைய உபதேசங்கள் எல்லாம் பரிசுத்தமானவை. ஆனால் இங்கு இருக்கும் பௌத்த பிக்ஷுக்களின் நோக்கம் வாழ்க்கை நடைமுறையில் இவை எல்லாம் வேறு. எல்லாம் மதப் பிரசார நோக்கத்தில்தான் நடக்கின்றனவே தவிர, எதுவும் துறவு வாழ்க்கைக்குள்ள கொள்கையோடு நடப்பதில்லை. எப்படியோ இங்குள்ளவர்கள் துறவு வாழ்வை மேற் கொண்டவர்கள் போலிருப்பினும் உலக நடைமுறையில் ஓரளவு பற்றுக் கொண்டவர்கள் தான். அவர்கள் ஓரளவு உலக விவகாரங்களிலும் கவனம் செலுத்துவது என்னைப் போன்றவனுக்கும் ஓரளவு பயனளிக்கக் கூடியதாய்த்தான் இருக்கிறது. இன்றைய நிலையில் அவர்கள் எப்படி இருப்பினும் அவர்களும் சிதைந்து போன சோழ சாம்ராஜ்யத்தின் பெருமைகளை அடிக்கடி பேசுகிறார்கள் என்ற வருத்தம் தான் எனக்கு. மறுபடியும் சோழ சாம்ராஜ்யத்தினர் ஆளுகைக்கு நாடு உட்பட்டாலும் அவர்களுக்கு மிகுந்த திருப்தி அளிக்கும் போல் தான் இருக்கிறது. இதற்குக் காரணம் சோழ மன்னர்கள் வேறு சமயத்தவர்களாயினும் புத்த பிக்ஷுக்களின் துறவு வாழ்க்கைக்கு மதிப்பு வைத்து அவர்களுக்குப் புத்த விஹாரங்களும் பள்ளிகளும் அமைத்துக் கொடுத்ததே காரணமாகும். இன்று இக் காவிரிப் பூம்பட்டினத்தையும் அதைச் சுற்றியுள்ள சில இடங்களையும் புத்த மதத்தைச் சேர்ந்தவனும் களப்பிர குல திலகனுமான அக்கூட விகந்தனின் வம்சத்தினர் அரசாட்சி செய்வதில் கூட இந்தப் புத்தபிக்ஷுக்களுக்குத் திருப்தி கிடையாது" என்று கலங்கமாலரையர் சொல்லிக் கொண்டு வரும் போது, அந்தப் புத்த விஹாரத்திலிருந்து யாரோ வெளியே வருவது போல் தெரியவே சட்டென்று இருவரும் அந்த மரத்துக்குப் பின்புறம் சென்று தலைமறைவாக ஒதுங்கி நின்றனர். அந்த விஹாரத்திலிருந்து வெளியே வந்தது யாரென்று அவர்களுக்கு விளங்கி விட்டது. அவள் ஒரு பௌத்த பிக்ஷுணி. ஆம், இன்று பூசை வேளையில் எந்தப் பிக்ஷுணியின் மீது ஒரு புத்த பிக்ஷு குற்றம் சுமத்தினாரோ அதே இளம் வயதுடைய புத்த பிக்ஷுணிதான். பௌத்த விகாரத்திலிருந்து வெளிவந்த அந்தப் பெண் அந்த அழகான சோலையைத் தாண்டிக் கடற்கரையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தாள். கலங்கமாலரையர் வியப்புக் குரலில், "பூதுகா, பார்த்தாயா அவளை? இதில் ஏதோ ரகசியம் இருக்கிறது" என்றார்.

     பூதுகன் அலட்சியம் நிறைந்த குரலில், "இதில் என்ன ரகசியம் இருக்கப் போகிறது? சாதாரணமாகப் பெண்களின் இதயத்தை அறிவதே மிகக் கடினம். அதிலும் இளம் வயதுடைய அழகான பெண்ணின் மனத் துடிப்புகளையும், ரகசியங்களையும் நடத்தைகளையும் அறிந்து கொள்வது மகா கடினம். பருவத்தின் விபரீத விளையாட்டுக்களை யெல்லாம் இந்த விஹாரத்தில் உள்ள துறவிகள் எவ்வளவு தூரம் அறிந்திருக்கப் போகிறார்கள்? இந்தப் பருவத்தில் துவராடை யணிந்து பிக்ஷுணியாகி விட்டால், மன ஆசைகள் எல்லாம் போய்விடுமா? இந்த இன்பகரமான நிலவு வேளையில் யார், எங்கு அவளை எதிர் நோக்கிக் காத்திருக்கிறானோ? இந்த ரகசியத்தை நாம் அறிந்து கொள்வது மிகக் கடினமா?" என்றான்.